இந்த முறை 35வது புத்தகக் கண்காட்சி சென்னையில் நடைபெறுவது பற்றி யோசனையாக இருந்தது. கலந்துகொள்ளலாமா வேண்டாமா என்ற யோசனை. இந்த முறை புதிய புத்தகம் எதுவும் கொண்டு வரவில்லை. ஏன் விருட்சமே கொண்டு வரவில்லை? இருக்கிற புத்தகங்களை வைத்துக்கொண்டு உட்கார்ந்தால், ரூ5000 வரை தேறுமா என்பது சந்தேகம். எல்லாம் விற்கமுடியாத கவிதைப் புத்தகங்கள். இதற்கு உழைப்பு அதிகமாகத் தேவைப் படுகிறது. பல நண்பர்களைத் தொந்தரவு செய்ய வேண்டியிருக்கிறது. ஏன் இதில் கலந்துகொள்ளவேண்டும்?
புத்தகம் கொண்டு வர முடியவில்லை. ஆடம்பரமாகப் புத்தக வெளியீட்டு விழா நடத்த முடியவில்லை. தமிழில் பெரும்பாலான புத்தகங்களை உயிர்மை, காலச்சுவடு, கிழக்கு போன்ற பதிப்பகங்கள் போட்டிப் போட்டுக்கொண்டு போடுகின்றன. விருட்சம் போன்ற பத்திரிகை என்ன செய்ய முடியும்? அப்படியே புத்தகம் போட்டால் யார் கவனத்திற்கு அது போகும். விற்கவும் விற்காது. என்னை விட்டும் போகாது.
ஆட்சி மாறியதால், எப்போதும் கிடைக்க வேண்டிய லைப்ரரி ஆர்டரும் போய்விட்டது. கண்டுகொள்ளவே இல்லை. வரவும் இல்லை. யாருக்கும் போய்ச் சேரவில்லை போல் தோன்றுகிறது. பொதுவாக ஜனங்களுக்கு புத்தகங்கள் மீது மதிப்பு குறைந்து போய்விட்டது. ஆனால் பல பதிப்பகங்கள் control இல்லாமல் புத்தகங்கள் போட்டுத் தள்ளுகிறார்கள். பல இடங்களுக்குப் புத்தகங்களைத் தூக்கிக்கொண்டு போகிறார்கள்.
புத்தகக் கண்காட்சியில் வாடகை ரூ10000 என்றால், செலவு ரூ10000 மேல் ஆகிவிடும். இந்தப் பணம் கிடைக்க வேண்டுமானால், கிழக்கு, உயிர்மை, காலச்சுவடு, ஆனந்தவிகடன் போன்ற பதிப்பகங்களின் புத்தகங்களையும் சேர்த்து விற்கவேண்டும். இதில் விருட்சம் புத்தகம் கொஞ்சம் விற்கும். இந்த முறை எதற்கு இந்தப் புத்தகக் கண்காட்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்று தோன்றியது. தோன்றிகொண்டே இருக்கிறது.
போனமுறை புத்தகக் கண்காட்சியில் ஏற்பட்ட கசப்பான அனுபவம் வேறு சேர்ந்துகொண்டது. எனக்கு உதவி செய்த நண்பர் ஒருவர், நான் எதிர்பாராத தொகையைக் கடனாகக் கேட்டார். இது மாதிரி கடனாகப் பணம் கேட்டாலே ஆபத்து என்று எனக்குத் தோன்றியது. ஏன் என்றால், பணம் கடனாகக் கேட்பவர்கள் யாரும் பணத்தைத் திருப்பிக் கொடுப்பதில்லை. புத்தகக் கண்காட்சி மூலம் கிடைத்த சிறிய தொகையை அவருக்குத் தாராளமாகவே கொடுத்தேன். எனக்கும் அவருக்கும் எந்த வியாபாரத் தொடர்பும் இல்லை. விருட்சத்திற்குக் கிடைக்கும் தொகை புத்தகம் போடத்தான் பயன்படுத்துவேன். லாபம் கிடையாது. திரும்பவும் புத்தகம் போடுவேன். அவ்வளவுதான். இந்த முறை வேண்டாமென்று நினைத்துக்கொண்டே அவரிடம் தொடர்புகொண்டு பேசினேன். ஒரு நாளைக்கு ரூ.1000 வேண்டுமாம். எனக்கு அவர் கேட்டது சிரிப்பை மூட்டியது. 1000 ரூபாய்க்குப் புத்தகமே ஒரு நாளைக்கு விற்காது. விருட்சம் பொறுத்தவரை புத்தகம் விற்று லாபம் வந்தால் சரி, இல்லாவிட்டால் விளம்பரம் என்று சொல்லி தப்பிக்கலாம்.
விருட்சம் பொறுத்தவரை அது oneman show. எல்லாமே நான்தான். அதனால் ஏகப்பட்ட தடுமாற்றங்கள். யாராவது கவிதைப் புத்தகம் போட வேண்டுமென்று என்னிடம் வந்தால், மனதைத் திடமாக வைத்துக்கொள்ளுங்கள் என்பேன். புத்தகம் விற்க என்னிடம் புத்தகக் கண்காட்சியில் புத்தகங்கள் கொடுத்தால், கண்காட்சி முடிவதற்குள் வாங்கிக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் சந்திப்பதும், புத்தகத்திற்கான பணம் கொடுப்பதும் சிரமமாகிவிடும்.
இப்படித்தான் சென்னையில் நடக்கும் 35வது புத்தகக் கண்காட்சிக்கு விருட்சம் தயாராகிவிட்டது.
ஆஹா! வழக்கம்போல் மனதைத் திறந்து சொல்லி விட்டீர்கள்…