செப்டம்பர் 28ஆம் தேதி உலகம் முழுவதும் இதய நாள் கொண்டாடுகிறார்கள். போனவாரம் சனிக்கிழமை என் உறவினருடன் சென்னைக்கு இரவு 12.45க்கு வரும் ராமேஸ்வரம் விரைவு வண்டியில் ஏறும்போது, அவர் சொன்ன தகவல் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. தில்லியில் இருக்கும் எங்கள் இருவருக்கும் நெருங்கிய உறவினருக்கு மாரடைப்பு ஏற்பட்டு தப்பித்துவிட்டார் என்று குறிப்பிட்டார். கேட்கும்போது அதிர்ச்சியாக இருந்தது. தினமும் நடப்பவர். சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய் இல்லாதவர். வயது 68 இருக்கும். அவருக்கு எப்படி இதுமாதிரி ஏற்பட்டது. இன்னொருவர் என் அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவரின் தந்தைக்கு சமீபத்தில் ஏற்பட்ட மாரடைப்பால் அவர் ஒரு மாதம் மேல் அலுவலகம் வரவில்லை.
கடந்த 6 ஆண்டுகளாக நான் மூன்று விபத்துக்களை என் கண்ணால் பார்த்திருக்கிறேன். இது குறித்து ஒரு சிறுகதையும் எழுதியிருக்கிறேன். பந்தநல்லூர் என்ற கிராமத்தில் இருக்கும்போது, என் அலுவலக நண்பர் ஒருவருக்கு எதிர்பாராதவிதமாய் மாரடைப்பு (Heart Attack). முதலில் இது தெதியாது. அவசரம் அவசரமாக 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கும்பகோணத்தில் உள்ள சுகம் மருத்துவமனையில் சேர்த்தப் பிறகுதான் தெரியும். அவர் தப்பித்து விட்டார். கொஞ்சம் ஏமாந்தால் அவர் உயிருக்கே ஆபத்தாகியிருக்கும்.
ஒரு முறை என் அலுவலக நண்பர் ஒருவர், அவர் பெண்ணின் பாட்டுக் கச்சேரியை வைத்திருந்தார். பேசுவதற்கு பெண்ணின் கல்லூரி பேராசிரியர் ஒருவர் வந்திருந்தார். பாட்டுக் கச்சேரி போய்க்கொண்டிருந்தது. துக்கடா பாடும்முன் மேடையில் எல்லோரும் அந்தப் பெண்ணைப் பாராட்டிப் பேசினார்கள். கல்லூரி பேராசிரியரும் பாராட்டிப் பேசினார். பின் பெண் துக்கடா பாட ஆரம்பித்தாள். கல்லூரி பேராசிரியர் மேடையிலிருந்து கீழிறங்கி அமர்ந்து கொண்டார். கொஞ்ச நேரத்தில் பேராசிரியர் அவர் உட்கார்ந்த இருக்கையிலிருந்து கீழே சாய்ந்தார். பின் நினைவு தப்பிப் போய்விட்டது. பாட்டுக் கச்சேரி நின்றுவிட்டது. நண்பருடன் வண்டியில் பேராசிரியரை அவசரம் அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். நண்பரைப் பார்த்து, மருத்துவர் கேட்டார் ”இவர் இறந்து போயாற்று… ஏன் அழைத்துக் கொண்டு வந்தீர்கள்?” என்று. எனக்கு படபடவென்று வந்தது. அந்த இடத்தை விட்டு ஓட்டம் பிடித்தேன். மயிலாடுதுறையில் உள்ள என் அறைக்கு வந்தபிறகுகூட தூக்கம் வராமல் இரவு முழுவதும் அவதிப்பட்டேன். இப்படி நம் முன்னால் நடப்பதை எச்சரிக்கையாகவே நான் கருதுகிறேன்.
நான் அமெரிக்கா போவதற்கு முன் உடல் பரிசோதனை செய்துகொண்டு ஒரு மருத்துவரிடம் சான்றிதழ் வாங்கச் சென்றேன். ஏன்எனில் அமெரிக்காவில் சான்றிதழ் இல்லாமல் மாத்திரை தர மாட்டார்களாம். என்னைப் பரிசோதித்த டாக்டர், சான்றிதழ் தருவதற்கு முன் என்னை எச்சரிக்கை செய்தார். நான் பயந்து விட்டேன். அமெரிக்காவிற்கு கடைசி நிமிடத்தில் போகாமல் இருந்து விடலாமலா என்று நினைத்தேன். பின் முன் வைத்தக் காலை பின் வைக்கக்கூடாதென்று பயத்துடன் கிளம்பி விட்டேன். எப்போதும் என் ரத்த அழுத்தத்தை மருத்துவர் சோதிக்கிறார் என்றால் அது அதிகமாகவே காட்டும். அமெரிக்காவிலிருந்து டாக்டர் செல்வராஜூற்கு போன் செய்தேன். பின் அவர் ஏற்கனவே சொன்ன மாத்திரைகளைச் சாப்பிட்டு ஒரு மாதம் சுற்றிப் பார்த்துவிட்டு வந்து விட்டேன். திரும்பவும் சென்னை வந்து ஒரு மாதம் மேல் ஓடிவிட்டது. இருந்தும் என் சர்க்கரை நோயைக் குறைக்க பலவித முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். குறிப்பாக தினமும் 30 நிமிடங்கள் தொடர்ந்து நடக்கிறேன். சாப்பாட்டை குறைத்துவிட்டேன்.
செய்தித்தாளில் உலக இதய நாள் பற்றி செய்திகளைப் படித்தபோது, ஒரு செய்தி என் கண்ணில் இருந்து விலகாமல் இருந்தது. ஒருவர் பொங்கல், வடை, பரோட்டா சாப்பிடுவதை நிறுத்த வேண்டுமாம். இதைத் தொடர்ந்து சாப்பிட்டால் இதய நோய் வர எல்லாவித வாய்ப்பும் உண்டாம். அடப்பாவி தினமும் இந்தப் பொங்கல் வடையைச் சாப்பிடுகிறேனே என்று நினைத்துக்கொண்டேன். செய்தியைப் பார்த்த அன்று பொங்கல் வடையைச் சாப்பிடாமல் அலுவலகம் சென்றேன். அங்கோ என் அலுவலகப் பெண்மணி ஒருவருக்கு பிறந்த தினம் என்று எல்லோருக்கும் அலுவலக முனையில் உள்ள ஒரு கடையிலிருந்து வடையை தருவித்துக் கொடுத்தார். வேறு வழியில்லாமல் அந்த வடையைச் காப்பிட்டு 4 தம்ளர் தண்ணீரைக் குடித்தேன். சர்க்கரை நோயுடன் எப்படி வாழ்வது என்ற புத்தகம் எழுதலாமா என்று யோசிக்கிறேன்.
இன்றுதான் தங்கள் வலைப்பக்கம் வருகிறேன்..
இத்தனை நாள் எப்படித் தங்களை அறியாமல் இருந்தேன் என்று வியப்பாக இருக்கிறது..
அருமையான தகவல்கள்..
நோயைப் பற்றிய அச்சம் கூடவே கூடாது. அதே நேரத்தில் நோய்க்கு ஒரு பெரிய மரியாதை கொடுத்து நம்மை நெருங்காத அளவிற்கு வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு தேவையான ஆரோக்கியமான எளிய உணவு, உடற் பயிற்சி, மன மகிழ்ச்சி இவை தேவை. நான் கூறுவது சரிதானே.. நீங்களும் அதைத்தான் சொல்லுவீர்கள்.