நான் தெருவில்
காலடி எடுத்து வைத்தபோது
உயரமான அந்தக் கட்டிடங்கள்
என்னை வியக்க வைத்தன
ஒன்றொடு ஒன்று ஒட்டி உறவாடிக் கொண்டிருப்பதுபோல்
கட்டிடங்கள்
ஒவ்வொன்றையும் அண்ணாந்து
பார்க்க பார்க்க தட்டாமாலை
சுற்றுவதுபோலிருந்தது.
தெருவெல்லாம் கூட்டம் கூட்டமாய்
ஆண்களும் பெண்களும்
நடந்தவண்ணம் சென்று கொண்டிருந்தார்கள்
மாலை வேளையில்
டைம் ஸ்கெயர் என்ற இடத்தில்
கூட்டமாய் கூடியிருந்தார்கள்.
ஒருவர் சத்தமாய் கிதாரை வைத்துக்கொண்டு
பாட்டு பாடிக் கொண்டிருந்தார்
பலர் கூட்டமாய் கூடி
வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்
ஓவியர்கள் சுற்றி இருந்தவர்களை
உட்காரவைத்து ஓவியம் வரைந்து கொண்டிருந்தார்கள்
வயதானவர்கள்
நடக்கமுடியாமல் அங்கிருந்த நாற்காலிகளில்
அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்
கட்டிடங்கள் மேல்
வண்ணமயமான விளக்குகளின் வெளிச்சத்தில்
விளம்பரங்கள் ஓடிக் கொண்டிருந்தன.
எங்கும் ஹோ ஹோ என்ற சத்தம்
கேட்டுக்கொண்டிருந்தன.
பெண்கள் அரைகுறை உடைகளுடன்
மிதந்த வண்ணம் இருந்தார்கள்.
திசை தெரியாத திசைக்கு
நாங்களும் சுழன்று கொண்டிருந்தோம்.
ஒரு மாலை நேர நியூயார்க் வீதி கண்களில் அழகாய் காட்சியானது.