கடந்த ஒரு மாதமாக நாங்கள் சனி, ஞாயிறு தினங்களில் மட்டும் சுற்றிக்கொண்டிருப்போம். நயக்கரா பயணத்தின்போதுதான் அரவிந்த் 4 நாட்கள் எங்களை அழைத்துச் சென்றான். ப்ளோரிடா வந்திறங்கியபோது களைப்பு அசாதாரணமாகவே இருந்தது. மலைப்பாகவும் இருந்தது. நடக்கும்போது நான் பின் தங்கி நடப்பேன். அரவிந்தனுக்கு அதுவே படபடப்பாக இருக்கும். ”அப்பா, இவ்வளவு மெதுவாக நடப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை,” என்பான் என் மனைவியிடம். திருமணமானபோதில் நான் மனைவியை விட வேகமாக நடப்பேன். கிண்டல் செய்வேன். ஆனால் இப்போதோ வேறு மாதிரி ஆகிவிட்டது. பெரும்பாலும் இங்கே கார் எடுத்துக்கொண்டுதான் எல்லா இடங்களுக்கும் செல்ல வேண்டும். ஒரு பால், ஒரு தயிர் வாஙகக் கூட கார்தான். அமெரிக்காவில் சினிமா தியேட்டர்கள் எப்படி இருக்கிறது என்பதை அறிய ஆசை. 2 சினிமாக்களைப் பார்த்தேன். இரவு 10 மணிக்குமேல்தான் சினிமாவே போக முடிந்தது. சினிமார்க் என்ற இடம். அந்த ஒரு இடத்திலேயே 24 தியேட்டர்களில் சினிமாக்கள் ஓடிக் கொண்டிருந்தன.
ஒரு டிக்கட்டை வாங்கிக்கொண்டு எந்த சினிமாவையும் பார்க்கலாம். புதிதாக வந்த ஒரு ஆங்கிலப் படத்தைப் பார்த்தேன். நம்ம ஊர் விட்டலாச்சாரியரே தேவலை என்று தோன்றியது. அதிக செலவு இல்லாமல் மாயஜால வித்தை காட்டுபவர். தியேட்டரில் விளம்பரங்கள் ஓடிக் கொண்டிருந்தன. ஆனால் தியேட்டரில் யாருமில்லை. நாங்கள்தான் உள்ளே நுழைந்தோம். பின் மெதுவாக பத்து பேர்கள் வரை வந்தார்கள்.
இங்கு வங்கிகள் எப்படி செயல்படுகின்றன என்பதைப் பார்க்க Bank of America வின் கிளைக்குச் சென்றேன். கூட்டமே இல்லை. இதே சீர்காழியில் கூட்டம் அப்பிக்கும். பணிபுரியும் ஒருவர் வரும் வாடிக்கையாளர்களை இன்முகத்துடன் வரவேற்கிறார். பின் அவர் தேவையைப் புரிந்துகொண்டு உடனடியாக செய்து முடிக்கிறார். மொத்தமே வங்கியில் 4 அல்லது 5 பேர்கள்தான் இருக்கிறார்கள். குச்சி முட்டாயை பல இடங்களில் வைத்திருக்கிறார்கள். வாடிக்கையாளர் விருப்பப்பட்டால் எடுத்துச் சாப்பிடலாம். சேஸ் வங்கிக்கிளையில் ஒரு மூலையில் காப்பி எடுத்துச் சாப்பிட கருவியெல்லாம் வைத்திருப்பார்கள்.
பொதுவாக இங்கே யாரையும் இன்முகத்துடன் வரவேற்பார்கள். புதியவர்களைப் பார்த்தால் குட் மார்னிங் என்று சொல்ல தவற மாட்டார்கள். அதேபோல் கார்கள். வேகமாக வரும் கார்கள் பாதசாரிகளைப் பார்த்தவுடன் நின்று விடுவார்கள். பாதசாரிகள் கடந்து சென்றபின்தான் நகர்வார்கள். இங்கு டால்பின் ஷோ பிரபலமானது. அங்கு கூட்டம் அதிகமாக இருக்கும். நியுயார்க்கில் வாடகைக் கார்கள் அதிகம். அதை ஓட்டிக்கொண்டு செல்பவர்கள் பெரும்பாலும் நம்ம நாட்டு பஞ்சாபிகாரர்கள். சீனர்கள் வாழுமிடம் என்று தனியாகவே ஒரு இடம் இருக்கிறது.
ப்ளோரிடாவில் ஒரு இடத்தில் சிவா விஷ்ணு கோவில் இருந்தது. அதில் பெரும்பாலோர்கள் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள்தான் இருப்பார்கள். பரந்த பரப்பளவில் கட்டிய கோவில். பெரும்பாலும் தென்னிந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் வருவார்கள்.
அமெரிக்காவில் தபால் நிலையம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க ஆவல். ஒரு தனி கட்டிடத்தில் தபால் நிலையம் பிரமாதமாக இருந்தது. தபால் நிலையத்திற்கு வந்துவிட்டால் போதும், தபாலை அனுப்ப எல்லா வசதிகளும் இருக்கின்றன. முக்கியமாக அனுப்புவதற்கு தோதாக விதம் விதமான அஞ்சல் உறைகள். நாம் இந்தியாவிலிருந்தால் கடைக்கு ஓடுவோம் உறைகளை வாங்க. அட்டைப் பெட்டியில் அனுப்புவதாக இருந்தாலும் அட்டைப் பெட்டி இருந்தது.
நாங்கள் சென்னை கிளம்புவதற்குமுன் மியாமி கடற்கரைக்குச் சென்றோம். இங்கே மாலை வேளைகளில் மழைப் பெய்து கொண்டிருந்ததால், காலையில் சென்றோம். சூரிய உதயம் பார்க்க நினைத்தோம். மேகம் புண்ணியத்தைக் கட்டிக்கொண்டது. அந்த கடற்கரை மண்ணை கொஞ்சம் கட்டி எடுத்துக்கொண்டு வந்தேன். எங்கள் அலுவலக நண்பர் சொன்னதால் எடுத்துக்கொண்டு வந்தேன். பின் பல இடங்களுக்குச் சென்ற நான் மண்ணை எடுத்துக்கொண்டு வராமல் போய்விட்டேன். மியாமியில் ஒரு தெருவின் பெயர் ஐ பி சிங்கர் பெயர் இருந்தது. எனக்குப் பிடித்த எழுத்தாளர் இவர். ப்ளோரிடாவில் உள்ள மியாமியில்தான் அவர் வாழ்ந்திருக்கிறார் என்று நினைத்தபோது மகிழ்ச்சியாக இருந்தது.
13ஆம்தேதி சென்னையை நோக்கி நாங்கள் பிரிட்டீஷ் ஏர்வேஸில் ஏறியபோது, பையனை விட்டு வர மனமே இல்லை.
நான் இதுவரை எழுதியதை பயணக் கட்டுரையாக எடுத்துக்கொள்ள வேண்டாமென்று தோன்றுகிறது. அல்லது பயணக் கட்டுரை மாதிரி தோற்றம் தருகிற ஒன்றாக வேண்டுமானால் நினைத்துக்கொள்ளலாம். அமெரிக்கா போய்விட்டு வந்ததைப் பற்றி 2 விதமான கருத்துக்களை என்னால் கொண்டு வர முடியும். நான் விமானத்தில் ஏறி பயணம் செய்தபோது, அதன் தூரம் பெரிய பிரமிப்பையும், இவ்வளவு தூரம் கடந்து விட்டோ மா என்கிற பயமும் ஏற்பட்டது. திரும்பவும் யோசிக்கும்போது, அப்படி போய் வருவது பெரிய விஷயமல்ல என்றும் தோன்றியது.
நான் சென்னைக்கு வந்தபிறகும் அமெரிக்காவின் பிரமிப்பு சற்றும் குறையாமல்தான் இருக்கிறது.
நான் விமானத்தில் ஏறி பயணம் செய்தபோது, அதன் தூரம் பெரிய பிரமிப்பையும், இவ்வளவு தூரம் கடந்து விட்டோ மா என்கிற பயமும் ஏற்பட்டது. திரும்பவும் யோசிக்கும்போது, அப்படி போய் வருவது பெரிய விஷயமல்ல என்றும் தோன்றியது.//
வீட்டுக்கு வந்து யோசித்தால் கனவு மாதிரிதான தோன்றுகிறது.
இவ்வளவு நாள் சந்தோஷமாக கோடை விடுமுறையில் வெளியூரில் உறவினர் வீட்டிற்கு போய் விடுமுறை முடிந்து வீடு திரும்புகிற ஒரு குழந்தையாய் உங்களை நினைத்து எனக்கு மனதில் உங்கள் மேல் ஒரு பாவமென்ற பச்சாதாப உணர்வு தோன்றுகிறது.. பழைய படி வங்கி.. மாயவரம்..மாம்பலம்..பணம்.. கணக்கு.. இடையிடையே கவிதை… எல்லாம் விருட்சமாக நிழலில் நீங்கள்… அதல்லவோ வாழ்க்கை…