எதையாவது சொல்லட்டுமா……..49

நான் இங்கே வந்தபிறகு 2 கவிதைகள் எழுத முடிந்தது.  கவிதை என்று சொல்லும்போது ஒரு விஷயம் ஞாபகவருகிறது.  இப்படி ஒரு இடத்திற்கு வந்தால், அந்த இடத்தை வைத்து கவிதை எழுத முடியும்? எழுத முடியும் என்றால் என்னவென்று எழுதுவது? 
க்ளியர் வாட்டர் பீச் என்ற இடத்திற்குச் சென்றேன்.  மதியம் நேரத்தில் படபடக்கும் வெயிலில், எல்லோரும் சத்தம்போட்டபடி நீச்சல் அடித்துக்கொண்டிருந்தார்கள்.  நானும் கடல்நீரில் நின்று கொண்டிருந்தேன்.  என் பக்கத்தில் நின்று கொண்டிருந்த நண்பர், இந்தக் காட்சியை வைத்துக்கொண்டு கவிதை எழுத முடியுமா என்று கேட்டார். முடியும் என்று சொல்ல முடியாது.  இப்போது இல்லாவிட்டால் பின்னால் எழுதலாம் என்றேன்.  பாரதியார் காலத்தில் பாரதியாருக்கு கவிதை எழுதுவது எளிது.  தேசம் விடுதலை ஆவதைப் பற்றி எழுதலாம்.  பக்தி பாடல்கள் எழுதலாம்.  மேலும் பாரதியாரே அவருடைய கவிதைகள் சினிமா பாடல்களாக பாட ஆரம்பித்தபிறகுதான் புகழ் அடைந்திருப்பார்.
 இப்போது எழுதிக்கொண்டிருக்கும் பலருக்கு எந்தப் புகழும் கிடைக்குமா என்பது சந்தேகம்.  கவிதைத் தொகுதி அச்சிட்டால் அவர்களே வைத்துக்கொள்ள வேண்டியதுதான்.  கவிதை எழுதுவதும் ஒரு சவால். நவீன விருட்சம் blogspot ல் எழுதுபவர்கள் குறித்து எனக்கு விமர்சனம் உண்டு. அந்த விமர்சனத்தை வெளிப்படுத்தினால், அவர்கள் எழுதுவதை நிறுத்தி விடலாம். 
2008லிருந்து தொடர்ந்து வரும் blogspotலிருந்து வெளிவந்துள்ள கவிதைகளைத் தொகுத்து ஒரு புத்தகமாகப் போட்டாவ் பின்னால் எழுதுபவர்களுக்கு உபயோகமான ஒன்றாக அத் தொகுப்பு அமையும்.
நான் நடந்துவிட்டு மாடிப்படிக்கட்டுகளைக் கடக்கும்போது ஒரு பட்டாம்பூச்சியைப் பார்த்தேன். சிறிது நேரம் அது சுற்றுவதையே பார்த்துக்கொண்டிருந்தேன்.  அதன் நிறம் அதன் லாவகம் என்னைப் பெரிதும் ஈர்த்தது.  பின் சுற்றி சுற்றி அது எங்கோ போய்விட்டது.  நான் எழுதிய இரண்டாவது கவிதையில் ஈக்களே ஈக்களே எங்கே போனீர்கள்? என்று எழுத மறந்து விட்டேன் என்று நினைத்தேன்.  உண்மையில் ஈக்களே இங்கு காணோம் என்பதைச் சொல்லத்தான் அப்படி எழுதலாம் என்று நினைத்தேன்.  ஆனால் நான் அமர்ந்த சோபாவில் ஒரு ஈ எப்படியோ வந்து விட்டது.  என்னை சுற்றி சுற்றி மொய்த்துத் தள்ளிவிட்டது.  நான் எழுதாமல் விட்டுப்போன வரிகளில் அது தொற்றிக்கொண்டு விட்டது. 
இங்கு ஒரு தபால் அலுவலககத்தைப் பார்த்தேன்.  அது மாதிரி ஒரு தபால் அலுவலகம் சென்னையில் பார்ப்பது அரிது.  தபால் அலுவலகம் முழுவதும் குளிர்பெட்டி பொருத்தப்பட்டிருந்தது.  ஒரு தபாலை அனுப்ப வேண்டிய கவர் முதல் எல்லாம் இருந்தது.  ஒட்டுவதற்கு கோந்தைத் தடவ வேண்டாம். பணியாளர் சிரித்த முகத்துடன் வரவேற்றார்கள்.  சென்னையில் எரிந்து எரிந்து விழுவார்கள். கூட்டம் மொய்த்துத் தள்ளும். 
குளிக்கும் அறையில் ஒரு பெரிய டப்பு இருக்கும்.  அந்த டப்பில்தான் குளிக்க வேண்டும்.  தண்ணீர் அப்படியே போய்விடும்.  ஒரு தண்ணீர் துளிகூட டப்பைத் தாண்டி வெளியே விழாது.  மயிலாடுதுறையில் காலையில் குளிக்கும்போது மின்சாரம் இருக்காது.  பின் குளியல் அறையில் நுழையும்போது பல்லி எங்காவது சுவரில் இருக்கிறதா என்று பார்த்து துரத்தி விட வேண்டும்.  எனக்கு இந்தப் பல்லியைக் கண்டால், அருவெறுப்பு.  ப்ளோரிடாவில் குளிப்பது நல்ல அனுபவம்.
@@@@@@@@@
ஜே கிருஷ்ணமூர்த்தி அவரைச் சுற்றி உள்ள பள்ளி சிறார்கள் முன்னால் மிகப் பொறுமையாகப் பேசுகிறார்.  ஊழல் எப்படியெல்லாம் உலகம் முழுவதும் இருக்கிறது என்பதைப் பற்றி பேசுகிறார். இந்தியாவில் அதன் ஆதிக்கம் அதிகம் என்று பேசுகிறார்.  அதை ஒழிக்க என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறார். டேபிள் அடியில் ஒரு காரியத்தைச் சாதிக்க பணம் கொடுக்கக்கூடாது என்று சொல்கிறார்.  ஊழலை எதிர்த்து அதன் மூலம் கிடைக்கக்கூடிய பலன்களை நிராகரிக்க வேண்டுமென்று பேசுகிறார்.  அதனால் நாம் பணத்தை இழந்தாலும் பரவாயில்லை என்கிறார்.  பள்ளி சிறார்கள் எந்த அளவிற்குப் புரிந்து கொண்டார்கள் என்பது தெரியவில்லை. 
இன்னொரு பக்கம் யூ ஜி கிருஷ்ணமூர்த்தி. இவர் ஜே கேயிலிருந்து எல்லோரையும் திட்டுகிறார்.  பார்க்க வருபவர்களிடம், ‘என்னைப் பார்க்க வந்துவிட்டு, உங்கள் comfortக்கு யாரையாவது பார்ப்பீர்கள்.  உங்களால் யாரையாவது பார்க்காமல் இருக்க முடியாது,’ என்கிறார்.  அவர் இசையைப் பற்றி சொன்னது யோசிக்க வைத்தது.  இசையைக் கேட்பதை விட இந்த நாய் குலைப்பது இயல்பாய் இருக்கும் என்கிறார். நான் பேசுவதும், நாய் குலைப்பதும் ஒன்றாக இருக்கும்.  ஏன் என்னைத் தேடி வருகிறீர்கள் என்கிறார். நேற்று நன்றாகவே பொழுது போய்க் கொண்டிருந்தது.
குறிப்பு :
எதையாவது சொல்லட்டுமா 48ல் என் பையன் தயாரித்த Drummers என்ற டாக்குமெண்டிரி படத்தை இணைத்துள்ளேன் (You tube மூலமாக).  பார்க்கவும்.

“எதையாவது சொல்லட்டுமா……..49” இல் 2 கருத்துகள் உள்ளன

  1. நேரில் பேசியதைப் போன்ற உணர்வுடன் மனம் திறந்து சொல்லி இருக்கிறீர்கள். கவிதை பற்றிய உங்களது கருத்து எழுதிய கவிதைகளை ஒரு தடவை சுய பரிசோதனை செய்ய வைக்கிறது.. ஆனாலும் கவிதையானதை அவரவர் எல்லைகளை வைத்து அவரவர் சுவை அனுபவங்களைப் பொறுத்து பிரமித்து கவிதையாக படைத்துக் கொண்டிருக்கிறோம். நிச்சயமாக அதன் தரம் குறித்து கவிதையைப் பொறுத்து விமர்சனம் இருக்கும்… ஆனாலும் சில விமர்சனங்கள் எழுதுபவரின் தாங்கு சக்தியைப் பொறுத்து அவரை எழுதுவதை நிறுத்தக் கூட வைத்துவிடும். உங்கள் விமர்சனங்கள் நிச்சயமாக நல்ல கவிதைகளுக்கான ஆக்கபூர்வமான தூண்டுதலாகவும் இருக்கும். நவீன விருட்சத்தில் இடுகைகள் கவிதைகளால் உங்கள் கருத்துக்களால் விரைந்து பரிணமிக்கிற போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

  2. drummers காணொளி அன்றேப் பார்த்தேன். துள்ள வைக்கும் ஒரு நல்ல இசை நிகழ்வு. அந்த இசை நிகழ்ச்சி குறித்து தகவல்களைத் தந்தால் நன்றாக இருக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன