உங்களுக்கு கல்யாண சுந்தரம் தெரியுமா? எப்படி தெரியும்? நான் சொன்னால்தான் தெரியும். இது கணனி யுகம். எல்லாத் துறைகளிலும் பெரிய மாற்றம் நடந்தவண்ணம் உள்ளது. வங்கியிலும் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. எங்கள் வங்கியின் கணனியின் Intranet மூலம் ஒருநாள் வங்கியின் சர்குலர்களையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தேன். பெரிய அதிர்ச்சி எனக்கு. கல்யாணசுந்தரம் இறந்துவிட்ட செய்தி தெரிந்தது. நான் பார்த்த சமயம் ஏப்ரல் மாதம். கல்யாணசுந்தரம் மரணம் அடைந்த மாதம் மார்ச்சு மாதம்.
இந்தக் கல்யாணசுந்தரம் எனக்கு தூரத்து உறவு. அவர் இறந்த விஷயத்தை என் பெரியப்பா குடும்பத்தைச் சார்ந்த யாரும் தெரிவிக்கவில்லை. கல்யாணசுந்தரத்தை மாம்பலம் ரயில் நிலையத்திலிருந்து பீச் வரை வரும் மின்சார வண்டியில் தினமும் சந்திப்பேன். அப்படி இல்லாவிட்டாலும் ஹார்பர் கிளையில் கீழே வரும்போதெல்லாம் சந்திப்பேன். அப்போது நான் தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். அதிகமாகப் பேச மாட்டோ ம். எதாவது ஒரு வார்த்தை இரண்டு வார்த்தை பேசுவோம். அவ்வளவுதான். கிளார்க்காக இருக்கும்வரை அவருக்குப் பிரச்சினை எதுவுமில்லை. ரொம்ப ஆண்டுகளாக அவர் எந்தப் பதவி உயர்வும் பெறாமல் கிளார்க்காகத்தான் இருந்தார். பின் ஒரு தவறான முடிவு எடுத்தார். அதிகாரியாகப் போக வேண்டுமென்று. அந்த முடிவுதான் அவருக்கு வினையாகப் போயிற்று.
சென்னையைத் தாண்டி காஞ்சிபுரம் வட்டாரத்தில் பதவி உயர்வு கொடுத்து அவரைத் தூக்கிப் போட்டார்கள். அங்கிருந்து அவர் சென்னைக்கே வந்து விட்டார். ஆனால் அதிகாரியாக அவரால் உழைக்க முடியவில்லை. வயது அதிகரித்து விட்டதால், உடல்நிலை பாதிப்பும் வந்துவிட்டது. உஸ்மான் சாலையில் உள்ள ஒரு கிளையில் அவர் நின்றுகொண்டே இருப்பார். உட்கார முடியாது. நான் அவரைப் பார்த்துக் கேட்கும்போது, உடல் உபாதைகள் பற்றி சொல்லிக் கொண்டே இருப்பார்.
சென்னையில் அவர் அதிகாரியாகி 10 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அவரை திருச்சி வட்டாரத்திற்கு அனுப்பி விட்டார்கள். அங்குதான் அவருக்குப் பிரச்சினை இன்னும் அதிகம் கூடிவிட்டது. அவரால் அலுவலகத்தில் பணி புரிவது அசாத்தியமாகி விட்டது. உடல்நிலை அவரை விட்டு வைக்கவில்லை. திரும்பவும் அவர் உடல்நிலை பொருட்டு சென்னைக்கு வரவேண்டுமென்று சொன்னாலும் முரட்டுத்தனமான தலைமை அலுவலகம் செவி சாய்க்கவில்லை. அதிகாரியாக இருந்ததால், அலுவலகத்திற்குக் காலையில் சென்றால், இரவுதான் திரும்பி வரவேண்டும். கடுமையான வேலை. அவருக்கு குழந்தை எதுவுமில்லை. அதனால் அவர் வேலையை விட்டுவிடலாமென்ற முடிவுக்கு வந்திருந்தார்.
தன் உடல்நிலையைக் குறித்து மருத்துவச் சான்றிதழ்களுடன், அவர் மனைவியை அழைத்துக்கொண்டு
தலைமை அலுவலகத்தில் உள்ள உயர் அதிகாரிகளைப் போய்ப் பார்த்தார். தானாகவே விடுதலை செய்யும் திட்டத்தில் (VRS) இவரை விடுவிக்கவில்லை. வேலை வேண்டாமென்று எடுத்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. உடல்நிலை சரியில்லாத கல்யாணசுந்தரத்தை திருச்சியில் உள்ள வட்டாரத்தைச் சார்ந்தவர்கள் கடுமையாக வேலை வாங்கினார்கள். முன்பு அரசாங்கத்தில் பணிபுரிபவர்களைப் பற்றி ஒரு ஜோக் சொல்வார்கள். அவர்களுடைய குழந்தைகளுக்கு அப்பாவின் முகமே தெரியாது என்று. அதாவது அவர் காலையில் பிள்ளைகள் தூங்கி எழுவதற்கு முன்பே அலுவலகம் போய்விடுவார்கள். பின் அவர்கள் வரும்போது, பிள்ளைகள் தூங்கி விடுவார்கள் என்று. அதேபோல் இன்றைய வங்கியும் மோசமாகி விட்டது. அதுவும் அலுவலராக யாரும் போய் மாட்டிக் கொள்ளக்கூடாது.
காது பிரச்சினை காரணமாக திருச்சியில் உள்ள ஒரு மருத்துவமனை ஒன்றில் உடல் பரிசோதனை எடுத்துக்கொண்டார்.அதுவும் மருத்துவமனைக்குச் சென்றால் உடனே அலுவலகத்திலிருந்து போன் வரும் எப்போது வரப்போகிறீர்கள் என்று. அரைகுறையாக அவசரம் அவசரமாக அலுவலக ஓடி வரும். திரும்பவும் கடுமையான வேலை. காது பிரச்சினை போய் மூக்கில் அவருக்குப் பிரச்சினை. ஒரு சின்ன அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
ஒரு நாள் அலுவலகத்தில் இருக்கும்போதே அவர் மயக்கம் போட்டு விழுந்துவிட்டார். அவர் நிலை மோசமாகிவிட்டது. எல்லாவிதமான பிரச்சினைகளும் சேர்ந்து விட்டன. சென்னையில் அப்போல்லா மருத்துவமனையிலும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. மரணம் அவரைத் தழுவி விட்டது. என் பெரியப்பா ஸ்ரீபையனிடம் கேட்டேன். ஏன் கல்யாணசுந்தரம் மரணமடைந்த விஷயத்தைக் கேட்டேன். ”எல்லாம் குழப்பமாக இருக்கிறதுப்பா..உனக்குத் தெரியும் என்று நினைத்தேன்” என்று அவன் சொல்வதைக் கேட்டு எனக்கு ஒன்றும் புரியவில்லை. கல்யாணசுந்தரம் என்னை விட வயதில் சிறியவர். கல்யாணசுந்தரம் மனைவியிடம் போன் பண்ணி விஜாரித்தேன். அவர் திருச்சியில் வீடை காலி செய்யாமல் இருக்கிறார். கல்யாண சுந்தரத்திற்கு வரவேண்டியதைப் பெறுவதற்கு. அதுவும் தாமதமாகிக் கொண்டே போகிறது. இதோ நானும் கல்யாணசுந்தரம் மாதிரி சீர்காழியில் அலுவலராக மாட்டிக்கொண்டு விழிக்கிறேன். அப்பாவிற்கு 90 வயது நான் இங்கே வந்து 6 ஆண்டுகள் ஆகிவிட்டன என்றாலும் மாற்றல் கிடைக்கவில்லை. டம்மியாய் ஒரு யூனியன். கையில் சாட்டையுடன் ஒரு பூதம் மாதிரி தலைமை அலுவலகம் வீற்றிருக்கிறது. பணிபுரிபவர்கள் மீது எந்த அக்கறையும் இல்லாமல்.
இது கத்தியின்றி ரத்தமின்றி அலுவலகம் செய்கிற ஒரு கொலை… பரிதாபத்திற்குரியது…