எதையாவது சொல்லட்டுமா……..43

முன்பெல்லாம் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்வது அவ்வளவு சுலபமாக இருந்தது. உடம்பும் ஒத்துழைப்பு கொடுத்தது. இப்போது பயணம் என்றால் சற்று அச்சமாகவே இருக்கிறது. அதுவும் பஸ்ஸில் பயணிப்பது, வெகு தூரம் செல்வது என்பதை கற்பனை செய்ய முடியவில்லை. அதற்கு ஒரு காரணம் சீர்காழியில் கடந்த ஓராண்டுக்கு மேலாக பஸ் பயணம் இன்னமும் செய்து கொண்டிருப்பதால்தான் இந்த அவதியை உணர முடிந்தது. ஆனால் ரயிலில் வருவது சற்று ஆறுதல் தரக்கூடிய விஷயம். பெரும்பாலும் டிக்கட் கிடைப்பது ரொம்பவும் கஷ்டமான விஷயமாகிவிடும். என் உறவினர் ஒருவர் 2 மாதத்திற்குமுன் ரிசர்வ் செய்தாலும் கடைசி நிமிடத்தில் டிக்கட் காத்திருக்கும் நிலையிலிருந்து மாறாது.

காலச்சுவடு கண்ணன் அவர்கள் சு.ரா. 80 நிகழ்வுக்கு வரும்படி அழைப்பு விடுத்திருந்தார். கன்னியாகுமாரியில் நடக்கும் இந்த நிகழ்வுக்கு வர எனக்கும் விருப்பம். ஆனால் நான் இருக்கும் மயிலாடுதுறையிலிருந்து திருச்சி வரைக்கும் ஒரு ரயிலைப் பிடித்துக்கொண்டு வரவேண்டும். பின் திருச்சியிலிருந்து கன்னியாகுமாரி போக வேண்டும்.

2 நாள் லீவு எனக்குக் கொடுப்பதே ஏதோ வங்கியே நின்றுவிடுவதாக நினைப்பவர் வங்கி மேலாளர். வெள்ளிக்கிழமை கூட்டம் என்றால் விழாக்கிழமை 4 மணிக்கு சுமாருக்கு அலுவலகம் விட்டு கிளம்ப வேண்டும். அதேபோல் திருச்சியில் உரிய நேரத்தில் வண்டியைப் பிடிக்க வேண்டும். பஸ்ஸில் சென்றால் கால் நிச்சயம் வீங்கி விடும். இது சரிப்படாது என்றுதான் தோன்றுகிறது. ஆனால் இன்னும் இரண்டு நாட்கள் உள்ளன.

நான் இந்தக் கட்டுரையில் சுராவைப் பற்றிதான் எழுதவேண்டும். எப்போதும் தமிழில் சிறு பத்திரிகை சூழலில் எதிர் எதிர் அணிகளாக எல்லோரும் இருப்பார்கள். கு.ப.ரா, ந.பி ஒரு பக்கம் என்றால், க.நா.சு புதுமைப்பித்தன் இன்னொரு பக்கமாக இருப்பார்கள். சி சு செல்லப்பாவிற்கும், க.நா.சுவிற்கும் எப்போதும் சண்டையே நடந்து கொண்டிருக்கும். க.நா.சு இரங்கல் கூட்டத்தில் கூட சி சு செல்லப்பா அவரைப் பற்றி உயர்வாக சொன்னதாக நினைவில் இல்லை. ஆனால் அந்தக் காலத்தில் நடந்த சண்டை ஒருவிதத்தில் நாகரிகமாக நடந்த சண்டையாக எனக்குத் தோன்றுகிறது. ஆனால் பின்னால் வந்தவர்களிடம்தான் சண்டை முற்றி விட்டது. நாகரிகத்தை மீறி விட்டதாக எனக்குத் தோன்றுகிறது. தமிழில் தீவிரமாக எழுதுபவர்கள் எல்லோரும் தவளைக் கட்சியைச் சேர்ந்தவர்கள். மேலே முன்னேற ஒரு தவளை நகர்ந்தால் கீழிருந்து ஒரு தவளை பிடித்து இழுக்கும்.

சுரா என்னை எதிர் கட்சியைச் சேர்ந்தவர் என்று நினைத்துக்கொண்டிருந்தார் என்று தோன்றியது. நான் சிலருடன் பழக்கம் வைத்துக்கொண்டிருப்பதை அறிந்து அவர் அவ்வாறு நினைத்திருக்கலாம். நான் அவருக்குத் தொடர்ந்து விருட்சம் பத்திரிகை அனுப்பிக்கொண்டிருப்பேன். அதைப் பார்த்துவிட்டு கடிதம் எழுதாமல் இருக்க மாட்டார். கட்டாயம் சந்தா அனுப்பாமல் இருக்க மாட்டார். எந்தப் புத்தகம் அனுப்பினாலும் அவர் பணம் அனுப்பி விடுவார். ஒரு முறை பல ஆண்டுகளாக அவர் விருட்சம் சந்தா அனுப்பாமல் இருந்து விட்டார். நானே விருப்பப்பட்டு அவருக்கு விருட்சம் பத்திரிகையை அனுப்புவதால் எப்படி அவரிடம் கேட்பது என்பது எனக்கு சங்கடமாக இருந்தது. அந்தச் சமயத்தில் மையம் பத்திரிகை திரும்பவும் வர ஆரம்பித்தது. அதையும் நான்தான் பார்த்துக் கொண்டிருந்தேன். மையம் பத்திரிகையை சுராவிற்கு அனுப்பினேன். உடனே வாழ்த்துத் தெரிவித்து கடிதம் வந்ததோடல்லாமல், சந்தாவும் உடனடியாக வந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில்தான் அவருக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன். ‘நான் தொடர்ந்து தங்களுக்கு பத்திரிகை அனுப்பி வருகிறேன். ஏன் எனக்கு சந்தா அனுப்பவில்லை?’ என்று. உடனடியாக ஒரு கடிதம் அவரிடமிருந்து வந்தது. எத்தனை ஆண்டுகளாக உங்களுக்கு சந்தா அனுப்ப வேண்டுமென்று கேட்டு. நான் ஆண்டுக் கணக்கைச் சொன்னேன். உடனே அவர் அத்தனை ஆண்டுகளுக்கும் சேர்த்து பணம் அனுப்பி விட்டார். இதை ஏன் இங்கு சொல்கிறேன். சுராவிடம்தான் இதுமாதிரி உரிமையாகக் கேட்க முடியும்.

எனக்கு அவரிடம் அதிகம் பழக்கம் இல்லை. ஒரு முறை குடும்பத்தோடு நாகர்கோயில் சென்றேன். அவர் வீட்டிற்குப் போக வேண்டும் என்று நினைத்து, காரை நிறுத்தினேன். என் வீட்டிலுள்ளவர்களுக்கு ஏன் அங்கு நிறுத்தினேன் என்பது தெரியாது. அவர் வீட்டிற்குள் நுழைந்தேன். ஆனால் அன்று சுரா வீட்டில் இல்லை. எனக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது. அவரைப் பற்றி சொல்லும்போது, விருந்தோம்பலில் அவர் சிறந்தவர் என்று கேள்விபட்டிருக்கிறேன். பல எழுத்தாளர்கள் அவர் வீட்டில் தங்கி விட்டுச் செல்வார்கள் என்றெல்லாம் சொல்வார்கள். இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால், நகுலனை திருவனந்தபுரத்தில் அவர் வீட்டில் வந்து சந்திக்கிறேன் என்று நகுலனிடம் சொன்னேன். இதைக் கேட்டவுடன் நகுலன் சங்கடப்பட்டுவிட்டார். ‘என் வீட்டில் வசதி இல்லை.’ என்று பயத்துடன் சொன்னார். நான் சொன்னேன்: ‘நீங்கள் கவலைப் படாதீர்கள். ஒரு ஓட்டலில் போய் தங்கி உங்களைப் பார்க்க வருகிறேன்,’ என்றேன். அப்போது கூட அவர் மனது சமாதானம் ஆகவில்லை. ஆனால் என்னால் அங்கு போகவே முடியவில்லை. நகுலன் இறந்தபிறகுதான், திருவனந்தபுரம் சென்றேன். அப்போது பூட்டியிருந்த அவர் வீட்டை வெளியிலிருந்து பார்த்துவிட்டு வந்தேன்.

விருட்சம் இலக்கியக் கூட்டம் மாதம் ஒரு முறை நடத்தி வந்தேன் (நான்தான் நடத்தினேனா என்பது இப்போது சந்தேகமாக இருக்கிறது) கூட்டத்திற்கு ஆட்கள் வரமாட்டார்கள். இந்திரன் ஒரு முறை கூட்டத்திற்குப் பேச ஒப்புக்கொண்டார். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் எதிரில் உள்ள லேடீஸ் ஹாஸ்டல்தான் கூட்டம் நடக்கும் இடம். அவர் வந்து விட்டார் பேச. பின் நான் வந்தேன். இந்திரன் சங்கடப்பட்டார். ‘நாம இருவர்தானா பேச,’ என்று. கவலைப்படாதீர்கள். மெதுவாக எல்லோரும் வருவார்கள். அப்படித்தான் மெதுவாக கூட்டம் சேர்ந்தது. நான் இலக்கியக் கூட்டம் நடத்தப் போகிறேன் என்று சொன்னபோது, பிரமிள் ஒரு கடிதம் எழுதியிருந்தார். It is dangerous. Don’t do it. பல ஆண்டுகளாக கூட்டம் நடத்தியும் அவர் ஏன் அப்படிச் சொன்னார் என்பது எனக்குத் தெரியாது.

நான் ரொம்ப நாட்களாக சுராவை வைத்து ஒரு கூட்டம் நடத்த வேண்டுமென்று எண்ணினேன். ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்யும்போது, என் பரபரப்பு தாங்க முடியாமல் போய்விடும். சுரா சென்னையில் இருந்தபோது, நான் நடத்தும் கூட்டத்திற்கு வந்து பேசுவதாக சொன்னார். வழக்கம்போல் எல்லோருக்கும் ஏற்பாடு செய்தேன். என் பக்கத்தில் சிபிச்செல்வன் உதவிக்கு இருந்தார். சிபிச்செல்வன் வீட்டிற்கு சுராவும், அவர் மனைவியும் வருவதாக இருந்தது. ‘என் வீட்டிற்கு வர முடியுமா?’ என்று சுராவைக் கேட்டேன். நான் நினைத்தது. அவர் வர விரும்ப மாட்டார் என்றுதான். ஆனால் அவர் வருகிறேன் என்று சொல்லி, என் வீட்டிற்கும் வந்துவிட்டார். எனக்குத்தான் சுரா யார் என்று தெரியும். என் வீட்டில் உள்ள யாருக்கும் அவ்வளவாய் தெரியாது. வீட்டிலுள்ளவர்களிடம் அறிமுகப்படுத்தியும் அவர்களுக்குப் புரியவில்லை. எனக்கு அவர் குடும்பத்தோடு வந்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.

சுரா கூட்டத்தை மயிலாப்பூரில் வைத்திருந்தேன். அந்த இடத்திற்கு அவரை அழைத்துக்கொண்டு போக அவர் காரிலும், நான் டூ வீலரிலும் சென்றேன். சிபிச்செல்வன் அவருடன் காரில் ஒட்டிக்கொண்டார். ஒரு இடத்தில் என் டூ வீலர் ஒரு பள்ளத்தில் (மழையால்) மாட்டிக்கொண்டு விட்டது. காரில் சென்று கொண்டிருந்த சுரா இதைக் கவனித்துவிட்டார். சிபியை அனுப்பி எனக்கு உதவும்படி சொன்னார். இதெல்லாம் கூட்டம் நடக்க வேண்டுமென்ற பரபரப்பால் நிகழும் நிகழ்ச்சி.

அன்று கூட்டதில் எதிர்பார்த்தபடி பலரும் வந்திருந்தார்கள். அவருடைய நண்பர்கள் வந்திருந்தார்கள். காலச்சுவடு அலுவலகத்திலிருந்து அரவிந்தன் வருவார் என்று எதிர்பார்த்தேன். வரவில்லை. விருட்சம் கூட்டம் என்பதால் வரவில்லையா என்று நினைத்தேன். அந்தக் கூட்டத்தில் சுரா சிறப்பாகப் பேசினார். அவர் பேசியதை தனியாக காசெட்டில் பதிவு செய்தேன். அந்தக் காசெட்டை சீடியில் பதிவு செய்து காலச்சுவடு கண்ணனிடம் கொடுக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். கடந்த சில தினங்களாக அந்தக் காசெட்டை எங்கே வைத்தேன் என்று தேடிக் கொண்டிருக்கிறேன். நான் பணிபுரியும் சீகாழி கிளையில் உள்ள மேலாளருக்கும் சுரா யார் என்று தெரியவில்லை.

“எதையாவது சொல்லட்டுமா……..43” இல் ஒரு கருத்து உள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன