எதையாவது சொல்லட்டுமா?……..41

இன்று மதியம் சாய்பாபா மறைந்த செய்தியை டிவி மூலம் அறிந்தேன். அவர் உடல்நிலை குன்றி மருத்துவமனையில் படுத்துக் கிடந்தசெய்தியை அறிந்தபோது எனக்கு வருத்தமாகவே இருந்தது. ஆனால் அவருக்கு 85 வயது. பெரிய மகான்கள் மரணம் அடையும்போது ஒன்று புற்று நோயால் அவதிப்பட்டு இறந்து போவார்கள். ரமணர், யோகி ராம்சுரத்குமார், ஜே கிருஷ்ணமூர்த்தி. பலருடைய கவலைகளை, பிரச்சினைகளை கேட்டு கேட்டு தீர்வளிக்கும் மகான்கள், தங்கள் மரணத்தைப் பற்றி சரியாக கணிக்க முடியவில்லை என்றுதான் தோன்றுகிறது.

சாய்பாபா படுத்த படுக்கையாக ஆனபோது, அவருக்கு இதுமாதிரி ஒரு மரணம் நிகழும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார். அவர் 98 வயது வரை வாழப்போவதாகத்தான் சொல்லிக்கொண்டிருந்தார் என்று செய்தி சொல்கிறது.

கடவுளின் அவதாரமாகத்தான் சாய்பாபாவை எல்லோரும் பார்த்தார்கள். ஒரு முறை ஒயிட் பீல்டில் என் குடும்பத்தோடு சாய்பாபாவை தரிசனம் செய்யச் சென்றேன். ஒரே கூட்டம். ரஷ்யாவிலிருந்து பலர் அவரைப் பார்க்க வந்திருந்தார்கள். கூட்டத்தை கட்டுப்படுத்தவே போதும் போதும் என்றாகிவிட்டது.
சாய்பாபா மெதுவாக நடந்து வந்தார். எல்லோருடைய குறைகளையும் கடிதம் மூலம் எழுதித் தந்ததை வாங்கிக் கொண்டு மெதுவாக வந்தார். பின் கையை வீசினார். எல்லோர் முன்னும் சாக்லேட்டுகள் வந்து விழுந்தன. நான் அவரை சந்தேகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் என் பக்கம் வராமல் போய்விட்டார்.

என் நண்பர் ஒருவர் சாய்பாபாவைப் பற்றி குறிப்பிடும்போது, அவர் மற்றவர்கள் மனதை உடனடியாகப் புரிந்து கொண்டு விடுவார், என்று குறிப்பிட்டார். எனக்கும் அது உண்மை என்று பட்டது. அவருடைய சுருள் சுருளான தலைமுடியும், அகன்ற முகமும் மனதிலிருந்து அகலவே அகலாது. கோடான கோடி மக்கள் உலகம் முழுக்க அவருக்கு பக்தர்களாக இருந்திருக்கிறார்கள். அவர் யாரை குறை கூறியது கிடையாது. நன்மைதான் செய்திருக்கிறார். சென்னை மக்களுக்கு எப்போதும் குடிநீர் கிடைக்கும் வசதியை ஒரு அரசாங்கத்தால் செய்ய முடியாத ஒன்றை, அவரால் செய்து முடிக்க முடிந்தது.

அவரைப் பற்றி பல குற்றச்சாட்டுகளும் உண்டு. அதற்கெல்லாம் அவர் பதில் சொல்வதில்லை. அவர் மரணம் அடைந்தாலும், தொடர்ந்து எல்லார் மனதிலும் இருந்துகொண்டுதான் இருப்பார்.

“எதையாவது சொல்லட்டுமா?……..41” இல் 2 கருத்துகள் உள்ளன

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன