எது கவிதை……..1

ஒரு ஞாயிற்றுக்கிழமை காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, என் உறவினர் ஒருவர் ஒரு சினிமாப் பாடலாசிரியர் பெயரைக் குறிப்பிட்டு அவர் கவிஞர்தானே என்றார். சினிமா பாடலாசிரியர் ஒவ்வொருவரும் சினிமாவில் ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதி மக்கள் உள்ளங்களை கொள்ளை கொண்டவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்களை கவிஞர்கள் என்று கூறிவிட முடியாது. கவிதை வேறு சினிமாப் பாடல் வேறு. சினிமா பாடல் எழுதுவதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம். புகழ் அடையலாம். கவிதை அப்படி அல்ல. இன்னும் கேட்டால் கவிதை எழுதுபவர்கள் யாரும் தன்னை கவிஞர் என்று சொல்லிக்கொள்ள விருப்பப் படமாட்டார்கள். நிஜமாக கவிதை எழுதுபவர்கள் அப்படித்தான் இருப்பார்கள்.

பாரதியின் வசன கவிதையிலிருந்து ஒரு மாற்றம் இருந்தாலும், கவிதை பலவிதப் போக்கில் செல்ல ஆரம்பித்து விட்டது. ந.பிச்சமூர்த்தி கூட கொஞ்சம் மரபு கொஞ்சம் புதுக்கவிதை என்று தாவிக்கொண்டிருந்தார். க.நா.சுதான் கவிதையின் புதிய பாதையை இன்னும் திறந்து வைத்தார். இன்று கவிதை பலவிதப் போக்கில் போய்க் கொண்டிருக்கிறது. என் நண்பர் லாவண்யா அவருடைய மூன்றாவது கவிதைத் தொகுதியைக் கொண்டுவர யோசனை செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.

கவிதைப் புத்தகம் கொண்டு வருவது எளிது. அதை எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்படி விற்பது மிக மிகக் கடினம். ஒரு நூறு உண்மையான கவிதை எழுதுபவர்கள் (கவிஞர்கள் என்று சொல்ல விரும்பவில்லை) இருந்தாலும், ஆயிரம் பொய்யான கவிதை எழுதுபவர்கள் உருவாகி இருப்பார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன் என்னை ஒருவர் அவர் மனைவியுடன் பார்க்க வந்தார். அவரிடமுள்ள கவிதைப் புத்தகத்தை என்னிடம் கொண்டு வந்து கொடுத்தார். ‘ஆயிரம் புத்தகங்கள் அச்சடித்துள்ளேன்,’ என்றார். எனக்கு திகைப்பாக இருந்தது. ‘எப்படி விற்கப் போகிறீர்கள்? யார் கண்ணிலும் படாமல் வைத்துக் கொள்ளுங்கள்,’ என்றேன். அந்தப் புத்தகம் கொண்டு வந்ததில் அவருடைய மனைவிக்கு விருப்பமில்லை என்பதும் தெரிந்தது.

உண்மையில் கவிதை எழுதுபவர்கள் என்று எடுத்துக்கொண்டால் ஒரு நூறு பேர்களாவது இருப்பார்களா என்பது சந்தேகம்தான். ஆனால் எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அந்த நூறு பேர்களும் கவிதை என்று சொல்லும்படி ஒரு கவிதையாவது எழுதியிருப்பார்கள். ஆனால் எழுத முடியாதவர்கள் கவிதை என்ற பெயரில் ஆயிரக்கணக்கான கவிதை நூல்களை வெளியிட்டு உண்மையாகவே கவிதை எழுத வேண்டுமென்று உந்துதல் உடையவர்களை காணாமல் ஆக்கி விடுகிறார்கள். சினிமா பாடலாசிரியர்களின் பங்கு இதில் முக்கியமானது.

புதியதாக கவிதை எழுதுபவர்கள் வர வர ஏற்கனவே கவிதை எழுதி அலுத்துப் போனவர்கள் dropout ஆகி விலகிப் போய்விடுவார்கள். இன்று ஏராளமான கவிதைகள் சந்தையில் வெளி வர ஆரம்பித்து விட்டன. நிஜக் கவிதைகளை இவை மலினப்படுத்தி விடுகின்றன.

திரும்பத் திரும்ப சொல்லப்படுகிற விஷயங்களே அதிகம் என்பதால் எந்தக் கவிதைப் புத்தகத்தையும் முழுதாகப் படிக்க முடியவில்லை. கவிதை என்று எழுதி புத்தகமாகக் கொண்டு வந்தபின் கவிதை படிப்பவர் பக்கம் தாவி விடுகிறது. அவ்வளவுதான் படிப்பவர்கள் மனது வைத்தால்தான் கவிதையை உருவாக்க முடியும். ஒரு தேர்ந்த வாசகன் சிறந்த கவிதைகளை அடையாளம் கண்டு விடுவான். அப்படிப்பட்ட தேர்ந்த வாசகனை விரல்விட்டு எண்ணி விடலாம்.

கவிதை எழுதும் ஒவ்வொருவரும் கவிதையை ரசிப்பவர்களாக இருக்கிறார்கள். பின் கவிதை எழுத ஆரம்பித்துவிடுகிறார்கள். எழுதி புத்தகமாகக் கொண்டு வந்தபிறகு அவர் எழுதுவதுதான் கவிதை என்று நம்பி விடுகிறார்கள். நவீன விருட்சம் பத்திரிகையை ஆரம்பித்து 23 ஆண்டுகளில் நான் கவிதை எழுதுபவர்களிடம் உள்ள போட்டியையும் பொறாமையும் பார்த்து வியந்திருக்கிறேன். எழுதுபவர்கள் குறைவு. படிப்பவர்கள் அதைவிட குறைவு. ஆனால் சண்டை வலுவானது.

பசுவய்யா, ஞானக்கூத்தன், பிரமிள் போன்ற படைப்பாளிகள் விருட்சத்தில் பங்கு அளித்திருக்கிறார்கள் என்று என் பத்திரிகையில் எழுதியிருந்தேன். ‘அது எப்படி அவர்கள் இருவர் பெயர்களுடன் என் பெயரை சேர்க்கலாம்,’ என்று பிரமிள் என்னிடம் சண்டைக்கே வந்துவிட்டார்.

அதேபோல் ஒரு காலத்தில் எழுதப்பட்ட கவிதைகளை இன்னொரு காலத்தில் படிக்கும்போது ஏற்கனவே எழுதியதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

கவிதையைக் குறித்து இன்னும் யோசித்துப் பார்க்கலாம்.

(இன்னும் வரும்)

“எது கவிதை……..1” இல் 2 கருத்துகள் உள்ளன

  1. கவிதையின் அடையாளத்தை அழகாக சித்தரித்துள்ளீர்கள். தெரிந்தோ தெரியாமலோ பலக் கவிதைகளில் இன்னொருக் கவிதையின் சாயல் மறுப்பதற்கில்லை. நல்ல கவிதை நிச்சயம் கவிதையாகவே இருக்கும்… தொடரட்டும் கவிதை குறித்த சித்திரங்கள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன