எதையாவது சொல்லட்டுமா – 34

இந்த ஆண்டில் பரிசுப் பெற்ற மூன்று படைப்பாளிகளுக்கு வாழ்த்துத் தெரிவிக்க வேண்டும். சாரல் பரிசு பெற்ற அசோகமித்திரனுக்கு, விளக்கு பரிசு பெற்ற திலீப்குமாருக்கு, சாகித்திய அகாடமி பரிசு பெற்ற நாஞ்சில் நாடனுக்கு. வாழ்த்துகிறேன்.

கடந்த மாதம் 30 ஆம் தேதியிலிருந்து ஒரு வித பரபரப்பு. அந்தப் பரபரப்பில் நான் வழக்கமாகச் செயல்படுவதிலிருந்து பெரிதும் விலகிவிட்டேன். என் பெண்ணின் இரண்டாவது பிரசவத்தின் போது நான் வீட்டிற்கும் மருத்துவமனைக்கும் அலைந்து கொண்டிருந்தேன். மதியம் ஒன்றரையிலிருந்து 2 மணிவரை பயம். பையன் பிறந்துவிட்டான் என்று வீட்டில் எல்லோருக்கும் சந்தோஷம்.

இந்த முறை நான் புத்தகக் காட்சியில் பங்கேற்பதை வீட்டிலுள்ளவர்கள் விரும்பவில்லை. சரியாக புத்தகக் காட்சி ஆரம்பிக்கும்போதுதான் பெண் பிரசவிப்பாள் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனாலும் இதை விடக்கூடாது என்று தோன்றியது. நான் இப்போது இருக்கும் சூழ்நிலையில் விருட்சம் பத்திரிகைக் கொண்டு வரமுடியவில்லை. புத்தகங்கள் கொண்டு வரமுடியவில்லை. இந்த இரண்டுமே இல்லாமல் புத்தகக் காட்சியா என்று தோன்றியது. ஸ்டாலைப் பார்த்துக்கொள்ள 2 பேர்கள் தேவை. மற்றபடி விடுமுறை தினங்களில் நான் வந்துவிடுவேன். அதே போல் தேவராஜ் என்ற நண்பரையும், என் உறவினர் பையன் ஏற்பாடு செய்த அசோக் என்பவரையும் ஏற்பாடு செய்துவிட்டு, புத்தகக் காட்சியைத் தொடங்கி விட்டேன்.

மிகக்குறைவாகக் கொண்டுவந்துள்ள விருட்சம் புத்தகங்களைப் பரப்பியபின் இடம் அதிகமாக இருந்தது. அந்த இடத்தை மற்றப் புத்தகங்கள் எடுத்துக்கொண்டன. குறிப்பாக கிழக்கு, ஆனந்தவிகடன், காலச்சுவடு பதிப்பகங்கள்.

30ஆம் தேதியே பெண்ணும் குழந்தையைப் பெற்றுவிட்டாள். சீர்காழியில் நான் அலுவலகம்போய் ஞாயிற்றுக்கிழமை வந்து சேர்ந்தேன். முதலில் புத்தகங்களை ஸ்டாலுக்கு எடுத்துக்கொண்டு போக ஒருநாள் லீவு எடுத்திருந்தேன். அலுவலகத்தில் எனக்குப் புத்தக ஞாபகமே. கூடவே புதியாதாகப் பிறந்த பேரன் ஞாபகம்.

நான் எதிர்பார்க்காமலே இந்த முறை நன்றாகவே புத்தகங்கள் விற்றன. எல்லாம் இரவல் புத்தகங்கள். ”என்ன தேவராஜ், விருட்சம் புத்தகங்கள் விற்றனவா?” என்று போனில் கேட்பேன். ”இல்லை…இல்லை,” என்பார் தேவராஜ். எனக்குக் கேட்க வருத்தமாக இருக்கும்.

வழக்கம்போல் பல எழுத்தாள நண்பர்களைச் சந்தித்தேன். எல்லோர் போட்டோ க்களையும் எடுத்துக்கொண்டேன். எதிர் ஸ்டாலில் எனக்குப் பிடித்த ஜே கிருஷ்ணமூர்த்தி ஸ்டால். நான் முதல் வரிசையில் என் ஸ்டால் இருந்த இடத்தைத் தவிர வேறு எங்கும் போகவில்லை.

ஸ்டாலில் நான் சந்தித்த படைப்பாளிகளைப் பற்றி சொல்ல வேண்டும். எல்லாம் dropouts. இலக்கிய உலகில் dropouts அதிகமாகிக் கொண்டு வருகிறார்கள். ஒரு காலத்தில் அவர்கள் புத்தகங்கள் வெளிவந்து அவர்களுக்குப் பெருமையைத் தேடித் தந்தன. இப்போது இருக்குமிடம் தெரியவில்லை. அவர்களும் எழுதுவதிலிருந்து பெரிதும் விலகி dropout ஆக மாறிவிட்டார்கள். dropout ஆக ஏன் காலம் அவர்களை மாற்றியது. எழுதுவதெல்லாம் புத்தகமாக வர வழி கிடைக்காமல் இருக்கும். அப்படியே புத்தகமாக வந்தாலும் யாரும் யாரும் சீண்டுவார்கள் இல்லாமல் போயிருக்கும். அவர்கள் dropouts. ஆக மாற எல்லாவித நியாயமும் இருக்கிறது.

நானும் dropout ஆக மாறாமலிருக்க விருட்சம் பத்திரிகையும், புத்தகங்களையும் கொண்டு வந்து கொண்டிருக்கிறேன். புத்தகக் காட்சியில் dropouts புத்தகங்களை விற்பனைக்கு வைத்துக்கொண்டிருக்கிறேன்.

“எதையாவது சொல்லட்டுமா – 34” இல் ஒரு கருத்து உள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன