சாபம்
வைதீஸ்வரன்
என்
காலடியில் ஒரு பூனை
கடவுளை வேண்டித்
தவம் இருக்கிறது
என் கை தவறி விழும்
இட்டிலிக்காக.
அதன்
தவத்தை உண்மை யாக்க
நான் குட்டிக் கடவுளாகி
இட்டிலியைத்
தவற விடுவேன்.
பல தடவை நான்
கோணங்கிக் கடவுளாகி
இட்டிலியை கைவிடாமல்
கட்டை விரல் காட்டுவேன்
பொறுமை வறண்ட பூனையின்
அரை வெள்ளைக் கண்களில்
ஒரு நரகம் தெரியும்
விரல் முனையால் சிறிது
பல் முளைக்கும்.
நள்ளிரவில்
இருள் அறுக்கும் ஓலம்
பூனைக் குரவளைக்குள்
ஓரெலியின் இரத்தம்
பீச்சி யடிக்கும்.
கனவுக்குள் நான்
எலியாகி இறந்த பின்பும்,
விழித்துப்
பதறிக் கொண்டிருப்பேன்.
ஏனென்று தெரியாமல்
பூனைக்கு இட்லி ஏய்க்கிற கோணங்கிக் கடவுளராக இருப்பதற்குத்தான் பெரும்பாலானோருக்குப் பிரியம். பிறகேன் இரவில் கிடந்து மறுகுகிறார்கள்? நன்றாக இருக்கிறது.