தீபாவளிக்கு அடுத்தநாள் என் இடது கண்ணைப் பார்க்க சகிக்கவில்லை. கண் வீங்கியிருந்தது. கண்ணில் வலியும் இருந்தது. எனக்கு பயம் வந்துவிட்டது. அன்று என் அம்மாவின் திதி. நானும் சகோதரனும் சேர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அம்மாவின் திதியை நடத்துவோம். என்னைப் பார்த்தவுடன் என் சகோதரன்.
”என்ன மெட்ராஸ் ஐ யா?” என்றான். பின் ”கிட்ட வராதே…எல்லாருக்கும் பரவிவிடும்” என்று கூப்பாடு போட்டான்.
எனக்கு எப்படி இந்த நோய் வந்தது என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன். புரியவில்லை. அன்று திதி முடிந்து அவன் வீட்டிற்கு என் சகோதரன் போனபோது அவனுக்கும் மெட்ராஸ் ஐ வந்துவிட்டது. இந்த மெட்ராஸ் ஐ எப்படிப் பொறுத்துக் கொள்வது என்பது தெரியவில்லை. நான் பெரும்பாலும் வசிக்கும் சீர்காழி வங்கிக் கிளையில் யாரோ ஒரு வாடிக்கையாளர் கருப்பு நிற கண்ணாடி அணிந்து வந்திருந்தான். அவன் மூலம் எனக்குப் பரவியிருக்க வாய்ப்புண்டா என்பதை என்னால் ஊகிக்க முடியவில்லை. கண்ணில் அழுக்குகள் சேர்ந்தால் அது மெட்ராஸ் ஐ ஆக மாறிவிடுமோ என்று தோன்றியது. என் கண் எப்போதும் சிவப்பாக இருக்காது. கண் சிவப்பாக மாறினால் அதற்குப் பல அறிகுறிகள் உண்டு என்று எனக்குத் தெரியும். உடலில் எதாவது குறை இருந்தால் கண் காட்டிக் கொடுத்துவிடும்.
எதாவது தப்பு செய்தால்கூட கண் காட்டிக்கொடுத்து விடும். எனக்கு ரமணரின் கண்கள் பிடிக்கும். தீர்க்க ஒளியுடன் தீட்சண்யமாக கண்கள் பளபளக்கும். அரவிந்தரின் கண்கள் சாந்தமாக இருக்கும். நடிகைகளில் ஸ்நேகாவின் கண்களைப் போல பிரகாசமான கண்களை நான் பார்த்ததில்லை.
என் மெட்ராஸ் ஐயால் எனக்கு சில அனுகூலங்கள். அலுவலகத்தில் முதலில் ஒருநாள் விடுமுறை எடுத்துக்கொண்டேன். பின் கண் வலி அவ்வளவாக தீரவில்லை என்பதால் இன்னொரு நாளும் எடுத்துக்கொண்டேன். இரண்டுநாள் விடுமுறையில் லைப்ரரி செல்வது என்று பல விஷயங்களை முடித்துக்கொள்ள பயன்படுத்திக்கொண்டேன். ஹூக்கின்பாதம்ஸ் சென்று ஒரு ஆண்டுக்கு முன் விற்பனைக்குக் கொடுத்தப் புத்தகப் பணத்தைக் கேட்டேன். எதுவும் ஒழுங்கில்லை. நான் கேட்காமலயே பணம் வரும் இடத்திலிருந்தும் பணம் வருவதில்லை. இப்போது கேட்டாலும் நடப்பதில்லை. அரசாங்க லைப்பரரியில் பத்திரிகை அனுப்பியதற்கு பில் அனுப்பினேன். போய் கேட்டேன். வரவில்லை என்று சொல்லி விட்டார்கள். போனில் எத்தனை முறை கேட்டாலும் அவர்கள் உதிர்க்கும் பதில் இதுவாகத்தான் இருக்கும். நான் திரும்பவும் விடுமுறை எடுத்துக்கொண்டு எனக்கு மெட்ராஸ் ஐ வந்தபிறகுதான் வரமுடியும். ஒருநாள் விடுமுறை எடுத்ததற்கே அலுவலகத்திலிருந்து போன் வந்துவிட்டது. ‘மெட்ராஸ் ஐ ஆக இருந்தாலும் பரவாயில்லை. வாருங்கள்.’ என்று கூப்பிட ஆரம்பித்து விட்டார்கள். புதன் கிழமை சென்றேன்.
என் சகோதரனனும் 3 நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு விட்டான். கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்தபோது என் முகமா இது என்று திரும்பவும் கேட்டுக்கொள்ள ஆரம்பித்தேன். பல ஆண்டுகளுக்கு முன் நான் ஒரு நண்பரை அடிக்கடி பார்க்கப் போவேன். அவர்கள் வீட்டில் அந்த நண்பரின் தாய் என்னைப் பார்த்து பாக்கியராஜ் என்று கூப்பிடுவார். அவர்கள் சினிமா பார்க்க மாட்டார்கள். ஆனால் டிவியில் வரும் சினிமாவைப் பார்த்திருப்பார். சமீபத்தில் அவர் இறந்து விட்டார். நண்பரின் வீட்டிற்கு துக்கம் விஜாரிக்கச் சென்றேன். என்னை பாக்கியராஜ் என்று நண்பரின் அம்மா கூப்பிட்டதை அவர்கள் ஞாபகப் படுத்தினார்கள்.
எனக்கும் பாக்கியராஜுற்கும் மூக்குக் கண்ணாடியைத் தவிர எந்த ஒற்றுமையும் கிடையாது. நான் உயரம். கிட்டத்தட்ட 6 அடி. மேலும் பாக்கியராஜ் சற்று குண்டாக தோற்றம் தருவார். அவரை விட நான் நிறம் அதிகம். குரல் கூட வித்தியாசம் உண்டு.
என் அலுவலகத்தில் உள்ள ஒருவர் என்னைப் பார்த்து, ‘ரவி சாஸ்திரி மாதிரி இருக்கேம்மா,’ என்றார். என்னால் நம்ப முடியவில்லை.ரவி சாஸ்திரிக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஏதோ சொல்கிறார் என்று நினைத்துக் கொண்டேன். சமீபத்தில் தலையில் வெள்ளை முடி அதிகமாக இருந்ததால் டை அடிக்கலாமென்று அடித்துக் கொண்டேன். என்னைப் பார்த்து என் அலுவலகத்தில் உள்ள ஒருவர் ஒரு நகைச்சுவை நடிகர் பெயரில் கூப்பிட ஆரம்பித்து விட்டார். திரும்பவும் அவருக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
திரும்பவும் கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்துக்கொண்டேன். உண்மையில் நான் யார். அவர்கள் சொல்லும் ஒருவர் இல்லை.
ethaiyaavathu sollattuma nnu aarambichchu …..athukkaaka ippadiyaa.