(பட்டியல்கள் தொடர்ச்சி……)
க.நா.சுவின் விமர்சனப் பார்வையில் ஒரு படைப்பின் தனித்தனி அம்சங்கள் போதிய கவனம் தரப்படாமல் போவதில்லை. ஆனால் அவருடைய இறுதிக் கணிப்பில் அப்படைப்பு அதன் முழுமையில் எவ்வாறு அமைந்திருக்கிறது என்பதற்கு முதலிடம் கொடுக்கப்படுகிறது. இதைக் கூட ஒரு லெளகீக சாமர்த்தியத்துடன் செய்து நல்ல பெயர் வாங்கிக்கொண்டு போய் விடலாம் குறைந்த பட்சம், பொல்லாப்பு பெற்றுக்கொள்ளாமல் சமாளித்துவிடலாம். ஆனால் க.நா.சு அவருடைய வாதங்கள், கணிப்புகளைக் கூறிவிட்டு அவைகளை விளக்கக் குறிப்பிட்ட படைப்புகள், படைப்பாளிகள் பெயர்களையும் எடுத்துக் கூறியிருக்கிறார். இன்னும் ஒரு படி மேலே போய் அவர்களை ரகவாரியாகப் பிரித்துப் பட்டியல்கள் போட்டிருக்கிறார்.
பட்டியல்கள் – இதை வைத்ததுத்தான் க.நா.சு எவரிடமும் முதல் வசவை வாங்கிக் கொண்டிருக்கிறார். அவருடைய சக விமரிசகர்கள், எழுத்தாளர்களிலிருந்து தொடங்கி, ஒரு பத்திரிகை இதழ் வெளிவந்தால் அதன் அட்டவணையிலிருந்து கடைசிப் பக்கம்வரை உள்ளதை ஒவ்வொரு வரியில் வியந்து – பாராட்டி, திட்டி எழுதும் ஆர்வ வாசகன் வரை க.நா.சுவின் பட்டியல்கள் உபாதைப்படுத்தியிருக்கின்றன. க.நா.சு இப்போது எந்தப் பரிசுகளும், பாராட்டுகளும் வழங்க அதிகாரம் படைத்த அமைப்பு எதிலும் அங்கத்தினர் இல்லை. சுத்த சாதாரணர். ஆனால் அவர் பட்டியல்களில் இடம் பெறுவதும் இடம் பெறாமல் போவதும் எழுதாளர்களுக்குள் மிகவும் பெருமை தருவதாகவும் மிகவும் அவமதிக்கப் படுவதாகவுமான விஷயமாகி விடுகிறது.
நகுலன் ஒரு கவிதை எழுதியிருந்தார். அதன் வரிகள் முழுவதும் நினைவில் இல்லை. ஆனால் கவிதை இந்த முறையில் இருந்தது.
யார் இந்த
க.நா.சு –
இவர் முறையாகத் தமிழ் படித்தவரல்ல
இலக்கணம் இவரை மீறியது
கவிதை இவருக்குக் கைவராத
கலை
சிறுகதை நாவலோ சுத்தமாகப்
பிரயோசனம் இல்லை
விமரிசனமோ – ஒழுங்காக
நான்கு வார்த்தை எழுதத் தெரியாது
மனுஷனுக்கு.
அது போகட்டும்
இவர் என் கதை பற்றி என்ன சொன்னார்?
இது ஏதோ ஒருவரைப் பாராட்டி, கெட்டிகாரத்தனமாக எழுதிய கவிதையாகத் தோன்றவில்லை. நிதர்சனமாகக் காணக் கிடைக்கும் உண்மைதான். இல்லாது போனால் க.நா.சு என்ன அபிப்பிராயம் வைத்திருக்கிறார் என்பது ஏன் இவ்வளவு தீவிரமான உணர்ச்சிகளைத் தமிழ் படைப்பிலக்கியத்தில் நேரடியாக, ஆத்மார்த்மாக ஈடுபடும் தொடர்பும் உள்ளவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்?
தமிழில் க.நா.சு பட்டியல்களை உபயோகப்படுத்தியதுபோல, தமிழுக்குப் பட்டியல்கள் தேவைப்படுவதுபோல, எல்லா மொழிகளுக்கும் பட்டியல்கள் பயன்படுத்தப்படுகின்றனவா என்று தீர்மானமாகக் கூற முடியவில்லை. இலக்கிய வரலாறு என்று சிறிது விரிவாக எழுதப்படும்போதுதான் பட்டியல்களைக் காண முடிகிறது. ஆனால் தமிழ் நவீன இலக்கியம் சிறிது காலம் தாழ்த்திய துவக்கம் கண்டதாலும், தமிழில் விமரிசனப் பூர்வமான கணிப்புகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய சூழ்நிலை ஸ்திரமாக இன்னும் உருவாகாத காரணத்தாலும் பட்டியல்கள் அத்யாவசியமாக இருக்கின்றன. பொதுப்படையான இலக்கிய விமரிசகன் சூத்திரங்கள், அல்லது கூற்றுகள், தற்கால படைப்பிலக்கியத்தைப் பொறுத்த வரையில், வாசகர்களுக்கு ஏதோ வாயுப்படலமாகப் போய்விடுகின்றன. விமரிசனக் கூற்றுகள், சூத்திரங்களுக்குத் திட்டவட்டமாக, ஸ்தூலமாக உதாரணங்களைக் கூறியே விளக்கக் கொண்டிருக்கிறது. அப்போது பட்டியல்கள் தவிர்க்க முடியாததாகப் போய்விடுகின்றன.
ஒரு குறிப்பிட்ட தருணத்தில் க.நா.சு தரும் பட்டியல், அப்படியே நூற்றுக்கு நூறு பூர்ணமானது என்று கொள்ள முடியாது. அவர் பார்வைக்குக் கிடைத்தவரை அந்தப் பட்டியல் முழுமையானது என்றுதான் கொள்ள முடியும். இதிலும் கூட, மனித இயல்பில் கூடிய ஞாபக மறதி, கவனக்குறைவு செயல்பட்டுச் சில பெயர்கள், சில படைப்புகள் ஒரு குறிப்பிட்ட க.நா.சு விமரிசத்திலோ கட்டுரையிலோ விட்டுப் போய்விட இடமிருக்கிறது. இருந்தும் க.நா.சு ஒவ்வொரு கால கட்டத்திலும் பல கண்டுபிடிப்புகளைச் சாதித்திருக்கிறார். அவர் பார்வைக்குட்படுவது மற்ற தமிழ் விமரிசகர்கள், இலக்கிய அன்பர்களுக்குக் குறையாத வண்ணம் இருந்துவருகிறது. நாற்பதாண்டு காலமாக எழுதி மணிவிழா பெற்ற எழுத்தாளரின் சமீபத்திய படைப்பு பற்றியும் க.நா.சுவால் அபிப்பிராயம் கூற முடியும். ஓராண்டு காலமாக நடக்கும் ஒரு சிறு பத்திரிகையில் ஒரு கதை எழுதி அடி எடுத்து வைக்கும் இளைஞனின் சாத்தியக் கூறுகள் பற்றியும் க.நா.சுவால் கூற முடியும். இன்று தமிழ் இலக்கிய உலகில் சிறப்பான பெயர்களாக இரக்கும் ஜெயகாந்தன், மெளனி, லா.ச.ரா., சுந்தர ராமசாமி, அழகிரிசாமி, ஹெப்சிபா ஜேசுதாசன், நீல பத்மநாபன், ஷண்முகசுந்தரம், நகுலன், வே.மாலி, ஷண்முகசுப்பையா, சா கந்தசாமி இவர்கள் எல்லோரும் ஒருவிதத்தில் க.நா.சுவின் கண்டுபிடிப்புகளே.
(இன்னும் வரும்)
– அசோகமித்திரன்