சில தினங்களுக்கு முன் ஒரு கனவு வந்தது. அதில் ஸ்டெல்லா புரூஸ் வந்திருந்தார். ஆகஸட் 8ஆம் தேதி அவர் பிறந்தநாள். நான் அவரைப் பற்றி எழுதியிருந்தேன். அந்தக் கனவில் அவர் வேறு ஒரு இடத்திற்குப் போகப்போவதாக குறிப்பிட்டார். அவருடைய மனைவியையும் பார்த்தேன். பொதுவாக சமீணபத்தில் எனக்கு கனவுகள் வருவதில்லை. கனவு காண்பதும் பிடிக்காது. (அப்துல்கலாம் சொல்லும் கனவு இல்லை இது). பின் கனவும் நிஜமாக நடந்ததுபோல் ஒருவிதத் தோற்றத்தைக் கொடுக்கும். நம்முடைய நினைப்புதான் கனவாக மாறிவிடுகிறதா என்றும் தோன்றும். அப்போதுதான் ஸ்டெல்லா புரூஸ் பற்றி இன்னும் எதாவது சொல்லாமல் இருந்து விட்டேனா என்றும் தோன்றியது. எழுந்தவுடன் அவருடைய கவிதைகள் ஞாபகத்திற்கு வந்தது. காளி-தாஸ் என்ற பெயரில் அவர் ழ, விருட்சத்தில் கவிதைகள் பல எழுதி உள்ளார். நானும் நானும் என்ற பெயரில் கவிதைத் தொகுதி கொண்டு வந்துள்ளோம். அவர் கவிதைகள் சிலவற்றை எடுத்து இந்த blogல் அளிக்கலாம் என்று தோன்றியது. ஒரு கவிதையைக் கொண்டும் வந்துவிட்டேன். இன்னும் சில கவிதைகளை அப்படி கொண்டுவர உத்தேசம்.
ஒருமுறை கனவுகள் பற்றி நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, கனவுகளைப் பதிவு செய்ய வேண்டுமென்று நினைப்பேன். அந்த நண்பர் கனவுகள் பற்றி ஆராய்ச்சி செய்பவர். ஒவ்வொரு கனவிற்கும் எதாவது அர்த்தம் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஒவ்வொருநாளும் நிஜமான நிகழ்ச்சிகளே கனவுபோல் தோன்றும். ஞாயிற்றுக்கிழமை சென்னையை விட்டு இங்கு வந்தவுடன், சென்னையில் இருந்ததே கனவுபோல் தோன்றும். நடந்த நிகழ்ச்சிகளை திரும்பவும் அசை போடும்போது அவை கனவுகளாக மாறிவிடுவதுபோல் தோன்றும். ஸ்டெல்லா புரூஸை நான் நிஜமாக பார்த்த நிகழ்ச்சிகள் எல்லாம் இப்போது கனவாக மாறி விட்டன. இப்போதுதான் ஞாபகம் வருகிறது. ஒருமுறை அவருக்கு அலுவலகம் வந்தபிறகு இரவு நேரத்தில் போன் செய்தேன். அப்போது தனியாக நான் மயிலாடுதுறையில் இருந்தேன். போனில் அவர் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்பதை உருக்கமாகச் சொன்னவர். ஏதோ சத்தம் கேட்டதுபோல் தோன்றியது. போனை கட் செய்யாமல் வைத்துவிட்டுப் போய்விட்டார். அந்த நிகழ்ச்சி எனக்கு திகைப்பாக இருந்தது. அன்று எனக்கு சரியாக தூக்கம் வரவில்லை. இது நிஜமா கனவா? நிஜத்தில் கனவு?
நிஜம் கனவை விட மோசமான நிகழ்ச்சியாக மாறுவதைப் பார்த்திருக்கிறேன். ஒருமுறை தி நகரில் உள்ள பாலம் வழியாக வண்டியில் என் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தேன். எங்கிருந்தோ வந்த ஒரு காகம்என் வண்டி மீது மோதி தரையில் பலமாக வீழ்ந்து இறந்து விட்டது. இது மாதிரி சம்பவம் குறித்து எனக்கு வருத்தமாக இருந்தது. இது ஏதோ மோசமான சம்பவத்தைக் குறிப்பதுபோல் எனக்குத் தோன்றியது. ஆனால் மறுநாள் திருநாவுக்கரசு என்ற அதிகாரி ஒருவர் அலுவலகத்திற்கு வந்துவிட்டு, உடல்நிலை சரியில்லை என்று வீட்டிற்குச் சென்றவர், மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டார். நானும் அவரும் பக்கத்தது பக்கத்து சீட்டில் அமர்ந்து பணி புரிபவர்கள். ஒரு சம்பவத்திற்கும் இன்னொரு சம்பவத்திற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. ஆனால் மனம் முடிச்சுப் போட்டுக்கொண்டே இருக்கும்.ஒரு விஷயத்தைத் தீவிரமாக யோசித்தால் அது கனவாக மாறி நமக்கு எதாவது அர்த்தம் சொல்வதாக தோன்றுகிறது. வெறும் நினைவின் நீட்சிதான் கனவு. அப்படி சொல்வது சரியாக இருக்குமா? சமீபத்தில் நான் ஒரு தேர்வு எழுதி உள்ளேன். அந்தத் தேர்வின் ரிசல்ட் இன்னும் வரவில்லை. அதற்குள் என் கனவில் லிஸ்ட் வருவதுபோலவும் அந்த லிஸ்டில் என் பெயர் இல்லாததுபோல் கனவு கண்டேன். (இதை டைப் அடித்துக்கொண்டிருக்கும்போது, லிஸ்ட் வரவில்லை. ஆனால் இன்று (03.09.2010) லிஸ்ட் வந்து விட்டது. உண்மையில் என் பெயர் இல்லை.) என் பெரியப்பா ஒருவர் பக்க வாத நோயால் பாதிக்கப்பட்டு பல மாதங்கள் படுத்துக் கிடந்தார். ஒருநாள் காலையில் நான் ஒரு கனவு கண்டேன். அவர் வாயில் அரிசி போடுவதுபோல். எனக்கு திகைப்பாக இருந்தது. காலையில் பெரியப்பா வீட்டிலிருந்து போன். அவர் இறந்து விட்டதாக.
இன்னொரு கனவு. ஜே கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி. அவர் எங்கோ சென்று விட்டு, காரிலிருந்து இறங்குகிறார். அப்போது யாரோ அவரைப் பார்த்து சுடுகிறான். இந்தக் கனவின் அர்த்தம் எனக்கு சில மாதங்களுக்குப் பிறகுதான் தெரிந்தது. அவர் கான்சர் நோயால் பாதிப்படைந்து மரணம் அடைவதைத்தான் அந்தக் கனவு சுட்டிக் காட்டியதாக நினைத்தேன்.
ஸ்டெல்லாபுரூஸ் பற்றி இன்னொரு கனவு. ரொம்ப வருடங்கள் முன்பு நான் கண்ட கனவு. இதை அவரிடம் சொன்னதுகூட கிடையாது. அவருக்கு தாமதமாகத்தான் திருமணம் நடந்தது. திருமணம் செய்து கொண்டேன் என்றுதான் அவர் மனைவியை எங்களுக்கெல்லாம் அறிமுகப் படுத்தினார். ஆனால் என் கனவில் அவர் மனைவி ஒரு பட்டுப்புடவை அவரிடமிருந்து வாங்கிப் பிரிப்பதுபோலவும் அப் புடவையில் ஒரு பகுதி கிழிந்திருப்பதுபோலவும் தெரிகிறது. சொன்னால் வருத்தப்படுவார் என்பதால் சொல்லவில்லை.
என் நெருங்கிய உறவினரின் பையன் ஒருவன் நிச்சல் கற்றுக்கொள்ளும் இடத்தில் மரணம் அடைந்துவிட்டான். இது பெரிய துக்கமாக இருந்தது. கொஞ்ச நாட்களாக அந்தப் பையனைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன். ஒருநாள் கனவில் அந்தப் பையன் வந்தான். அவன் ஓர் இடத்தில் தினசரி தியானம் செய்து கொண்டிருக்கிறான். நெற்றியில் விபூதிப் போட்டிருந்தான். அவனைக் கூப்பிடுகிறேன். ஆனால் அவன் எழுந்து வராமல் இருக்கிறான்.
என் பிறந்த தினம் போது யாரும் என்னைக் கூப்பிட்டு வாழ்த்துவதில்லையே என்று ஒவ்வொரு முறையும் பிறந்த நாள் போது நினைப்பதுண்டு. ஒருமுறை கனவில் என் பாட்டி என்னை வாழ்த்தினாள். அதை நினைத்து அன்று முழுவதும் எனக்கு திகைப்பாக இருந்தது.
ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் பயப்படும்படியான கனவுகள் பலவற்றை கண்டிருக்கிறேன். ஒரு கனவில் டிரெயின் கிளம்பி வேகமாகப் போய்க்கொண்டிருக்கும் அதைப் பிடிக்க எத்தனிப்பேன். முடியாது. என்னைச் சுற்றிலும் கோவில் கோவிலாக இருக்கும். எந்தப் பக்கம் திரும்பினாலும் கோவில் கோபுரம். பயமுறுத்துவதுபோல். தி.நகரில் முப்பத்தம்மாள் கோயில் உள்ள தெரு முனையில் ஒரு பப்ளிக் டாய்லட் இருக்கும் அந்த டாய்லட்டில் நானும், நடிகர் அமிதாப்பச்சனும் யூரின் போவதுபோல் ஒருமுறை கனவு. அந்தக் காலத்தில் இந்தி சினிமாவில் எனக்குப் பிடித்த நடிகர் அமிதாப்பச்சன்.
நான் ஒரு Flat வாங்கினேன். 406 சதுர அடிகள்தான். குளிக்க பாத்ரூம் போக சமையல் அறை வழியாகத்தான் போக வேண்டும். சமையல் அறை அவ்வளவு குறுகல். ஏமாந்து வாங்கிவிட்டேன். பல நாட்கள் தூக்கம் வரவில்லை. அப்போது ஒரு கனவு. சமையல் அறை ஜன்னல் கம்பியைப் பிடித்துக்கொண்டு தாய் குரங்கும், குட்டிக் குரங்கும் இருப்பதுபோல்.இன்னும் பல கனவுகள். சில மட்டும் ஞாபகத்தில். என் எழுத்தாள நண்பர்களும் அவரவர் கனவுகளை என்னிடம் கூறி உள்ளார்கள். பிரமிள் சொன்ன கனவு ஒன்று என் ஞாபகத்திற்கு வருகிறது. அவர் காந்தி கடற்கரையில் (சென்னை) சிமெண்ட் பெஞ்சில் படுத்துக்கொண்டிருக்கிறார். அப்போது அவரை யாரோ தாக்க முயற்சி செய்கிறார்கள். தலையில் முண்டாசுடன் கையில் நீண்ட வாளுடன் ஒருவர் காப்பாற்ற வருகிறார். தாக்க வந்தவர்கள் ஓடிப் போய் விடுகிறார்கள். அவரைக் காப்பாற்றியவர் வேறு யாருமில்லை. சிரூடி சாய்பாபாதான். பிரமிள் இந்தக் கனவு காணும்போது உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். தினம் தினம் நடக்கும் வாழ்க்கையே ஒரு கனவுபோல்தான். நம் முன்னால் சில காட்சிகள் தென்படுகின்றன. அந்தக் காட்சிகள் பின் கனவுகளாக மாறி விடுகின்றன.
உங்களின் விரிவான கனவு பயணம் உங்களின் மெல்லிய இதமான ஈரமான இதயத்தை எனக்கு காட்டுகிறது.. நினைவுகளின் நீட்சியாக கனவுகள் இருந்தாலும் பல நேரங்களில் கனவுகளின் (இதுவும் கலாமின் கனவை குறிப்பிடுவதல்ல) நிழல்களாகவே நிஜங்கள் வாழ்க்கையின் பல தருணங்களில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அன்பின் அதிர்வலைகள் சில நேரங்களில் ஒரு நெருங்கிய நண்பரை நினைத்ததுமே அவரை எதிரே கொண்டு நிறுத்தி விடுகின்றது. மனித வாழ்க்கை என்பது ஒரு புரியாத புதிர்தான்.
நான் எம் எஸ்ஸி பட்டம் பெற்ற பின்னும் இன்னமும் ஆண்டுகள் பலவாய் 'quantum mechanics" தேர்வு அவ்வப்போது வந்து என்னை தூக்கத்தில் துயர் படுத்துகிறது…
குமரி எஸ். நீலகண்டன்
உங்களின் விரிவான கனவு பயணம் உங்களின் மெல்லிய இதமான ஈரமான இதயத்தை எனக்கு காட்டுகிறது.. நினைவுகளின் நீட்சியாக கனவுகள் இருந்தாலும் பல நேரங்களில் கனவுகளின் (இதுவும் கலாமின் கனவை குறிப்பிடுவதல்ல) நிழல்களாகவே நிஜங்கள் வாழ்க்கையின் பல தருணங்களில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அன்பின் அதிர்வலைகள் சில நேரங்களில் ஒரு நெருங்கிய நண்பரை நினைத்ததுமே அவரை எதிரே கொண்டு நிறுத்தி விடுகின்றது. மனித வாழ்க்கை என்பது ஒரு புரியாத புதிர்தான்.
நான் எம் எஸ்ஸி பட்டம் பெற்ற பின்னும் இன்னமும் ஆண்டுகள் பலவாய் 'quantum mechanics" தேர்வு அவ்வப்போது வந்து என்னை தூக்கத்தில் துயர் படுத்துகிறது…
குமரி எஸ். நீலகண்டன்
படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தது. தொடர்ந்து எழுதுங்கள்