அப்போது எல்லாருக்கும் மட்றாஸ்தான். சென்னை என்று சொல்லுவது நாகரிகமற்ற கர்னாடக வழக்கமாய்க் கருதப் பட்டிருக்கலாம். நான் மட்றாசுக்கு வருமுன்பே அப்பாவின் மூலம் அறிந்திருந்த முக்கியமான இடங்களில் ஒன்று மூர்மார்க்கெட். மதறாசில் எனக்கு மிகவும் பிடித்த இடமே இதுதான். இதன் இந்தோ சாராசானிகக் கட்டிட பாணியின் அழகை சொல்லி மாளாது. நுழைவாயில்களில் கருங்கள்களாலான வளைவுகளும், கூரைக் கைப்பிடிச் சுவர்களில் இடம் விட்டு இடமாய் கோயில் கலசங்களின் வடிவில் கல்கலசங்களுமிருந்தன. இன்று அல்லிக் குளத்தின் மேல் எழுப்பபட்டுள்ள புதிய மூர்மார்கெட் அங்காடியின் சுவர்களில் மேற்கூறிய கல் வடிவங்கள் பத்திரப்படுத்தப் பட்டிருந்தது பொருத்தப்பட்டுள்ளன. அந்தக் காலத்து அசல் மூர் மார்க்கெட்டின் உள்ளே மத்தியில் மரங்களுக்கிடையில் அழகிய நீரூற்று ஒன்றும் அமைக்கப் பட்டிருந்தது. இந்த மூர்மார்க்கெட்டில் அன்று பெற்ற அப்பா அம்மாவைத் தவிர மற்றது எல்லாம் கிடைக்கும். பழைய பொருளும் கிடைக்கும், புதிய பொருளும் கிடைக்கும்.
பழைய புத்தகங்கள், புதிய புத்ககங்கள், எல்லா மொழிகளிலும் புத்தகங்கள், பத்திரிகைகள் கிடைக்குமிடம். ஒரு கடையில் பத்து வருடத்து ஆங்கில செய்தித்தாள் கூட (The Mail) கிடைப்பதாக, பழைய அபூர்வ பேனாக்களை வாங்கி விற்கும் ஒரு கடைக்காரர் எனக்குச் சொன்னார். அன்றைய மஞ்சள் பத்திரிகைகளான தீரன், இந்து நேசன் இதழ்களின் (1940) பைண்டு செய்த தொகுப்புகளை நான் மூர் மார்க்கெட் கடையொன்றில் பார்த்திருப்பதோடு, வாடிக்கையாளன் என்ற சலுகையுடன், ஸ்டூலில் அமர்ந்து புரட்டிப் படித்துப் பார்த்துமிருக்கிறேன். அந்தக் காலத்து அனுமான், காண்டீபம், நாரதர் போன்ற இதழ்களின் பைண்டு செய்த தொகுப்புகளையும் அதே கடையில் பார்த்தும் படித்துமிருக்கிறேன்.
மூர்மார்க்கெட் பழைய புத்தகங்கள், பத்திரிகைகள் என்பனவற்றோடு இன்னொரு முக்கிய விஷயத்திற்கும் புகழ் பெற்றது. கிராமஃபோன் இசைத்தட்டுக்கள். எல்லா மொழிகளிலும் வெளிவந்த சாதாரண இசைத் தட்டுக்கள் முதல் ”எல் பி ரெக்கார்டுகள்” வரை கிடைக்கும். கர்னாடாக இசை, இந்துஸ்தானி இசை, தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள சினிமாக்களின் இசைத்தட்டுக்கள் முதல் ”எல் பி ரெக்கார்டுகள்” வரை கிடைக்கும். ஆங்கிலோந்திய குடும்பங்கள் மேனாட்டு இசைத்தட்டுக்களை விற்கவும், வாங்கவும் ஒன்றைக் கொடுத்துவிட்டு இன்னொன்றை பரிமாறிக் கொள்ளவும் எப்போதும் அலையும் இடமாயிருக்கும் மூர்மார்க்கெட். நம்மிடமுள்ள இசைத் தட்டுக்களை கொடுத்துவிட்டு அதற்குப் பதில் நாம் வேறு இசைத் தட்டை எடுத்துக் கொள்ளலாம். கடைக்காரர் கூடுதலாக சொற்பக் காசை மட்டும் கேட்பார். அதிலும் பேரம் பேசலாம். கூடவே சொல்லுவார் :
”கேட்டனுபவிச்சிட்டு இங்கியே கொண்ணாந்து குடு, வேற எதுவேணுமோ எடுத்துக்கிட்டுப் போ.”
மூர்மார்க்கெட் தலை வாசல்லேயே இசைத் தட்டுக்கடைகளின் தரகர்கள் காத்திருப்பார்கள். கையில் இசைத் தட்டோ டு வருபவர்களைக் கண்டதும் பாய்ந்து இழுப்பார்கள்.
”நம்ம கடைக்குப் போகலாம்.”
”டேய், சார் நம்ம கடை வாடிக்கைடா, நீ வா சார்.”
வைதீஸ்வரன் கோயில் பஸ் நிலையத்தில் இறங்கியவுடன் செருப்பு – அர்ச்சனைத்தட்டு விஷயமாய் ஏஜெண்டு கள் நம்மை இழுப்பது கணக்காய்….
என்னைத்தேடி ஊரிலிருந்து வருபவர்களை நேராக என் அறைக்கு வரச் சொல்லாமல் மூர்மார்க்கெட் தலை வாசலில் இத்தனை மணிக்கு வந்து நிற்கச் சொல்லுவது என் வழக்கம். நண்பர்களோடான எனது சந்திப்புக்கள் பெரும்பாலும் மூர்மார்க்கெட் வளாகத்தில் வைத்தே நிகழ்ந்து வந்த நாட்கள் அதிகம்.
மூர்மார்கெட் வளாகத்தில் முக்கியமான இரண்டு வரையாக பழைய புத்தகங்கள் விற்பனையிலிருக்கும். ஒன்று, நிரந்தர கடைகள். இவை பழைய பர்மா தேக்கில் நேர்த்தியாய்ச் செய்து கண்ணாடிச் சட்டமிட்ட கதவுகளைக் கொண்ட பிரம்மாண்டமான பீரோக்களில் பெயர் தெரியும்படி அடுக்கப்பட்ட தோல் பைண்டலான வெளி நாட்டு – உள்நாட்டு அரிதான நூல்கள். ஒரு நுற்றாண்டு வயது நிரம்பியவை. அதற்கும் மேலான தாத்தா கொள்ளுத்தாத்தா. எள்ளுத் தாத்தா காலத்து நூல்கள் எல்லாம் இந்த பீரோக்களிலிருக்கும். சாதாரண – பேப்பர் பேக்ஸ் வகை நூல்கள் வெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். இரண்டு மூன்று முறை வாங்கிய சுருக்கில் வாடிக்கையாளர் அந்தஸ்தைப் பிடித்து விடலாம். கடைக்காரருக்கு கவனம் பிசகாது. பத்திரிளகைகளைக் குடைய வேண்டும்போது சிறு ஸ்டூலைக் கொடுத்து உட்கார்ந்தே நம் காரியத்தைப் பார்க்கச் சொல்வார். சில அபூர்வ இலக்கிய கட்டுரைகள் பேட்டிகளை வியப்பூட்டும் வகையில் கொண்டிருந்த விலையுயர்ந்த அமெரிக்க ஆபாச பத்திரிகையான ”ப்ளே பாய்” இதழ்களை இப்படித்தான் நான் வாங்கிப் பார்த்துவிட்டுத் திருப்பித் தருவேன். பிக்காஸோவைப் பற்றிய சால்வேடார் டாலியைப் பற்றிய அரிதான கட்டுரைகளும் ழான் பல் சார்தரோடான அரிய நேர்காணல் ஒன்றும் ப்ளோபாய் இதழ்களில் நான் படிக்க நேரிட்டவை. இதே கடையில் பழக்கம் மற்றும் நம்பிக்கை மேலிட்டு ஒரு குறிப்பிட்ட தொகையை வைத்துவிட்டு ஒன்றிரண்டு நூல்களை எடுத்தப் போனதுண்டு.
மற்றொரு வகை விற்பனையாளர் ”கேர் ஆஃப் பிளாட்பாரம்” தினுசு. இவர் மூர்மார்கெட் வெராண்டாக்களில் நிரந்தர கடைக்காரர்களின் தயவில் கடை விரித்திருப்பார்கள். பெரும்பாலும் போப்பர் பேக் நூல்களும் பழைய பத்திரிகைகளுமாயிருக்கும். விற்காமல் தேக்கம் அதிகரிக்கும்போது நூல்களையும் பத்திரிகைகளையும் அவற்றின் தகுதியறிந்து கூறு கூறாகப் பிரித்து அம்பாரமாக்கிக் குவித்து ”இதெல்லாம் பத்து ரூபாய் இதெல்லாம் ஐந்து ரூபாய அதெல்லாம் எது எடுத்தாலும் ஒரு ரூபாய் எது எடுத்தாலும் எட்டணா” என்று எழுதிய அட்டைகளைகக் குத்தி வைப்பார்கள். நிரந்தர புத்தக விற்பனையாளர்களில் முதலியார் என்றும் நாயக்கர் என்றும் ஐரே என்றும் எல்லாராலும் அழைக்கப்பட்ட மூவர் எனக்கு பழக்கமானார்கள்.
1961ல் நான் உருப்படியாக மூர்மார்கெட்டில் வாங்கிய சில புத்தகங்களில் குறிப்பிடத்தக்கது ஒரு பிரிட்டிஷ் சைத்திரகனின் சுயசரிதை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் ஆங்கில பத்திரிகையுலகில் கேலிச்சித்திரம் மற்றும் பல்வேறு மனிதர்களை உருவகப்படுத்தும் ”கோகேச்சர்” வகைப் படங்கள் வரைவதில் புகழ் பெற்றிருந்த ஃப்ராங்க் ரேனால்ட்ஸ் ஜூனியர் என்பவரின் சுயசரிதை நூல் அது. ஏராளமான கருப்பு வெள்ளைக் கோட்டோ வியங்களோடு சிற்சில நீர் வண்ண ஓவியங்களும் கொண்ட நூல் அது. இந்த நூல் முகப்பு அட்டையும், பின் அட்டையுமிழந்த கதியில் எது எடுத்தாலும் ஒரு ரூபாய் அம்பாரக் குவியலில் கிடைத்தது. இப் புத்தகத்தின் ஒவ்வொரு தாளும் இன்று நீங்கள் ”தாள்” என்று பார்த்துத் தடவி உணரும் வகையைச் சார்ந்ததே அல்ல. இன்றைய சராசரி தமிழ் நாவல் ஒன்றின் முகப்பு மற்றும் பின் அட்டையளவுக்கு கனம் கொண்ட தாள் அது. தாள் என்பதைவிட அட்டையென்றே சொல்லிவிடலாம். அப்படியான அந்தத் தாள்கள் ஒரு எண்பது கொண்ட அந்த நூலின் தலைப்பு FRANK RAENOLDS, JR என்பது. ரேனால்ட்ஸ் தன் சிறு வயது, பள்ளி நாட்கள், ஓவியப் பயிற்சி பத்திரிகைகளோடான தொடர்பும் அனுபவமும், பொது வாழ்வில் சந்திக்க நேரிட்ட பல்வேறு முகங்கள் பற்றியெல்லாம் புத்தகத்தில் சொல்லிக்கொண்டே போகையில் அதையெல்லாம் – அவர்களையெல்லாம் பென்சிலால், க்ரேயானால், கருப்பு மையால், வண்ணங்களால், அடுப்புக் கரியால் எல்லாம் வரைந்த படங்களையும் நெரிப்படுத்தி இடம்பெறச் செய்திருக்கிறார். இவரது கேரிகேச்சர் படங்கள் அபூர்வமானவை. துல்லியமும் நேர்மையுமானவை. இவரது கார்டூன்களும், இதர படங்களும் ஓரளவுக்கே புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. அவற்றை அவற்றின் கால வரிசையில் பார்க்கையில் ஒரு நூற்றாண்டின் ஓட்டத்தில் நடந்தேறியிருக்கும் ஐரோப்பாவின் ஆண் – பெண் – குழந்தைகளுக்கான சிகையலங்காரம், ஆடை தினுசுகளின் வடிவமைப்பு, காலணி மற்றும் தொப்பி தினுசுகள், பல்வேறு பருவ நிலைக்கேற்ப அமைக்கப்பட்ட அவற்றின் படிப்படியான தோற்றத்தையும் வளர்ச்சியையும் அறியலாம். இப்புத்தகம் இங்கிலாந்தில் 1907-ல் பதிப்பிக்கப்பட்டிருக்கிறது. முதற் பதிப்பு.மூர்மார்கெட் நாயக்கர் கடையில் பல்வேறு அரிய மேனாட்டு பத்திரிகைகளைத் தேடி வாங்கிய அனுபவத்தில் இங்கிலாந்தில் தயாராகி வெளிவந்த மாதப் பத்திரிகை ARGOSY முக்கியமானது. நாற்பதாண்டுகளுக்கு முன்பே நின்றுபோன இதழ். ஆர்கோஸி என்பதால், ஏராளமான அற்புத விஷயங்களை ஏந்தி வரும் கப்பல் என்று – கிட்டத்தட்ட பொருளாகிறது. ஆர்கோஸி பத்திரிகையின் விசேஷமென்ன? இது முழுக்கவும் சிறு கதைக்கான பத்திரிகை. சிறுகதைகளுக்கெனவே பிரத்தியேகமாய் வெளிவந்து கொண்டிருந்த பத்திரிகை. ஒவ்வொரு மாதமும் ஆர்கோஸி முப்பது வரை சிறுகதைகளைக் கொண்டு வரும். இதில் சாமர்செட் மாம், ஆல்பெர்டோ மொரேவியா, வில்லியம் சரோயன், ஃப்ராங்க் ஆகுனர், மால்காம் வுட், கிரஹம் கிரீன் ஆகியவர்கள் சிறுகதைகள் எழுதியவர்கள். ஆர்.கே நாராயணனின் சிறுகதையொன்றையும் ஆர்கோஸியில் பார்த்த நினைவு.மூர்மார்க்கெட் முதலியார் கடையில் நான் மெளனமாக நின்றபடி கண்களால் ஆராய்வேன். ஒரு நாள்….”ஒரு நாள் போக வந்து வந்து நிற்கிறியே, என்னமோ பெரிசா வாங்கறாப்பல…ஓர்ரூபாய்க்கு யாவாரம் பண்ணியிருப்பியா எங்கடையில?……” என்றார் முதலியார். ”என்ன இருக்குனு பார்க்கிறேன்.””இது தேவைப்படுமா?” என்று கூறிக்கொண்டே ஒரு புத்தகக் கட்டை எடுத்து வெளியில் போட்டார்.”பிரத்தியேகமான ஆனந்தரங்கம் பிள்ளையவர்களின் சொஸ்த லிகித தினப்படி சேதி குறிப்பு – 1948. முதல் புத்தகம். இரண்டாம் புத்தகம் 1949. இப்படியாக பன்னிரெண்டு புத்தகங்கள். ஒவ்வொரு புத்தகமும் சுமார் ஆறுமாத காலத்திய தினப்படி சேதிக் குறிப்புகளைக் கொண்டது. 1746-ம் ஆண்டு ஏப்ரல் முதல், 1746 நவம்பர் ஆரம்பம் வரையிலான டைரி குறிப்புகள் எழுதப்பட்ட நூலின் உள்ஞானு தியாகு என்ற பெயலில் ஒருவர் எழுதியிருக்கிறார். முகவிலை மூன்று ரூபாய். பேரம் பேசியதில் முதலியார் ஒவ்வொரு புத்தகத்தையும் எழுபதைந்து பைசாவுக்குக் கொடுத்தார். அன்றைய கணக்கில் அது அதிகப்பட்ட விலையாகவே பட்டது எனக்கு. (இன்னும் வரும்)
Thanks , I’ve just been searching for info about this topic for ages and yours is the best I’ve discovered so far. But, what about the bottom line? Are you sure about the source?