எழுதுவது, படிப்பது இரண்டும் தனிமையில்தான் சாத்தியமாக இருந்தாலும் இவை ஆழ்ந்த நட்புக்கும் காரணமாக இருந்து விடுகின்றன. புதுமைப்பித்தன்-ரகுநாதன், கு.ப.ரா-பிச்சமூர்த்தி. ராமையா-சி சு செல்லப்பா எனப் பலர் உடனே நினைவுக்கு வருகின்றனர். இந்திய சுதந்திரத்திற்கு முன்பு பொதுவாக மக்களிடம் இருந்த விடுதலை வேட்கை இவர்களிடமும் இருந்தது.
கிட்டத்தட்ட இதே மாதிரிதான் ஷங்கரநாராயணன்-ஏ ஏ ஹெச் கே கோரி – சாந்தன் ஆகியோரைப் பற்றி நினைக்க முடிகிறது. இப்போது சுதந்திரம் என்ற அரூபமான, ஆனால் உணர்ச்சி எழுப்பக்கூடிய இலக்கு தேவையற்றுப் போய் விட்டது. இன்று பெரும்பாலும் பொருளாதாரக் கவலைதான் எல்லா இந்தியரையும் தீண்டுகிறது. எழுத்தாளர்களாகவும் இருந்து விட்டால் பத்திரிகை பிரசுரம், நூல் பிரசுரம் இவற்றுக்கும் மேல் வாசகர் கவனம் போன்றவை சின்னச் சின்னக் கவலைகளாக இருந்து வரும். பொருளாதாரம்தான் குடும்ப உறவுகள், பொறுப்புகளையும் நேரிடையாகவும், மறைமுகமாகவும் நிர்ணயிக்கிறது. இன்றைய மசாலாத் திரைப்படங்கள் இந்த ஒரு நம்பகமான சிறிதே பூதம் காட்டும் கண்ணாடி.
இந்தப் பொது விதியிலிருந்து சாந்தன் சற்றே விலகியவர். அவர் இலங்கைத் தமிழர். இந்த முப்பத்து மூன்று அபாயகரமான ஆண்டுகளையும் இலங்கையிலேயே இருந்து அனுபவித்தவர். அவருக்குள்ள கல்வித் தகுதிக்கும் ஆங்கில மேன்மைக்கும் அவர் எளிதாக இங்கிலாந்து அல்லது கனடா போன்ற நாடுகளுக்கு அகதியாகப் போய் வாழக்கூடியவர். ஆனால் அவர் இலங்கையிலேயே, முதலில் கொழும்புவிலும், பின்னர் யாழ்ப்பாணத்திலும் இருந்து விட்டார். பல நீண்ட கதைகள் அவர் எழுதியிருந்தாலும் அவருடைய குட்டிக் கதைகள் உருவத்திலும் பொருளிலும் விசேஷமானவை. அரசுகளாக ஏற்பாடு செய்த ரஷ்யச் சுற்றுலாவில் ஒரு தமிழன், ஒரு சிங்களவனோடு சேர்ந்துதான் வெவ்வேறு இடங்களுக்குப் போக வேண்டியிருக்கிறது. தமிழர்-சிங்களவர் உறவு மிகவும் சீர்கெட்ட நேரம். அப்போது அந்த சுற்றுலா வழிகாட்டி பேச்சோடு பேச்சாக உலகத்தின் மிகச் சிறந்த தேயிலை அங்கு உற்பத்தியாகிறது என்கிறான். சிங்களவன், தமிழன் இருவரும் ஒரே குரலில்,”என்ன சொன்னீர்கள்? என்ன சொன்னீர்கள்?” என்று கேட்கிறார்கள். இலங்கைத் தேயிலைப் பெருமை தமிழன் சிங்களவன் இருவருக்கும் அவ்வளவு தீவிரமானதாக இருக்கிறது.
இப்போது சாந்தன் ஒரு நாவல் எழுதியிருக்கிறார். எனக்குத் தெரிந்த அளவில் இது அவருடைய முதல் நாவல். அதன் இன்னொரு பெருமை அதை அவர் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். இன்னொரு தகவல் இது இந்திய அமைதிப்படை, தமிழர் துவேஷம் பற்றியது.
இந்திய அமைதிப்படை பற்றி இந்தியத் தமிழர் கொண்டிருக்கும் அபிப்பிராயத்தை தனியாக விவரிக்கத் தேவையில்லை. ஆனால் அமைதிப்படையில் மருத்துவராகப் பணியாற்றிய ஒருவர் கூறியது பரிதாபமானது. ஆயிரக்கணக்கில் அமைதிப் படையினர் கொல்லப்பட்டார்கள். உயிர் தப்பியவர்களில் முக்கால்வாசி கண்ணிவெடியால் கை கால் இழந்து ஆயுள் முழுதும் முடமாக வாழத் தள்ளப்பட்டவர்கள். பலர் இந்த மருத்துவரைப் பார்த்து, ”என்னைக் கொன்று விடுங்கள்…கொன்று விடுங்கள்..” என்று மன்றாடி இருக்கிறார்கள்.
படையினர் என்றால் யார்? 90 சதவீதம் சிப்பாய்கள். சிப்பாய்கள் யார்? எந்தத் தேர்ச்சியும் பயிற்சியும் இல்லாமல் தோட்டாக்களுக்கும், பீரங்கிகளுக்கும் தீனியாவதற்கென்றே படையில் சேர்ந்தவர்கள். ஏழைகள். ஏழைகளில் இந்திய ஏழை, சீன ஏழை, ஆப்பிரிக்கா ஏழை, இலங்கை ஏழை என்று கிடையாது.
சாந்தனின் நாவல் அமைதிப்படையினர் எல்லாத் தமிழர்களையும் விடுதலைப் புலிகள் அல்லது விடுதலைப் புலிகளுக்கு உளவு கூறுபவர்கள் என்று நினைப்பதாக உள்ளது. நல்ல யுத்தம் என்று கிடையாது. நல்ல படை என்று கிடையாது. நல்ல அரசன் என்றும் கிடையாது. முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு நைஜீரியாவுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டவுடன் உள்நாட்டுப் போர் ஆண்டுக்கணக்கில் நைஜீரியர்களும், பயாஃரா இனத்தவரும் போரிட்டுக் கொண்டார்கள். நமக்கு அந்த இரு குழுக்களிடையே என்ன வேற்றுமை இருக்கக் கூடும் என்றுதான் தோன்றும். ஆனால் சுமார் இரண்டு லட்சம் பயாஃப்ரா இனத்தவர் பட்டினி போடப்பட்டே கொல்லப்பட்டார்கள்.
நாம் மகா அரசர்கள், மகா வீரர்கள் கடல் தாண்டி வெற்றி பெற்றவர்கள் என்றெல்லாம் பெருமைப் பட்டுக் கொள்கிறோம். இவர்களால் எவ்வளவு ஆயிரக்கணக்கானோர் உயிர் துறந்தார்கள், எவ்வளவு பெண்கள் அக்கிரமத்துக்கு உள்ளானார்கள், எவ்வளவு வயோதிகர் மற்றும் குழந்தைகள் கவனித்துக்கொள்வோர் இல்லாமல் இருட்டிலும் பனியிலும் மழையிலும் வெயிலிலும் துடிதுடித்து இறந்தார்கள் என்றும் நினைக்க வேண்டும். யாதும் ஊரே, யாவரும் கேளிர்.
சாத்தனின் இப்புது நாவலைப் படிக்கும்போது பல விஷயங்கள் குறித்து யோசிக்கத் தோன்றியது. நூலின் தலைப்பு Whirlwind. வெளியிட்டவர் சென்னை ராமாபுரம் பார்க்துகார் என்ற இடத்தில் உள்ள v.u.s பதிப்பகம். விலை ரூ.100.
சாந்தனின் முளைகள் தொகுப்பு பிரமாதமாக இருக்கும்.