நவீன விருட்சம் 40வது இதழில் (ஜூலை 1998) இப்படி எழுதியிருந்தேன் : குட்டிக் கதைகள் மற்ற எல்லா அம்சங்களுடன் சேர்ந்து பிரசுரமாகும்போது, உரிய கவனத்தை கவர்ந்திருக்குமா என்பது தெரியவில்லை. சமீப காலமாக ஒரு வணிக இதழ் குட்டிக் கதைகள் என்ற பெயரில் பலவற்றைப் பிரசுரம் செய்தும் அவற்றுக்குச் சன்மானமும் அளித்துள்ளது. வணிக இதழ் சந்தையில் வெளியாகும் எதுவும் நாசமாகிவிடும் என்பதற்கு ‘குட்டிக் கதைகள்’ என்ற பெயரில் வெளிவந்தவை உதாரணம். மாறாக சிற்றேடுகள் உரிய கவனத்துடன் கதைகளைப் பிரசுரம் செய்துள்ளன.
‘குட்டிக்கதைகள்’ எப்படி இருக்க வேண்டுமென்று யோசிக்கும்போது, நீதியைச் சொல்லும் ஒன்றாக முடிந்து விடக்கூடாது என்ற காரணத்தால், பாரதியாரின் நீதிக் கதைகளை இதில் சேர்க்கவில்லை. அதேபோல் நடைச்சித்திரமான வார்ப்பில் குட்டிக் கதைகளை அடைத்துவிடக்கூடாது. சம்பவத்தின் ஆழம் மாத்திரம் போதும், சம்பவத்தின் விஸ்தீரணம் தேவையில்லை. கதை ஆரம்பிக்கும் அவசரத்துடன் முடிந்துவிட வேண்டும். திரும்பவும் படிக்க வேண்டுமென்ற எண்ணமும் ஏற்பட வேண்டும். அரைப் பக்கத்திலிருந்து இரண்டரை அல்லது மூன்று பக்கங்கள் வரை குட்டிக்கதைகளை எழுதி விடலாம்.
முழுவதும் குட்டிக்கதைகளால் 40வது இதழ் நிரம்பி உள்ளது. ஒரு சில படைப்பாளிகள் இதழுக்காக தந்த கதைகளுடன், சிற்றேடுகள்/புத்தகங்களிலிருந்தும் இன்னும் சில கதைகளும் எடுத்தாளப்பட்டிருக்கின்றன.
கண்ணாடிஅசோகமித்திரன்
ஈர்க்கில் பஞ்சைச் சுற்றி கிராம்புத் தைலத்தில் தோய்த்துப் பல் மீது தடவப் போனபோதுதான் தெரிந்தது, அது வெறும் தைலத்தில் போகக்கூடிய பல்வலியல்ல என்று. பல்லின் அடிப்பாகத்தில் கறுப்பாக ஒருவட்டம். அதேபோலப் பல்லின் பக்கவாட்டிலும் பெரிய கறுப்பு வட்டம். பல் சொத்தையாகத் தொடங்கி அடியிலிருந்து புரையோடி இப்போது பக்கங்களுக்கும் பரவியிருக்கிறது. பல் வைத்தியரிடம் போனால் பல் ஒரு சிறு இழப்புக்குத் தாங்காது. இந்த அளவு சொத்தை விழுவதற்குப் பல நாட்கள் தேவைப்பட்டிருக்கும். மாதக் கணக்கில் கூட. ஆனால் இப்போதுதான் கண்ணில் தென்பட்டிருக்கிறது. தினம் ஒருமுறை தலைவாரிக்கொள்ள கண்ணாடி முன் நிற்கிறேனே, அப்போது முகத்தைப் பார்ப்பது கிடையாதோ? இல்லை என்று இப்போது தெரிகிறது. கண்ணாடியில் முகத்தைப் பார்த்துக்கொள்ளும் பழக்கமே போய்விட்டது. எவ்வளவு பேர் சமயம் கிடைத்த போதெல்லாம் கண்ணாடி முன் நிற்கிறார்கள்? அவர்களுக்குக் கூச்சம் அதிகம் இருக்கும். அதனால்தான் திரும்பத் திரும்பத் தலையை வாரிக்கொள்கிறார்கள். முகத்தைத் துடைத்துக் கொள்கிறார்கள். பவுடர் போட்டுக் கொள்கிறார்கள். அவனுக்கு அவன் முகம் ஒரு பொருட்டாக இல்லாமல் போய்விட்டது. கூச்சம் எந்த விதத்திலும் பயன்படப் போவதில்லை. அப்படியும் கூறுவதற்கில்லை. பல்லைக் காப்பாற்றியிருக்கும்.