‘இன்ன பிறவும்’ என்ற செல்வராஜ் ஜெகதீசன் கவிதைத் தொகுதியைப் பற்றி சொல்வதற்குமுன் சிலவற்றை சொல்ல விரும்புகிறேன்.
அவருடைய முதல் கவிதைத் தொகுதி பற்றி சொல்லி முடிப்பதற்குள் அவரது இரண்டாவது தொகுதி வந்து விட்டது. நான் இந்தத் தொகுதியைப் பற்றி சொல்வதற்குமுன் அவர் இன்னொரு தொகுதிக்கான கவிதைகளை அலுப்பில்லாமல் எழுதிக் கொண்டிருப்பார். இதுதான் ஆபத்து. கவிதை எழுதுவது, எழுதுகிற கவிதைகளைப் புத்தகமாகப் போடுவது, பின் அது குறித்து அபிப்பிராயம் எதிர்பார்ப்பது. வேறு என்ன செய்யமுடியும்?
கவிதை எழுதுபவர்கள் எல்லோரும் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டார்கள். ஆத்மாநாம் சின்ட்ரமுக்குள் கவிஞர்கள் மாட்டிக்கொள்ளக் கூடாது. அது என்னவென்று சொல்கிறேன். எல்லோரும் போல் ஆத்மாநாமும் கவிதைகள் எழுத ஆரம்பித்தார். மனச்சிதைவுக்கு அவர் ஆட்பட்டபோது, அவருடைய பிரச்சினை என்னவென்றால் ‘உடனடி புகழ்’. ஆத்மாநாமின் நெருங்கிய நண்பர்கள் தெரிவித்த கருத்து இது. புகழ் என்பதே மாயை. இது எப்படி சாத்தியமாகும்? ஆத்மாநாம் காலத்தில் புத்தகம் போடுவது சிரமம், படிப்பவர்கள் யாரென்று கண்டு பிடிப்பது சிரமம், மேலும் படித்து கவிதைகளைப் புகழ்ந்து எழுதுவதென்பது இன்னும் சிரமம். இந்த நிலைக்கு ஆளான ஆத்மாநாம் அதிலிருந்து தப்பிக்க முடியவில்லை. அவருடன் நெருங்கி பழகிய நண்பர்களான ஞானக்கூத்தன், ஆர் ராஜகோபாலன், ஆனந்த், ரா ஸ்ரீனிவாஸன், எஸ் வைத்தியநாதன் இவர்களிடமிருந்து அவர் இதைக் கற்றுக்கொள்ளவில்லை. அவருடைய இன்னொரு நண்பரான ஸ்டெல்லா புரூஸ் இன்னொரு ஆபத்தில் சிக்கிக் கொண்டார்.
ஆத்மாநாம் பற்றி நான் ஸ்ரீனிவாஸனுடன் பேசிக்கொண்டிருந்தபோது ஸ்ரீனிவாஸன் சொன்ன ஒரு கருத்தைச் சொல்ல விரும்புகிறேன். ஆத்மாநாம் கவனிக்கப்பட வேண்டிய கவிஞர். இன்றும் எத்தனையோ பேர்கள் அப்படி இருக்கிறார்கள். இப்போது இருந்திருந்தால் அவரும் மற்றவர்களைப் போல் கண்டுகொள்ளப்படாதவராக மாறி இருப்பார். அவர் தற்கொலை செய்து கொண்டதால்தான் எல்லார் கவனத்திற்கும் வந்துவிட்டார் என்றார் ஸ்ரீனிவாஸன். ஆத்மாநாம் குறைந்தது 1000 கவிதைகளுக்கு மேல் எழுதியிருப்பார். ஏன் சிறுகதைகள், நாவல்கள் என்றெல்லாம் எழுதி குவித்திருப்பார். பெரும்பாலும் கவிதைகளைக் குறித்து யாரும் கருத்து தெரிவிக்க மாட்டார்கள். புத்தகங்களாக வந்தால் யாரும் வாங்க மாட்டார்கள்.
இது தான் தமிழில் எப்போதும் நடப்பது. செல்வராஜ் ஜெகதீசன் இதை உணர்ந்து செயல்பட வேண்டும். அதேபோல் யாராவது புகழ்ந்தால் அது உண்மையென்று நம்பியும் விடக்கூடாது. இன்ன பிறவும் என்ற புத்தகத்தில் பெரும்பாலும் கவிதை முனைப்புகள் தென்படுகின்றன. கவிதைக்கான எத்தனம் கவிதையாக மாறிவிடாது.
யாருமற்ற பூங்காவில்
ஊஞ்சல் ஆடிக்கொண்டிருக்கிறான்
என் மகன்.
எவரையோ சேருமென்று
கவிதைகள் எழுதிக்கொண்டிருக்கிறேன் நான்.
கவிதைக் குறித்தே கவிதை எழுதுவதைத் தவிர்ப்பது நல்லது. இத் தொகுதி முழுவதும் கவிதைகள் மூலம் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார் செல்வராஜ் ஜெகதீசன்.
தமிழில் கவிதைக்கான எத்தனிப்பே அதிகமாக உள்ளது. இது குறித்து சிந்திப்பது அவசியம். கவிதை மாதிரி தோற்றம் தரும் ஆனால் கவிதை இல்லை என்று சொல்லலாமா என்றெல்லாம் எனக்குச் சொல்ல வரவில்லை. உதாரணமாக ஒன்று கவதையாக வரவேண்டியது எப்படி எத்தனமாக மாறி விடுகிறது என்று சொல்லலாம்.
என் வரையில்
உங்களைப் போல்தான்
நானும் போகும் பாதை வழியே
திரும்பிக்கொண்டிருக்கிறேன் தினமும்
செல்வராஜ் ஜெகதீசன் கவிதையை இங்கயே நிறுத்தி விடவேண்டும்.
அவர் மேலும் தொடர்ந்து,
சுமந்து திரும்பும் விஷயங்களில்தான்
சிறிது வித்தியாசம்
என் வரையில்
அவைகள் எண்ணிக்கையில் சற்று குறைவு.
இந்த வரிகளைச் சேர்த்தவுடன், கவிதை சுழல் மாறி எத்தனமாக மாறி விடுகிறது.
ஆத்மாநாமின் ‘தரிசனம்’ என்ற கவிதையை எடுத்துக்கொள்வோம்.
கடவுளைக் கண்டேன்
எதையும் கேட்கவே தோன்றவில்லை
அவரும் புன்னகைத்துப் போய்விட்டார்
ஆயினும் மனதினிலே ஒரு நிம்மதி
கவிதை வாசகர் ஊகத்திற்குப் போய்விடுகிறது. இன்னும் விவரித்தால் இதுவும் எத்தனமாக மாறிவிடும்.
அதேபோல் செல்வராஜ் ஜெகதீசனின் சில கவிதைகள் ஏற்கனவே சொல்லப்பட்ட கவிதைகளை வேறு விதமாக சொல்வதாகப் படுகிறது. உதாரணமாக, ‘இன்று’ என்ற கவிதை.
நாம் ஒவ்வொருவரும் நம் முன்னே நடக்கும் பல விஷயங்கள் மூலம் பலவற்றைக் கற்றுக்கொண்டிருக்கிறோம். கவிதை எழுதுவதுமூலமாகவும், எழுதாமலிருப்பது மூலமாகவும். கவிதை எழுதுவது மூலம் நாம் ஒரு அசாதாரண ஆளாக நினைக்கக்கூடாது. சாதாரண மனிதன் கவிதை எழுதுபவனைவிட சிறந்தவனாக இருப்பான். அதேபோல் ஆத்மாநாம் சின்ட்ரமுக்குள் மாட்டிக்கொள்ளக் கூடாது.
அப்படியென்றால் செல்வராஜ் கவிதைகளையே எழுதவில்லை என்று சொல்கிறீர்களா? அப்படியெல்லாம் இல்லை. அவர் கவிதைகளைத் தொடர்ந்து எழுதிக்கொண்டு வரும்போது, இன்னும் பலவற்றைப் புரிந்துகொள்ள வேண்டுமென்று சொல்கிறேன்,
Arumai sir….