அவனுடைய மனைவியின்
முதல் பிரசவத்துக்கு குறிக்கப்பட்ட
அந்த நன்னாள் நெருங்கிக் கொண்டே வந்தது
பணியாற்றும் இடம்
பலமைல் தொலைவிலிருந்தும்
பிறக்கப்போகும் ஒரு உயிருக்காக
பிரார்த்தனை செய்தபடியே
அவன் இதயம் துடித்துக் கொண்டிருந்தது
அந்த நகரத்தின்
சாலையோரக் கடைகளில் ஒட்டப்பட்டிருந்த
சின்னஞ்சிறு குழந்தைகளின் படங்களும்
‘கற்பூரமுல்லை ஒன்று…. ’ -என எதேச்சையாக
அருகாமையில் ஒலித்த இனிய கானமும்
அவன் மனதைப் பிசைந்தன.
அன்றைய மாலைப் பொழுதில
அடுக்குமாடி வணிக வளாகமொன்றில்
‘டாடி’ என்றழைத்தபடி
ஓடிவந்த குழந்தையொன்று
தவறுதலாக அவன் கால்களைக்
கட்டிக் கொண்டது
சில வினாடிகள் கழித்து
அண்ணாந்து முகம் பார்த்து
தனது தந்தையல்ல என்றுணர்ந்த பின்னர்
அந்நியர் ஸ்பரிசத்தை தொட்டுவிட்ட
சங்கோஜத்தில் விலகிச் சென்றது
நிமித்தங்கள் அவன் தந்தையானதை
இந்நிகழ்வினால் உறுதிப்படுத்த
‘நான் அப்பாவாகிவிட்டேன்’ என்ற எண்ணம்
அவன் உள்ளத்தில் உதித்த அக்கணத்தில்
வாயில் கைப்பிடி சர்க்கரை போடாமலேயே
உடலில் ஓடும் உதிரம் கூட
அவனுக்கு இனித்தது.