பத்மநாபன் எதையோ தேடுகிறார்

பத்மநாபன் அந்த ஊருக்கு வந்ததிலிருந்து சுரம், தலைவலி என்று எதுவும் வந்ததில்லை. அடிக்கடி வயிறு வலிக்கும். அதுவும் அஜீரணத்தினால். ஆனால் ஒருமுறை சுரம் வந்துவிட்டது. அவரால் நம்ப முடியவில்லை. அவர் பள்ளிக்கூடம் படித்த நாட்களில்தான் ஒவ்வொரு வருடமும் அவருக்கு மே மாதத்தில் சுரம் வந்துவிட்டுப் போகும். அதன்பின் அவருக்கு சுரம் அடித்ததே இல்லை. வயிற்றைக் கட்டுப்படுத்தாத அஜீரண தொந்தரவுதான் அடிக்கடி அவருக்கு இருக்கும். அன்று சுரம் வந்தவுடன், அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அந்த ஊரில் அவர் மருத்துவமனைக்குச் சென்றதில்லை. டாக்டர் என்று யாரையும் பார்த்ததில்லை. சென்னையிலும் பெரும்பாலும் அவர் டாக்டரைப் பார்ப்பதில்லை.
அந்த ஊரில் அவருக்குத் தெரிந்த ஒரு நண்பர் சிவாதான். இருவரும் இலக்கியம் பேசும் நண்பர்கள். சிவாக்கும் அவருக்கும் பலமடங்கு வயது வித்தியாசம். ஆனால் இலக்கியம் பேசும்போது வயது வித்தியாசம் தெரியாது. பார்ப்பதற்கு இளம் வயதுக்காரராக இருந்தாலும், சிவா எப்போதும் புத்தகம் படித்துக் கொண்டிருப்பார். அவரைத்தான் பத்மநாபன் போனில் கூப்பிட்டார். சுரம் என்றார். சிவா பத்மநாபனைப் பார்க்க வரும்போது ரசக் கரைசலை எடுத்துக்கொண்டு வந்தார். பத்மநாபன் நெகிழ்ந்து விட்டார்.
தனியாக ஒருவர் இருக்கும்போது, இது மாதிரியான உதவிகள் நிச்சயமாக தேவையாக இருக்கும்.
“என்ன சார், என்னமோ மாதிரி ஆகிவிட்டீர்கள்,” என்றார் சிவா..
“நீங்கதான் எதாவது ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போக வேண்டும்,”என்றார் பத்மநாபன்.
அந்த ஊரில் நெடுக பல மருத்துவமனைகள் உண்டு. அலுவலகத்திற்கு லீவு சொல்லிவிட்டு சிவாவுடன் கிளம்ப ஆயுத்தமானார் பத்மநாபன்.
சிவா மகாதான தெருவில் உள்ள ஒரு இருதய நோய் சம்பந்தமான மருத்துவமனைக்கு அழைத்துப் போனார். சாதாரண சுரத்திற்கு ஏன் இங்கு அழைத்துப் போகிறார் என்று யோசித்தார் பத்மநாபன்.
அந்த மருத்துவ மனையில் ஒரே கூட்டம். டோக்கனை வாங்கி வைத்துக்கொண்டு பத்மநாபன் அமர்ந்திருந்தார் கூட்டம் நகர்வதாகத் தெரியவில்லை. பொறுமை எல்லை மீறிப் போய்விட்டது.
“சிவா போய்விடலாமா” என்று கேட்டார் பத்மநாபன்.
“வேண்டாம், சார்,” என்றார் சிவா.
இருவரும் இன்னும் சிறிது நேரம் உட்கார்ந்திருந்தார்கள். கூட்டமோ வழிந்து கொண்டிருந்தது. எல்லோரும் இதய நோயாளிக்காரர்கள். சாதாரண சுரத்திற்கு இங்கு ஏன் வந்தோம்?
டாக்டரைப் பார்க்க அனுப்பினான் அங்குள்ள ஊழியர். உள்ளே நுழைந்து டாக்டர் எதிரில் அமர்ந்தாலும், டாக்டர் பத்மநாபனைப் பார்க்கவில்லை. போன் மேலே போன். பேசிக்கொண்டே இருந்தார். சுரம் வேகத்தோடு பத்மநாபன் டாக்டரை கடுப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தார். சிவா மேலும் கோபம். ஏன் இங்கே அழைத்துக்கொண்டு வந்தார்?
அப்போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது. உள்ளே அவசரமாக டாக்டரைப் பார்க்க கணவன் மனைவி இருவர் வந்தார்கள். ரொம்ப அவசரம். கணவன் மார்பைப் பிடித்துக்கொண்டு கத்திக் கொண்டிருந்தான். “டாக்டர் தாங்க முடியலை டாக்டர். வலி தாங்க முடியலை,” என்று மார்பைப் பிடித்துக் கொண்டிருந்தான்.
எல்லோரும் பதட்டமாகியிருந்தோம். டாக்டர் அவனைப் பார்த்து, “சட்டையைக் கழட்டுங்க..” என்றார். அவனால் சட்டையைக் கூட கழட்ட முடியவில்லை. “டாக்டர் வலி அதிகமாக இருக்கிறது,” என்று அவன் இன்னும் கத்தினான்.
பத்மநாபனுக்கும், சிவாவிற்கும் தர்மசங்கடமாக இருந்தது. சிறிது நேரத்தில் கத்தினவன் கீழே விழுந்துவிட்டான். உடனே பரபரப்பு கூடி விட்டது.
இந்தக் காட்சியைப் பார்த்தவுடன் பத்மநாபனும், சிவாவும் அந்த இடத்தைவிட்டு வாசலுக்கு ஓடி விட்டார்கள். சிவா அந்தக் காட்சியைப் பார்த்ததால் வாந்தி எடுத்தார். “என்ன சிவா, வாந்தி எடுக்கிறீங்க?” என்று பத்மநாபன் கேட்டார்.
“என்னால தாங்க முடியாது சார்,” என்றார் சிவா.
“வேற ஆஸ்பத்ரிக்குப் போகலாம்…ரொம்ப காலியா இருக்கிற ஆஸ்பத்ரியா பாருங்க…சாதாரண சுரத்திற்குப் பார்க்கிற டாக்டராகப் பாருங்க…”
“அந்த ஆளுக்கு என்ன ஆயிருக்குமோ…உயிரோடு இருப்பாரா…செத்துப் போயிருப்பாரா…”
“சிவா..அந்த ஆராய்ச்சியெல்லாம் நமக்கு எதுக்கு…மேலும் அவர் இறந்தாலும் நாம் அதைப் பற்றி யோசிக்க வேண்டாம்..”என்றார் பத்மநாபன்.
பின் அங்கிருந்து ஒரு சாதாரண டாக்டரைப் பார்த்துவிட்டு வீட்டிற்கு பத்மநாபனைக் கொண்டு வந்துவிட்டுப் போய்விட்டார் சிவா.
கொஞ்சம் நேரம் கழித்து சிவாவிடமிருந்து போன் வந்தது. “சார், அந்த ஆள் போயிட்டான்..” என்றார் சிவா.
கேட்டவுடன் சொரேரென்றிருந்தது பத்மநாபனுக்கு. அவர் கண் முன்னால ஒரு 40 அல்லது 42 வயதுக்குட்பட்ட ஒருவர் மார்பு துடித்து இறந்தும் விட்டார். அப்போது அந்த மனிதன் துடித்தத் துடிப்பு. கத்திய கத்தல் அவர் காதில் இப்போதும் ரிங்காரம் இட்டுக்கொண்டிருந்தது.
காலையில் நடந்த சம்பவமே பத்மநாபன் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. தனியாக இருப்பதால்தான் இதுமாதிரியான பிரச்சினை. குடும்பத்தோடு இல்லாமலிருப்பது எவ்வளவு பெரிய ஆபத்து என்று அவருக்குத் தோன்றியது. சுரம் வேகம் தணிந்து விட்டதா என்று யோசித்துக் கொண்டிருந்தார்.
பின் கடைக்குச் சென்று ஒரு தர்மாமீட்டரை வாங்கிக்கொண்டு வந்தார். தர்மாமீட்டரை எடுத்து வாயில் இடுக்கிக்கொண்டு சுரம் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதைப் பார்த்துக் கொண்டிருந்தார். சுரம் சாதாரணமாகத்தன் இருந்தது. இந்தத் தர்மாமீட்டரெல்லாம் பயன்படுத்தி பல ஆண்டுகளாயிற்று. பத்மநாபன் தன்னையே கேட்டுக்கொண்டார். ‘நான் என்ன பயந்தாங்கொள்ளியா?’ என்று.
‘ஆமாம்.’ என்றும் தனக்குள் பதிலும் சொல்லிக்கொண்டார். எந்த மனிதன்தான் பயம் இல்லாமல் இருக்க முடியும்?
கடந்த 4 ஆண்டுகளாக அவர் தனியாக இங்கு இருக்கிறார். குடும்பம் சென்னையில். அப்பாவிற்கு 85 வயது. மனைவி இன்னொரு வங்கியில் பணிபுரிகிறாள். அவளால் அவருடன் அவர் இருக்குமிடத்திற்கு வந்திருக்க முடியாது.
முதலில் இந்தத் தனிமை வாசம் அவருக்கு வேடிக்கையாக இருந்தது. கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக அவர் தனியாக இருந்ததில்லை. தனிமை என்றால் என்ன என்பதைக் கூட அவர் யோசித்ததில்லை. இந்த ஊருக்கு வந்தபிறகு தனியாக ஒரு வாழ்க்கை நடத்த வேண்டியதை நினைத்து அவருக்கு வருத்தமாக இருந்தது. அலுவலகத்திற்கு அவசரம் அவசரமாக ஓடி திரும்பவும் வீட்டிற்கு வந்தவுடன் பொழுது போய்விடும். அவர் தனியாக வீடு மாதிரி எடுத்துத் தங்கியிருந்தார்.
இரவு படுத்துக்கொள்ளும்போது முதன் முதலாக அவருக்குப் பயமாக இருந்தது. இதுவும் வேடிக்கையாக இருந்தது. 50 வயதில் தனக்குப் பயமா? அவர் இருக்குமிடம் கோயில் இருக்கும் தெருவில். கொஞ்சம் கொஞ்சமாக அவருக்கு அந்தப் பயம் போய்விட்டது.
எப்போதும் சனிக்கிழமை சென்னைக்கு ஓடிவிடுவார். திரும்பவும் ஞாயிற்றுக்கிழமை இரவு கிளம்பி இந்த ஊருக்கு வந்துவிடுவார். பெரும்பாலும் அவருக்குப் பொழுதுபோக்கு புத்தகம் படிப்பது. ஆனால் என்ன நேரம் இருப்பதில்லை. அவரைச் சுற்றிலும் யாரும் புத்தகம் படிப்பவர்கள் இல்லை. ஏன் அலுவலகத்தில் யாரும் பேப்பரைக் கூடப் படிப்பதில்லை. அவரால் ஒரு நிமிஷம்கூட புத்தகம் அல்லது பேப்பர் படிக்காமல் இருக்க முடியாது. இது ஒரு வியாதியா என்று கூட யோசிப்பார்.
இந்தத் தருணத்தில்தான் சிவாவின் நட்பு கிடைத்தது. சிவா ஒரு சிவில் இன்ஜினியர். தனியாக வீடு கட்டிக்கொடுக்கும் பணி. எப்போதும் அவர் சுலபமாக இருப்பதுபோல் பத்மநாபனுக்குப் படும். புத்தகம் படிப்பதுதான் சிவாவிற்கு வேலை. தடித்தடியாய் புத்தகங்களைப் படித்துக்கொண்டிருப்பார். பின் அதைப் பற்றி பேச பத்மநாபனை நாடி வருவார்.
காலையில் மரணம் அடைந்தவரைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தார் பத்மநாபன். பொழுது இருட்டத்தொடங்கிவிட்டது. அப்போதுதான் காலையில் நடந்த சம்பவம் அவரை தூங்கவிடாமல் பண்ணிக்கொண்டிருந்தது. இறந்து போனவரின் முகம் அவர் ஞாபகத்தில் வந்துகொண்டிருந்தது. அவர் மனைவியைத் தாங்கிப்பிடித்துக்கொண்டு அவர் போட்ட சத்தம் அவர் மனதில் அலறிக் கொண்டிருப்பதாகப் பட்டது.
பத்மநாபன் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் பலவிதமாக முடிச்சுப் போட்டுக்கொண்டிருப்பார். இப்படி முடிச்சுப் போடுவது ஆபத்து என்று உணர்ந்திருந்தார். என்ன படித்திருந்தால் என்ன? மரண பயம் எளிதில் போவதில்லை..50 வயது..தனிமை.
பத்மநாபன் இன்னும் யோசித்துக் கொண்டிருந்தார். சம்பத் என்ற எழுத்தாளர் எழுதிய இடைவெளி என்ற நாவல் ஞாபகத்திற்கு வந்தது. அவர் புத்தகம் அச்சாகி வருவதற்குமுன் இறந்துவிட்டார். அந்தப் புத்தகம் முழுவதும் மரணத்தைப் பற்றியே சம்பத் எழுதியிருப்பார். அவருடைய மரணம் கூட ஒரு நாடகம் மாதிரி எதிர்பாராதவிதமாக நடந்துவிட்டது. காலையில் கூட மரணம் ஒரு நாடகம் நடத்திவிட்டுச் சென்றதாக தோன்றியது. எச்சரிக்கை கொடுத்துவிட்டுப் போயிருக்கிறதோ என்று கூட யோசிக்க ஆரம்பித்தார். காலையில் நடந்த நிகழ்ச்சி மரணத்தைப் பற்றிய ஞாபகப்படுத்தும் நிகழ்ச்சியாக தோன்றியது. ஜாக்கிரதை என்று மரணம் மிரட்டிவிட்டுச் சென்று விட்டதா? பத்மநாபனுக்கு இரவெல்லாம் தூக்கம் வரவில்லை.
பொதுவாக தூங்கும்போது விளக்கெல்லாம் அணைத்துவிட்டு தூங்குவார். ஆனால் அன்று அவர் எல்லா விளக்குகளையும் எரியவிட்டு தூங்க முயற்சி செய்தார். எப்படியோ தூங்கி விட்டார். அடுத்தநாள் அவருக்கு சுரம் அளவு குறைந்துவிட்டது. அலுவலகத்தை நோக்கி ஓட ஆரம்பித்துவிட்டார். அன்று சனிக்கிழமை.
எப்போதும் அவருக்கு சனிக்கிழமை என்றால் மகிழ்ச்சியான நாள். அன்றுதான் அவர் சென்னைக்கு ஓடும் நாள். ஓடிவிட்டார் சென்னைக்கு. திரும்பவும் திங்கள் வந்தபோது அவருக்கு மரணத்தைப் பற்றிய காட்சி மறந்துவிட்டது. சிவா அவரைப் பார்க்க வந்தபோது அப்போது நடந்த நிகழ்ச்சியை சாதாரணமாகப் பேசிக்கொண்டிருந்தார். சிவா ஓடிவந்து வாந்தி எடுத்ததைக் கிண்டல் அடித்துக்கொண்டிருந்தார். அவருக்குத் தெரிந்த ஒரு குடும்பம் அங்கிருந்தது. அந்தக் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது வாந்தி எடுத்துக்கொண்டிருப்பார்கள்.
“உணர்ச்சி வசப்பட்ட நிலையில் அப்படி ஆகிவிடுகிறது. அன்று என்னால் தாங்க முடியவில்லை,”என்றார் சிவா.
“மரணம் மிரட்டிவிட்டுச் சென்றிருக்கிறது,”என்றார் பத்மநாபன்.
இந்தச் சம்பவம் நடந்து பல நாட்கள் ஓடிவிட்டன. பத்மநாபன் மறந்து விட்டார். அவர் அலுவலகத்தில் மகாதேவன் என்று ஒருவர் இருக்கிறார். பார்ப்பதற்கு நீலு என்ற நடிகர் மாதிரியான தோற்றத்தில் இருப்பார். வளவளவென்று பேசிக்கொண்டிருப்பார். அவருடைய சில செய்கைகள் பத்மநாபனுக்கும் எரிச்சலாக இருக்கும்.
அலுவலகத்தில் அவருக்கு கெட்ட பெயர். அதைப் பற்றியெல்லாம் அவர் கவலைப்பட மாட்டார். அவருக்கு 2 பெண். ஒரு பையன். ஒரு பெண் இன்ஜினியரிங் காலேஜ்ஜில் படித்துக் கொண்டிருந்தாள். அவள் பாட்டும் பாடுவாள். கர்நாடக சங்கீதத்தில் ஒரு திறமை உண்டு. அந்தப் பெண்ணிற்கு கும்பகோணத்தில் ஒரு பாட்டுக் கச்சேரி நடத்த வேண்டும் என்பது அவருடைய நெடுநாள் விருப்பம். அதற்கும் ஏற்பாடு செய்துவிட்டார். அந்தப் பெண் கல்லூரியில் உள்ள ஒரு பேராசிரியரைப் பேச ஏற்பாடு செய்தார். பெண்ணிற்குப் பாட்டு சொல்லிக்கொடுத்த ஆசிரியையைப் பேசக் கூப்பிட்டார். 90 வயதான ஒரு மிருதங்க வித்வானையும் பேசக் கூப்பிட்டார்.
பின் ஒரு பத்திரிகை அடித்து எல்லோருக்கும் வினியோகம் செய்தார்.
“பத்மநாபன் வந்திடுங்க..சாப்பாடெல்லாம் ஏற்பாடு செய்திருக்கிறேன்,” என்றார் மகாதேவன் ஒருநாள் பத்மநாபனைப் பார்த்து.
அந்த நாள் வந்தது. பந்தநல்லூரிலிருந்து கும்பகோணம் 30 கிலோமீட்டர் தூரம். பஸ்ஸில் 1 மணிநேரம் பயணம். அலுவலகத்திலிருந்து கிளம்புவதற்கு நேரம் ஆகிவிட்டது. 7.30 மணியிருக்கும். பஸ்ûஸப் பிடித்துக்கொண்டு கும்பகோணம் போய்ச் சேருவதற்குள் நேரம் அதிகமாகிவிட்டது.
கச்சேரி நடக்கும் இடத்திற்குச் சென்றார். மகாதேவன் பெண் பாடிக்கொண்டிருந்தாள். மகாதேவன் இவரைப் பார்த்வுடன், வேகமாக ஓடி வந்தார்.
“என்ன ரொம்ப நேரம் ஆகிவிட்டதே?” என்று விஜாரித்தார்.
“டிபனெல்லாம் தீர்ந்து விட்டது…காப்பி சாப்பிடுங்க…ராத்திரி சாப்பாடெல்லாம் ரெடியாய் இருக்கும்..சாப்பிட்டுவிட்டுப் போங்க,” என்றார் மகாதேவன்.
பாட்டு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. அந்தப் பெண் தம் கட்டிக்கொண்டு பாடுவதாக தோன்றியது. பின் ஒரு இடைவேளை. மேடையை எல்லோரும் பேசுவதற்காக திருத்தம் செய்தார்கள்.
ஒவ்வொருவராக மேடையில் இருந்தவர்கள் அந்தப் பெண்ணின் பாட்டுத் திறமையை மெச்சிப் பேசினார்கள். பேராசிரியர் பேசும்போது, ‘வித்யா பாட்டில் மட்டுமல்ல…படிப்பிலும் நெம்பர் ஒன்..’என்று உணர்ச்சி வசப்பட்டுப் பேசினார். 90 வயது மிருதங்க வித்வான் தள்ளாடி தள்ளாடி மேடையில் வாழ்த்தினார்.
மேலும் மிருதங்க வித்வான் பென்சன் வாங்கிக்கொண்டு கும்பகோணத்தில் அந்த வயதிலும் தனிமையில் இருப்பதைப் பற்றியும் சொன்னார். ஒருவழியாக எல்லோரும் பேசி முடித்தப்பின், திரும்பவும் வித்யா பாட ஆரம்பித்தாள். மேடையில் இருந்தவர்கள் எல்லோரும் கீழே வந்து அமர்ந்தார்கள்.
வித்யா துக்கடாக்கள் பாட ஆரம்பித்தாள். சம்போ…சிவ சம்போ…என்ற பாட்டை உருக்கமாக பாட ஆரம்பித்தாள். அந்தப் பாட்டு எமனை அழைக்கும் பாட்டு என்று பத்மநாபனுக்குத் தோன்றியது.
திடீரென்று ஒரு சத்தம். வித்யாவின் கல்லூரி பேராசிரியர் நாற்காலியிலிருந்த கீழே சாய்ந்து விட்டார். வித்யா இதைப் பார்த்துவிட்டு பாடுவதை நிறுத்திவிட்டாள். மகாதேவன் அவசரம் அவசரமாக ஓடிவந்து பேராசிரியரைப் பிடித்துக் கொண்டார். பேராசியர் மயங்கியே விழுந்துவிட்டார். பாட்டு முழுவதும் நின்றுவிட்டது.
பின் ஒரு ஆட்டோவைப் பிடித்துக்கொண்டு பேராசிரியரைத் தூக்கிக்கொண்டு சென்றார்கள். மகாதேவனுக்குத் துணையாக பத்மநாபனும் சென்றார். அவசரம் அவசரமாக ஒரு பெரிய மருத்துவமனைக்குச் சென்றார்கள். மருத்துவ மனையில் அவசரப் பிரிவில் பேராசிரியரை அழைத்துக்கொண்டு போனார்கள்.
சிறிது நேரத்தில் பேராசிரியரைப் பரிசோதித்த டாக்டர், “அவர் எப்போதோ இறந்து விட்டார்,”என்று சொன்னார். எல்லோருக்கும் அதிர்ச்சி. பத்மநாபனுக்கு திகைப்பாக இருந்தது. இருப்பு கொள்ளவில்லை. மகாதேவனிடம் சொல்லிக்கொண்டு அவசரம் அவசரமாக ஒரு ஆட்டோவைப் பிடித்துக்கொண்டு பஸ் ஸ்டாண்டிற்குச் சென்றார். பின் அங்கிருந்து ஒரு பஸ்ûஸப் பிடித்து அவர் ஊருக்குப் பயணமானார். வீடு போய்ச் சேர இரவு 11 ஆகிவிட்டது.
வீட்டிற்கு வந்தவுடன் பத்மநாபனுக்கு படபடவென்றிருந்தது. ஒரு பாட்டுக் கச்சேரி நடக்கும்போது இது மாதிரி மரணம் அவர் எதிர்பார்த்ததில்லை. அந்தப் பெண்ணைப் புகழ்ந்து பேசிய பேராசிரியர் முகம் அவர் முன்னால் மிதந்துகொண்டிருப்பது போல் தோன்றியது. பத்மநாபனுக்கு ஒரு கேள்வி உள்ளுக்குள் எழுந்து கொண்டிருந்தது. ஏன் இதுமாதிரியான நிகழ்ச்சி நடக்க வேண்டும். அதுவும் அவர் முன்னிலையில்.. மரணம் திரும்பவும் ஒரு நாடகத்தை நடத்துகிறதா? அல்லது அவரை எச்சிரிக்கை செய்கிறதா? பத்மநாபன் உறுதியாக இதெற்கெல்லாம் பயப்படக்கூடாது என்று நினைத்தார். ஆனாலும் தூக்கம் வரவில்லை.
பேராசியர் பற்றிய எண்ணத்தை முதலில் நிறுத்த வேண்டும் என்று நினைத்தார். ஏன் நாம் இந்தக் கச்சேரிக்குப் போனோம் என்று யோசித்தார் பத்மநாபன். அன்று மானேஜர் அந்தக் கச்சேரிக்கு வரவில்லை. அன்று இரவும் அவருக்குத் தூக்கம் வரவில்லை. சென்னைக்கு இப்போதே ஓடவேண்டும் என்று தோன்றியது. அலுவலகத்திற்குப் போக வேண்டாமென்றும் பட்டது.
மரணம்தான் முக்கியம். என்ன பெரிய வேலை என்றெல்லாம் நினைக்கத் தொடங்கினார். 50 வயதில் இதெல்லாம் எதற்கு? பதவி உயர்வுப் பெற்று எதற்கு இதுமாதிரி அவதிப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். எல்லாம் தனக்குள். தனக்குள். அன்று இரவும் லைட்டெல்லாம் போட்டுக்கொண்டு முழித்துக் கொண்டிருந்தார்.
அடுத்தநாள் அவர் அலுவலகத்திற்குப் போகும்போது அவர் முகமே சரியில்லை. மகாதேவனும் வந்திருந்தார். அவர் சாதாரணமாக இருந்தார். “யாரும் சாப்பிடவில்லை. எல்லா சாப்பாடும் வீணாகப் போய்விட்டது..”என்றார்.
என்ன மனிதர் இவர். சாப்பாடு வீணாகிப் போனதைப் பற்றி பேசுகிறார். ஒரு மரணம் அவர் முன்னால் நடந்ததைப் பற்றி சந்றுக்கூட கவலைப் படாத மாதிரி இருக்கிறாரே.. அந்தப் பெண் வித்யாவிற்கு எப்படி இருந்திருக்கும்.. தன் முதல் கச்சேரி அரங்கேறும்போதே இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்துவிட்டதே என்றெல்லாம் யோசித்திருக்குமோ? அன்றும் சனிக்கிழமை. அந்த முறை சென்னை போனால், ஒரு வாரமாவது அங்கிருக்க வேண்டுமென்று தோன்றியது. மரணத்தின் நாடகத்தை தன்னால் மறக்க முடியாது போல் இருந்தது.
மகாதேவனைப் பார்த்து, இளங்கோ என்ற கடைநிலை ஊழியர் கேட்டான் : “என்ன மகாதேவன், சார்.. உங்கப் பெண் கச்சேரியில ஒரு பேராசிரியரை நிரந்தரமா ஊருக்கு அனுப்பிட்டீங்க போலிருக்கு..”என்று இடிஇடியென்று சிரித்தபடி கேட்டான்.
மகாதேவன் அதைக் கேட்டு சிரித்தார். பத்மநாபனுக்கோ ஒருவாரம் லீவு எடுத்துக்கொண்டு போகவேண்டும்போல் தோன்றியது. சிறிது நேரத்தில் வட்டார அலுவலகத்திலிருந்து மேலாளருக்குப் போன் வந்தது. “ஒருவாரம் பத்மநாபனுக்கு சென்னையில் டிரெயினிங்,”என்று. ஆச்சரியமாக இருந்தது பத்மநாபனுக்கு.

“பத்மநாபன் எதையோ தேடுகிறார்” இல் 2 கருத்துகள் உள்ளன

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன