சமீபத்தில் யோசிப்பவர் எழுதிய செருப்பு கதையைப் படித்ததும் எனக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்னால் நானும் செருப்பு என்ற பெயரில் ஒரு கதை எழுதியிருக்கிறேன். அப்போது என் வயதும் யோசிப்பவர் வயது இப்போது என்ன இருக்கிறதோ அதுதான் இருந்திருக்கும். என் கதையை மலர்த்தும்பி என்ற சிறுபத்திரிகைதான் வெளியிட்டது. அக் கதையின் இறுதியில் செருப்பை நாய் கவ்விக்கொண்டு போய்விடும். வேலைத் தேடிப் போகும் ஒரு படித்த இளைஞனின் சோகக் கதை நான் எழுதியது.
யோசிப்பவர் ரொம்பவும் வித்தியாசமாக இன்னொரு செருப்பு கதையை எழுதி உள்ளார். வரும் விருட்சம் இதழில் அக் கதை பிரசுரமாக உள்ளது. செருப்பைத் தூக்கி வீசி எறிவதைப் பற்றி கதை எழுதியிருக்கிறார்.கடைசியில் கூட யார் செருப்பைத் தூக்கி எறிந்தது என்பது தெரியவில்லை.செருப்பைத் தூக்கி எறியும் கலாச்சாரத்தை நையாண்டி செய்திருப்பதுதான் கதை.
இன்றைய சூழலில் கதை எழுதும் உள்ளங்கள் ஒன்று சேர வேண்டும். நம்மைச் சுற்றிலும் இயந்திரத்தனமான வாழ்க்கை நடந்து கொண்டிருக்கிறது. கதையும் கவிதையும்தான் இதிலிருந்து தப்பிக்க வழி செய்யும். கொஞ்சம் யோசித்துப்பார்த்தால் நான் இதெல்லாம் உணர்ச்சி வசப்பட்டுச் சொல்வதாகத் தோன்றுகிறது. உலக முழுக்கவும் புத்தகம் படிக்காமல் பலர் இருக்கிறார்கள். புத்தகம் படிப்பவர்களைக் கண்டால் எரிச்சல் அடைபவர்களும் இருக்கிறார்கள்.
நம் படைப்புகளைப் பற்றி பரஸ்பரம் பேசிக்கொள்ள முடியாத நிலை உள்ளது. நான் சில மாதங்களுக்கு முன்னால் இப்படி யோசித்தேன். தினமும்ஒரு கவிதை அல்லது கதை படித்துவிட்டுச் செல்வது என்று. அப்படி முயற்சி செய்தும் பார்த்தேன். ஒரு கதையைப் படித்துவிட்டு கதையின் கீழ் எனக்கு என்ன தோன்றுகிறதோ அதை எழுதி வைத்துவிட்டு என்று படிக்கிறேனோ அன்றைய தேதியும், படித்து முடித்த நேரத்தையும் குறிப்பிட்டேன். ஏன் என்றால் கதைக்கும் கவிதைக்கும் நாம் மரியாதை செலுத்த வேண்டுமென்ற எண்ணம் என் மனதில் பலமாக விழுந்திருநந்தது.ஆனால் அது ஒரு பைத்தியக்காரத்தனம் என்றும் எனக்குத் தோன்றியது.
ஆனால் கதையைப் பற்றியோ கவிதைப் பற்றியோ யாருடன் பரிமாற்றம் செய்து கொள்ள முடியாது. அதில் ஒரு பிரச்சினை இருக்கிறது. அப்படி பரிமாற்றம் செய்துகொள்ள முன் வரும்போது இருவருக்கும் பொதுவான நேரம், மூட் இருக்க வேண்டும்.
இன்னொரு விஷயமும் இங்கே சொல்ல வேண்டும். கவிதைக் கணம் என்ற அமைப்பை நாங்கள் நடத்திக்கொண்டு வந்தோம். எங்களை வெளியூரில் பேசக் கூப்பிட்டார்கள். நாங்களும் சென்றோம். கவிதையைப் பற்றி தெரியாத மாணவர்கள் முன்னால் நாங்கள் பேசினோம். எங்களுக்குள் யார் பெரியவன் என்ற பிரச்சினை ஏற்பட்டு விட்டது. அதனால் நாங்கள் ஒவ்வொருவராகப் பேசத் தொடங்கியபோது இன்னொருவர் அதைக் கட் செய்து விடுவார். அப்படி கட் செய்துவிட்டு அவர்தான் அக்கூட்டத்தில் முக்கியமானவராக மாறி விடுவார். அக் கூட்டத்தின் முடிவில் எங்களுக்குள் சண்டையே வந்துவிட்டது.
ஒருவர் இப்படிப் பேச ஆரம்பித்தார். ”என் கவிதைகளைப் படிக்கிறவர் இங்கே நிறையா பேர்கள் இருக்கிறார்கள்,” என்று தற்பெருமை அடித்துக் கொண்டார். அவர் பொதுவாக காலச்சுவடில் என் கவிதை வந்தது. அதைப் படித்து விட்டு 100 பேர்கள் போன் செய்தார்கள் என்ற ரீதியில் பேசுபவர்.
இன்னொரு விஷயமும் இங்கே சொல்ல வேண்டும். என்னை ஒரு பள்ளிக்கூடத்தில் மாணவர்களுக்குமுன் கவிதை வாசிக்கக் கூப்பிட்டார்கள். எனக்குப் பெருமிதமாக இருந்தது. நான் எல்லோருடைய கவிதைகளையும் சேர்த்து வாசிக்க தீர்மானித்தேன். கவிதைக்காக ஒரு மூவ்மெண்ட் நடத்த வேண்டுமென்றும், கவிதையை எல்லோரிடமும் பரப்ப வேண்டுமென்ற முட்டாள்தனமான கொள்கைகளை வைத்திருந்தேன். வழக்கமாக கூட்டம் என்றால் நான் டென்சன் ஆகிவிடுவேன். அந்த முறையும் நான் அப்படித்தான் இருந்தேன். ஆனாலும் போய் கவிதைகளை வாசித்துக் கொண்டே இருந்தேன். ஒரு முறை கவிதை வாசித்து முடித்தவுடன் மாணவர்களிடமிருந்து பலத்த கைத்தட்டல். நான் பிரமித்துப்போய் விட்டேன். கவிதைக்கு இந்த வரவேற்பா..நல்ல எதிர்காலம் கவிதைக்கு இருக்கிறது என்று நினைத்தேன். வீட்டிற்குத் திரும்பும்போது நிறைவாக இருந்தது. அடுத்தநாள் காலையில் கூட்டம் ஏற்பாடு செய்தவர் என்னைப் பார்க்க வந்தார். அவரிடம், ”மாணவர்கள் இந்த அளவிற்கு ரசனை உள்ளவர்களாக இருக்கிறார்களே.., நான் வாசித்த கவிதையை ரசித்துக் கேட்டு கைத் தட்டினார்களே,” என்றேன். அதற்கு அவர், ”நாங்கள் சிக்னல் செய்தோம்..அதைப் பார்த்து மாணவர்கள் கைத் தட்டினார்கள்…”என்றார்.
நான் என்ன சொல்வது?