எதையாவது சொல்லட்டுமா….3


காலை 7.30 மணியிலிருந்து இரவு 7.30 மணிவரை என்ற தலைப்பில் எழுதலாம் என்று நினைத்தேன். தலைப்பு பொதுவான தலைப்புதான் அதில் மாற்றம் இல்லை. ஆரம்பத்தில் எனக்கு பாரமௌன்ட் பப்ளிஸிட்டியில் வேலை. நாள் ஒன்றுக்கு மூன்று ரூபாய் சம்பளம். வெள்ளிக்கிழமை மட்டும் பூஜை முடிந்தபிறகு ரூ.2.50 பைசா கொடுப்பார்கள். வாங்கிக்கொண்டு எங்கள் வீட்டு தெருமுனையில் உள்ள டீ கடையில் சுண்டல் சாப்பிடுவேன். நான் டீ கடையில் சுண்டல் சாப்பிடுவது என் தம்பிக்குப் பிடிக்காது. பின் பள்ளிக்கரணை என்ற இடத்தில் கார்டெக்ஸ் அடுக்குபவனாக எனக்கு வேலை. மாதம் ரூ.205 சம்பளம். என்னை வேலைக்கு எடுத்துக்கொள்ள சிபாரிசு செய்தவர் நான் அதிகமாக தலை முடி வைத்திருந்தால் பிடிக்காது. பாக்டரி பக்கத்தில் இருக்கும் டீ கடையில் டீ குடிப்போம்.

இந்த வேலைக்கு நான் காலையில் 7.30 மணிக்கு சைதாப்பேட்டையில் பஸ் பிடிக்க வருவேன். சைதாப்பேட்டை ஸ்டேஷனலில் உள்ள ஒரு கடையில் செய்தி வாசிக்கும் சப்தம் கேட்கும். செய்திகள் வாசிப்பது….சரோஜ் நாராயணசாமி என்று ரேடியோவில் கேட்கும் பின் நான் பள்ளிக்கரணை பாக்டரி போய்விட்டுத் திரும்பும்போது சைதாப்பேட்டையில் அதே செய்திகள் வாசிப்பது ரேடியோவில் கேட்கும். என்னடா வாழ்க்கை என்று தோன்றும். சம்பளம் குறைச்சல். ஆனால் உழைப்பு அதைவிட அலைச்சல் அதிகம். சம்பாதிக்கிற ஒவ்வொருவருக்கும் சம்பாதிக்கிறோம் என்ற கர்வம் இருக்கும். குறைச்ச சம்பளம் வாங்கினாலும் என்னிடமும் கர்வம் இருக்குமென்று தோன்றுகிறது.

வேறு ஒரு வேலைக்குத் தாவும்போது, பள்ளிக்கரணை வேலை போய்விட்டது. பெரிய இழப்பு ஏற்பட்டதுபோல் நான் ரொம்பவும் வருத்தப்பட்டேன். இப்போது நினைத்தால் சிரிப்பு வருகிறது. அப்போதுதான் நான் தீவிர எழுத்திற்கு அறிமுகம் ஆகிக்கொண்டிருந்தேன். ராயப்பேட்டையில் இருந்த க்ரியாவில் அடிக்கடி புத்தகம் வாங்கப் போவேன். சி மணியின் ‘வரும் போகும்’ கவிதைப் புத்தகத்தைப் பார்ப்பேன். எனக்குத் தோன்றும் இந்தக் கவிதைப் புத்தகம் போகவே போகாது எப்போதும் க்ரியாவில் இருந்துகொண்டே இருக்குமா என்று.

எனக்கு அடுத்த வேலை வங்கியில் கிடைத்துவிட்டது. பாருங்கள் நாம் நினைப்பதுபோல்தான் நமக்கு எல்லாம் வாய்க்கிறது. நான் பாரத வங்கிக் கிளையில் டிடி வாங்கச் செல்லும்போது அங்கே உள்ளே உட்கார்ந்திருப்பவர்களைப் பார்த்து பொறாமைப் படுவேன். எனக்கும் அவர்களைப் போல் ஒரு தேசிய வங்கியில் தட்டச்சர் வேலை. ஐந்தாவது மாடியில் வேலை. ரெமின்டிங் மிஷினில் எல்லோரும் தட்டு தட்டென்று தட்டுவோம். அதில் பரத் என்ற வித்தியாசமான நண்பர். அவர் லா.ச.ரா கதைகளை அப்படியே ஒப்பிப்பார். ஆச்சரியப்பட்டுப் போவேன். எனக்கோ லா.ச.ரா கதைகளை முழுக்கப் படிக்க முடியாது. ஏன் மௌனியை ரசிப்பதுபோல் லா.ச.ராவை ரசிக்க முடியாது. மிகைப் படுத்தப்பட்ட உணர்வுகளை லா.ச.ரா அள்ளித் தெளிக்கிறார் என்று நினைப்பேன். மேலும் அவருக்கு கவிதைகள் மீது அக்கறை இல்லை. நா மு வெங்கடசாமி நாட்டார் என்பவருடைய எழுத்தும் என்னால் ரசிக்க முடியாது.

நான் வங்கியில் சேர்ந்தபோதுதான் ஜே.கிருஷ்ணமூர்த்தி புத்தகம் படிக்கத் தொடங்கினேன். வருடாவருடம் சபரி மலைகோயிலுக்குப் போகும் (போய்விட்டு வந்து அளப்பான்) ரவி என்கிற நண்பன், நான் கொடுத்த ஜே கிருஷ்ணமூர்த்தி புத்தகத்தைப் படித்துவிட்டு, சபரிமலை கோயிலுக்குப் போவதை நிறுத்திவிட்டான். என்னிடம் வாங்கிய புத்தகத்தைப் படித்துவிட்டு எனக்கு அறிவுரை கூற ஆரம்பித்துவிட்டான். அலுவலகம் முழுவதும் அவன் பேச்சில் மயங்காதவர்கள் இல்லை.

வங்கியில் சேர்ந்தபிறகுதான் நான் கதை எழுத ஆரம்பித்தேன். என் கதைகள் எந்தப் பத்திரிகையில் பிரசுரமாகவில்லை. கவிதைகளையும் சேர்த்து சொல்லலாம். செருப்பு என்று ஒரு கதை எழுதினேன். என் பெரியப்பாப் பையன் நடத்திய ‘மலர்த்தும்பி’ (ஏன் இப்படிப்பட்ட பெயரை அவன் தேர்ந்தெடுத்தான்) என்ற பத்திரிகையில் பிரசுரம் செய்தான். அந்தக் கதை வந்த பத்திரிகையை அலுவலகத்தில் உள்ள எல்லோரிடமும் காட்டி விற்றேன். மாலதி என்ற பெண்மணியிடம் கொடுத்திருந்தேன்.

ஒருநாள் காலை மாலதி இருந்த அறைக்கு வந்தேன். ‘உங்கள் செருப்பு நன்றாக இருக்கிறது,’ என்றாள் மாலதி. நான் உடனே என் காலில் உள்ள செருப்பைப் பார்த்தேன். அவ்வளவு திருப்தி தராத செருப்பென்று யோசித்தேன். அவள் சிரித்தாள். ‘நான் உங்கள் கதையைச் சொல்கிறேன்,’ என்றாள். எனக்கு வெட்கமாகப் போய்விட்டது.

காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை அலுவலகம். 4.45 நாங்கள் புறப்படத் தயாராகிவிடுவோம். மின்சார வண்டி, மாம்பலம் என்று நான் கிளம்பி விடுவேன். ஒரு தகராறுபோது இந்த செட்டப்பை நான் கலைத்தேன். பிராஞ்சுக்கு மாற்றல் வாங்கிக்கொண்டு சென்றேன்.வாழ்க்கை நிம்மதியாகப் போய்க்கொண்டிருந்தது. ஆத்மாநாம் பிறகு ‘ழ’ என்ற பத்திரிகை திரும்பவும் வர நான்தான் காரணம். அப்போது நான் பிராஞ்சில் இருந்தேன். திரும்பவும் ஒரு தப்பு செய்தேன். பிராஞ்சிலிருந்து தலைமை அலுவலகத்திற்கு வந்தேன். சுருக்கெழுத்தாளராக..அப்போது நான் எழுதிய கவிதை ஒன்றுதான் தட்டச்சுப்பொறி.. தமிழில் யாரும் தட்டச்சுப்பொறி பற்றி கவிதை எழுதவில்லை என்று எனக்குத் தோன்றுகிறது.

25 வருடம்…ஒரு வருடம் இரண்டு வருடம் இல்லை…25 வருடங்கள் நான் தலைமை அலுவலகம், பிராஞ்ச் என்று மாறி மாறி இருந்தேன். எந்தப் பிரச்சினையும் இல்லாமல் போய்க்கொண்டிருந்தது. பின் தெரியாமல் ஒரு முட்டாள்தனம் செய்துவிட்டேன். 2004ல. அதுதான் பதவி உயர்வு பெற்று உதவி மேலாளராக மாறியது. மாறிய உடன் என்னைத் தூக்கி அடித்தார்கள். 280 கிலோமீட்டர்கள் தூரத்தில். பந்தநல்லூர் என்ற கிராமத்தில். நொந்து போய்விட்டேன். பதவி உயர்வால் என் சம்பளம் பெரிய அளவில் மாற்றம் இல்லை. நான் மட்டும் தனியாக இருந்தேன். குடும்பம் என்னுடன் வரவில்லை. ஆனால் வேலை கடுமையாக இருந்தது. வேலை முடிந்தபின்பும் திருப்தி அற்ற நிலை. வேலையும் பொறுப்பும் கூடின. சம்பளத்தில் ஒன்றும் மாற்ற மில்லை. ஆனால் 4 ஆண்டுகள் தனிமை வாசம். வாரம் ஒருமுறை சென்னை விஜயம். சனிக்கிழமை சென்னை வருவேன். ஞாயிற்றுக்கிழமை சென்னையிலிருந்து பந்தநல்லூர் வந்துவிடுவேன். ஞாயிற்றுக்கிழமை இரவில் கும்பகோணம் பாச:ஞ்சரில் தாம்பரத்திலிருந்து கிளம்பி மயிலாடுதுறையில் போய் இறங்குவேன். அப்போது ஏற்பட்ட தவிப்பில் பல கவிதைகள் எழுதினேன். பந்தநல்லூரில் கிடைத்தப் பதவி உயர்வு, கும்பகோணம் பாசஞச்சர., விபரீதக் கடிதம், மின் விசிறி, ஞாயிற்றுக்கிழமை தோறும் தோன்றும் மனிதன். எல்லாம் தனிமை வாசத்தைப் பற்றிய கவிதைகள். கும்பகோணம் பாசஞ்சர் என்ற கவிதையை பாசஞ்கர் வண்டியில் வரும் டிடிஆரிடம் படித்துக் காட்டினேன். கவிதை ரசனை இல்லாதவர். அவரால் ரசிக்க முடியவில்லை.

4 ஆண்டுகள் கழிந்தும் சென்னை மாற்றல் எளிதாகக் கிட்டவில்லை. எப்படியோ ஒரு ஆண்டு தற்காலிக மாற்றம் பெற்று வந்துவிட்டேன். ஹஸ்தினாபுரம் என்ற ஊரில் உள்ள கிளையில் மாற்றம். க்ரோம்பேட்டை அருகில். திரும்பவும் காலை 7.30 மணிக்குக் கிளம்பினால் வர இரவு 7.30 மணி ஆகிவிடுகிறது. இப்போது உள்ள வயதில் கூலி அதிகம் கிட்டாமல் மெய் வருத்தம். 20 மாதங்கள் எப்படியோ ஓட்டிவிட்டேன். 7.30லிருந்து 7.30வரை. இன்று (08.10.2009) அதற்கு முடிவு வந்துவிட்டது. டெம்பரரி முடிந்துவிட்டதால் திரும்பவும் பந்தநல்லூருக்குச் செல்ல வேண்டுமென்று கழட்டி விட்டுவிட்டார்கள். என்னடா இது இந்த வயதில் இப்படி ஒரு அவதி என்று நொந்து போயிருக்கிறேன்.

“எதையாவது சொல்லட்டுமா….3” இல் 2 கருத்துகள் உள்ளன

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன