எனக்கு பத்து விழிகள்

எனக்கு பத்து விழிகள்
ஒவ்வொன்றும்
என் விரல் நுனிகளில்
இமைக்கின்றன
தொடுதல் எனது பார்வை
தடவுதல் எனது
கண்மணிச் சுழற்சி
எனதான உலகத்தில்
இறந்த காலங்கள் எவையும்
காட்சிகளால் ஆனவையல்ல
நினைவுகள் எவையும்
நிறங்களால் சூழ்ந்தவையல்ல
எனக்குரிய தேசம்
பல வர்ணங்கள் பூசப்பட்டதல்ல
வசந்தம் செறிந்த காலத்தில்
வாசனை பல வீசும்
பூஞ்சோலையுமல்ல
அது இருளினால் மட்டுமேயான
தனியொரு உலகம்
வானவில் என்ற ஒன்று
ஏழு வர்ணங்களினாலாகி
மேகத்தினிடை எட்டிப் பார்க்குமென
நீங்கள் சொன்ன கணத்தினில்
எனது வானிலுமொரு
வானவில் தோன்றியது
இருளை மட்டும் உடுததுக் கொண்டு
இருள் எனக்கு
அச்சமூட்டுவதில்லையெனினும்
இருண்டு கல்லாகிப் போன
இதயததுடனுலவும்
விழிப்புலனுள்ளவர்களிடம்தான்
எனது அச்சங்களெல்லாம்

“எனக்கு பத்து விழிகள்” இல் 3 கருத்துகள் உள்ளன

எம்.ரிஷான் ஷெரீப் உடைய கருத்துக்கு மறுமொழியிடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன