12
பூனைகள்
அழகியசிங்கர்
மியாவ்வென்று ஸ்நேகமாய்க் கத்தாமல்
குட்டிகளைப் பெற்றுக்கொண்ட பூனையொன்று
என் வீட்டில் அதிகம் உபயோகப்படுத்த முடியாத அறையொன்றில்
போய்க் குடியிருக்க அனுமதி கேட்கத் தவற
குட்டிகளோ தாய்ப் பூனையுடன்
சாமர்த்தியமாய்ச் சேர்ந்தடித்தன லூட்டி
ஆளைக் கண்டால் பதுங்கும் பாவனை
போனால் போகிறதென்று
ஓட்டைக்கொட்டாங் குச்சியில் பாலை வைத்தால்
நம்மெதிரில் குடிக்க வராமல்
பதுங்கிப் பதுங்கி
ஆளில்லா நேரமாய்த் தொட்டு
கவிழ்க்கும் அவசரமாய்
முகமெல்லாம் பால் துடிக்கும்
இரவில் பூனைகளின் புணர்ச்சியின் சத்தம்
குழந்தையின் அழுகையாய்க் காதிலறையும்
கேட்டுத் தூக்கி வாரிப்போடும் தேகம்
என்றோ ஒருநாள் நடந்தது
குட்டிகளுடன் தாய்ப் பூனை வெளியேற்றம்
வெள்ளை நிறத்தில் பூனையொன்று
இன்னொரு நாள் வரக்கண்டேன்
படுக்கை அறையில் சம்சாரக் கட்டிலில்
பகல் பொழுதொன்றில்
சொகுசாய்ப் புரளும் காட்சியைக் கண்டு
பதறிப்போனேன்.
பார்ப்பதற்குப் பிடிக்காத
குண்டுப் பூனையொன்று
மாமிசம் விரும்பாத என் வீட்டில்
மீன்களைக் கடித்துத் துப்ப
அண்டை வீட்டாரின்
தேவை இல்லாத மனவிரிசல்களுடன்
நாற்றம் குடலைப் புடுங்கியது.
அட்டகாசம் பண்ணும் பூனைகளே
போய் வாருங்களென்று மிரட்ட
எடுத்தேன் கையில் கிடைத்ததை
அவை பல தெருக்கள்
தாண்டி ஓடட்டுமென்று
அவை பல தெருக்கள்
தாண்டி ஓடட்டுமென்று..
கவிதை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது…
crisp lines.. simple narration…
I enjoyed reading it..
Congrats Mr.Azhahia sankar