நவீன விருட்சம் ஆரம்பித்த (1988ஆம் ஆண்டு) ஆண்டிலிருந்து அதில் புத்தக விமர்சனங்கள் பல எழுதியுள்ளேன். நினைத்துப் பார்த்தால் இப்போது என்னால் அதுமாதிரி புத்தக விமர்சனங்கள் எழுத முடியவில்லை. இருந்தும் நான் எழுதிய புத்தக விமர்சனங்களைத் தொகுத்து உங்களுக்கு அளிக்க விரும்புகிறேன்.
த பழமலயின் ‘சனங்களின் கதை’
த பழமலயின் ‘சனங்களின் கதை’ என்கிற கவிதைத் தொகுதியில் இரண்டு விஷயங்களை முக்கியமாக கவனிக்கலாம்.
மிக எளிமையான வார்த்தைகள் மூலம் ஊரையும் சுற்றத்தையும் வெளிப்படுத்துவது.
உள்ளது உள்ளபடியே கூறுவது.
எடுத்தவுடன் எதிர்படும் ‘அம்மா’ என்கிற கவிதையில் ‘முற்றத்துப் பவழமல்லி நீ மறந்தும் நினைத்தும் அழும் என்கிறபோது, மிகைப்படுத்தப்பட்ட உணர்வு நிலையில் கவிதை வெளிப்பட்டிருப்பதுபோல் தோன்றினாலும், கூடவே நயம் செறிந்த வார்த்தைகளையும் எந்தவித பகட்டுமின்றி வெளிப்படுத்துகிறது.
அப்பா என்கிற கவிதை
‘கடாவை வெட்டுகையில் கண்ணீரும் வடிப்பார்? கருப்பனார் சாமிக்குப் பன்றியும் வளர்ப்பார்? படைக்காமல் உண்பது ‘பழையது’ மட்டும்என்கிற தொடக்க வரிகளுடன் அபாரமாக ஆரம்பமாகிறது. இக் கவிதையில் அறிமுகமாகும் ந. தங்கவேல் படையாச்சி எந்தவித ஒளிவு மறைவுமில்லாமல், அவருடைய தற்பெருமையுடன் சேர்த்தே அறிமுகப் படுத்தப்படுகிறார். ‘அப்பாவின் கொடுவாள்’ என்கிற கவிதையில் கொடுவாள் இறுதியில்
ஒனக்கு எனக்குன்னு ஒடம் பிரிக்கிற ஒன்னு இருக்கு அத எதுத்துத்தான் நீ என்ன எடுக்கணும்’என்று புத்தி புகட்டுவது புதுமாதிரியாகத் தோன்றுகிறது.
‘உழுதவன் கணக்கில்’ துண்டை தொலைத்துவிட்டு எதையோ சுற்றிக்கொண்டு, பள்ளிக்கு ஓடுவதிலிருந்து ஆரம்பிக்கிற கவதை ஒரு கசப்பான அனுபவத்தை அங்கதத் தொனியுடன் விளக்குகிறது. ‘முருங்கை மரம்’ என்கிற கவிதையில் உறவு முறைகளில் நமக்கிருக்கும் நம்பிக்கையை ஆழப்படுத்துகிறார். ‘இனி எனக்குக் கொல்லை வெளிக்குறுக்கு வழிகள் திருகு கள்ளிகளின் செவிகளில் என்வரவு சொல்லும் ஓணான்கள்
என்கிற வரிகள் மூலம் ‘த பழமலை ‘புத்தரை மறந்த ஊர்’ கவிதையில் ஒரு ஊரை நயத்துடன் அறிமுகப்படுத்துகிறார். ஊரிலுள்ள ஏரிக்கரைப் பிள்ளையார் நாத்திகனையும் நலம் விசாரிப்பார்.
………………………………. இடாத முத்தத்திற்கு எப்படியெல்லாம் வருணனை
‘தப்புக் கணக்கு’ என்கிற கவிதையில், சிறுவயது முதற்கொண்டு உறவுகொண்ட ஒரு பெண்ணின் நினைவுகள், அவளுக்குத் திருமணம் ஆகி, இடுப்புக் குழந்தையுடன் பார்க்க வந்தும் ஞாபகத்திலிருந்து அகலாமலிருப்பதைக் குறிப்பிடுகிறார். ‘சனங்களின் கதை’ என்கிற இந்தத் தொகுதியில் உள்ள பல கவிதைகள் படிக்கிற உணர்வை ஏற்படுத்துகின்றன என்பதைக் குறிப்பிட்டுச் சொல்வது அவசியமாகப் படுகிறது.
படித்தேன். இதை போல இன்னும் புத்தகங்களை அறிமுகப் படுத்துங்கள்,