கவிதை புரிய வேண்டுமா வேண்டாமா

இரண்டு வாரங்களுக்கு முன் திரிசூலம் ரயில்வே நிலையத்தில் அமர்ந்திருந்தபோது எங்களுடைய முதல் கேள்வி கவிதை புரிய வேண்டுமா வேண்டாமா என்பதுதான். எங்களிடையே பலத்த சர்ச்சையை இந்தக் கேள்வி ஏற்படுத்தியது. என்னைப் பொறுத்தவரை கவிதை புரிய வேண்டும் என்ற கட்சியைச் சேர்ந்தவன். ஆனால் கவிதை மனதிலிருந்து எழுதுவதால் புரியாமல் போக வாய்ப்புண்டு. கவிதையை எழுதுகிற மனமும், கவிதையை வாசிக்கிற மனமும் வேறு வேறு தளங்களில் இயங்குபவை. அதனால் கவிதை புரியவில்லை என்று ஒரு வாசிப்பவன் சொல்லி கவிதையைத் தூக்கிப் போட்டுவிட முடியும். என் நண்பர்கள் சிலர் கவிதை புரியவில்லை என்றே சொல்லாதே என்று அறிவுரை கூறுவார்கள். ஏனெனில் கவிதை புரியவில்லை என்று சொன்னால் எழுதுபவர்களுக்குப் பெரிய கித்தாப்பு ஏற்பட்டுவிடும். ஆனால் கவிதை எளிதாகப் புரியவேண்டும் என்று பாரதியார் கூறியபடி எளிதாக பல கவிதைகளைப் படைத்திருக்கிறார்.

சிலசமயம் கவிதை புரியும் ஆனால் கவிஞர் என்ன சொல்ல வருகிறார் என்பது தெரியாது. அதனால் கவிதையைப் பொருத்தவரை இரண்டுவிதமான அபிப்பிராயங்கள் தோன்றாமல் இருப்பதில்லை. ஒன்று கவிஞரின் அபிப்பிராயம். இரண்டாவது வாசகனின் அபிப்பிராயம். எனக்குத் தெரிந்து நகுலன் ஆனந்த் கவிதை ஒன்றைப் படித்துவிட்டு, என்ன எழுதியிருக்கிறார், புரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

ஷாஅ என்பவரின் ஒரு கவிதையைப் பார்ப்போம்.

எனது

வீணையின் நரம்புகளுக்கு

பாடத்

தெரியாது

நடனம்தான்

தெரியும்.

அவை

ஆடினால்

பார்க்கமுடியாது

கேட்கத்தான்

முடியும்

மேலே குறிப்பிடப்பட்ட கவிதை படிப்பதற்கு எளிதாக தோன்றினாலும், என்ன சொல்ல வருகிறார் என்பதை வாசகர்கள் மூளையைக் கசக்கிக்கொண்டுதான் இருக்க வேண்டும். கவிதை மூலம் எளிமையாகச் சொல்லுதல் வேறு. அப்படி எளிதாக சொல்வதன் மூலம் புரிந்துகொண்டு விட முடியும் என்று சொல்ல முடியாது. ஜே கிருஷ்ணமூர்த்தி சொல்லுவது எளிதாகப் புரிவதுபோல் இருக்கும். ஆனால் ஆழமாக யோசித்தால் ஒன்றும் புரிபடாது. நம் வாழ்க்கைக்கு ஜே கே தத்துவம் உதவாது. என் நண்பர் ஒருவர் ஜே கே பேசுவதைக் கேட்டு எக்ஸ்பிரஸ் காஃபி குடிப்பதுபோல் இருக்கிறது என்பார். இன்னும் பல நண்பர்கள் ஜேகே படித்துவிட்டு இயல்பு நிலையிலிருந்து மாறி விட்டதாக தோன்றும். நான் ஜே கேயைத் தீவிரமாகப் படித்தபிறகு, எனக்கு கோபமே இல்லாமல் போய்விட்டது. யாராவது திட்டினால்கூட கேட்டுக்கெண்டிருப்பேன் சும்மா. நாராணோ ஜெயராமன் என்ற ஒரு கவிஞர். ‘வேலி மீறிய கிளைகள்’ என்ற தொகுதி க்ரியா பதிப்பகம் மூலம் வெளி வந்திருக்கிறது. இத் தொகுப்பு வந்தவுடன் அவர் எழுதுவதையே நிறுத்திவிட்டார். காரணம் ஜே கே. ஜே கே மாதிரி ஒருவரைப் பார்த்தபிறகு எழுதுவதில் ஒரு அர்த்தமுமில்லை என்பார் அவர். எனக்கு ஜே கே மீது கோபம் வரும்.

அதேபோல் கவிதை எழுதுவதிலும், கவிதையை வாசிப்பதிலும் நம்மைப் பெரிதும் தொடர்பு படுத்திக்கொள்ள முடியும். நாம் கவிதை எழுதுகிறோம். கவிதை வாசிக்கிறோம். எதை வாசிக்கிறோமோ அதை வேறு மாதிரி எழுத முயற்சிக்கிறோம். நாம் வாசிக்கும்போதே நம்முடைய உலகத்தை கவிதை பிடித்து விடுகிறது. அதேபோல் கவிதை எழுதுபவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனெனில் கவிதை எழுதுபவனை கவிதை காட்டிக் கொடுத்துவிடுகிறது. இது கவிதை எழுதுபவனுக்கே தெரியாது.

‘கொல்லும் முகம்’ என்ற சம்பத்தின் கவிதையைப் பார்ப்போம்.

சுழலும் விழிகளில் நீர் ஏனோ?

கழநிகளில் பாய்ந்ததுதான் போதாதோ

மறையும் மாலையில் ஒளிர்ந்திடும் –

உன் முகம்தான் என் வாழ்வின் விதிப்பயனோ?

தெரிந்ததில்லை பயணம் தொடர்ந்தக்கால்

தெரிந்ததில்லை – பருவமதில் – மாற்றத்தில் –

தெரிந்ததுதான் யாருக்கு எப்போது?

இயம்புமோ உன் முகம்தான் அதைப்பற்றி?

என் உறக்க, விழிப்பில், ஊர்ந்தவளே

என் சிந்தையில் படர்ந்த கொடிப் பூவே

என் மூளையில் பூத்த வெண் மலரே

உன் முகம்தான் என்னைக் கொன்றதடி.

மூளையில் வெண் மலர் பூத்தால் எப்படி இருக்கும்? எதிர்பாராதவிதமாக சம்பத் மூளை வெடித்து இறந்துவிட்டார். இந்தக் கவிதை மூலம் அவர் இது மாதிரி ஒரு முடிவு அவருக்கு ஏற்படுமென்று தெரியாமல் தெரிவித்து விட்டதாக எனக்குத் தோன்றும்.

அதேபோல் ஆத்மாநாம் கவிதை ஒன்றை பார்க்கலாம்.

நான் ஒரு ஞானியுமில்லை

நான் ஒரு சித்தனுமில்லை

பித்தம் பிடித்தும் பிடிக்காத மேதை நான்

படித்தும் படிக்காத புலவன் நான்

வைத்தியம் தெரிந்தும் செய்து கொள்ளா நோயாளி நான்

உண்மையைத் தொட்ட ஒரு பேதை நான்

உத்தமனில்லை ஆனால் பொய் சொல்லத் தெரியாது

சத்தியவான் இல்லை ஆனால் உண்மையே பேசுபவன்

இவற்றையும் மீறி இருக்கிற கொஞ்சம் மட்டுமே நான்

இந்தக் கவிதை தெளிவாகவே ஆத்மாநாமின் மனநிலையைக் காட்டுகிறது. நான் என்ன சொல்ல வருகிறேனென்றால் இக் கவிதை எழுதுபவனுக்கு மட்டுமல்ல வாசிப்பவனையும் வசப்படுத்துகிறது. வாசிப்பவன் இந்தக் கவிதையைப் படித்து மயங்கிவிட்டால் தொலைந்தான். அவனையும் இந்தக் கவிதைப் பிடித்துக் கொண்டு விடும். கவிஞனின் பிரக்ஞையை வாசகனைத் தெட்டுவிடும்.

இது கவிஞனின் பிரச்சினையாக மட்டுமல்லாமல், வாசிப்பவனின் பிரச்சினையாகக் கூட மாறிவிடத் தொடங்கும். இதைப் பற்றி இன்னும் யோசித்து எதாவது எழுத முடியுமாவென்று பார்க்கிறேன். இதை வாசிப்பவர்களும் தங்களுடைய கருத்துக்களைத் தெரிவிக்கலாம். (இன்னும் வரும்)

“கவிதை புரிய வேண்டுமா வேண்டாமா” இல் 2 கருத்துகள் உள்ளன

  1. நல்லதொரு பதிவை பகிரிந்துள்ளீர்கள்,
    சம்பத் அவர்களின் இடைவெளி நாவலை இப்போது தான் வாசித்து முடித்தேன், இந்த வலையிதழில் இவரின் சிறுகதையொன்றை வாசித்திருக்கிறேன், மற்ற அவரின் சிளுகதைகள் தொகுப்பு தற்போது எங்கும் கிடைக்கிறதா,வாசிக்க ஆவலோடிருக்கிறேன்.

    ஆத்மாநாம் அவர்களின் முழு கவிதைத் தொகுப்பை திரும்பத் திரும்ப வாசித்திருக்கிறேன், ரோஜா பதியன் கவிதை மிகவும் பிடிக்கும், அவரின் அனைத்து கவிதைகளும், எப்போதும் அவரை என் மனதிற்கு மிகவும் நெருக்கமாகவே உணர்வேன், ஏனெனில் அவர் நினைவு நாள் தான் என் பிறந்த தினம் ( ஜீலை 6 ), இவர் வாழ்வு, கவிதைகள் மற்றும் இந்த தினம் ஒற்றுமை என் வாழ்வு என எல்லாம் ஒன்றாய் சேர்ந்து பல தருணங்களில் எண்ணச் சுழல்களிலிருந்து மீள முடியாமல் தவித்திருக்கிறேன்,

    Jk வை நானும் மூன்று வருடங்களாக வாசித்து வருகிறேன், அத்தருணங்களில் தரிசனமாகிற வெறுமை அருமை,இது கிடைக்க மாட்டாது எவ்வளவோ குழப்பங்களிலும் சிக்கலான எண்ணங்களிலும் உழன்றிருக்கிறேன். அந்தந்த கணத்தில் இறந்து அந்தந்த கணத்தில் பிறக்க பழகிக் கொண்டிருக்கிறேன், அந்தந்த கணத்தில் பிறப்பதால் மனம் குழந்தை மாதிரியிருக்கிறது, எந்த நிகழ்வைப் பற்றிய judgements இல்லை, அதனால் எவரைப் பற்றிய முன் முடிவுகளும் இல்லை, சரி தவறுகள் இல்லை, ஆசை கோபம், சிந்தனை, எண்ணங்கள், ஆதங்கங்கள்,அன்பு, ஏக்கம், பிரிவு குறித்த ஏக்கம்,,,,,,,, எதுவுமே இல்லை, இதையெல்லாம் இவர் எடுத்துக் கொண்டால் எதை எழுதுவது.

    நினைவுகள் என்பதே கடந்த காலம்,மொழியால் தான் எல்லாம் நினைவுகளாக பதிகிறது, மொழியே அவசியமற்றது என்கிறார்.

    இந்த இடத்தில் தான் கவிதை புரிதல் குறித்து யோசிக்கத் தோன்றுகிறது, கவிதையென்பதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி புரிந்து கொண்டாலும், புரிந்து கொண்டவைகள் அனைத்தும் உண்மைகளா, உண்மையென்பது ஒருமையில் தானே இருக்க முடியும், பன்மையில் இருக்கும் அனைத்தும் உண்மைகளா

    இப்படித்தான் ஒரு நிகழ்வை நான் என் அனுபவ வட்டத்திற்குட்பட்டு நான் ஒருமாதிரியும் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரியும் புரிந்து கொள்கிறோம், அதனாலேயே கருத்து வேறுபாடுகள், சர்ச்சைகள், பிரச்சனைகள்.

    முதலில் ஏன் எதையுமே புரிந்து கொள்ள வேண்டும், புரிதலிலிருந்து தான் பிரச்சனைகளே ஆரம்பிக்கிறது எனத் தோன்றுகிறது,

    இப்படியெல்லாமும் இன்னும் பலவாறாகவும் என்னை யோசிக்க வைத்திருக்கிறார் jk.

  2. மிகவும் நல்ல பதிவு.
    கவிதை படிப்பது எழுதுவது பற்றிய
    உங்கள் தேடல் அதனூடாக நீங்கள் மேற்கொள்ளும் பயணம் புதிய அனுபவத்தை தருகின்றது.
    நீங்கள் எடுத்து கூறிய கவிதைகள்
    கவிஞர்கள் அத்தனையும் எனக்கு புதிய அறிமுகமாக இருக்கிறது.
    அவைகளை படிக்க வேண்டும் நான்
    எல்லா புத்தக கடையிலும் அவர்களின் புத்தகம் கிடைக்குமா.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன