8
பூனை……..
காசியபன்
எங்கிருந்தோ ஓடி வந்து
எங்கிருந்தோ ஓடி வந்து
என்னுடன் குடியிருந்த
அழையாத விருந்தே
எங்களில் ஒன்றாகி
இங்கிதோ என்னைப் புல்கி
அன்பிலொன்றி நிற்கின்றாய்.
பொன்வெள்ளி பகட்டும்
பஞ்சுரோம மார்தவமும்
கண்களில் குறும்பும்
பேசாத பேச்சும்
கேட்காத கேள்வியும்
மெளனம் மெளனத்துக்கு
விடை கொடுக்க
அந்தரங்க இரகசியங்கள்
மின்னாக கலக்கும்
உன் குழந்தை முகத்தூய்மையில்
காலம் தரும் ஞானமெல்லாம்
கண்டு வியக்கின்றேன்
உன் பூனை நடையினிலே
சலனத்தின் தத்தவமும்
வாலின் நெறியினிலே
வாழ்க்கையின் கதியும்
வண்ண வேற்றுமையிலே
பிரபஞ்ச பிரிவுகளும்
நன்றாக உணருகின்றேன்
அடுக்களை பாலும்
படுக்கையறை கரப்பும்
கலவறை எலியும்
மரத்து ஓணானும்
நீயும் நானும் போல
உன் நெடுநாளையத் தொந்தம்
நேற்றின்று வந்ததன்று.