கடந்த 11 நாட்கள் 23வது புத்தகக் காட்சி ஒரு உலுக்கு உலுக்கி விட்டது. கூட்டமோ கூட்டம். ஆனால் எல்லாக் கூட்டமும் எதுமாதிரியான புத்தகம் வாங்குகிறது, எங்கே போகிறது என்பது தெரியவில்லை. என் புத்தக அரங்கில் என் புத்தகங்களை கடை விரித்தவுடன், புதுப்புனல் ரவி உடனே அவருடைய புத்தகங்களை எடுத்துக்கொண்டு வந்துவிட்டார். ஈரோடிலிருந்து கெளதம சித்தார்த்தான் இரண்டு பெரிய போஸ்டர்களை எடுத்து ஒட்டி போஸ்டர் கீழே அவருடைய இரு புத்தகங்கள். பொதுவாக நவீன விருட்சம் புத்தகம் மட்டும் வைத்துக்கொண்டு கடை போட முடியாது. எல்லாரிடமிருந்து புத்தகங்களை வாங்கிக்கொண்டு புத்தக பிஸினஸ் நடத்த முடியும். மேலும் விருட்சம் புத்தகம் 2 ராக் முழுவதும் போதும். தானாகவே பல சிறு பத்திரிகைகள் அரங்கை நிரப்பின. செந்தூரம் ஜெகதீஷ் அவருடைய செந்தூரம் பத்திரிகை, கவிதைப் புத்தகங்களைக் கொண்டு வந்தார். அதே போல் சங்கர ராம சுப்பிரமணியனின் கவிதைப் புத்தகம். அவருடைய சிறுபத்திரிகை. வருடத்திற்கு ஒருமுறை புத்தகக் காட்சி போது மயிலாடுதுறையிலிருந்து வரும் காளான் பத்திரிகையைச் சந்திப்பதுண்டு. போன ஆண்டு ஆரம்பமான பிரம்மராஜன் பத்திரிகையான நான்காம் பாதை என்ற பத்திரிகை. எல்லாம் கூண்டில் ஏறின. கூண்டு நிரம்பி விட்டது.
பல புதியவர்களை புத்கக் காட்சியில் சந்தித்தேன். அனுஜன்யா, நிலா ரசிகன், யோசிப்பவர் என்று புதிய நண்பர்களுடன், பழைய இலக்கிய நண்பர்கள் வரை பலரையும் சந்தித்தோம். சந்தித்தோம் என்று ஏன் சொல்கிறேனென்றால் நான் மட்டும் சந்திக்க வில்லை, லதா ராமகிருஷ்ணன், ஸ்ரீனிவாஸன் என்று எல்லோரும்தான். ஆகாசம்பட்டு சேஷாசலம், இந்திரன், நாஞ்சில்நாடன், எஸ் ராமகிருஷ்ணன், காலச்சுவடு கண்ணன், சச்சிதானந்தம், திலீப் குமார் என்று பலரையும் பார்த்தோம். அசோகமித்திரனை அவருடைய புதல்வருடன் சந்தித்தேன். உரையாடல்கள் என்ற பெயரில் அவருடைய புத்தகம் ஒன்று கொண்டு வந்துள்ளேன். அதற்கான கூட்டத்தை என்னால் உடனடியாக ஏற்பாடு செய்ய முடியவில்லை என்பது என் வருத்தம். என் அலுவலக நண்பர்களை மாதக்கணக்கில் நான் பார்ப்பதில்லை. இந்த முறை பார்த்ததோடு அல்லாமல் அவர்கள்தான் எனக்கு பலவித உதவிகளையும் செய்தார்கள்.
சரி புத்தகம் எதிர்பார்த்தபடி விற்றதா? ஆம். எதிர்பார்த்படிதான் விற்றது. அதாவது 11 நாளில் 30000க்குள் வரும் என்று எதிர்பார்த்தேன். அப்படித்தான் கிடைத்தது. அதற்குமேல் கிடைக்க வாய்ப்பில்லை என்று எனக்குத் தெரியும். அப்படித்தான் நடந்தது. என்னைப் போல பலருக்கும் ஏமாற்றம். ஆழி என்ற பதிப்பகத்தின் துணிச்சல் என்னை மெய்சிலிர்க்க வைத்தது. தாண்டவராயன் கதை என்ற தலைப்பில் பா வெங்கடேசன் எழுதிய 1000 பக்க நாவல் பிரமாதமான முறையில் அச்சிடப்பட்டு வந்துள்ளது. விலை 500க்கு மேல். அதை எழுதிய பா வெங்கடேசனின் அசாத்திய துணிச்சல் படிப்பவருக்கும் வரவேண்டும். அந் நாவலின் சில பக்கங்களைப் புரட்டிப் பார்த்தேன். அசந்து விட்டேன். எப்படி FULL STOP இல்லாமல் பெரிய பெரிய பாராவாக அவரால் 1000 பக்கம் எழுத முடிந்தது என்பதுதான் என் ஆச்சரியம். இது ஒரு புறம் இருக்க ஞானக்கூத்தன் கவிதைகள் என்ற பவுண்ட் வால்யூம் புக் ஒன்றையும் ஆழி கொண்டு வந்துள்ளது. எழுத்தாளர்கள் தாவுதலை நான் புரிந்துகொள்கிறேன். எந்தப் படைப்பாளியையும் ஒரே பதிப்பாளருடன் இணைத்துக்கொள்ளக் கூடாது. இன்றைய சூழ்நிலையில் அது சாத்தியமில்லை. எழுத்து பத்திரிகையை நடத்திய சி சு செல்லப்பா சில படைப்பாளிகளை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள முயற்சி செய்வார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
இதோ என்முன்னால் 11 நாட்களாக என் ஸ்டாலைத் தாண்டிப் போகும் மனிதக் கூட்டத்தைப் பார்க்கும்போது எதை எதை வாங்க வருகிறீர்கள்? எதை எதை வாங்கிச் செல்கிறீர்கள் என்று கேட்க வேண்டும் போல் தோன்றும்.
உங்கள் அரங்கில் கவிதைகளை கையால் எழுதிய போஸ்டர்களாகத் தயாரித்து ஒட்டியிருந்தது வித்தியாசமாக இருந்தது. சிலகவிதைகள் நன்றாகவும் இருந்தன. ஃபிளக்ஸ் போர்ட் யுகத்தில் இது விசித்திரம்தான்.
சிறுபத்திரிகை என்றால் குடிசைத் தொழிலைப் போல நடத்த வேண்டும் என்ற செல்லப்பா காலத்து மனோபாவத்திலிருந்து நீங்கள் இன்னும் விடுபடவில்லையோ என்ற கேள்வி நீங்க்ள் ஆழி, உயிர்மை ப்திப்பகங்கள் பற்றி வெளியிடும் ஆச்சரியத்தில் வெளிப்படுகிறது.
ஆனால் காலம் மாறிவிட்டது.
சார், நீங்கள் பார்த்தது ஜ்யோவ்ராம் சுந்தராக இருக்கக்கூடும். நான் சென்னையில் இல்லை. ஆதலால் புத்தகக் கண்காட்சிக்கு வர இயலவில்லை. அவர் மூலம் ‘நவினவிருட்சம்’ இதழுக்கு சந்தா கட்டச் சொல்லியிருந்தேன். அப்போது என் பெயரை அவர் சொல்லியிருக்கக்கூடும்.
அனுஜன்யா
அன்புள்ள அனுஜன்யா அவர்களுக்கு,
வணக்கம். ஜ்யோவ்ராம் சுந்தர் வந்திருந்ததைத் தவறுதலாக தாங்கள் என்று நினைத்து எழுதிவிட்டேன். தவறுக்கு மன்னிக்கவும்.
அன்புடன்
அழகியசிங்கர்
அன்புள்ள மாலன் அவர்களுக்கு,
அழகான கையெழுத்தால் கவிதைகளை வெள்ளைத்தாளில் எழுதி போஸ்டர்களாகத் தயாரித்தவர் லதா ராமகிருஷ்ணன் அவர்கள். ஸ்ரீனிவாஸனுக்கும் அதில் பங்குண்டு.
இன்று ஒரு ஸ்டால் ஏற்பாடு செய்து குறைந்தது இரண்டு மூன்று புத்தகங்களைத் தயாரித்து வெளிவரும்போது அறுபது எழுபது ஆயிரம் ஆகிவிடும். இத் தொகை ஒரு சாதாரண வங்கியில் பணிபுரிபவருக்கு சற்று மிகையாகத் தோன்றும். புத்தகக் காட்சியின்போதும் புத்தகம் பெரிதாக விற்பதில்லை. திரும்பவும் நூல்நிலையத்தை எதிர்பார்க்க வேண்டும். எனக்கு ஆழி, உயிர்மை, காலச்சுவடு, தமிழினி எல்லாம் ஆச்சரியம்தான். ஒரு நாளில் மட்டும் காலச்சுவடு அரங்கில் ஒரு லட்சம் ரூபாய் புத்தகம் விற்றதாக கண்ணனே குறிப்பிட்டார். நான் முப்பதாயிரம் தாண்ட 11வது நாள் வரை வர வேண்டியுள்ளது. நண்பர்களைப் பார்த்துப் பேசியது நல்ல அனுபவம்.
அன்புடன்
அழகியசிங்கர்
நான்கூட படித்துக் குழம்பி விட்டேன்.என்னைத்தான் அனுஜன்யா என்று எழுதிவிட்டாரோ என்று. காத்திருந்தேன். நானில்லை.