23வது புத்தகக் காட்சியும், நவீன விருட்சம் கடையும் 2

ஆரம்பகாலம் முதல் எனக்கும் புத்தகக் காட்சிக்கும் தொடர்பு உண்டு. அப்போது புத்தகங்களை சாக்கு மூட்டையில் நிரப்பி தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு வந்து ஒவ்வொரு கடையாகப் பார்த்து என் புத்தகங்களைக் கொடுத்துவிட்டுப் போவேன். ஒருமுறை நகுலனின் இருநீண்ட கவிதைத் தொகுதியையும். உமாபதியின் வெளியிலிருந்து வந்தவன் தொகுதியையும் அன்னம் கடையில் கொடுத்திருந்தேன். அந்த முறை புத்தகக் காட்சியில் தீ பிடித்து எரிந்து பல புத்தகங்கள் சாம்பலாகி விட்டன. என் புத்தகங்களை புத்தகக் காட்சியில் தனியாக ஸ்டால் பிடித்து வைப்பதற்கு ஏற்ற எண்ணிக்கையில் இல்லை என்பது எனக்கு எப்போதும் தெரியும். வேற பதிப்பாளர் புத்தகங்களையும் கொண்டு வந்தால்தான் புத்தகம் விற்று ஆகும் செலவை ஈடுகட்டமுடியும். நான் முதன் முறை ஒரு ஸ்டால் போடும்போது மினி ஸ்டால்தான் கிடைத்தது. அதில் எல்லாப் புத்தகங்களையும் வாங்கி வைத்துக்கொண்டு 80000 வரை விற்றேன். அதுவே ஒரு மினி ஸ்டாலில் விற்ற அதிகத் தொகை என்று நினைக்கிறேன்.
எனக்கு அப்போது வந்திருந்து உதவி செய்த நண்பர்களை மறக்க முடியாது. 11 நாட்கள் இருந்து உதவி செய்ததோடல்லாமல் எந்தவிதமான பிரதிபலனும் என்னிடமிருந்து அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

நான் அவர்களுக்கு ஒரு சட்டைத் துணி வாங்கித் தரவேண்டுமென்று நினைத்தேன். அவர்கள் அதை எதிர்பார்க்கவில்லை. 2004க்குப் பிறகு திரும்பவும் புத்தகக் காட்சி நடத்த முடியாது என்று நினைத்தேன். அந்த ஆண்டு பதவி உயர்வுப் பெற்று சென்னையிலிருந்து பந்தநல்லூருக்குப் போய்விட்டேன். புத்தகக் காட்சியின் கனவுகூட சாத்தியமில்லை என்று தோன்றியது. ஆனால் அங்கு போனபிறகுகூட ஒரே ஒருமுறையைத் தவிர மற்ற ஆண்டுகளில் புத்தகக்காட்சியில் பங்கெடுத்துக்கொள்ள முடிந்தது. இருமுறைகள் கூட்டணி வைத்துக்கொண்டு நடத்திப் பார்த்தேன். எப்படியிருந்தாலும் விருட்சம் விற்க வேண்டிய தொகைக்குத்தான் விற்கிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை.

இந்தப் புத்தகக் காட்சி மூலம் ஒரே ஒரு அணுகூலம் நண்பர்களைச் சந்திக்கலாம், படைப்பாளிகளைச் சந்திக்கலாம்.

இந்த ஆண்டு 9ஆம் தேதி புத்தகக் காட்சிசாலையில் என் ஸ்டாலுக்கு வந்திருந்தார் வெளி ரங்கராஜன். அவர் என்னுடைய பல ஆண்டு நண்பர். நாங்கள் இருவரும் சண்டைப் போட்டுக்கொண்டாலும் நட்புடன் இருப்போம். இந்த முறை அவரைப் பார்த்தபோது, மனிதரை நோக அடிக்கும்படி ஒரு கேள்வி கேட்டேன். இந்த ஆண்டு விளக்குப் பரிசு வைதீஸ்வரனுக்குக் கொடுத்துள்ளீர்கள்…. ஏன் அவருடைய பாராட்டுக்கூட்டத்தை எந்த விளம்பரமும் இல்லாமல் நடத்தினீர்கள் என்றேன். மனிதருக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது. உணர்ச்சி வசப்பட்டு சத்தமாகப் பேச ஆரம்பித்தார். ‘ஒரு சிறு பத்திரிகை நடத்துகிறீர்கள்..சிறுபத்திரிகை கூட்டம் என்றால் என்ன என்று தெரியாதா?’ என்று கேட்டார். நான் பேந்த பேந்த முழித்தேன். ஆனந்தவிகடன், குமுதம் என்று பெயரெல்லாம் இழுத்தார். கிட்டத்தட்ட சாகித்திய அகதெமி வழங்கும் அளவிற்குப் பரிசுத் தொகையைக் கொடுத்தும், ஏனோ திருப்தி இல்லை அதில். வைதீஸ்வரனுக்கு எப்படி இருந்திருக்கும் என்று தெரியவில்லை. கிட்டத்தட்ட 75 வயது வந்து, இத்தனை ஆண்டுகள் கழித்து உருப்படியாக ஒரு பரிசு கிடைத்துள்ளது. அந்தப் பரிசு பெறும்போது அந்த நிகழ்ச்சி ஏன் எதோ நடத்தவேண்டுமென்று நடத்தப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள விளக்கு அமைப்பிற்கு இதில் முழு விருப்பம் உண்டா? அழைப்பிதழை தபாலில் அனுப்பி அது புத்தாண்டு தினமாக இருந்ததால் உருப்படியாக யாருக்கும் போய்ச் சேரவில்லை. எல்லோரையும் போனில் கூப்பிட வேண்டி வந்துவிட்டது. அப்படியும் எண்ணிவிடலாம் அளவிற்குக் கூட்டம் சேர்ந்து விட்டது. எல்லோரும் வயதானவர்களாக இருந்தார்கள். ஓரிரு பெண்கள் கண்களில் தட்டுப்பட்டார்கள்.

முதலில் ஆரம்பித்த ரங்கராஜன் தயங்கி தயங்கிப் பேச ஆரம்பித்ததாக தோன்றியது. தேனுகா ஒரு கட்டுரை வாசித்தார். அக்கட்டுரையை சீக்கிரம் முடிக்கும்படி கேட்டுக்கொண்டார் ரங்கராஜன். ஞானக்கூத்தன் நகைச்சுவை உணர்வுடன் பேசினார். கூட்டம் முடிந்தது. போட்டோகாரர்கள் போட்டோ எடுத்தார்கள். லதா ராமகிஷ்ணன், திலீப்குமார் என்றெல்லாம் பேசினார்கள்.
ந முத்துசாமி, கி அ சச்சிதானந்தம், திலீப்குமார், அசோகமித்திரன் என்று பலர் வந்திருந்தனர். வைதீஸ்வரன் பேசும்போது சற்று உணர்ச்சி வசப்பட்டுப் பேசியதாகத் தோன்றியது.

அந்தக் காலத்தில் கார்டில் எல்லோரையும் கூப்பிட்டு விருட்சம் கூட்டம் நடந்ததுபோல் இருந்தது ரங்கராஜன் கூட்டம். அதாவது விளக்கு கூட்டம்.
இந்தக்கூட்டத்தை இன்னும் விளம்பரப்படுத்தி சிறப்பாக ஏன் நடத்த முடியவில்லை என்பதுதான் என் குறை. ரங்கராஜன் சொன்ன காரணத்தை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.

விளக்கு கூட்டம் சிறப்பாக நடத்த நான் சில யோசனைகளைச் சொல்லலாம் என்று தோன்றுகிறது.

ஒரு கவிஞருக்குப் பரிசு கொடுத்தால் தமிழ் நாட்டில் உள்ள முக்கிய கவிஞர்களையெல்லாம் அழைத்து ஒருநாள் கருத்தரங்கம் போல் நடத்தி, கருத்தரங்கு முடிவில் கவிஞரை கெளரவப்படுத்தலாம். அன்று முழுவதும் பலரை கவிதைகள் வாசிக்க அழைக்கலாம். முக்கிய விருந்தாளியான வைதீஸ்வரனை அழைத்து அவருடைய அனுபவங்களைக் கூற வைக்கலாம். இதற்கு தக்கர்பாபா பள்ளியே போதும். இதனால் பெரிய செலவும் ஆகாது.
பெரிய பத்திரிகைகள், டிவிக்கள் கூப்பிட்டு வைதீஸ்வரனுக்குக் கிடைத்த பரிசைப் பற்றி தெரிவிக்கலாம். ஏன் செலவு செய்து விளம்பரமே படுத்தலாம். இதனால் விளக்கு அமைப்பிற்கு பெரிதாக செலவு ஏற்படாது.
வைதீஸ்வரனுக்குக் கொடுத்த பாராட்டுப் பத்திரம் ஏதோ டைப் அடித்துக் கொடுத்தது போல் இருந்தது. அதை இன்னும் ஞாபகம் வைத்துக்கொள்ளும்படி கொண்டு வந்திருக்கலாம். ரங்கராஜன் தனியாக இதைச் செய்யாமல், இன்னொருவர் உதவியுடன் செய்யலாம்.

ரங்கராஜன் ஆத்திரத்துடன் பேசியதைக் கேட்டு பேசாமல் இருந்துவிட்டேன். நான் சொல்லி ஒன்றும் ஆகப் போவதில்லை என்றும் தோன்றியது. கோபித்துக்கொண்டு போன ரங்கராஜன் இன்னொருமுறை ஸ்டாலுக்கு வருவாரா என்பது தெரியவில்லை.
(இன்னும் வரும்)

“23வது புத்தகக் காட்சியும், நவீன விருட்சம் கடையும் 2” இல் 2 கருத்துகள் உள்ளன

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன