பூனை 4
ஞானக்கூத்தன்
தடவிப் பார்த்து சார்லஸ் போதலேர்
அடடா என்றாராம் பூனையை.
பிரான்ஸ் நாட்டுப் பூனைகள்
இருக்கும் போலும் அப்படி என்பதற்குள்
எங்கும் பூனைகள் அப்படித் தானென்று
சொல்லக் கூடும் பூனை ரட்சகர்கள்.
நமது நாட்டுப் பூனைகள் குறித்து
போதலேருக்கோ ஹெயின்ரிஷ் ஹெயினுக்கோ
தெரிந்திருக்க நியாயமில்லை
நமது பூனைகள் தவம் செய்யும் என்றோ
முனிவன் இல்லாத நேரத்தில் இருளில்
குடிசைக்குள் காமுக வேந்தன் நுழையத்
தங்கள் வடிவை இரவில் தருமென்றோ.
முன்னொரு காலத்துப் பகைவன் சந்ததியை
என்னிடம் தேடுவது போல் பார்க்கும்
பூனைகள் குறித்து லட்சம் கொடுத்தாலும்
புராணம் எழுதப் பிடிக்காத கவிஞன் நான்.
வெள்ளிக் கிரணங்களால்
புனைந்த தன் உடம்பை
இரும்புக் கம்பிகளின் ஊடே
நூல்போல் நுழைந்து
அடுக்களை போகும்
அவற்றை நான் வெறுக்கிறேன்.
அப்படியானல் எதற்குப் பூனையைப் பற்றி
இப்போது எழுதுவானேன்?
சூரிய உதயம் ஆவதற்கு முன்
பசும்பால் வாங்கத் தெருவில் இறங்கினேன்
எனது வீட்டை விட்டுக் குதித்துத்
தெருவில் ஓடிய பூனையைக் குறவன்
இமைப் பொழுதுக்குள் கோணியில் பிடித்தான்
இரண்டு ரூபாய் தருகிறேன் பூனையை
விடுதலை செய்யென்று கெஞ்சிக் கேட்டேன்
தமிழ் தெரியாதவன்போல்
அவன் போய்விட்டான்
எனது வீட்டு ஜன்னல் கம்பிகளின்
இடைவெளி இன்னமும் இருண்டே உள்ளது