அது எனது உயர்நிலைப் பள்ளியின் இறுதி நாளொன்றில் நடந்தது. இலங்கையின் திருக்கோண மலையிலிருந்த ராமக்கிருஷ்ண மிஷன் பாடசாலையில் படிப்புக்குப் புறம்பான விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிற ஒரு ஆசிரியரிடமிருந்து நான், ஜே.கிருஷ்ணமூர்த்தயின் The First and Last Freedom என்ற நூலை இரவல் வாங்கினேன். அதுவரை நான் படித்த அதற்குப் பின்பும் நான் படிக்கவிருந்த ஏராளமான நூலாசிரியாகளிலுள் இந்த நூலாசிரியரல்லாத ஒருவரது வாசகங்கள் எவ்வளவுக்கு என்னைச் சல்லடையிடப் போகின்றன என்று நான் அப்போது சந்தேகிக்கவில்லை.
நூலை எனக்குத் தந்தவர் ஒரு மார்க்ஸீயவாதியெனினும் ராமக்கிருஷ்ண மிஷனின் அடிப்படைகளில் மதிப்புக் கொண்டவர். ஏற்கனவே அவரிடம் மார்க்ஸீயம், கம்யூனிஸம் பற்றி சில பல உபதேசங்களைப் பெற்றிருக்கிறேன். எனது சில பல நண்பர்கள் அவர் மூலம் ஏற்கனவே கம்யூனிஸ போதம் பெற்றுவட்டார்கள். நான் அவரிடம் ஏற்கனவே கம்யூனிஸ போதம் பெற்றுவிட்டார்கள். நான் அவரிடம் கேட்டேன். ‘மனிதனை உந்துகிற உண்மையான வேட்கையைப் பற்றி மார்க்ஸ் என்ன சொல்கிறார்?’
மாக்ஸியத்தை நான் பின்பு கற்றறிந்ததுக்கும் அவர் சொன்ன பதிலுக்கும் நிறையத் தொடர்பு உண்டு. ஆனால் இலங்கையிலும் இங்கும் நான் சந்தித்த எத்தனையோ மார்க்ஸிஸ்டுகளிடம் நான் இந்தக் கேள்வியைக் கேட்டபோது, பதில் தெரியாமல் விழித்திருக்கிறார்கள். அவர் சொன்ன பதில்: மனிதனை உந்தும் வேட்கை பொருளாதார வேட்கை என்பதுதான் மார்க்ஸின் கோட்பாடு.’
மார்க்ஸிற்கும் எனக்கும் ஒத்துவராது போலிருக்கிறதே என்று நினைத்த நான் இன்னொரு நாள் கேட்டேன்:’மனித லட்சியம் ஆன்ம ஈடெற்றமாக, உண்மையை அறிந்து விடுதலை பெறுவதாக இருக்க வேண்டும் என்பதுபற்றி உங்களுக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் கம்யூனிஸ முறைகளுக்கும் இந்த லட்சியத்துக்கும் சம்பந்தமில்லையே!
கம்யூனிறும் ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகத்தைச் சிருஷ்டிக்கும். இந்த சமூகத்தை சிருஷ்டித்த பிறகு நாம் ஆன்ம ஈடேற்றத்துக்கான முயற்சிகளில் இறங்கத் தடையிராது.’
இதில் நான் சிரித்துவிட்டேன். ஆசிரியரும் சேர்ந்து சிரித்தார். இதற்குப் பின்புதனா அவரிடமிருந்து ஜே கிருஷ்ணமூர்த்தியின் மேற்படி நூல் கிடைத்தது. அத்துடன், நூலைத் திரும்பக் கேட்காமல் என்னிடமே விட்டுவிட்டார். இப்படியும் ஒரு மார்க்ஸிஸ்டு.
ஆனால் வேறு பையன்கள், முக்கிய உதாரணமாக எனது சீனியர் பையன் ஒருவன், ‘சோவியத் ரஷ்யாவில் கார் பண்ணுகிறான். ஒரு கார் இந்த லைட்போஸ்டிலிருந்து அந்த லைட்போஸ்ட் வரை அவ்வளவு நீளம்,’ என்று பேசும் ரகமான கம்யூனிஸ்டுகளாகி விட்டார்கள். இத்தகையர்களிடம் பள்ளி நாட்களில், அவ்வளவு நீளமான கார் சந்தில் திரும்புவது எப்படி?’ என்று கேட்கும் ரகமானவனாக நான் மாறினேன். வளர்ந்த பிறகு எனது எழுத்தியக்கமும் எழுத்துலகத்து கம்யூனிஸ்டுகளின் அபத்தவாதங்களை இதே விதமாக விசாரிக்கும் இயக்கமாக வளர்ந்தது என்பது ஒருபுறமிக்க, அன்று பள்ளி நாட்களில் என்னைச் சுற்றி முளைத்த குட்டிக் கம்யூனிஸ்டுகள் ஒவ்வொருவருமே பணக்காரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். எனது குடும்பம் ஏழைக் குடும்பம் என்படு மட்டுமல்ல, ஆழ்ந்த சிக்கல்களும் வன்முறை நிறைந்தவர்களது உபாதைகளும் நிறைந்த சூழலைக் கொண்டிருந்தது. இருப்பினும் இதனூடே எனது தாயாரின் நுட்பமான குணாம்சங்கள் பரிகார அம்சமாக விளங்கி இருக்கின்றன. மார்க்ஸீயக் கோட்பாடுகளில் ஏதும் ஆழமான இருந்திருந்தால் நான்தான் கருவிலே திருவுடைய கம்யூனிஸ்டாகி இருக்க வேண்டும்.
பள்ளிக்கூடத்துக் குட்டிக் கம்யூனிஸ்டுகளையும், தொடர்ந்து எழுத்துலகத்தில் தெரிய வந்த கம்யூனிஸ்டுகளையும் தூக்கிச் சாப்பிடக் கூடிய கம்யூனிஸ்டாகி இருக்க வேண்டும். எனது சூழலை பொருளாதாரக் கோட்பாட்டின் மூலம் சந்திப்பதற்கான தண்டால், பஸ்கிகளில் நான் ஈடுபட்டிருக்க வேண்டும். ஆனால் அன்றும் சரி, இன்றும் சரி, கம்யூனிஸ உபாஸனையை நான் அதன் கோட்பாடுகளின் மூலம் மட்டுமின்றி அதனை உபாஸிப்பவர்களை அவதானிப்பதன் மூலமும் கூடத்தான் கணித்திருக்கிறேன். வன்முறைக் குணத்தை மனிதாபிமானம் என்று மாய்மலம் பண்ணுகிறவர்களும், அப்பட்டமான சுயலாப வேட்கைகளை சோஷலிஸ லட்சியம் என்று திருகுதாளம் செய்கிறவர்களும், தரமற்ற எழுத்தை முற்போக்குப் படைப்பு என்று திரித்துக் காட்டுகிறவர்களும் மலிவதற்கு கம்யூனிஸ இயக்கம் இடம் தந்திருக்கிறது. இதன் விளைவாக, இந்த இயக்கத்தின் வழிமுறைகளையே பிரதிபலிக்கிற எதிர் இயக்கங்கள் ஜனித்தன. பொது வாழ்வும் கலாசார வாழ்வும் நீதியுணர்வு செம்மை, தரிசனப் பண்பு ஆகியவை ஏதுமற்ற கீழ்மைக் குணங்களின் பலமாகின.
என்னுடன் சேர்ந்த அன்று தமிழுலகின் கம்யூனிஸ இயக்கங்களில் உள்ள குறைபாடுகளைத் தங்கள் உபாயங்களைத் தாக்கியவர்களது இயக்கங்கள் இன்று அதே குறைபாடுகளைத் தங்கள் உபாயங்களாகக் கொண்டுவிட்டன. இதன் காரணம் ஜீவிதப் போராட்ட நியதிகளுக்கு இவை ஆட்பட்டவைதான். ‘உயிரோடு இருப்பதற்காக எதுவும் செய்யலாம்,’ என்ற ரகமான மிருக நோக்கம் உள்ளவர்கள் நீதி, செம்மை, தரிசனம், ஆகிய நுண்ணிய மனித நோக்கங்கள் உள்ளவர்களாக தங்களை ஸ்தாபிக்க முயன்றமைதான். இந்நிலையின் விடம்பனம், சமரஸங்களாகவும் ஸ்தாபன வலுவிற்கு முக்கியத்துவம் தருவதன் மூலமும் இன்று வெளிப்பட்டு பவனி வந்து கொண்டிருக்கிறது.
இன்றைய சீரிய தமிழிலக்கிய உலகில் எனது குரலுக்கு மேற்படி விடம்பனத்திலிருந்து மாறுபட்ட ஒரு தொனி இருப்பதை உணர்கிறவர்கள் உள்ளனர். இந்தத் தொனியைக் காப்பாற்றிய எனது அந்தரங்க சக்தி ஜே கிருஷ்ணமூர்த்தியால் போஷிக்கப்பட்டமையை அவர்கள் நிச்சயம் அறிய வேண்டும். பிரசுர சாதனங்கள் மூலம் நான் வெளிப்படு முன்பே ஜே கிருஷ்ணமூர்த்தியின் The First and Last Freedom எனக்குக் கிடைத்தமை இதில் முக்கிய விஷயமாகிறது. இருந்தும் நான் எனது கட்டுரைகளில் அவரது பெயரைக் குறிக்பிடாமல் நீண்ட காலங்களாகத் தவிர்த்து வந்திருக்கிறேன். இதன் காரணம் நான் அவரைப் பின்பற்றியவன் அல்ல என்பதுதான். எனக்கு இயற்கையாக இருந்த சில விசேஷ குணங்கள் உண்மையில் காப்பாற்றப்பட வேண்டிய அபூர்வத் தன்மை உள்ளவை என்பதுதான் முதன்மையாக அவரது நூல்களிலிருந்த நான் பெற்ற போஷனை.
இயற்கை அழகில் லயித்தல், எனது சுபாவ சக்திக்கும் விருப்பத்துக்கும் ஏற்ற கலையுலகை நாடதல் என்பவை இந்தக் குணங்களாகும். சூழலின் அழுத்தமும் ஆலோசகர்களும் என்னைத் திருத்த முயன்றவர்களும் இந்த எனது போக்குகளை பலவீனப்படுத்தி விடாதபடி அன்று உதவியவர் ஜே கிருஷ்ணமூர்த்திதான். இதற்கும் மேலே போய், பால்ய வயதில் சமூக மரபுகளினது கெடுபிடிகளின் விளைவாகப் பிறக்கக்கூடிய குற்ற உணர்வு என்ற விபரீதமான பின்னணி எதுவும் பிறந்து விடாமலும் அவரது போஷனை காத்திருக்கிறது. ‘இது நல்லது, அது கெட்டது’ என்ற பிளவுபட்ட மனொபாவத்தின் கொடுங்கோல் என் மனசில் எப்போதுமே வலிமையற்றுத்தான் இயங்கி வந்திருக்கிறது. இதற்கும் ஜே.கிருஷ்ணமூர்த்தியை நான் காரணம் காட்டலாம்.
உண்மையைத் தேடுதல், ஆத்மானுபவத்தை உத்தேசித்தல் அகியவற்றை முக்கியமாக்குகிறபோது, உலகையும் இயற்கையையும் சுபாவசக்திகளையும் இதன் விளைவாகச் செயலூக்கத்தையும் மனம் முக்கியமாகக் கொள்வதில்லை. இவற்றுக்கு முக்கியத்துவம் தராவிட்டால் மனசின் நுட்பமான உணர்வுகள் மழுங்கிவிடும். இந்த ஆபத்து எனக்கு ஏற்படாதவாறு ஜே கிருஷ்ணமூர்த்திதான் காத்திருக்கிறார். ஏனெனில் எழுத்துலகினுள் நுழையும் தறுவாயில் சந்நியாஸம் வாங்கிக் கொள்கிற நோக்கமும் எனக்கு இருந்திருக்கிறது. சந்நியாஸ மதிப்பீடுகள் உணர்வுகளை மழுங்க அடித்துக் கொன்றுவிடுகிற குணத்தைக் கொண்டவை. இது விஷயமாக ஜே கிருஷ்ணமூர்த்தி தீவிரமான கருத்துக்களை வெளியிட்டடிருக்கிறார். உணர்வுகளைக் கொல்கிற மத மரபுகளையும், அனுஷ்டானங்களையும், மதிப்பீடுகளையும் மிகுந்த வலிமையுடன் சாடி நொறுக்கிவிடுகிற சக்தி அவருடைய கருத்துக்களுக்கு உண்டு.
உணர்வின் பரிபூர்ணமான சுதந்திர நிலையிலேயே அது தனது குழந்தைமைக்குத் திரும்ப முடியும். விருப்புமற்று வெறுப்பு மற்ற புத்துணர்வே இந்த குழந்தமை. இந்தப் புத்துணர்வுதான் உள்ளதை உள்ளபடி தரிசிக்க உறுதுணையாகும். உணர்வுக்கு மரபுகள் இடும் தளைகள், உள்ளதை உள்ளபடி தரிசிக்க உதவாதவை. இந்த மரபு பழையதோ, புதியதோ என்பதல்ல பிரச்னை. உள்ளது என்பது இப்போது மனம் கொள்ளும் தாகங்களும் எதிர்ப்புகளும் அனுதாபங்களும்தான். இந்நிலையில் உழன்றபடியே இதைத் தாண்டி உள்ள ஏதோ ஒன்றை லட்சியமாகக் கொள்வதென்பது இப்போது ‘உள்ளது’ எதுவோ அதனை தரிசிப்பதனின்றும் தப்புவதாகிவிடும். இப்போது உள்ளது தாகம். எவ்வித முன்னபிப்பிராயமும் அற்ற பரிவுடன் மெளனமாக இதைப் பார்த்தால்தான் முக்கியமானது. இந்தப் பார்வையில் நிச்சலன நிலை மட்டும் உண்டு. அதாவது பார்க்கப்பட்டதை விரும்பாலும் வெறுக்காமலும் அது இத்தகையது என்று சிந்திக்காமலும் ‘சும்மா’ பார்ப்பதே இது. மரபு வசப்பட்ட உள்ளம், அரசியல் ரீதியான உள்ளம் எதுவும் பார்க்கப்பட்ட தாகத்தினை, ஆராயவோ அபிப்பிராயம் சொல்லவோ ஏற்கவோ மறுக்கவோதான் செய்யுமே அன்றி, சும்மா பார்த்திருக்காது. எனவே தாகங்கள் மேலும் சலனங்களாகத் தொடர்கின்றன. மனசின் சலனம் என்பது மரபினாலும் பழக்கத்தினாலும் சூழலினாலும் உருவாக்கப்பட்ட மனக் கட்டமைப்புகளின் விளைவுதான். ‘உண்மை’ என்ற ஏதோ ஒன்றை லட்சியமாக்குகிறபோதும் கூட பழைய அல்லது புதிய கட்டமைப்பு ஒன்றுக்குத்தான் மனம் வசப்படுகிறது. நேற்று அனுபவித்ததையே மீண்டும் மனம் அசைபோடுகிறபோதுகூட, நாம் நமக்கு நாமே உருவாக்கிய ஒரு மனக் கட்டமைப்புக்கு வசப்படுகிறாம். இந்த அமைப்பைக் கொண்டு இப்போது எழும் மனப் பிரச்னையான தாகம், கோபம் முதலியவற்றைச் சந்திக்கிறோம். இது குழந்தைமையுடன் தன்னைத்தானே பார்ப்பதாகாது.
ஜே.கிருஷ்ணமூர்த்தியின் இந்த அணுகுமறை ஒரு மார்க்கமல்ல. ஏனெனில் ‘உண்மை என்பது மார்க்கங்களற்றது,’ என்பதே அவரது அடிப்படைச் செய்தி. மேலே சொல்லப்பட்டிருக்பதன் தாத்பர்யம் இதுதான். இதனை அவர் எண்ணற்ற கோணங்களில் இருந்து வெளிப்படுத்தி உள்ளார்.
சரி, இப்படி தனது தாகங்கள் முதலியவற்றை அவதானிப்பதால் என்ன லாபம்?
இந்தக் கேள்வியே தாகங்களை அவற்றின் தளத்தில் ஒரு பிரச்னையாகக் காணாத மனசில்தான் ஜனிக்கும். தாகங்களை பிரச்னைகளாக, அவதானத்துக்குரிய இயற்கை வடிவுகளாகக் காண வேண்டுமானால் மனசிற்கு மென்மையும் வீரியமும் இருந்ததாக வேண்டும. தாகங்களை அவதானிப்பதால் எதோ லாபம் கிடைக்கும் என்று புறப்பட்டால், அந்த லாபத்தைப் பற்றிய தாகமாக மற்றைய தாகங்கள் மாற்றியமைக்கப்படும். தாகம் என்ற மனநிலை இவ்விதமாக தற்காப்படைந்த விடும். அந்த ஏதோ ஒரு லாபத்துக்கான தாகம் என்ற நிலையில் மனசின் சுகதுக்கங்களும் விருப்பு வெறுப்புகளும் அமையும். இதுவே உலகைப் பிளவுபடுத்தும் உன்னத லட்சியங்களினது மோதல்களாக வடிவெடுக்கிறது.
இதனால்தான் ‘உண்மைக்கு மார்க்கம் இல்லை’ என்கிறார் ஜே.கிருஷ்ணமூர்த்தி. ஏனெனில் மார்க்கம் ஒரு லட்சியத்திற்குச் செல்லும் பாதையாகும். லட்சியமாகக் கொள்ளப்படும் எதுவும், மனசினது தாகம் பூணும் வெளிவேஷம்தான். லட்சியத்தை விட்டுவிட்டால் தாகம் தாகமாகவே நிற்கும். ‘சிலுவைப் போர்’ என்பது லட்சியமாக உருமாற்றப்பட்ட வெறும் போர்தான். இதில் சிலுவை என்ற லட்சியாம்சத்தை அகற்றினால்தான் இது வெறும் போர் என்று புலனாகும். இதே போன்று உலக சரித்திரத்தில் எண்ணற்ற ரணகளங்களாக லட்சியம் நியாயமடைந்துள்ளது. இந்த இயக்கத்தின் சுனை, ஒவ்வொரு தனிமனித உள்ளமுமே என்கிறார் ஜே.கிருஷ்ணமூர்த்தி. இதனால்தான் தனது தாகங்களையும் விருப்பு வெறுப்புகளையும் அவதானிப்பதால் என்ன லாபம் என்ற கேள்வி பாரதூரமான அளவுக்குத் தவறானது. இங்கேதான் குழந்தைமையுடன் எவ்வித லாபநோக்குமற்று தன்னைத்தானே அவதானிப்பது என்பது விரிவடையும். இவ்விதம் தன்னைத் தானே அவதானிப்பதென்பதும், இயற்கையை உலகை, வாழ்வை அவதானிப்பதுவும் ஒரே கதியில் நிகழ்பவை.
ஜே.கிருஷ்ணமூர்த்தி முதன்மையாக இயற்கையை அவதானிக்கும் கலையினையே தமது செய்திக்கு அடித்தளமாக்குகிறார். ‘உண்மையைத் தேடி’ அவரிடம் போகிறவர்கள் இதைப் பெரும்பாலும் உணர்வதில்லை. ஆனால் இயற்கையுடன் கொள்ளும் உறவு, ஒரு வகையில் அந்தரங்கத் தளம் ஒன்றில் ஜே.கிருஷ்ணமூர்த்தியினது விகாஸம் ஒன்றுடனேயே கொள்ளும் உறவாகக் கொள்ளத் தக்கதுதான். அவருடன் எவ்வளவுக்கு ஒருவர் நெருங்கிப் பழகி இருந்தாலும் சரி இயற்கையுடன் பழகாதவராயிருந்தால் அந்த ஒருவர் ஜே.கிருஷ்ணமூர்த்தியுடனும் உறவு பூணவில்லை என்றதான் ஆகும்.
நான் ஜே.கிருஷ்ணமூர்த்தியை 1970 – 71 வாக்கில் ஒரு சில நிமிஷங்கள் சென்னையில் சந்தித்துப் பேசி இருக்கிறேன். அவருடன் அதிகம் பழகுவது முக்கியமற்ற சில்லறை விஷயமாகத்தான் எனக்குத் தோன்றி வந்திருக்கிறது. இருந்தும், நான் என்னை அவதானிக்கும் கலையில் ஈடுபட்டமையிலேற்பட்ட வீரிய ஏற்ற இறக்கங்களுக்கேற்ப அவருடன் எனது உறவும் பல்வேறு ரஸ பேதங்களைக் காட்டி வந்திருக்கிறது. ‘பிறருக்கும் எனக்கும் இடையே யாரும் வர முடியாது,’ என்று அவர் உறுதியாக்க கூறுவதனை நான் இவ்விடத்தில் ஸ்தாபிக்க விரும்புகிறேன். ‘உண்மையான ஜே.கிருஷ்ணமூர்த்தி, உலகப்பிரசித்தி பெற்ற ஒரு சரீர வடிவம் அல்ல’ என்பதை உணர்வது இதற்கு அவசியம். நமது கவனம் விழாத திசையில் தனது கவனத்தைச் செலுத்துவதன் மூலம் நம்முடனேயே உறவு கொள்ள நாடுகிற ஒரு அபூர்வ சக்தி என்றுதான் அத்தகையவரைக் கொள்ள வேண்டும். இதை உணர்கிறவருக்கும் அவருக்குமிடையில் எவரும் வரமுடியாதுதான்.
(ஜனவரி – மார்ச்சு 1991ல் நவீன விருட்சம் இதழில் பிரசுரமான கட்டுரை)