சில மாதங்களாக நான் நாவல்கள், சிறுகதைத் தொகுதிகள் படிப்பதில்லை. எனக்கு நேரம் கிடைப்பதில்லை. காலை 7.30மணிக்குக் கிளம்பினால் வீடு வர இரவு 8 மணி ஆகிவிடுகிறது. நான் எப்போதும் மின்சார வண்டியில் பயணம் செய்யும்போதுதான் தினமணி, The Times of India பத்திரிகைகளைப் படிக்கிறேன். அதனால் நான் நாவல்கள், சிறுகதைத் தொகுதிகளை வாங்குவதை நிறுத்தியிருக்கிறேன். ஆனால் Non Fiction ஐ விரும்பிப் படிக்கிறேன். The Other side of Belief என்ற முகுந்த ராவ் எழுதிய ஆங்கிலப் புத்தகத்தை கடந்த ஒரு மாதமாகப் படித்துக்கொண்டிருக்கிறேன்.
நான் மயிலாடுதுறையில் இருந்தபோது தினமும் ஒரு சிறுகதையைப் படிக்க வேண்டுமென்று ஆரம்பித்தேன். ஒருசில நாட்கள் என் முயற்சி தொடங்கி அப்படியே நின்றுவிட்டது. சென்னைக்கு தற்காலிகமாக நான் வந்திருக்கிறேன். இங்கு எந்த முயற்சியும் என்னால் தொடங்க முடியவில்லை.
நவீன விருட்சம் (1988) ஆரம்பித்த கால கட்டத்தில் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு மேல் மாதா மாதம் இலக்கியக் கூட்டங்களை நடத்தியிருக்கிறேன். எல்லோரும் சந்திப்பதற்கு ஒரு இடமாகவும், பல புத்தகங்களைப் பற்றி விமர்சனக் கூட்டங்களாகவும் அவை திகழ்ந்திருக்கின்றன. மூத்த எழுத்தாளர் முதல் புதியதாக எழுத வருகிற எழுத்தாளர் வரை என் கூட்டத்தில் பலர் கலந்துகொண்டதுண்டு. ஆனால் இப்போதோ அதெல்லாம் எப்படி சாத்தியமாயிற்று என்ற ஆச்சரியம்தான் எஞ்சுகிறது.
அதெல்லாம் விட்டுவிடுவோம். என்னால் ஏன் நாவல்களைப் படிக்க முடியவில்லை. சமீபத்தில் நான் படித்த பல நாவல்கள். பாதியிலேயே நின்று விடுகின்றன. முழுதாக என்னால் நாவலைப் படிக்க முடிவதில்லை. நாவல் மட்டுமல்ல சிறுகதைகளுக்கும் இது பொருந்தும்.
படிப்பதில் குறிப்பாக நாவல் படிப்பதில் ஏன் நாட்டம் குறைந்து விடுகிறது. தமிழில் படிப்பவர்களே மிகக்குறைவு. அதில் நான் படிப்பதை நிறுத்திவிட்டால், தமிழுக்கு எவ்வளவு பெரிய நஷ்டம். என் இந்த நிலையை சமீபத்தில் வந்துள்ள ‘வார்ஸாவில் ஒரு கடவுள்’ என்ற தமிழவனின் நாவல் மாற்றி விட்டது.
இந் நாவலைக் குறித்து எனக்குப் பேச ஒரு வாய்ப்பு கிடைத்தது. கூட்டத்தில் பேசப்போகிறேன் என்பதால் 438 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினேன். கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்குமுன்புதான் இப் புத்தகம் படிக்கக் கிடைத்தது. நான் படிக்கத் தொடங்கினாலும் நாவலின் பக்கங்கள் நகர மறுக்கிறது. என்ன செய்வது என்று புரியவில்லை. 14.09.2008 அன்று (அதாவது இன்று) இந்த நாவலைக் குறித்து சிறிய கூட்டம். கிட்டத்தட்ட 10 பேர்கள் கலந்துகொண்டு பல்கலைக் கழக வளாகத்தில் ஒரு சிறிய வகுப்பறையில் உரையாடல். 13ஆம் தேதி சனிக்கிழமை வரை நான் 80 பக்கங்கள்தான் படித்திருக்கிறேன். நாவலை முடிப்பதோடல்லாமல், நாவலைக் குறித்து என் கருத்துக்களையும் தெரிவிக்க வேண்டும்.
இன்று காலை 5மணிக்கே எழுந்துவிட்டேன். நாவலை விடாமல் படித்துக்கொண்டே போகிறேன். கிட்டத்தட்ட 9.30 மணிவரை படித்து நாவலை முடித்துவிட்டேன். 438 பக்கங்களை முடித்துவிட்டேன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. இப்போது என்னுடைய அடுத்தப் பிரச்சினை இந்த நாவலைப் பற்றி பேசவேண்டும். கூட்டம் 10 மணிக்கே ஆரம்பமாகி எல்லோரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நானோ உடனே அங்கு போக முடியவில்லை. என்னால் நாவலை அப்படியே மனதில் பதியவைத்துக் கொண்டு அப்படியே பேச முடியாது. எழுதித்தான் பேசமுடியும். அப்போதுதான் என்ன சொல்ல வருகிறேன் என்பது கோர்வையாக வரும்.
9.30க்கு நாவலைப் படித்து முடித்த நான், அது குறித்து குறிப்புகள் எதுவும் தயாரிக்கக் கூட நேரமில்லை. என் சகோதரன் காரில் அமர்ந்துகொண்டு ஒரு இடத்திற்கு அவசரமாகக் கிளம்பிக் கொண்டிருந்த நான், பேப்பரில் நாவலைக் குறித்து படிப்பதற்கு தோதாக எனக்குத் தோன்றிய கருத்துக்களை எழுதத் தொடங்கினேன். கூடவே என் சகோதரன் பேச்சுக் கொடுத்தபடி இருந்தான். என் கவனமெல்லாம் நாவலைப் பற்றி என்ன எழுதப்போகிறேன் என்று இருந்தாலும், சகோதரின் பேச்சு என் திசையைத் திருப்பிக் கொண்டிருந்தது. இது ஒரு சவாலாக எனக்குத் தோன்றியது. மேலும் 438 பக்கங்கள் கொண்ட நாவலுக்கு கொஞ்சமாவது அவகாசம் வேண்டும். அவசரம் அவசரமாக நாவலைப் பற்றி நான்கு பக்கங்கள் எழுதினாலும், 6 மணி நேரம் விடாமல் படித்த எனக்கு அதைப் பற்றி யோசிக்க இன்னும் நேரம் தேவை என்று தோன்றியது.
இருந்தாலும் எனக்குத் தோன்றிய கருத்துக்களை இங்கு தொகுத்து அளிக்க விரும்புகிறேன்.
தமிழவன் எழுதிய முந்தைய நாவல்களைப் படித்திருக்கிறேன். ஒவ்வொரு முறை அவர் நாவல் வரும்போதெல்லாம் அந் நாவலைப் படித்து இது ஆங்கிலத்தில் வந்துள்ள இந்த நாவலின் தழுவல் என்றெல்லாம் கடுமையாக விமர்சனம் செய்வார்கள். அதெற்கெல்லாம் தமிழவன் பதில் சொல்ல மாட்டார். ஆனால் ஒருமுறை சுபமங்களா என்ற பத்திரிகையில் ஒரு பேட்டியில் அவர் அப்படித்தான் தழுவித்தான் எழுதியுள்ளதாக கூறியதோடல்லாமல், நாவல் எழுதும் வழக்கத்தில், அப்படி எழுதுவதும் ஒரு முறை என்று குறிப்பிட்டுள்ளார்.
‘வார்ஸாவில் ஒரு கடவுள்’ என்ற இந்த நாவல் முன்னுரையில் தமிழவன் இப்படி கூறுகிறார். நாவல்களையோ நாவலையோ பாரத்து எழுதுவதுதான் ஒரு புதிய நாவல் என்பது என் பழைய கோட்பாடு என்று குறிப்பிடுகிறார்.
ஆறுமாதக் காலத்தில் எழுதப்பட்ட நாவல் என்று குறிப்பிடும் தமிழவன், அதுவரை படிக்கக் கிடைக்காத பலநாட்டு கிளாஸிக்குகள் எனக் கருதப்படும் நாவல்களை எல்லாம் படித்துக்கொண்டிருந்தேன் என்றும், அவற்றின் தாக்கம் இந்த நாவலில் இருக்கலாம் என்றும் குறிப்பிடுகிறார். இப்படி வெளிப்படையாகக் குறிப்பிடும் அவர் நேர்மையை இங்கு பாராட்ட வேண்டும். ஆனால் இந்த நாவலை வாசிப்பவர்களுக்கு அப்படிப்பட்ட எண்ணம் எதுவும் தோன்றவில்லை. எனக்கு இந்த நாவலைப் படிக்கும்போது, எப்படி இவரால் 6 மாதக் காலத்திற்குள் இது மாதிரியான நாவலை எழுத முடிந்தது என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
பொதுவாக நாவல் என்றால் எதாவது ஒரு கதை என்று ஆரம்பித்து அதன் பின்னணியில் சுற்றி சுற்றி வரும். ஆனால் தமிழவனின் இந்த நாவல், நாவல் என்று ஏற்கக் கூடிய தன்மையிலிருந்து விடுப்பட்டு நாவலை எழுதியதாகத் தோன்றுகிறது.
நாவல்தான் நாம் படிக்கிறோம். ஆனால் நாவல் மூலம் ஒரு முழுக் கதையை ஆரம்பம் தொட்டு கோர்வையாகச் சொல்லப் படுவதில்லை. நாவல் என்ற களத்தை அடிப்படியாக வைத்துக்கொண்டு போலந்து நாட்டு சரித்திரம் சொல்லப்படுகிறது. அங்கங்கே நடைப்பெற்ற பல சம்பவங்களை கோர்வையாக வேறு விதமாக அடுக்கிக்கொண்டு போகிறார். நிகழ்கால அனுபவங்களிலிருந்தும், நிகழ்ந்து முடிந்த சம்பவங்களிலிருந்தும் பலவித கருத்தாக்கங்களை அடுக்கிக் கொண்டே போகிறார்.
தீயைப் பற்றி சொல்லும்போது முக்கிய கதா பாத்திரமான சந்திரன் எப்படி தீ அணைப்பு அலுவலகத்தில் சேர்ந்தான் என்பது பற்றிய விபரம் சொல்லப்படவில்லை. மாறாக தீ அணைப்பு அலுவலகத்தில் சேர்வதும்,அதன்பின் அதிலிருந்து விடுபடுவதும். கோர்வையாகச் சொல்லப்படுகிறது.
பெரும்பாலும் இந்த நாவல் முழுவதும் நீண்ட உரையாடல் பலருடன் தொடர்ந்துகொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. அதுவும் பெரும்பாலும் பெண் பாத்திரங்களுடன். பெண் பாத்திரங்களுடன் உருவாகும் உரையாடலின் தொகுப்பே இந் நாவல்.
பெண் பாத்திரங்களின் கூற்றாக நாவல் இயங்குவதாகப் படுகிறது. அன்ன, லிடியா, விஜயா, அமலா, அஷ்வினி, மாக்தா என்ற பல பெண் பாத்திரங்களுடன் உண்டாகும் உறவு முறைகளைக் கொண்டு உளவியல் ரீதியாக ஏற்படும் சிக்கல்களை அலுக்காமல் இந் நாவல் விவிரித்துக்கொண்டே போகிறது. கனவையும், நினைவையும் இந் நாவல் விவிரித்துக் கொண்டே போகிறது.
தீ யார் மீது படர்கிறது என்பது பிரக்ஞையில் வரல்ல..தீ அழகாக இருக்கிறது. தீ அழகாக இருக்கிறது. ஜ்வாலை பூ போல பரவுகிறது…. என்றெல்லாம் கவித்துவமாக வர்ணிக்கப் படுகிறது. ஓவியம், இசைப் பற்றி நாவலில் பல செய்திகள் வெளிப்படுகின்றன.
அமானுஷ்ய உணர்வுகள் சாதாரண நிகழ்வுகளாக மாறிக்கொண்டே போகின்றன.
ஏன் இந்நாவலில் வெளிப்படும் கதாபாத்திரங்கள் சாதாரணமானவர்காள். தமிழில் இது ஒரு வித்தியாசமான நாவல் என்ற கருத்தில் யாருக்கும் எந்த சந்தேகமும் வராது.
(இதன் அடுத்தப் பகுதி இன்னும் சி ல தினங்களில் வெளியாகும்)