இந்தக் கேள்வியை யாரிடம் கேட்க வேண்டுமென்று தெரியவிலல்லை. தமிழ்நாட்டில் மொத்த ஜனத்தொகையில் க நா சுவைத் தெரிந்தவர்கள் ஆயிரக்கணக்கான பேர்கள்தான் இருப்பார்கள். ஏன் நூற்றுக்கணக்கான பேர்களும் இருக்கலாம். அவர்கள் பெரும்பாலும் தீவிர இலக்கியத்தில் ஈடுபடபவர்கள் என்று நம்பலாம். ஏன் அவர்களுக்குக் கூட எது மாதிரியான க.நா.சுவைத் தெரியும் என்பது தெரியவில்லை. பல ஆண்டுகளுக்குமுன் என் தந்தையார் சொன்னது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. ” க.நா.சு என்ற ஒருத்தர் இருக்காரே, அவர் எழுதறதெல்லாம் படிக்க போரடிக்கும்.” எனக்கு ஒரே ஆச்சரியம். க.நா.சுவைப் பற்றி குறிப்பிட்டது. ஏன் ‘போர்’ என்ற காரணத்தையும், எந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு அவர் போர் என்று குறிப்பிட்டார் என்பதெல்லாம் எனக்குத் தெரியவில்லை. இன்று அவர் அன்று அப்படிச் சொன்னதை ஞாபகப்படுத்தும்போது, அவருக்கு அப்படிச் சொன்னது ஞாபகத்திற்கு வரவில்லை. எனக்கோ அவர் கநாசுவைப் பற்றி அப்படிக் குறிப்பிட்டதால்தான் இந்த நிகழ்ச்சி ஞாபகத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. சரி, க நா சு என்பவர் யார்? எந்தப் புத்தகம் படித்துவிட்டு அவரால் ஈர்க்கப்பட்டேன். இந்தக் கேள்வி சில மணி நேரங்களாக என்னுள் சுழன்று சுழன்று.
க நா சு எழுதியதெல்லாம் எனக்குப் பிடிக்குமென்று சொன்னால், நான் அவருடைய பரம ரசிகனாகி விடுவேன். இதை க நா சுவே விரும்ப மாட்டார். மற்ற படைப்பாளிகளின் படைப்புகளை அவர் எப்படி விமர்சிக்கிறாரோ அதேபோல் அவர் தன்னைப் பற்றியும் விமர்சித்துக் கொள்வார். தன்னால் சரியாக எழுத முடியாத படைப்புகளை இலக்கியத் தரமாகச் சொல்ல முடியாவிட்டாலும், பத்திரிகைத் தனமான முயற்சி என்று குறிப்பிட்டிருக்கிறார்.
க நா சு என்பவர் யார் என்று திரும்பவும் யோசிக்கும்போது, அவர் ஒரு சிறு கதை எழுத்தாளரா? கவிஞரா? நாவலாசிரியரா? நாடக ஆசிரியரா? விமர்சகரா? என்றெல்லாம் பார்க்கும்போது, அவருக்கு எந்தவிதமான அங்கீகாரத்தையும் தர இன்றைய இலக்கிய உலகத்தில் மறுப்பவர்கள் அதிகம். ஆனால் க நா சு வோ எல்லோரையும் மீறியவர். எனக்குத் தெரிந்த பலர், அவரை கவிஞராக அடையாளம் காட்ட விரும்ப மாட்டார்கள். ஆனால், மணிக்கொடி எழுத்தாளர்களிடையே புதுக்கவிதை என்ற சொற் பதத்தைப் புகுத்தியவர் அவர்தான். மேலும், மற்ற படைப்பாளிகள் வேறு விதமாக கவிதை எழுத முயற்சித்தபோது, க நா சு அதற்கு தனக்கே உரிய, தனித்துவமான முறையைப் புகுத்தியவர். புதுக்கவிதையை உரைநடையிலிருந்து உருவாக்கினார். கவிதைக்கு உவமானம், படிமம் எல்லாம் இருக்கக் கூடாது என்று வலியுறுத்தினார். பல அற்புதமான கவிதைகளை தமிழுக்கு அளித்திருக்கிறார். இன்றும் அவர் கவிதைகளை வாசித்துவிட்டு எழுதும் படைப்பாளிகள் பலர். ஏன் நகுலன்கூட கநாசு கவிதையால் கவரப்பெற்றவர். கநாசுவுக்கும் இசைக்கும் வெகு தூரம். அதனால் அவர் கவிதைகளில் இசையுடன் கூடிய சப்தம் ஒலிக்காது.
சரி, கநாசுவை கவிதைக்காக ஏற்றுக்கொள்ளாதவர்கள் இருக்கட்டும் அவரை ஒரு விமர்சகராக ஏற்றுக்கொள்வார்களா? நிச்சயம் மாட்டார்கள். வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு வருவார்கள். ஏனென்றால், அவர் சிறந்த பத்துப் பேர்களுடைய படைப்புகளை இலக்கிய லிஸ்ட் மூலம் கொடுப்பார். அந்த லிஸ்டில் சிக்காதவர்கள் அவரை மோசமான விமர்சகராக தூற்றவும் செய்வார்கள். அவர் லிஸ்டில் எழுத்தாளர்கள் பெயர்கள் அடிக்கடி மாறும். முதலில் குறிப்பிட்ட பத்து பெயர்கள் பின்னால் குறிப்பிடும்போது எடுக்கப்பட்டு வேறு பெயர்கள் வெளிப்படும். வழக்கம்போல் நீக்கப்பட்ட எழுத்தாளர்கள் குறிப்பிடும் லிஸ்டில் க நா சு பெயரும் நீக்கப்பட்டிருக்கும்.
ஆனால் விமர்சனத்தைப் பொறுத்தவரை க நா சு முன் மாதிரியாகச் செயல்பட்டிருக்கிறார். அவருடைய ‘இலக்கிய விசாரம்’ , படித்திருக்கிறீர்களா புத்தகங்கள் புதுமாதிரியான முயற்சிகள். படித்திருக்கிறீர்களா என்ற புத்தகம் 1957 முதல் பதிப்பு வந்திருக்கிறது. தமிழில் அப்போது எழுதிக்கொண்டிருக்கிற பல படைப்பாளிகளை அறிமுகப்படுத்தியிருக்கிறார். அவர் அறிமுகப்படுத்திய படைப்பாளிகளை இங்கு உதாரணத்திற்காகக் குறிப்பிட விரும்புகிறேன். 1. புதுமைப்பித்தன் 2. தீபம் 3. ந சிதம்பர சுப்ரமணியன் 4. எஸ் வையாபுரிப்பிள்ளை 5. லா ச ராமாமிருதம் 6. எஸ். வி வி 7. வ வே ஸ÷ ஐயர் 8. யதுகிரி அம்மாள் 9. வ ரா 10. சங்கரராம் 11. ஏ கே செட்டியார் 12. தி ஜானகிராமன் 13 மு வரதராஜன் 14. தி செ சௌராஜன் 15. ஆர். ‘ண்முக சுந்தரம் 16. கு அழகிரிசாமி 17. பாரதியார் 18. கல்கி 19. பாரதி தாசன் 20. கு ப ராஜகோபாலன். உதாரணமாக அவர் இப் புத்தகத்தில் கல்கியைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்.
”நான் செவிடன், அதாவது சங்கீதத்தைப் பற்றிய வரையில் நான் செவிடன். அரைச் செவிடு, கால் செவிடு கூட இல்லை. முழுச்செவிடுதான். அப்படியிருந்தும் கல்கியின் தமிழ் இசை விவாதக் கச்சேரிகளை அதாவது அது பற்றிய கட்டுரைகளை என்னால் படித்து வெகுவாக ரஸிக்க முடிகிறது, ” என்று க நா சு குறிப்பிடுகிறார்.
க நா சு சொல்லித்தான் ‘எழுத்தில்’ விமர்சனத்தை சி சு செல்லப்பா துவங்கியவர். ஆனால் செல்லப்பா க நா சுவைச் சிறந்த விமர்சகராக கருதுவதில்லை. க நா சுவே தன் ரசனைக்கு ஏற்ற மாதிரி புத்தகங்களைப் படிப்பவர். அது குறித்து தனக்குத் தோன்றிய கருத்துக்களை நேர்மையாக வெளிப்படுத்துவார்.
1959 ஆம் ஆண்டு வெளிவந்த ‘இலக்கிய விசாரம்’ என்ற புத்தகத்தைப் படிக்கும்போது அதில் குறிப்பிட்ட பல வி‘யங்கள் எனக்கு ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது. கநாசு ஆங்கில, பிற மொழி சங்கேத வார்த்தைகள் வராமல் தமிழில் தனியாக விமர்சனம் வர வேண்டுமென்று குறிப்பிடுகிறார். அப் புத்தகத்தில் மணி, ராஜா என்ற இருவர் பேசுவதுபோல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் எழுதப்பட்ட இப் புத்தகம் 58þ59 ல் வந்துவிட்டது. 2003 ல் அப் புத்தகத்தை இப்போது எடுத்துப் படிக்கும்போது கூட ஆச்சரியமாக இருக்கிறது.கல்கியைப் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார். ‘கல்கி தன்னுடைய நாவல்கள் எதிலுமே எந்த இடத்திலும் நின்று இலக்கியக் கண்ணோட்டத்தில் எழுதியதில்லை. வாசகனுக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது, சம்பவத்தின் உச்ச நிலை எது, எங்கு கதைப்போக்கை அறுத்து வாசகனின் ஆவலைத் தூண்ட வேண்டுமென்பது அவருக்குத் தெரியும்,’ என்கிறார். அதேபோல், ஆர்வி, அகிலன் நாவல்களைப் பற்றி குறிப்பிடும்போது, ‘காதலை ஒரு கோட் ஸ்டாண்டாகக் கொண்டு அதிலே சம்பவங்கள் என்றும் பலதரப்பட்ட துணிகளை மாட்டி வைக்கிறார்கள்’ என்று குறிப்பிடுகிறார்.
சி சு செல்லப்பாவிற்கும், க நாசுவிற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. சிசுசெ மணிக்கொடி எழுத்தாளர்கள்தான் சிறந்தவர்கள் என்று ஸ்தாபிப்பதிலே நின்று விட்டார். ஆனால் க நா சு அப்படி அல்ல. அவர் மரணம் அடையும் சமயத்தில்கூட கௌதம சித்தார்த்தன், விக்ரமாதித்யன் போன்ற படைப்பாளிகளின் படைப்புகளைப் பாராட்டி கட்டுரை எழுதியிருக்கிறார்.பிடிக்காத படைப்புகளை கடுமையாக விமர்சனம் செய்தாலும் தனக்குப் பிடித்த படைப்புகளை மனதாரப் பாராட்டாமல் அவர் இருந்ததில்லை. அதனால்தான் கநாசு யார் என்பது சிலருக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கிறது. கநாசு விமர்சகராக பலருக்குத் தெரிய வந்தபிறகு பலருடைய வார்த்தைக் கணைகளையும் அவர் எதிர் கொள்ள வேண்டியிருந்தது. ‘இலக்கிய விசாரம்’, படித்திருக்கிறீர்களா முதலிய புத்தகங்களைப் படிக்கும்போது, இது மாதிரியான புத்தகங்களை இன்றைய சூழ்நிலையில் யாராவது தொடர வேண்டுமென்று தோன்றுகிறது. கநாசுவின் இதுமாதிரியான முயற்சியை அசோகமித்திரன் இன்றும் வேறுவிதமாகத் தொடருவதாகத் தோன்றுகிறது.
ஒரு படைப்பாளி என்ற முறையில் க நா சு ஓர் அபூர்வமான படைப்பாளியாகவும் திகழ்ந்திருக்கிறார். அசுர வேகத்தில் நாவல்கள், கவதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள், நாடகம் என்றெல்லாம் எழுதிக் குவித்திருக்கிறார். இப்படிச் செய்திருப்பவர், மற்ற படைப்பாளிகளைக் குறித்தம் நல்ல அபிப்பிராம் வைத்திருக்கிறார். புதுமைப்பித்தனையும், மௌனியையும் வெளி உலகுக்கு தெரியப் படுத்துவதில் க நாசு காட்டிய சிரத்தை அலாதியானது. இது இன்றைய தமிழ் சூழ்நிலையில் தமிழில் நடைபெறவில்லை என்பதை வருத்தத்துடன் கவினிக்க வேண்டும். இன்றைய படைப்பாளிகள் தான் மட்டும்தான் எழுதுவதாக நினைக்கிறார்கள்.
அவரை விமர்சகராக ஏற்க முடியாதவர்கள், கநாசு யார் என்று தான் கேட்பார்கள். சரி, அவரை நாவலாசிரியராக யாராவது ஏற்றுக் கொள்வார்களா?இன்று அவர் நாவல்களை யார் படிக்கிறார்கள். ஒரு சமயம் அவர் நாவல் அவரே புத்தகமாகக் கொண்டு வந்து விற்க முடியாமல், எடைக்குப் போட்டதாக கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் நாவல்கள் எதுவும் பத்திரிகையில் தொடராக வந்ததாகத் தெரியவில்லை.
‘சர்மாவின் உயில்’ என்ற நாவலை 1938 ல் ஒரு மாதத்தில் எழுதிக் காட்டுகிறேன் என்று புதுமைப்பித்தனிடம் சொல்லிவிட்டு சேலத்தில் மாடர்ன் ஹின்டு ஹோட்டலில்ஒரு அறை எடுத்துத் தங்கி எழுதியிருக்கிறார். பொதுவாக அவர் நாவலைப் பற்றி குறிப்பிடுவது ‘ஒரு நாவல் என்று வந்துவிட்டால், வாசகர்கள் பற்றிய நினைப்பு வருவதில்லை’ என்பது. ஒரு நாவல் இலக்கியமாக அமைவதும், அமையாமலிருப்பதும் படிப்பை வைத்து, சிந்தனைகளின் போக்கைப் பொறுத்து, மனோபாவத்தின் அளவில் அமைகிற வி‘யம் என்று குறிப்பிடுகிறார்.
பல நாவல்களை எழுதிச் சாதித்திருக்கும் க நாசுவை நாவலாசிரியராக மதிப்பிடுபவர்களும் உண்டு. அவரை நாவலாசிரியர் என்று குறிப்பிடாமலிருப்பவரும் உண்டு.
கநாசுவை இலக்கிய ராட்சசன் என்று குறிப்பிடலாமா என்றும் தோன்றுகிறது. அவர் எழுதாமல் விட்டு வைத்தது எது என்று என்னால் சொல்ல இயலவில்லை. அவர் மொழிபெயாப்பு என்ற துறையில் இறங்கி பல மாற்றுமொழிப் படைப்புகளை தமிழுக்குக் கொண்டு வந்துள்ளார். 622 பக்கம் கொண்ட கநாசு மொழிபெயர்த்த உலக இலக்கியம் என்ற பெயரில் அவர் மொழிபெயர்த்த நாவல்களைத் தொகுத்து சந்தியா பதிப்பகம் ஒரு புத்தகமாகக் கொண்டு வந்துள்ளது. பார்த்தால் நம்ப முடியவில்லை.
வேறு மொழியில் படிக்கும் ஒரு புத்தகத்தை அப்படியே உள் வாங்கிக்கொண்டு தமிழில் எழுத வேண்டுமென்பதுதான் க நாசுவின் பாணி. வழக்கம்போல் இதையும் ஏற்றுக் கொள்ளாதவர்கள் நம்மிடையே உண்டு. அவர்களுக்கெல்லாம் கநாசு யார் என்ற கேள்விதான் உருவாகும்.
இந்தக் கேள்வியை யாரிடம் கேட்க வேண்டுமென்று தெரியவிலல்லை. தமிழ்நாட்டில் மொத்த ஜனத்தொகையில் க நா சுவைத் தெரிந்தவர்கள் ஆயிரக்கணக்கான பேர்கள்தான் இருப்பார்கள். ஏன் நூற்றுக்கணக்கான பேர்களும் இருக்கலாம். அவர்கள் பெரும்பாலும் தீவிர இலக்கியத்தில் ஈடுபடபவர்கள் என்று நம்பலாம். ஏன் அவர்களுக்குக் கூட எது மாதிரியான க.நா.சுவைத் தெரியும் என்பது தெரியவில்லை. பல ஆண்டுகளுக்குமுன் என் தந்தையார் சொன்னது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. ” க.நா.சு என்ற ஒருத்தர் இருக்காரே, அவர் எழுதறதெல்லாம் படிக்க போரடிக்கும்.” எனக்கு ஒரே ஆச்சரியம். க.நா.சுவைப் பற்றி குறிப்பிட்டது. ஏன் ‘போர்’ என்ற காரணத்தையும், எந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு அவர் போர் என்று குறிப்பிட்டார் என்பதெல்லாம் எனக்குத் தெரியவில்லை. இன்று அவர் அன்று அப்படிச் சொன்னதை ஞாபகப்படுத்தும்போது, அவருக்கு அப்படிச் சொன்னது ஞாபகத்திற்கு வரவில்லை. எனக்கோ அவர் கநாசுவைப் பற்றி அப்படிக் குறிப்பிட்டதால்தான் இந்த நிகழ்ச்சி ஞாபகத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. சரி, க நா சு என்பவர் யார்? எந்தப் புத்தகம் படித்துவிட்டு அவரால் ஈர்க்கப்பட்டேன். இந்தக் கேள்வி சில மணி நேரங்களாக என்னுள் சுழன்று சுழன்று ஒலித்துக்கொண்டிரக்கிறது.
க நா சு எழுதியதெல்லாம் எனக்குப் பிடிக்குமென்று சொன்னால், நான் அவருடைய பரம ரசிகனாகி விடுவேன். இதை க நா சுவே விரும்ப மாட்டார். மற்ற படைப்பாளிகளின் படைப்புகளை அவர் எப்படி விமர்சிக்கிறாரோ அதேபோல் அவர் தன்னைப் பற்றியும் விமர்சித்துக் கொள்வார். தன்னால் சரியாக எழுத முடியாத படைப்புகளை இலக்கியத் தரமாகச் சொல்ல முடியாவிட்டாலும், பத்திரிகைத் தனமான முயற்சி என்று குறிப்பிட்டிருக்கிறார்.