சில குறிப்புகள் / 5
ஒவ்வொரு முறை ரங்கநாதன் தெருவைப் பார்க்கும்போதெல்லாம் அங்கே வழிந்தோடும் கூட்ட நெரிசல் எனக்குத் திகைப்பை ஏற்படுத்தும். அந்தத் தெருவில் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்குச் செல்ல பாடாதபாடு பட வேண்டியிருக்கும். தெரு முனையிலிருந்து வியாபாரக் கூச்சல் காதைப் பிளக்கும்படி கேட்டுக்கொண்டிருக்கும். திருவிழாக்கள் போது அந்தத் தெருவே வேண்டாமென்று தோன்றும். எனக்கு கூட்டமென்றால் ஒருவித அருவெறுப்பு, பயம். 1970 ஆண்டிலிருந்து ரங்கநாதன் தெருவைப் பார்த்துக்கொண்டு வருபவன். 70-க்களில் இருந்த ரங்கநாதன் தெருவும் 2000 ல் தென்படும் ரங்கநாதன் தெருவைப் பார்க்கும்போதும் அதன் உருவம் எப்படி மாறிப்போய்விட்டதென்ற அச்சம் இருந்துகொண்டிருக்கும்.
சரவணா, ஜெயசந்திரன், ரத்னா என்ற பெயர்களில் வியாபாரத் தளங்கள் விண்ணை முட்டும்படி கட்டப்பட்டு அங்கே கட்டுப்படுத்த முடியாத கூட்ட நெரிசலைப் பார்த்து நடுங்கியிருக்கிறேன். உள்ளே போய் ஒரு பொருளை வாங்கிக்கொண்டு வெளியே வருவதற்குள் படாதபாடு பட வேண்டியிருக்கும். தெருவில் டிவிக்களில் கடைகளில் வாசல்களில் கடையின் விளம்பரங்களை சத்தம்போட்டபடியே விளம்பரப் படுத்தியபடி இருக்கும். என் நண்பர் பதி அவர்கள் என்னிடம் லிப்கோ கடைக்குச் சென்று ரகுவம்சம் என்ற புத்தகத்தை வாங்கி அவருக்கு அனுப்பச் சொல்லி போனில் தினமும் வற்புறுத்திக்கொண்டிருப்பார். அலுவலகம் முடிந்து வீடு வரும்போது மணி ஏழுமணி மேல் ஆகிவிடும் என்பதாலும், ரங்கநாதன் தெருவிற்குள் நுழைய வேண்டுமே என்ற அலுப்பு காரணத்தாலும் என்னால் அங்கு போகவே முடிவதில்லை. ஏன்என்றால் ரங்கநாதன் தெருவில் தென்படும் சகிக்க முடியாத கூட்டம்தான் காரணம்.
சில ஆண்டுகளுக்கு முன் இங்கேதான் ஒரு கட்டிடத்தின் இடுக்கில் முன்றில் என்ற பெயரில் இலக்கிய விற்பனைக் கடை ஒன்று இருந்தது. வாசலில் நடந்து செல்லும் கூட்டத்தின் ஒரு சிறு துளி வந்திருந்தாலும், இலக்கியம் வளர்ந்திருக்கும். இலக்கியம் என்பதால், யாரும் உள்ளே கூட எட்டிப் பார்க்க மாட்டார்கள். மகாதேவன் என்ற நண்பர் அந்தக் கடையை நடத்தி படாதபாடு பட்டார்.
வாசலில் கூக்குரலிட்டபடி நடமாடிக்கொண்டிருக்கும் நடைபாதை வியாபாரிகளின் கூட்டமும் அங்கு அதிகம். ரங்கநாதன் தெருவில் நுழைந்தால் இடது பக்கத்தில் உள்ள இன்னொரு தெருவான ராமநாதன் தெரு வழியாக வெளியேறிவிடுவேன். கூட்டத்திலிருந்து தப்பிப்பதற்காக.
வாகனங்கள் எடுத்துக்கொண்டு நுழைய முடியாத இடம் ரங்கநாதன் தெரு. அப்படிப்பட்ட இடத்தில்தான் தீ விபத்து. எப்படி ஏற்பட்டது? ஏன் ஏற்பட்டது? என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை இல்லை. ரங்கநாதன் தெருவில் நுழையும்போதே நீண்ட உயரமான கட்டிடங்களைப் பார்க்கும்போது தீ விபத்தில் சிக்கிக் கொண்டால் எப்படி எல்லோரும் தப்பிப்பார்கள் என்ற அச்சம் இருந்துகொண்டிருக்கும்.
சரவணா ஸ்டோர்ஸில் நடந்த தீ விபத்து எல்லோரையும் சில மணிநேரங்களாவது அச்சத்திற்கு உள்ளாக்கியிருக்கும். இந்தத் தீ விபத்தால் ஆறுமுகநேரியைச் சேர்ந்த 24 வயது நிரம்பிய ராமஜெயம் என்பவரும், திருநெல்வேலி ஆலங்குளம் கீழ்பாவூரைச் சேர்ந்த 27 வயது நிரம்பிய கோட்டைச்சாமி என்பவரும் புகை மண்டலத்தில் மயங்கி தீயில் கருகி எலும்புக் கூடாகினர். இதை ஒரு செய்தியாகப் படிக்கிறோம். ஆனால் அவர்களுடைய உறவினர்கள் எந்தப் பாடுபட்டிருப்பார்கள். மரணம் பற்றிய செய்திகளை பலவிதமாகக் கேட்டு கேட்டு மனிதர்கள் மரத்துப் போய்விடுகிறார்கள் என்றே தோன்றுகிறது. ஆவி ரூபத்தில் ராமஜெயமும், கோட்டைச்சாமியும் உலாவிக்கொண்டிருப்பதாக வதந்தி பின்னாளில் வந்தாலும் வரலாம்.
இந்தச் செய்தியால், தொடர்ந்து தீ விபத்தால் ஏற்படும் ஆபத்துக்கள் பற்றிய செய்தியெல்லாம் என் மனதில் தோன்றாமலில்லை. பெரும்பாலும் தீ விபத்தால் குடிசைப்பகுதி எரிந்து சாம்பலாகிவிடும். உயிர் சேதம் இல்லாமலும் இது மாதிரி விபத்தெல்லாம் நடக்கும். இதெல்லாம் தயாரிக்கப்பட்ட தீ விபத்தாக எனக்குத் தோன்றும். தி நகர் உஸ்மான் சாலையில் அப்படி ஒரு விபத்து ஏற்பட்டு, அங்கு அரசாங்கக் கட்டிடம் ஒன்று உருவானது. ஏன் மூர்மார்க்கெட் அதுமாதிரிதான் தீ விபத்தால் எரிந்து புதிய கட்டிடம் உருவாகக் காரணமாகியது? ஆனால் எல்லா தீ விபத்துக்களும் தயாரிக்கப்பட்ட தீ விபத்தாகக் கருத முடியாது. ஏன் திருச்சியில் ஒரு கல்யாண மண்டபத்தில் ஒரு தீ விபத்து ஏற்பட்டு, பலர் கருகிப் போய்விட்டார்கள். என் அலுவலக நண்பரின் உறவினர்களும் அதில் அடக்கம். அவன் பதவி உயர்வு பெற்ற சமயத்தில் இது மாதிரியான சம்பவம் நடந்தது. எனக்கு அது நல்ல சகுனமாகத் தோன்றவில்லை. நண்பனுக்கு அதன் பின் பலவிதமான சோதனைகள். வேலையை விட்டுவிடலாம் என்ற எண்ணம் அவனுக்கு ஏற்பட்டது. மேலும் ஒரு தருணத்தில் அவனுக்கு விபத்து ஏற்பட்டு காலை ஒடித்துக்கொண்டு பல மாதங்கள் அலுவலகம் போகாமலிருந்தான்.அது தயாரிக்கப்பட்ட தீ விபத்தாக எனக்குத் தோன்றவில்லை.
எனக்குத் தெரிந்து கும்பகோணத்தில் ஒரு பள்ளிக்கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், பல குழந்தைகள் கருகி விட்டார்கள். அந்தத் தீ விபத்து கொடூரமானது. அந்தச் செய்தியைக் கேட்ட மாத்திரத்தில் என் அலுவலகத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் கண்ணீர் விட்டு அழுதார். அந்தச் சமயத்தில் குடியரசு தலைவராக இருந்த டாக்டர் அப்தூல்கலாம் ஒரு கண்ணீர் கவிதையை தினமணியில் எழுதியிருந்தார். அதைப் படித்த எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பொதுவான விஷயத்தைக் கவிதையாக மாற்றுவது சிரமமானது. அதைத் திறன்பட அவர் எழுதியிருந்தார். அதை நவீன விருட்சத்தில் மீள் பிரசுரம் செய்தேன். ஒரு செய்தியைப் படிக்கிறோம் அல்லது கேள்விபடுகிறோம். அந்தச் செய்தி எந்த அளவிற்கு கலை ரூபம் பெறுகிறது என்பது சவாலான விஷயம். ரங்கநாதன் தெருவும் தீ விபத்தும் என்ற தலைப்பில் உடனடியாக கவிதை எழுத முடியுமா? அது எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்படி கலை ரூபமாக மாறுமா என்பது சந்தேகத்திற்குரிய ஒன்று.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் எழுதிய கவிதையை இங்கு தருகிறேன்.
அன்று ஏன் கதிரவன் கடும்கரும் மேகங்களை ஊடுருவவில்லை அன்று ஏன் குடந்தைத் தென்றல் கனலாக மாறியது அன்று ஏன் தாயுள்ளங்கள் பதறித் துடித்தன இளஞ்சிறார்கள் அக்னித் தேவனின் சினத்தில் தத்தளித்தனர் அன்று ஏன் அச்சிறார்களை இறைவன் அக்னிக் குஞ்சுகளாகப் பரணமித்தான்? இறைவா இதுவோ கொடுமையிலும் கொடுமை வளர்ந்து கல்விகற்று பணிசெய்யும் பருவத்தில் பழுத்த வயதில் மறைந்த தாய்தந்தையரை பூமிக்குக் கொடுப்பர் இன்றோ காண்பது கொடுமையிலும் கொடுமை பாலர்களை ஒவ்வொன்றாய் தந்தையர் பூமியில் புதைக்கும் காட்சி தா ய்கண்ட கனவு, தந்தை கண்ட கனவு, சிறார்கள் கண்ட கனவு எல்லாமே அக்னியின் வேகத்தில் கரிக்குஞ்சாய் பரிணமித்தன இறைவா குழந்தைகள் உன் படைப்பு – அவர்கள் உன்னிடமே அடைக்கலத்தில் அடைந்தார்கள் உன் அருளால் அக் குழந்தைகள் எங்கிருப்பினும் நன்றிருக்க கையேந்தி பிரார்த்திக்கிறோம் கையேந்தி பிரார்த்திக்கிறோம் இறைவா உன் அருளால் – தம் குழந்தைகளை இழந்துதவிக்கின்ற பெற்றோருக்கு மன அமைதி பாக்கியத்தை மறுபடியும் வாழவிலருள் – அவர்கள் எப்பொழுதும் உனை நம்பி அமைதி வாழ்வு வாழ பிரார்திக்கிறேன்.
துயரத்தின் குரல் என்ற தலைப்பில் நானும் கும்பகோணத்து விபத்தையும், சுனாமியை வைத்தும் ஒரு கவிதை எழுதினேன். துயரத்தின் குரலை நீங்கள் அறிந்ததுண்டோ தீயின் நாக்குகளின் பிடியில் கோரவிபத்தில் பலியானகும்பகோணத்துச் சிறார்களின் துயரத்தின் குரல்களைப் பலவிதமாய் உணர்ந்துகொண்டேன். 2004 ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் பத்திரிகைகள் விதவிதமாய்ச் செய்திகளைப் படங்களுடன் வெளியிட்டு அள்ளிக் குவித்தன கோரக் காட்சிகளை டிவியோ சோக இசையின் சேர்க்கையுடன் பதறித் துடிக்கும் காட்சிகளை ஒளிபரப்பியது ஆண்டு முடியும் தறுவாயில் இன்னொன்றும் கண்டேன் விசாலமான கடற்கரைத் தெருவில் இருசக்கர வாகன ஓட்டியா யிருந்தபோது கடலே கடலே என்ற பரவசப்பட்டதுண்டு துளியாய் நானிருக்கிறேன், பல துளிகளாய் நீயிருக்கிறாய்…என்றெல்லாம் பாடிக்கொண்டுபோன காலமுமுண்டு ஆண்டின் இறுதிக்குள் பொங்கி எழுந்த கடலன்னை சுனாமியின் வலைவீச்சில் வீழ்ந்து கடலரக்கியாய் உருமாறி தன் கோர நாக்குகளை நீட்டி அள்ளி அழைத்துக்கொண்டாள் ஆயிரக்கணக்கான உயிர்களை திரும்பவும் பத்திரிகைகள் விதவிதமாய்ச் செய்திகளைப் படங்களுடன் வெளியிட்டு அள்ளிக் குவித்தன கோரக் காட்சிகளை டிவியோ சோக இசையின் சேர்க்கையுடன் பதறித் துடிக்கும் காட்சிகளை ஒளிபரப்பிய வண்ணம் உள்ளது பார்க்குமிடமெல்லாம் தெருவில் கருப்புநிற போஸ்டர்கள் துக்கத்தைப் பறை சாற்றின மரணமும் சொற்களில் தங்கிவிட்டதோ?
பொதுவாக நிகழும் நிகழ்ச்சியை எந்த அளவிற்கு செயற்கைத் தன்மை கூடாமல் கவிதையாக மாற்றுவது என்பது ஒரு சவாலான விஷயம்.