ஒரு புத்தகத்தை ஆழமாகப் படிப்பது என்பது இல்லாமல் போய்விடும்போல் தோன்றுகிறது. அதற்கு முக்கிய காரணம் நேரம் கிடைக்காமல் போவது. தற்போது புத்தகங்களைப் புரட்டிப் பார்க்கும் நேரமே கிடைக்கிறது. அப்படிப் புரட்டிப் பார்க்கும்போது அந்தப் புத்தகத்தைப் பற்றி சிலவற்றை மட்டுமே குறிப்பிட வேண்டும்போல் தோன்றுகிறது. மேலும் புத்தகம் படிக்கும்போது இன்னார் எழுதியுள்ளார் என்பதைப் பார்க்கக் கூடாது. அப்படிப் பார்க்க ஆரம்பித்தால், புத்தகத்தை விட புத்தகம் எழுதியவர்க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும்படி ஆகிவிடும். தமிழைப் பொறுத்தவரை எழுத்தாளர்களை உபதேசிப்பவர்களாக மாற்றி விடுகிறோம். பின் அவர்கள் எழுதுவது, பேசுவதெல்லாம் பிரமிப்பு கலந்த மரியாதையுடன் வரவேற்கிறோம். இந்த பிரமிப்பை முதலில் உடைக்க வேண்டும்.
ஒரு புத்தகக் கண்காட்சியின்போது, சமீபத்தில் அதிகமாக எழுதி புகழ்பெற்ற ஒரு எழுத்தாளர் பின்னால் ஒருவர் வால் மாதிரி தொடர்ந்து சென்றதைப் பார்த்தேன். என் பக்கத்தில் இருந்தவர், அது அவருடைய வாசகர் என்றார். என்னைப் பொறுத்தவரை ஒரு வாசகன் என்பவன் எழுத்தாளனை விட மேலானவன். அல்லது அவனுக்குச் சமமானவன். சினிமாவைப் பொறுத்தவரை நடிகர்கள், நடிகைகளுக்கு ரசிகர்கள் இருப்பார்கள். அவர்களெல்லாம் அபிமானிகள். எனக்குத் தெரிந்து இந்த அபிமானிகள் ஒரு குறிப்பிட்ட நடிகரின் சினிமாவை மட்டும் பார்த்து சிலாகிப்பார்கள். அதேபோல் அரசியல் தலைவர்களுக்கும் இதுமாதிரி அபிமானிகள் உண்டு. இந்த அபிமானிகள் சினிமாவில் அதிகமாக இருந்தால், சினிமா கெட்டுப்போய்விடும். அரசியலில் அதிகமாக இருந்தால், அரசியல் கெட்டுப்போய்விடும்.
ஆனால் ஒரு வாசகன் என்பவன் அபிமானியாக மாறக்கூடாது. ஒரு எழுத்தைப் படிக்கும்போது அந்த எழுத்துமீது அபிமானம் ஏற்படுவதைத் தடுக்க முடியாது. ஆனால் அதுவே அந்த எழுத்தாளன் மீது அன்பு செலுத்தும் வெறியாக மாறிவிடக்கூடாது. அந்த எழுத்தாளன் புத்தகத்தை மட்டும் படித்துவிட்டு, மற்ற எழுத்தாளர்களை புறம் தள்ளுவது, அல்லது கேவலமாகப் பார்ப்பது போன்ற விஷயங்களை நாம் ஒதுக்க வேண்டும்.
ஒரு வாசகனாக இருப்பவன் எல்லாவற்றையும் சமஅளவில் பார்ப்பதை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
ஆர்.வி சுப்பிரமணியன் என்கிற என் நண்பர் ஒருவர், பி எப் அலுவலகத்தில் பணிபுரிந்து பதவி ஓய்வு பெற்றவர். திருமணம் செய்து கொள்ளாதவர். புத்தகம் படிப்பதில் ஆர்வம் கொண்டவர். 1979 வாக்கில் சில கவிதைகளை எழுதியவர். ஆனால் தான் எழுதிய கவிதைகளை அவர் எப்போதும் சிலாகித்துப் பேசாதவர்.
ஆதிநாதன் என்ற பெயரில் அவர் எழுதிய கவிதை ஒன்றை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். பிப்ரவரி – மே 1979 ஆம் ஆண்டு அவர் எழுதிய கவிதை ஒன்று ழ என்ற சிற்றேட்டில் பிரசுரம் ஆனது. அதை இங்கு குறிப்பிடுகிறேன்.
தோட்டம் வெறுமையாய்க் கிடந்தது.
வேலிக்கான முட்புதரில் கொள்ளையாய் பூக்கள்
பட்டாளத்துச் சிப்பாய்க்கு வருவாயுயர்ந்தது
கூட்டான குடும்பம் குந்தித் தின்கிறது.
ஏடுகள் நிறைந்த கல்வியால்
குழந்தைகளின் சிந்தனை மழுங்கிப் போயிற்று
உழைப்பில்லை காசில்லை கனவுகள் நிறைந்தன
கருணையில்லை ஊரெல்லாம் கடவுள்கள்
திருடர் வளர்க்கும் நாய்களின் குரைப்பில்
பயப்படும் பிச்சைக்காரர்கள்
சந்துத் திருப்பங்களில் காந்தி சிலைகள்
வீட்டு விருந்தில் மதுக்குப்பிகள்
மிகவும் எண்ணிய நல்லவர்கள்
ஊர் கெட்டது போகட்டும் என்று
உவமைக்கான
அரிச்சந்திரன் கெடாதிருக்க
இடுகாட்டில் குடிவைத்தார்கள்.
காட்டமான கவிதை. எத்தனை முரண்கள் மற்றும் போலித்தனம்.
எழுத்தையும் எழுத்தாளனையும் பிரித்து வைக்க வேண்டியதின் அவசியம் அழகாகச் சொன்னீர்கள். செயல் படுத்துவது சுலபமில்லை எனினும் முடிந்தவரை கடைபிடித்தால் நல்ல வாசிப்பனுபவம் கிடைக்கும்.
அனுஜன்யா