வைரமோதிரம்

தாம்பரத்திலிருந்து வரும் போக்குவரத்து வண்டியில்தான் அந்தப் பெண் குரோம்பேட்டையில் ஏறிக்கொண்டாள். முகமெல்லாம் மிணுமிணுக்க புத்தாடை அணிந்திருந்தாள். கண்களில் ஏகப்பட்ட மகிழ்ச்சி. அவள் உடை உடுத்தியிருக்கும் விதத்தை பஸ்ஸில் இருந்த சிலரும் ரசித்துக்கொண்டி ருந்தார்கள். இடது கை மோதிர விரலில் வைர மோதிரமொன்றை அணிந்திருந்தாள். தாங்க முடியாத ஜ்வலிப்புடன் அது காட்சி அளித்துக்கொண்டிருந்தது.
வைரமோதிரத்தின் ஜ்வலிப்பு அவள் நிறத்தை இன்னும் மெருகூட்டிக் கொண்டிருந்தது. அவளுக்குப் போனவாரம்தான், திருமணம் நிச்சயம் ஆனது. அந்தச் சந்தோஷத்தை அவளுடைய வகுப்புத் தோழி ஒருவளுடன் பகிர்ந்துகொள்ளத்தான் குரோம்பேட்டையிலிருந்து தி.நகர் வரைச் செல்லும் வண்டியில் புறப்பட்டுச் சென்றுகொண்டிருக்கிறாள். தி நகரில் இருக்கும் அவளுடைய நெருங்கிய தோழி என்ன காரணத்தாலோ அவள் திருமணம் நிச்சயம் செய்த நாளன்று வர முடியவில்லை.
பையில் கல்யாண நிச்சயம் ஆன புகைப்பட ஆல்பமும், ஒரு சீடியும் வைத்திருக்கிறாள். புறப்படும்போது அம்மாவிடம் அடுத்தநாள் வருவதாகச் சொல்லியிருந்தாள்.
பல மாதங்கள் முயற்சி செய்து இந்த வரன் கிடைத்ததால், அவள் அம்மாவிற்கும் மகிழ்ச்சி. அவளைப் போகும்படி சொன்னாள்.
பஸ்ஸில் பெரிய கூட்டம் இல்லாவிட்டாலும், கூட்டமே இல்லை என்றும் சொல்லிவிட முடியாது.
அவள் இருந்த இருக்கையில் அவள் மட்டும்தான் அமர்ந்திருந்தாள். பஸ் நேராகப் பல்லாவரத்திற்குப் போய் நின்றது.
வயதான மூதாட்டி ஒருவள் ஏறி இவள் பக்கத்தில் அமர்ந்தாள்.
மூதாட்டியைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. 75 வயதுக்கு மேலிருக்கும். இந்த வண்டியில் கிளம்பி எங்கே சென்று கொண்டிருக்கிறாளோ?
“உன் பேரென்னம்மா?” என்றாள் மூதாட்டி, அவளைப் பார்த்து.
“சுமதி.”
“புதுப்பெண் மாதிரி இருக்கியே?”
“ஆமாம்.”
“அப்படியா..நல்ல விஷயம். வாழ்த்துகள். எப்பக் கல்யாணம்?”
“செப்டம்பர் மாதம்.”
“மாப்பிள்ளை என்ன செய்யறார்?”
“சாஃப்ட்வேர் கம்பெனியில இருக்காரு?”
“நல்ல சம்பளமா?”
“உம்….உம்…”
“நீ என்னப் படிச்சிருக்கே?”
“பிசினஸ் மேனேஜ்மென்ட்.”
“வேலைக்கு எதுவும் போகலையா?”
“வேண்டாம்னு சொல்லிட்டார்.”
“ஏன்? இரண்டு பேர் சம்பாதிச்சா நல்லதுதானே?”
“நான் ஒருத்தன் சம்பாதிக்கிறது போதும்னு
“நான் ஒருத்தன் சம்பாதிக்கிறது போதும்னு சொல்லிட்டார். காலையில போனா ராத்திரிதான் அவர் வருவார். அப்ப வீட்டில மனைவின்னு யாராவது இருக்கணும்.”
“டெய்லி நீ அவரோடு பேசறியா?”
“தினம் இரண்டு மணி நேரம் பேசறோம்.”
“யார் செலவு?”
“அவர் செலவுதான்.”
“பரவாயில்லை. அந்தக் காலத்துல நாங்களெல்லாம் ஒருத்தரை ஒருத்தர் கூடப் பாத்துக்க முடியாது.”
“கையில என்ன? வைர மோதிரமா?”
“ஆமாம். அவர் வீட்டில போட்டது. போன புதன்கிழமைதான் எங்க பெட்ரோத்தல் நடந்தது. அன்னிக்குப் போட்டது?”
“பணக்காரர்களா?”
“மிடில் க்ளாஸ்.”
வண்டி மெதுவாக இன்னும் சில இடங்களில் நின்று நின்று போய்க்கொண்டிருந்தது. சுமதி தன் கற்பனையில் மூழ்கத் துவங்கிவிட்டாள். மூதாட்டியுடன் பேசுவதைக் குறைத்துக்கொண்டு, ஷ்யாமுடன் இன்று என்ன பேசலாமென்ற யோசனைக்குச் சென்று விட்டாள். வயது அதிகம் காரணமாக மூதாட்டியும் சற்றுக் கண் அயர ஆரம்பித்தாள்.
கற்பனை வேகத்தில் சுமதி தன் நினைவே இல்லாமல்தான் இருந்துகொண்டிருந்தாள். ஷ்யாம் தன்னைப் பெண் பார்க்க வந்ததும், பிறகு இருவரும் தனி அறையில் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்ததும் ஒரு கனவுபோல் அவளுக்குத் தோன்றியது. ஷ்யாம் வீட்டில் விருப்பம் தெரிவித்துப் போன் செய்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. அவளுக்கு மட்டுமல்ல. அம்மாவிற்கும். ஷ்யாமைப் போனில் கூப்பிட்டு “தாங்ஸ்+ சொன்னாள்.
யாரோ அவசரம் அவசரமாக பஸ்ஸிலிருந்து இறங்குவது போலத் தோன்றியது. அப்போது லேசாகத் தன்னை இடித்துக்கொண்டு யாரோ சென்றதுபோல் தோன்றியது.
“ஷ்யாம் உண்மையிலேயே ஒரு லட்சணமான பையன்.”
மூதாட்டி திடீரென்று விழித்துக்கொண்டாள். சுமதியைப் பார்த்து, “ஒரு கெட்ட சொப்பனம்,” என்று கூறியவள், “ஹோ,” என்று அலற ஆரம்பித்தாள்.
சுமதி பதட்டத்துடன்,”என்ன?” என்று கேட்டாள்.
“உன் வைர மோதிரம்,” என்றாள் மூதாட்டி சத்தத்துடன்.
சுமதி தன் விரலைப் பார்த்து, மூர்ச்சை ஆகி விழுந்து விட்டாள். அவள் விரல் அறுந்து சீட்டுக்குக் கீழே கிடந்தது. அதிலிருந்த வைர மோதிரத்தைக் காணவில்லை. துண்டுப்பட்ட விரலிலிருந்து ரத்தப் பெருக்கு ஓடிக்கொண்டிருந்தது.
(‘ராம் காலனி’ என்ற சிறுகதைத் தொகுதியிலிருந்து எடுக்கப்பட்ட கதை. விருட்சம் வெளியீடாக வந்துள்ள அப்புத்தகத்தின் விலை ரூ.60)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன