அழகியசிங்கர்
ஒரு வழியாக 40வது சென்னைப் புத்தகக் காட்சி நிறைவு அடைந்து விட்டது. ஆரம்பிக்கும்போது எதிர்பாராத அப்பாவின் மரணம் என்னை இதில் கலந்துகொள்ள முடியாமல் செய்து விட்டது. கிருபானந்தன் என்ற நண்பர் மூலம் சிறப்பாகவே நடந்து முடிந்து விட்டது. இன்னும் பல நண்பர்கள் உதவி செய்தார்கள். புத்தகக் காட்சி யில் கலந்துகொண்ட நண்பர்களுக்கு நான் மதிப்பெண்கள் வழங்குவது வழக்கம். அந்த வழியில் கீழ்க்கண்டவாறு மதிப்பெண்கள் வழங்குகிறேன் :
கிருபானந்தன் 101%
பிரபு மயிலாடுதுறை 55%
ஜீவா 55%
கல்லூரி நண்பர்
சுரேஷ் 90%
சுந்தர்ராஜன் 60%
வேம்பு 15%
பெருந்தேவி 2%
அழகியசிங்கர் 10%
பாயின்ட் ஆப் சேல்ஸ் மெஷின் ரொம்ப உபயோகமாக இருந்தது. விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாகவும், சாதாரண நாட்களில் கூட்டம் குறைவாகவும் இருந்தது. ஏர் இந்தியாவில் பணிபுரிந்து ஓய்வுப்பெற்றவர் எங்களிடம் புத்தகங்கள் வாங்கி எடுத்துக்கொண்டு போகாமல் விட்டுவிட்டுச் சென்று விட்டார். நாங்களும் அவருடைய தொலைபேசி எண்ணைக் குறித்துக்கொள்ளாமல் விட்டுவிட்டோம்.
முதல் இரண்டு மூன்று நாட்கள் கூட்டங்கள் நடத்தினோம். பின் போரடித்து விட்டது. இந்த முறை கிருபானந்தன் நீட்டாக இடத்தை பயன்படுத்தி உள்ளார். கசாமுசா இல்லை. ஸ்டில் ராக்ஸ் எல்லாம் நன்றாகப் பயன்படுத்தி உள்ளார். இடம் விஸ்தாரமாக இருந்தது. புத்தகங்கள் பார்வையில் படும்படி இருந்தது. எப்போதும் புத்தகம் வைத்திருக்கும் இடம் குழப்பமாக இருக்கும். லாப்டாப் எடுத்துக்கொண்டு வந்து விற்பனையையும் குறித்துக்கொண்டு வந்துள்ளார்.
********
புத்தகம் வாங்க வந்த வழக்கறிஞர் ஒருவரிடம் ஜல்லிக்கட்டு பற்றி பேசிக்கொண்டிருந்தேன். அவர் சொன்ன கருத்தை நானும் ஆமோதிக்கிறேன். ‘முதலமைச்சரும், பிரதமரும் நினைத்தால் எந்தவித எதிர்ப்பின்றியும் இந்தப் பிரச்சினைய தீர்க்கலாம்’ என்று. கேள்விப்படாத கூட்டமாக உள்ளது மெரினாவில் கூடிய கூட்டம். தலைவர் என்று இல்லாமல் கூட்டு முயற்சியில் இதை சாதிக்க முடியும் என்பதை இளைஞர்கள் நிரூபித்துள்ளார்கள்.
ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்குவது என்பதை கற்பனைசெய்து பார்க்க முடியாத காட்சியாக இருக்கும். துள்ளும் காளைகள், ஓடிப்பிடித்து அடக்க முயற்சி செய்ய விழையும் இளைஞர்கள், அதை ரசிக்க கூட்டமாய் கூடும் கூட்டம்.
புத்தகக் காட்சியும் ஜல்லிக் கட்டு மாதிரிதான். கூட்டம் கூட்டமாக வரும் புத்தக விரும்பிகள் மனது வைத்தால் ஒரு பார்வை பார்த்தால் புத்தகமெல்லாம் விற்றுத் தீர்ந்து விடும்.
*********
நேற்று எழுத்தாளர் ராமகிருஷ்ணன் முன்னிலையில் படைப்பாளிகள் பலர் ஒன்று சேர்ந்து சிவன் பூங்காவில் ஜல்லிக் கட்டு நடைபெற போராடும் இளைஞர்களுக்கு ஆதரவு தரக் கூடினோம். மாலை ஐந்து மணிக்கு. ராமகிருஷ்ணன் ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டால், முழுவதும் அது குறித்து பல விவரங்களைச் சேகரித்துப் பேசுவார். ஜல்லிக்கட்டு விஷயத்திலும் அப்படித்தான். பலர் கலந்துகொண்ட இக் கூட்டம் சிறப்பாக நடந்தது. தினமும் யோக சொல்லிக்கொள்ளும் ஒரு கூடத்தில் அமர்ந்துகொண்டு விவாதித்தோம். எனக்கு ஜல்லிக்கட்டு பற்றி ஒன்றும் தெரியாது. அது வீர விளையாட்டா விபரீத விளையாட்டா என்பது கூடத் தெரியாது. சி சு செல்லப்பா வாடிவாசல் என்ற சிறிய நாவல் எழுதியிருக்கிறார் என்பதுதான் தெரியும். ஆங்கிலத்தில் ஹெமிங்வே எழுதிய புத்தகம் கூட சிறப்பாக இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதை இப்போது எடுத்துப் படிக்க வேண்டுமென்று தோன்றுகிறது. தொடர்ந்து அந்த இடத்தில் கூட்டம் ஏற்பாடு செய்யலாம். வேடியப்பன்தான் ஏற்பாடு செய்ய வேண்டும்.
***********
நான் எப்போதும் புத்தகக் காட்சி முடிந்த அடுத்தாநாள்தான் புத்தகங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு வருவேன். 20ஆம் தேதி கடைஅடைப்பு. வேன்கள் ஓடாது என்ற நிலையில் திகைத்தேன். ஆனால் எனக்கு எப்போதும் உதவி செய்யும் வேன் டிரைவர் ஒருவரைக் கூப்பிட்டேன். புத்தகங்களையும் ராக்ûஸயும் எடுத்து வர உதவி செய்தார். சோனி காமெராவில் வழக்கம்போல் நண்பர்களைப் படம் பிடித்திருக்கிறேன். ஆனால் காமெராவிலிருந்து இந்த கம்ப்யூட்டருக்கும் மாற்றும் வித்தை தெரியவில்லை.