ஆறாவது அறிவு

கிழக்கு மேற்காய் வடக்கு தெற்காய்
நேர்க் கோட்டில் சில கணங்கள்

வளைந்து திரும்பி,
இராட்டினக்குதிரை போல்
உயர்ந்தும் தாழ்ந்தும் சில கணங்கள்

கைக்கெட்டும் தூரத்தில்
கைக்கெட்டா கனவொன்றைப் போல்
பறந்து கொண்டிருந்த பருந்தினை

விடாமல் பின்தொடர்ந்தது
அங்குல இடைவெளியில்
இரண்டாம் பருந்து.

மேகங்கள் கூடிக் கூடி
வேடிக்கை பார்த்திருக்க

மூன்றாவதாய் ஓர் பருந்து
வேகமாய் இவற்றைக் கடக்க

ஆவலாய் முதல் பருந்து
அதனைத் தொடர ஆரம்பிக்க

விக்கித்து விலகிய இரண்டாவது
செய்வதறியாத நிலையில்
உயர உயர எழும்பி
சுற்றிச் சுற்றி வந்தது
தன்னந்தனியாகக் காற்றுவெளியில்..

தாழப் பறந்து கொண்டிருந்த
புறாவொன்று கண்ணில் படவும்

அதிவிரைவாய்
காற்றைக் கிழித்துக் கீழிறங்கி
ஆக்ரோஷமாய்
துரத்தத் தொடங்கியது

வாழ்வோ பணியோ
பதவியோ பந்தயமோ

ஏமாற்றத்தின் வலியை
தோல்வியின் துயரை

எளியோனிடம் கடத்தும்
மனிதனைப் போலவே.
***

மொழம்


‘பண்டிகை நேரம்
பதினஞ்சு ரூவாய்க்குப்
பைசா குறையாது மொழம்’

காசில் கறாராய் இருந்தாலும்
களை கட்டியிருந்தது
அவள் கடையிலே வியாபாரம்.

வந்து நின்ற பேருந்திலிருந்து
இறங்குகிறாள் ஒரு இளந்தாய்
கன்னப் பொட்டில் திருஷ்டி கழிந்த
மூன்று குட்டித் தேவதைகளுடன்.

எண்ணெய் வைத்து வாரிமுடித்த
பூச்சூடாப் பின்னல் நுனிகள்
பச்சை மஞ்சள் ஊதா ரிப்பன்களில்.

கூடைமல்லி பார்த்ததுமே தவிப்பாகிக்
குழந்தைகளை இழுத்துக் கொண்டு
வேகமாகக் கடந்தவளைக்
கூவி அழைத்துக்
கொடுக்கிறாள் பூக்காரம்மா

‘அம்மாவா நினைச்சு
சும்மா புடி தாயீ’ என்று
நாலு முழம் அளந்து
மணக்கும் ரோஜா நாலு சேர்த்து.
*** *** ***

ராணித் தேனீ

தேனீக்கள் பற்றிய புதியபாடம்
நாளைக்கு

ஆசிரியர் நடத்தும் முன்
வாசித்துச் செல்லும் பழக்கம்
செல்வராணிக்கு

‘குடும்பமாய் வாழும் தேனீக்கள்..
குடும்பத்தின் தலைவி ராணீத்தேனீ ‘

படத்தில் கம்பீரமாகத் தெரிந்தது
ராணீத் தேனீ

“எப்போடி வந்தே, சாப்பிட்டியா?”
உழைத்த களைப்பைக்
குரலில் காட்டாமல் கேட்டாள்
வீட்டுக்குள் நுழைந்த அம்மா.

‘ராணியாக வளரவேண்டிய
புழுவுக்கான அறை
பிரத்தியேகமானது
நிலக்கடலை வடிவில்
அழகிய கிண்ணம் போன்றது’

“எந்திரிடி போயீ திண்ணயில
உக்காந்து படி”
உதைத்துத் துரத்தினார்
போதையில் வந்த அப்பா.

‘ராஜாக்களின் வேலை
உண்பது உறங்குவது
இனம் பெருக உதவுவது..
இவற்றுக்குக்
கொடுக்குகள் கிடையாது’

“அய்யோ விடு
புள்ளை பரீச்சைக்கி கட்ட
வச்சிருக்கம்யா”
உள்ளே பாத்திரங்களின் உருளல்
அம்மாவின் அலறல்

“சம்பாதிக்க திமிராடி
பொட்டக்குட்டி படிச்சு
என்னாத்தக் கிழிக்கப் போவுது”
அப்பாவின் உறுமல்
மீண்டும் டாஸ்மாக் நோக்கி
நகர்ந்தன அவர் கால்கள்

‘பஞ்சகாலத்தில் வெளியே
தள்ளப் படுவார்கள்
சோம்பேறி ராஜாக்கள்’

எத்தனை முறை வாசித்தாலும்
இதுமட்டும் மனதில் ஏறாமல்

கேட்கத் தொடங்கியிருந்தது
அம்மாவின் கேவல்

மேலே படிக்க இயலாத
செல்வராணியின் கண்களிலிருந்து
மெல்ல வழிந்திறங்கிய நீர்த்துளிகள்
புத்தகத்தில் விழுந்து நிற்க

முதன் முறையாய்
உப்புக் கரித்தத் திரவத்தை
உறிஞ்சிச் சுவைத்த ராணீத்தேனீ..

நன்றி சொல்லியது கடவுளுக்கு
ராஜாத் தேனீக்களுக்குக்
கொடுக்குகள் தராததற்கு.
***

அழகிய வீரர்கள்

மிகக் கவனமாக
கீழிருந்து ஆரம்பித்து
மெல்லத் தோள் வரைக்கும்
தோழமையாய் தொடர்ந்து
தலை தடவி
சாதுரியமாய் மூளை புகுந்து
அரவணைத்தது சாட்டை
புதுப் பம்பரத்தை
இறுக்கமாக..

அணைப்பின் கதகதப்பில்
கிடைத்த பாதுகாப்பு உணர்வில்
சிலிர்த்துப் பரவசமாகிய
பச்சிளம் பம்பரம்
களத்தில் இறங்கத் தயாரானது
துடிப்பாக..

இலாவகமாய் இழுத்துவிட்ட கயிறு
விலகி நின்று வேடிக்கை பார்க்க
வீரியமாய் சுழலாயிற்று
தன் வசீகரத்தில் தானே மயங்கி
பார்ப்பவர் வியக்கும் வண்ணமாக..

விசை குறைந்து சாயும்முன்
உடனுக்குடன் தூக்கி
உச்சிமுகர்ந்து பாராட்டி
ஒவ்வொரு ஆட்டத்துக்கும்
’அழகியவீரன் நீ’யென ஆர்ப்பரித்து
அனுப்புகின்ற சாட்டையைத்
துதிக்கின்ற விசுவாசியாக..

காலமுள் சிரித்தபடி நகர
கயிற்றின் கணக்குகள்
புரியாமல் ஆடியோடியதில்
கூர்முனை மழுங்கி
வண்ணங்கள் சோபை இழக்க
வனப்பைத் தொலைத்துத்
தோற்கத் தொடங்கியது பம்பரம்
சபையிலே தள்ளாடி..

மழுங்கிய முனைக்கு
மருத்துவம் செய்யும் முனைப்போ
அதுவரையிலும் பெற்ற உழைப்புக்கு
இரங்கும் மனமோ
எப்போதும் கொண்டிராத சாட்டை
வேறு பளபளத்த பம்பரங்கள் தேடி..

இக்கணத்திலும்
வட்டமிடும் பருந்துகளாய்
வான்வெளியை நிறைத்து
பசியோடு கருநாகச் சாட்டைகள்..

மாட்டுவதற்கென்றே
முட்டை ஓடு விட்டு வரும்
அறியாக் குஞ்சுகளாய்
பூமியெங்கும் அழகிய வீரர்கள்..!
***