விருது

விருது
முதுமையைத் தொட்டபோது
ஒட்டிக் கொண்டன
தனிமையும் தளர்வும்.
இளமையில் துணையிருந்த
திறமைகளும் திடமும்
விடை பெற்றிருந்த வேளையில்,
காலம் கடந்து
அறிவிப்பான விருதை
ஏற்க மறுத்தப் பெருமிதத்துடன்
அவனது இரு கைகளும்
இறுகப் பற்றிக் கொள்கின்றன
மேசை இழுப்பறையில்
பத்திரமாய்ப் பாதுகாத்து வந்த
பேனாவையும் தூரிகையையும்.
எல்லோரும் கொண்டாடிய
எத்தனையோ கவிதைகளுக்கான
மையைச் சுரந்திருக்கிறது அந்தப் பேனா.
புருவங்களை உயர வைத்த
அழகோவியங்கள் பலவற்றைத்
தீட்டியிருக்கிறது அந்தத் தூரிகை.
மூதாதையர் கடிகாரத்தின்
பெண்டுலச் சத்தம் பின்னணி இசைக்கச்
சொட்டுச் சொட்டாகக் கசிகிறது
பேனாவிலிருந்து மை.
பெருகிப் பிரவாகிக்கிறது சமுத்திரமாக.
மிதந்த பேனாவின் மேல் அமர்ந்து
வேகமாகப் பயணிக்கிறது மனம்
படைப்பாற்றலில் உச்சத்திலிருந்தக்
கணம் நோக்கி.
சிறிய பெரிய மீன்கள்
யானையை விடப் பெரிய
சுறாக்கள் திமிங்கலங்கள்
ஆயிரம் வயதான ஆமைகள்
ஆரவாரத்துடன் பின் தொடருகின்றன.
தோலின் சுருக்கங்களைத் தாண்டிப்
பிரகாசித்த முகத்திலிருந்து
வெளிப்பட்ட வெளிச்சம்
இன்னொரு கையிலிருந்த
தூரிகையைப் பிடுங்கி அவசரமாய்த்
தீட்டத் தொடங்குகிறது – மன
நிறைவு தந்த நினைவுகளின்
களிப்பையேக்
கலைஞனுக்கான விருதாக.
***
– ராமலக்ஷ்மி

அன்பின் பிரார்த்தனை

சந்திக்கும் ஒவ்வொரு மனிதரின்
அன்பையும்
சந்தேகித்தபடியே சில இதயங்கள்
அக்கறையை அவமதிப்பாக
பரிவைப் பாசாங்காக
மூளையின் துணைகொண்டுக்
காரணங்களை அலசி அலசி
அன்பைத் திரித்து மகிழ்கின்றன 
பேதமையின் உச்சத்தில்.
யார் யார் வாயிலாகவோ
சுற்றிச் சுற்றி முயன்றும்
தாம் தாமாகத்
தங்க முடியாத இடத்தில்
சுயமிழந்துவிடும்
சாத்தியங்களுக்கு அஞ்சி
விலகத் தொடங்குகிறது 
வேதனையுடன் அன்பு
அமிர்தக் கடலில் மூழ்கிக் கிடந்தாலும்
நச்சு கலந்த இரத்தத்தையே
இதயத்துக்குப் பாய்ச்சுவேன் என
அடம்பிடிக்கிற ஆன்மாக்களின்
பரிசுத்தத்துக்குப் பிரார்தித்தபடி.
***
 
 

பறத்தலின் மீதான புரிதல்

உனக்கான இடம் இதுவல்ல
உள்ளுணர்வு சொல்லிய போது
உணர்கிறான் தோளோடு இருந்த
வலுவான இறக்கைகளை
அடைய வேண்டிய உயரமும்
போக வேண்டிய பாதையும்
வரைபடமாக விரிந்த போதும்
இறகுகளை நீவி அழகு 
பார்த்தபடி நிற்கிறான் 
எவருக்கும் தனை நிரூபிக்கும்
விருப்பங்கள் அற்றவனாய்
பறக்க அஞ்சுவதாக எழுந்த
பரிகாசங்களைப் புறந்தள்ளுகிறான்
வானத்துக்கு மட்டுமே புரிந்த புதிராக
மேகங்களின் வேகமும்
மாறும் அதன் வடிவங்களும்
பறத்தலின் மீதான நம்பிக்கையை விடவும்
பறத்தலின் மீதான புரிதல் மிகுந்திருக்க
இறக்கைகளை இன்னும் இறுக்கிக் கொண்டு
பாதங்கள் மண்ணில் பதியப்பதிய நடக்கிறவன்
வானம் தாண்டிக் கோடானு கோடிக்
கோள்களைப் பார்க்க இயலும்
பிரபஞ்சத்தின் உச்சியை 
அடைகின்ற பொழுதில்..
விரிக்கக் கூடும் தன் சிறகுகளை
அளவற்ற ஆனந்தத்தில்.
***

கூட்டல் கழித்தல்

 
பாவக்கணக்குகளை எழுதும் சித்ரகுப்தன்
எழுதி எழுதிக் கைசோர்ந்து 
கணினிக்கு மாறினார்.
ஜிபியில் சேமித்து முடியாமல்
டெராபைட் கொள்ளளவுக்கு மாறிய பிறகும்
திணற நேர்ந்தது.
அவுட் சோர்ஸிங் தீர்வாகுமென
மானுடரை அணுகினார்.
முட்டிமோதி முன்வந்த எவருக்கும் 
கணக்குகளில்
எந்தப் பாவமும் தெரியவில்லை.
பாவத்தைப் பற்றிய பார்வை
மாறியிருந்தது.
சம்பளமாகப் பூலோகத்தில்
சொர்க்க வாழ்வைப் பேரம்பேசி
வேலையைத் தொடங்கினார்கள்.
கூட்டலும் கழித்தலும்
வகுத்தலும் பெருக்கலும்
பணம், பதவி, புகழ் எனும் 
விடைகளையே 
திரும்பத் திரும்பத்
தேடியிருந்தது
சுவாரஸ்யத்தைத் தந்தது.
சகமனிதரிடம் அன்பு
பிற உயிரிடம் நேசம்
இயற்கையிடம் நன்றி
அற்றுப் போன பூமியின்
கடவுச்சொல் ஒருநாள்
காக்கும் சக்திக்கு மறந்து போகலாம்.
சுனாமிகளாலும் கலங்காத கோளினைத்
தன் இரட்சிப்பின் எல்லையிலிருந்து 
வைரஸ் பாய்ச்சி விலக்கலாம்.
அண்டவெளியில் பூமி
அதிவேகத்தில் சுழலாம்.
இரண்டு மணிகளுக்கொருமுறை
இரவு பகல் நேரலாம்.
அந்நாள்வரையிலும்
கூட்டலாம் கழிக்கலாம்
வகுக்கலாம் பெருக்கலாம்.
*** ***
 

அழகன்

அந்தக் கனவில்
அவன் அழகாகத் தெரிந்தான்
கழுத்து நிறையப் பதக்கங்களுடன்
வெற்றிகளைக் குவித்திருந்தான்

ஒரு கனவில்
அவனை இந்திரன் சந்திரன் என்றனர்
மெத்தப் படித்த மேதாவி என்றனர்
அவன் முகத்தின் பொலிவு கண்டு
அவன் கண்களே கூசின

தனி விமானத்தில் உலகம் சுற்றிய
நீண்ட கனவொன்றில்
அவன் கம்பீரம் கூடியிருந்தது

தன் இருபத்தெட்டு மாடிவீட்டின்
மேல்தளத்துத் தோட்டத்தில்
காலைத் தேநீர் பருகிய கனவில்
மேகங்கள்
முற்றுகையிட்டுக் கொண்டாடின
அவன் அந்தஸ்தை

கனவுகள் தந்த சந்தோஷங்களுடனே
புலர்ந்தன தினம் பொழுதுகள்

இப்போதெல்லாம்
அவற்றுக்காகவே
சீக்கிரமாய் உறங்கச் செல்கிறான்

நிஜம் தொடாத நிகழ்வுகள் ஓடிய
திரை தந்தப் போதையில்
பகல் கனவும் பழக்கமாயிற்று

பலிக்குமெனச் சொல்லப்பட்ட
பகல் கனவுகளில்
மறந்தும் ஒருதுளி வியர்வை
வெளியேறிடாமல்
மேனி மினுமினுப்பைப்
பாதுகாத்துக் கொண்டான்

நிஜத்தை மட்டுமே பிரதிபலிக்கிற
அறைநிலைக்கண்ணாடி
தன் நிலைப்பாட்டை
மாற்றிக் கொள்ள இயலா
சகிப்புடன்
காட்டிக் கொண்டிருந்தது
விழிசெருக வாய் திறந்து
கனவில் கிடந்தவனை

அவலட்சணத்தின்
மொத்த இலக்கணமாக.

உண்மை

 
 
 
 உண்மைகள் என்றால் 
அவனுக்குக் கொள்ளைப் பிரியம்
தனக்குத் தெரியாத உண்மைகளே 
இருக்கக் கூடாதென்பதில்
தணியாத மோகம்
அரைகுறை உண்மைகளை
அறவே வெறுத்தான்
முழு உண்மைகளை
என்ன விலை கொடுத்தேனும்
வாங்கத் தயாராக இருந்தான்
அவனது பாதுகாப்பே
விலையென்றாலும் 
பயப்பட மாட்டான்
எந்தக் கடையில் எந்த உண்மை
விலைக்கு வந்தாலும்
முதலில் அவனுக்கே 
சொல்லி அனுப்பினார்கள்
சந்தைக்கு வராத உண்மைகளைச்
சந்திப்பவரிடமெல்லாம் தேடினான்
சத்தியத்தை மீறியேனும் அவை தன்
சட்டைப்பைக்குள் வர
சகல உத்திகளையும் கையாண்டான்
சேகரித்த உண்மைகள்
இரும்பாய்க் கனத்து இழுத்தாலும்
காட்டிக் கொள்ளாமல்
நிமிர்ந்தே நடந்தான்
அறியாதவற்றால் ஏற்படும்
ஆச்சரியங்களாலும்
தெரிய வராதவற்றால் தொடரும் 
சுவாரஸ்யங்களாலும்
உயிர்த்திருக்கும் வாழ்வில்
மறுக்கப்படும் 
உண்மைகளால் மட்டுமே
பிழைத்துக் கிடைக்கும்
நாளையைப் பற்றியதான நம்பிக்கை 
என்கிற உண்மை மட்டும்
பார்வைக்குச் சிக்காமல் 
அவனது நடுமுதுகில் அமர்ந்து 
கண்சிமிட்டிச் சிரித்தபடி 
சவாரி செய்து கொண்டிருந்தது
தன்னை விலை பேசவே முடியாதென்று.

தொடரும் பயணம்

 
ஒரு தேவதையைப் போலதான் 
வாழ்ந்திருந்தாள்.
கிரீடத்தில் நட்சத்திரங்களாக 
ஒளிர்ந்த வைரங்களுடன்
கூந்தலின் நிறம் போட்டி போடவும்
பறத்தலில் வேகம் குறைந்தது.
உதிரும் சிறகுகளால்
வீடெங்கும் குப்பையாவதாக
இறக்கைகள் 
வலுக்கட்டாயமாகப் பிடுங்கப்பட்டன.
ஆயினும் கூட்டிலே ஓய்வெடுக்க
அனுமதியில்லை.
நடந்தேனும் ஊர்ந்தேனும் 
தனக்கான தானியத்தை
ஈட்டிக் கொள்ள வேண்டிய கட்டாயம்.
பாய்ந்து வந்த
வார்த்தை அம்புகளைத் தடுக்க
எட்டுகிற தொலைவில் கிடந்தும்
கேடயத்தை எடுக்கின்ற தெம்பில்லை.
சுழற்றி வீச வாளொன்று 
சுவரிலே தொங்கியும்
நிமிர்த்திப் பிடிக்க 
விரல்களில் வலுவில்லை.
இவள் தொட்டு ஆசிர்வதித்த
செங்கற்களைக் கொண்டு 
எழுந்த மனையென்பது
எவர் நினைவிலும் இல்லை.
மேகங்களுக்குள் புகுந்து
வெளிவந்த காலத்தில் 
அதன் வெண்மையை வாங்கி 
மிளிர்ந்த உடை
பழுப்பாகிப் போய்ப் பாதந்தடுக்க
இரை தேடக் கிளம்புகிறாள்.
வழக்கமாகச் செல்லும் பேருந்தைத்
தவற விட்டதாக எண்ணி
நடக்கத் தொடங்குகிறாள்.
ஓரிரு மணித்துளிகளில்
ஒட்டி வந்து நின்றது
அன்றைக்குத் தாமதமாகப் 
புறப்பட்டிருந்த பேருந்து.
சாலைவிதிகளை மீறி
நிறுத்தக் கூடாத இடத்தில் நிறுத்தி
ஏறிக் கொள்ளுமாறு அழைத்த 
ஓட்டுநரின் அன்பும் கனிவும்..
மயிற்பீலியின் நீவலென
ஆற்றுகிறது மனதின் காயங்களை.
கால் துவளும் வேளையில்
ஏதேனும் ஒரு பல்லக்கு
எங்கிருந்தோ வந்தடைகிறது
பயணத்தைத் தொடர.
***

புதிய அத்தியாயம்

சொன்ன கதையையே திரும்பத் திரும்பச்

சொல்லச் சொல்லிக் கேட்கிறது குழந்தை.

கவனப் பிசகாக
சிங்கத்தைப் புலியென்றோ
முயலை மானென்றோ
இரண்டு குருவிகளை மூன்றென்றோ
சொன்னோமேயானால்
பிஞ்சுவிரல்களால் நம் இதழ்களை மூடித்
தவறென்று திருத்துகிறது.
உறக்கம் அழுத்தும்
அதன் விழிகளைக் கண்டு
சுருக்கி முடித்திட நினைத்தால்
திருப்தியற்றுச் சிணுங்குகிறது.
‘அதன்பிறகு அனைவரும்
நலமே வாழ்ந்தார்கள்’ எனும்
கடைசி வாக்கியத்துக்காக
இமைகள் விரியக் காத்திருந்து
நிறைவான புன்னகையுடன்
தூங்கச் செல்கிறது.

வாழ்க்கையைப் பல நேரங்களில்

அதன் போக்கில் விட்டுப் பார்க்க
அஞ்சுகிற நமக்கும்
குழந்தைக்குமான வித்தியாசத்தைத்
தேடித் திகைத்து நின்ற புள்ளியில்
ஆரம்பம் ஆனது…

அணைத்த விளக்கு பரப்பிய இருளில்

ஒளிர்ந்த சன்னல்வழி நட்சத்திரமாய்

புதிய அத்தியாயத்தின் முதல் எழுத்து.

சுயநலம்

அதிகமாய் பேசுகிறேனோ
அடிக்கடி
சந்தேகம் வருகிறது

பேசாமல் இருப்பதே உசிதம்
சமயத்தில்
தோன்றதான் செய்கிறது

கேட்பவர் முகங்களில்
தெரிகிற சோர்வைக் கண்டு கொள்ளாமல்
தொடர விழைகிற மனதின் மேல்
கோபம் கூட வருகிறது

பேசுவதை நிறுத்தி விடலாமெனப்
பொறுப்புணர்வுடன்
தீர்மானிக்கப் போகையில்..
யாருக்காகப் பேசுகிறேன் எனும்
கேள்வி எழ,

புரிய வந்தது
இதுகாலமும் பேசிய யாவும்
எனக்காகவே என்று.

ஒத்தி வைக்கப்பட்டது
காலவரையரையின்றி தீர்மானம்.
*** ***

அரங்கு நிறையாக் காட்சிகள்

நண்டுகளோடு ஓடிப்பிடித்து
விளையாடிக் கொண்டிருந்தன
வெள்ளலைகள்

ஆளுயர அலைகளுக்கு அகப்படாமல்
பறந்தெழும்பித் தணிந்தமர்ந்தன
மீண்டும் மீண்டும் சாமர்த்தியமாய்..
நண்டைப் பிடிக்கவோ நீர் பருகவோ
குழுமியிருந்த கடற்பறவைகள்

எண்பதெழுபது கிலோ
எடை மனிதர்களை
அநாயசமாய் இழுத்தோடி
உற்சாகமாய் வலம் வந்தன
உடற்பயிற்சி ஆசான்களாகி..
அழகான நாய்க்குட்டிகள்

கடலுக்குள் இறங்கும்
சூரியனின் கதிர்வீச்சில்
நிஜத்தை விட பன்மடங்கு
நீண்டு விழுந்து
பிரமிப்பைத் தந்தன
கரையோர நிழல்கள்

இணக்கமாய் கோர்த்துக் கொண்ட
இரு கரங்களிலிருந்து விடுப்பட்டு
உப்புக் காற்றோடு கரைந்தன
சில பிணக்கங்கள்

அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன
எவ்விடத்திலும் ஏதேனும்
அற்புதக் காட்சிகள்

அவசரகதியில் சுழலும் பூமியரங்கில்
அமர்வாரின்றிக் காத்தேக் கிடக்கின்றன
அநேக நாற்காலிகள்.
*** ***