ஒண்டிக் கொள்கின்றன பறவைகள்
–
உள்ளார்ந்த ஒரு உரையாடலின் தீவிரம்
எல்லாம் மீறி
ஒரு நாளின் எந்த வேளையிலும்
வந்து விடுகிறது
வளையும் வானவில்லோடு
படிகளில் குதிக்கிற ஒரு மழை
பிரத்யேகக் காரணங்களோடு
சில நேரங்களில் ஒரு கவிதையில்
சொல்லப் பட்டதுடன் சொல்ல விழையாதது
நுழைந்து விடுகிறது ஒரு எடுப்பான நிறத்தோடு
ஒளிந்து விளையாடும் விளையாட்டு
மறைந்திருப்பவரைக் கண்டுபிடித்ததும்
முற்றுப் பெறுகிறது – சிறிது நேரம்.
சீருடையில் ஒரு முகமும்
தனியுடையில் ஒரு முகமுமென
அடையாளமணியும் சொற்கள்…
சிறகென்றெழுதிய கணத்தில் மிதந்தவை
தமிழின் இறகில் இருந்து பிரிந்த சிறகொன்றும்
லெபனானின் முறிந்த சிறகுகளும் மட்டும
பறவை என்றெழுதிய போதே பார்வையில்
அவசர வண்ணங்கள் தீற்றப் பெற்றால்
தாளின் வெண்மையில் கரைந்திருக்கும் பறவைகள்
காணா ஆழத்தில் அமிழ்ந்து தடமறுக்கும்
கருப்பும் வெள்ளையும் தவிர்த்த நிறங்களிலும்
பூக்கத்தான் செய்கின்றன பூக்கள் எங்கும்.
–
உள்ளிழுக்கவும் வெளித்தள்ளவும் செய்யும் தண்ணீரின்
மாய மிதவை கணத்துள் பிரவேசிக்கும் பொழுதில்
எடையற்ற ஒரு வெளியின் வெளிச்ச கணங்களில்
மொழி மென் துகிலென நழுவிச் செல்லும் நளினமாய்
கண்கள் அறியாக் காற்றின் உணர்சித்திரங்களும்
பரவசம் பேசிச் செல்லும் வார்த்தைகளற்று.
வழியற்று வலியுற்று வளி போல் திடமற்று
நெகிழும் மனதை நிலை இருத்த பூக்களைப் பார்க்க
பசிய கிளை நுனிகளில் நீள் விரல் மருதாணியாய்
பூத்திருக்கும் செந்நிற பூக்களின் விகசிப்பில்
நுட்பங்களின் மென்னொளி துலங்கும் அகமொழி
இதழ் இதழாய் ததும்பி சிலிர்க்கிறது
வண்ண வார்த்தைகளாய்.
அசையும் இருப்பே மொழி என்றுணரும் வேளை
மரத்திலிருந்து மிதக்கும் அச் செம்பூக்கள்
மெல்லத் தடம் மாறி கண்களில் உயிர்க்கிறது
ஒரு நூறு ஒளி வருடங்களுக்கு.
இந்த கோடையின் வெம்மை
இனிமையானதொரு உவப்பை வெளியிடுகிறது.
ஒரு பழங்கால அறையை போன்ற இந்த பூமி
அதன் ஆதி சாயல் துலங்கித் தெரிய
இலைகள் உதிர்த்த பற்பல கிளைகள் வழி
வானைக் கண்ணுக்குள் அணுக்கி வைக்கிறது.
ஒரு மங்கலான சோபை வழியும்
நான்கு மணி மனிதர்கள்
விருப்பு வெறுப்பற்ற ஞானியராய்
பேருந்தில் சாய்ந்தபடி இருக்கிறார்கள்
அவர்களின் பார்வையற்ற பார்வை
கலைக்க முடியாதொரு அமைதியை
வழியெங்கும் பேசிச் செல்கிறது
பயணம் முடிந்து திரும்பும் வேளை
அந்தியின் சோபை அவர்களை அழகூட்ட
மெல்லக் கரைகிறார்கள் கோடையின் உவப்பில்
பின்/
பழங்களாய் சூரியன் தணிய
கனிந்து விம்முகிறது கோடைப் பழம்.
வரிசையாய் இருக்கும் மண் குவளைகளில்
ஒழுங்கு தவறாது ஊற்றுகிறேன் கோபங்களை.
நகர்த்த இயலாத சுடு வெயில் போல
அறையெங்கும் பரவி இருக்கிறது மௌனம்.
கேள்விகளின் பிடிவாத நகர்த்தலில்
வட்டங்களில் சுழல ஆரம்பிக்கிறது
குவளைகளில் கொதிக்கும் பானம்.
காணாத காட்சி என கண்கள் சொல்ல
கிடைக்கும் தாள்களில் வரையத் துவங்குகிறேன்
ஒழுங்கற்றுப் பரவும் வண்ணங்களைத் தீட்டி.
தூரிகையின் வேகம் உச்சத்தில் ஏற ஏற
தாளில் துலங்கும் காட்சிகளும்
துரித நடனம் ஆடும் குவளைகளும்
ஒன்றின் மேல் ஒன்றாய் மிகச் சரியாய்.
வெந்து தணிகிறது வெப்பம்.
முடிந்த ஓவியத்தை மேசையில் வைக்கிறேன்
நிதானமாய் – பிறிதொரு வேளை
நின்று யோசிக்கவும், கடந்து செல்லவும்.
–
ஒரு தாளில் தீட்டப் பெற்ற
ஆரஞ்சு வர்ணம் பழமாதல் போல்
வளை கோடுகள் கடலாதல் போல்
இரு ‘V’ பறவைகளாதல் போல்
பசிய நீள் கோடுகள்
செழும் புற்களாதல் போல்
பக்கவாட்டு முகமொன்றில்
நம்பப் பெறும் உயிர்ப்புள்ள
இன்னொரு விழி போல்
மனம் அசைவுறுகையில்
மௌனம் இசையாதல் போல்
பார்வை மொழியாதல் போல்
புன்னகை உறவாதல் போல்
வார்த்தைகள் ஒலியாதல் போல்
சொல்லாமல் செல்லும் –
சொல்லும் பொருள் அடர்
உணர் கவிதை.
குளிரும் கம்பிகளில்
முகம் வைத்தபடி
சிறுமி ஒருத்தி
கடும் மழையில்
தனித்து நிற்கிறாள்.
மழை
ஆயிரம் குமிழ்களாய்
பூத்து மறைவதை
உற்று நோக்கி
தன்னை மறக்கிறாள்.
பின்மாலை நேர மழை
வண்ணக் குடைகளாய்
ததும்பிச் செல்ல
பரவசம் இலைச் சொட்டாய்
அவள் இதயமெங்கும்.
வீட்டின் உள்ளே
திரும்பிப் பார்த்துவிட்டு
தவிர்க்கவியலா உந்தலோடு
உள்ளும் புறமும் நனைய
கம்பிகளூடே கை நீட்டுகிறாள்.
மழை – சிதறல்களாய்
உள்ளங்கைகளில்
பட்டுத் தெறிக்கும்
அந்த இடி, மின்னல் கணத்தில்
அவள் யாராக இருக்கிறாள்?
கானின் அடர்பச்சை இருளோடு
அறையுள் பிரமாண்டத்தை
கொண்டு வந்திருந்தது யானை.
யாருமற்ற ஒரு நாளில்
யானையும் மெல்ல அசைந்தது.
கால்களை உதறிவிட்டு
உடலை சிலிர்த்தபடி
உயிர்ப்பின் சந்தோஷ கணங்களை
அடிக்குரலோங்கிப் பிளிறிவிட்டு
சின்னக் கண்களால்
அறையை அளந்தது.
ஒரடி எடுத்தாலும்
அறையை விட்டு வெளியேறும்
நிலை அறிந்த யானைக்கு
இப்போது இரு முடிவுகள்.
எந்த முடிவு என்பதோ
முடிவுகள் என்னென்ன என்பதோ
நீங்கள் அறியாததில்லை
வாழ்வின் வாதை தெரியாததுமில்லை. –
யாருமற்ற ஆல மரத்தடியில்இலைகளும் பறவையொலிகளும் உதிரஅறிவு உலகில் வாழ்ந்த நாட்கள்…மேய்ச்சல் போகும் மந்தை மாடுகளின்மணியொலிச் சத்தமும்அவ்வப்போது வியந்துநின்று அகலும்செருப்போசைகளும்ஆலம்பழத்தின் ஊடே ஆசுவாசித்திருந்த பறவையும்வழி தவறிநம்மிடையே வந்த சிறு வெள்ளாடும்காற்றில் படபடத்தபுத்தகப் பக்கங்களும்வியந்து ரசித்தவண்ணச் சிறு பூக்களும்நினைவுகளில்நுண்ணெழிற் சித்திரங்கள் ஆக…பார்க்கவோ பேசவோஎண்ணவோ எழுதவோகூடாத இந்நாளில்கடந்த பாதைகளின்புத்தகங்களும் பேச்சுக்களும் வழித்தடங்களும் மரங்களும்ஒலிகளும் இலைகளும்மாடுகளும் மந்தைகளும்பேரோசையோடுகடந்து விரையஉறைகிறது இம்மாலை பிரிவின் துரு பூசிய அந்த ஆலம் விழுதுகளில்.