நகரங்களும் குறிகளும் : இடாலோ கால்வினோ

நீங்கள் நாள் கணக்கில் மரங்களுக்கு இடையிலும் கற்களுக்கு இடையிலும் நடக்கிறீர்கள். அபூர்வமாகக் கண் ஒரு பொருளின் மீது பளீரிடுகிறது, அதாவது அப்பொருள் வேறொரு பொருளின் குறி என்று அடையாளம் கண்டுகொண்ட பிறகே மணலில் உள்ள ஒரு சுவடு ஒரு புலி செல்லும் வழியைச் சுட்டுகிறது. சதுப்பு நிலம் தண்ணீரின் நாளத்தை; செம்பருத்திப்பூ குளிர்காலத்தின் முடிவை. மற்றெல்லாம் அமைதியும் ஒன்றுக்கொன்று மாற்றத்தக்கதும், மரங்களும் கற்களும் அவை என்னவாக இருக்கின்றனவே அவையே. இறுதியாகப் பயணம் தமாரா நகருக்கு இட்டுச் செல்கிறது. சுவர்களில் துருத்திக் கொண்டிருக்கும் பெயர் பலகைகள் நெருக்கமாக உள்ள தெருக்களின் வழியாக நீங்கள் ஊடுருவுகிறீர்கள். கண்கள் பொருள்களைப் பார்ப்பதில்லை. ஆனால் வேறு பொருள்களைக் குறிக்கும் பொருள்களின் படிமங்களைப் பார்க்கின்றன. குறடு பல் பிடுங்குபவரின் வீட்டைச் சுட்டுகிறது; பீப்பாய் மது பானக்கடையை, ஈட்டிகள் பாசறையை; தராசுகள் மளிகைக்கடையை. சிலைகளும் கேடயங்களும் சிங்கங்களை, டால்ஃபின்களை, கோபுரங்களை, நட்சத்திரங்களைத் தெளிவாகப் படம் பிடித்துக்காட்டுகின்றன. ஏதாவதொன்றான ஒரு குறி : யாருக்குத் தெரியும் என்ன என்று? தன் குறியாகச் சிங்கத்தையோ டால்ஃபினையோ, நட்சத்திரத்தையோ கொண்டுள்ளது. மற்ற சமிக்ஞைகள் ஓரிடத்தில் தடை செய்யப்பட்டுள்ளதை (நான்கு சக்கரப்பார வண்டிகளில் சந்துகளில் நுழைவது, கடைக்குப் பின்புறம் சிறுநீர் கழிப்பது, பாலத்தின் மீதிருந்து உங்கள் தூண்டிலால் மீன் பிடிப்பது) குறித்து எச்சரிக்கின்றன, அனுமதிக்கப்பட்டதை (வரிக் குதிரைகளுக்குத் தண்ணீர்காட்டுவது, பந்து விளையாடுவது, உறவினர்களின் பிணத்தை எரிப்பது) சொல்கின்றன. கோவில்களின் கதவுகளில் கடவுள்களின் சிற்பங்கள் காணப்படுகின்றன, ஒவ்வொன்றும் அதனதன் இயற்பண்புகளுடன் – வளமை சுட்டும் கொம்பு, மணற்கடிகை, மெடுசா1 என : ஆகவே வழிபடுகிறவர் அவற்றை அடையாளம் கண்டு தன் பிரார்த்தனையைச் சரியானபடி சொல்லலாம். ஒரு கட்டடத்தில் பெயர்ப்பலகையோ உருவமோ இல்லாவிட்டால், அதன் வடிவமும் நகரத்தில் அது வகிக்கும் நிலையும் அதன் செயல்பாட்டைச் சுட்டப் போதுமானவை, அரண்மனை, சிறைச் சாலை, நாணயச்சாலை, பித்தகோரியப் பள்ளி2, விபச்சார விடுதி. வியாபாரிகள் தங்கள் கடைகளில் வைக்கும் விற்பனைப் பொருள்களும் கூட அவைகளாகவே அல்ல, ஆனால் மற்ற பொருள்களின் குறிகளாக மதிப்புவாய்ந்தவை. தையல் வேலைப்பாடமைந்த தலைக்கச்சை நேர்த்தியைக் குறிக்கிறது. முலாம் பூசப்பட்ட பல்லக்கு அதிகாரத்தை; கொலுசு சிற்றின்பக் களியாட்டத்தை. உங்கள் உற்று நோக்கும் பார்வை தெருக்களை அவை எழுதப்பட்ட பக்கங்கள் என்பதைப்போல நுணுகி ஆராய்கின்றன. நீங்கள் சிந்திக்க வேண்டிய எல்லாவற்றையும் நகரம் சொல்கிறது, தன் கருத்தாடலை உங்களைத் திருப்பிச் சொல்ல வைக்கிறது. அதோடு தமாராவைப் பார்த்துக் கொண்டிருப்பதாக நீங்கள் நம்பிக் கொண்டிருக்கும்போது அது தன்னையும் தன் எல்லாப் பகுதிகளையும் வரையறுத்துக்கொள்ளும் பெயர்களையும் நீங்கள் பதிவு செய்துகொண்டு மட்டுமே இருக்கிறீர்கள்.உண்மையில் நகரம் எப்படியிருந்தாலும், இந்தக் குறிகளின் அடர்த்தியான பூச்சுக்கு அடியில், அது எதைக் கொண்டிருந்தாலோ, மறைத்திருந்தாலோ, தமாராவைக் கண்டு பிடிக்காமலேயே அதைவிட்டுப் போகிறீர்கள். வெளியே, நிலம் வெறுமையாகத் தொடுவானத்துக்கு நீள்கிறது. விரையும் மேகங்களுடன் ஆகாயம் விரிகிறது. வாய்ப்பும் காற்றும் மேகங்களைத் தரும் வடிவத்தில், நீங்கள் ஏற்கனவே உருவங்களை அடையாளம் காண்பதில் கருத்தூன்றியிருக்கிறீர்கள் , கடலில் சென்று கொண்டிருக்கும் ஒரு கப்பல், ஒரு கை, ஒரு யானை ..
1.கிரேக்கப் புராணத்தில் பாம்புகளாலான கூந்தலைக் கொண்ட தேவதை.
2. பித்தகோரஸ் ஒரு வடிவ கணித மேதை.

போர்ஹேஸூம் நானும் –

ஹோர்ஹெ லூயி போர்ஹெஸ்
ம்பவங்கள் நிகழ்வது அந்த மற்றொரு போர்ஹெஸ்க்கு. நான் போனஸ் அயர்ஸின் ஊடாக நடக்கிறேன். ஒரு நுழைவாயிலின் வளைவையும் அதன் உட்கதவையும் உற்றுப்பார்க்கத் தாற்காலிகமாக – ஒருவேளை இப்போது இயந்திரத்தனமாக இருக்கலாம்-நிற்கிறேன். போர்ஹெஸ் தொடர்பான செய்தி அஞ்சலில் என்னை வந்தடைகிறது, அல்லது அவன் பெயரைக் கல்வியளார்களின் பட்டியலொன்றிலோ ஏதாவதொரு வாழ்க்கை வரலாற்று அகராதியிலோ பார்க்கிறேன். மணற்கடிகைகள், நிலப்படங்கள், பதினெட்டாம் நூற்றாண்டு எழுத்துருவங்கள், அடிச்சொல் வரலாறு, காபியின் சுவை, அதோடு ராபர்ட் லூயி ஸ்டிவன்சனின் உரைநடை என என் விருப்பம் பரவுகிறது. இந்த முன்னுரிமைகளைப் போர்ஹேஸூம் பகிர்ந்து கொள்கிறான். ஆனால் அவைகளை ஒரு நடிகனின் போர்க்கோலங்களாக மாற்றும் வீண் வழியில். எங்கள் உறவு பகைமை உணர்வு கொண்டுள்ளது எனச் சொல்வது மிகைப்படுத்தலாக இருக்கும்-நான் வாழ்கிறேன், என்னை நானே வாழ அனுமதிக்கிறேன். அதனால் போர்ஹெஸ் தன் இலக்கியத்தை நான் நியாயப்படுத்துகிறேன். அவன் மதிப்பு வாய்ந்த பல பக்கங்களை எழுதியிருக்கிறான் என்பதை நான் ஆசையோடு ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அந்தப் பக்கங்கள் என்னைக் காப்பாற்றமாட்டா. ஒருவேளை அவற்றிலுள்ள நல்லது இனி எந்தத் தனி நபருக்கும் அந்த வேறொருவனுக்குக்கூட உரிமையானதல்ல என்பதால் இருக்கலாம், ஆனால் அது மொழிக்குமட்டுமே உரியது அல்லது மரபுக்கு. அதற்கும் அப்பால், நான்-முழுமையாகவும் தவிர்க்க முடியாமலும் – மறதிக்கு விதிக்கப்பட்டிருக்கிறேன். அதோடு விரைகின்ற எல்லாக் கணங்களும் அந்த வேறொருவனுக்குள் வாழும் என்னுடையவை. எல்லாற்றையும் சிதைத்தும் மிகைப்படுத்தவும் அவனிடமுள்ள ஏறுமாறான வழிகளை நான் அறிந்திருந்திருந்தாலும், சிறிது சிறிதாக எல்லாவற்றையும் அவனுக்குத் தள்ளிக் கொண்டிருந்திருக்கிறேன். எல்லாமே அவை என்னாவா யிருக்கின்றனவோ அவையாகவே தொடர்ந்து இருக்க விரும்புகின்றன என்பதை ஸ்பினோஜா நம்பினார் – கல் எக்காலத்துக்கும் கல்லாகவும் புலி புலியாகவும் இருக்க விரும்புகின்றன. நான் போர்ஹெஸில் நீடித்திருக்க வேண்டும், என்னில் அல்ல (உள்ளபடிக்கே, நான் யாராகவேனும் இருந்தால்), ஆனால் வேறு பலருடைய புத்தகங்களைவிடவோ கிடாரின் சலிப்பூட்டும் மீட்டலைவிடவோ அவனுடையவற்றில் நான் என்னைக் குறைவாகவே அடையாளம் காண்கிறேன். வருடங்களுக்கு முன்னால் நான் அவனிடமிருந்து என்னை விடுவித்துக்கொள்ள முயற்சித்தேன். அதோடு சேரிகள். நகரத்தின் புறப்பகுதிகளின் புராணங்களிலிருந்து காலம், முடிவிலி இவைகளுடனான விளையாட்டிற்கு மாறினேன். ஆனல், அந்த விளையாட்டுகள் தற்போது போர்ஹெஸீக்கு உரிமையானவை. நான் வேறு விஷயங்களைப் பற்றி யோசிக்க வேண்டும். எனவே என் வாழ்க்கை, ஒன்று – அதற்கு எதிரான ஒன்று, ஒரு வகையான நிலையற்றது, வீழ்ந்துகொண்டிருக்கிற ஒன்று. அதோடு ஒவ்வொன்றும் எனக்குக் கிடைக்காமல் சுருண்டுகொண்டிருக்கிறது அல்லது அந்த மற்றொருவனின் கையில் விழுகிறது. எங்களில் யார் இந்தப் பக்கம் எழுதிக்கொண்டிருப்பது என்பது எனக்கு நிச்சயமில்லை.