வெயிலிலிருந்து மற்றொன்றாக

பகலின் சுவர்களில்
பட்டுத்  தெறிக்கும்
வெயில்
வாலாட்டுகிறது
ஒரு நாயின்
நிழலில்

சித்திரக்கோடுகளை  தீட்டி
நெளிகிறது
ஒரு சாளரத்தின்
 நிழலில்

மரத்தில் இருந்து
ஒரு துண்டாய்  உடைந்து
ஊர்ந்து பறக்கிறது
ஒரு பறவையின்
நிழலில்

அன்பொழுக
தன் குட்டியை நக்கி
கொஞ்சி மகிழ்கிறது
ஒரு பூனையின்
நிழலில்

கருவை சுமந்தபடி
பெருமூச்செடுத்து நடக்கிறது
ஒரு கர்பிணியோடு

ஒன்றிலிருந்து மற்றொன்றாக
மாறி மாறி
பயணித்த வெயில்
கடலில்  விழுந்து
பிரசவிக்கிறது
எண்ணிக்கையற்ற விண்மீனை

தனிமைக்குள் கடவுள் இருக்கலாகாது !

யாருமற்ற தனிமையில்

கடவுள் இருப்பதாக

எனக்கு தோன்றவில்லை

கடவுள் எப்போதும்

இனிமையானவன்

தனிமை

சில நேரம் இனிமை

சில நேரம் துயரம்

கடவுள் எப்போதும்

பலம் வாய்ந்தவன்

தனிமை

சில நேரம் பலம்

சில நேரம் பலவீனம்

மிக நெருக்கத்தில்

தனிமையை தரிசித்தல்

சில நேரம் பரவசம்

சில நேரம் பெருவலி

யாருமற்ற தனிமையில்

கடவுள் இருப்பதாக

என்னால் நம்பமுடியவில்லை

தனிமையில் அழுவதும்

கடவுள் முன் அழுவதும்

ஒரு வகை திருப்தி

என்பது உங்கள் வாதமா?

சமனற்றிருப்பதே

தனிமைக்கு  அழகு

ஒருவேளை கடவுள்

தனிமைக்குள் இருந்தால்

உடனடியாக

அவரின் வெளியேற்றத்தை

நான் விரும்புகிறேன்

அதோ என் அந்த

நாற்காலியில் அமர்ந்திருக்கும்

தனிமை

தனிமையில் கிடக்கட்டும்

உங்கள் வாதப்படி

கடவுள் அங்கிருந்தால்

உடனே அவரை

வெளியேற்றுங்கள் .