ஒரே நாளில்

“முறுக்கு மாமி வீட்டுக்குப் போகட்டுமா அம்மா?” என்று கேட்டான் கிரி.
ஸ்டவ்வையே வெறித்துப் பார்த்தவாறு அம்மா சமையலறையில் உட்கார்ந்திருந்தாள். அங்கே ஒரே மண்ணெண்ணை வாசனை.
“என்னமோ பண்ணு” என்று அவன் பக்கம் திரும்பாமலே சொன்னாள்.
கிரி குஷியாக வெளியே வந்தான். ஞாயிற்றுக்கிழமை. ஐந்தாம் வகுப்பு பரிட்சை முடிந்து விடுமுறை விட்டாயிற்று. முறுக்கு மாமி வீட்டில் லாரன்ஸ் அண்ணன் இருந்தால் ஊர் சுற்றப் போகலாம். அப்போதுதான் மழை பெய்து நின்றிருந்தது. வீட்டு வாசலில் சாத்தி வைத்திருந்த கற்பனை புல்லட் வண்டியை காலால் உதைத்தான். “டட்டடட்” என்று வாயால் சத்தம் எழுப்பி இரண்டு கைகளையும் ஹாண்டில் பாரைப் பிடித்துக்கொள்வதுபோல் முன் நீட்டி ஓடினான். ஏகப்பட்ட மழைக் குட்டைகள் இருந்த தெருவில் அவன் கவனத்துடன் புல்லட்டை வளைத்து வளைத்து ஓட்டவேண்டி வந்தது. தெரு ஓரமாய் சாக்கடைப் பள்ளத்தில் மழைநீர் ஓடும் சத்தம் கேட்டது. அந்தத் தண்ணீரில் நீளமான வேட்டியின் இரு நுனிகளையும் பிடித்து மீன்பிடி விளையாடிக் கொண்டிருந்த எதிர்வீட்டுக் குமாரும் மகேஷும் இவனைப் பார்த்து கத்தியதைப் பொருட்படுத்தாமல் ஓடினான்.

தெருமுக்கில் வாசன் குருக்கள் அப்போதுதான் பிள்ளையார் கோவில் சன்னதிக்குள் நுழைந்துக் கொண்டிருந்தார். சட்டென்று ப்ரேக் அடித்து கோவில் முன்னால் நின்றான். “மாமா நான் இன்னிக்கு குளிச்சாச்சு!” என்றான் ஆவலுடன்.

“குளிச்சா என்ன! விழுப்புப் படாம இருக்கணுமே” என்றார்.
“ப்ளீஸ் மாமா. குளிச்ச உடனே எது மேலையும் படாமல் புதுத்துணி போட்டுண்டு நேரே இங்கத்தான் வர்ரேன்.”
வாசன் அவனை மேலும் கீழும் பார்த்தார்.
“பொய் மட்டும் சொன்னியோ அப்புறம் என்ன ஆகும்னு எனக்குத் தெரியாது!” என்றார் கண்டிப்புடன். அவருடைய ஒரு கையில் நீர் நிரம்பிய செம்புக் குடம் இருந்தது. இன்னொரு கையில் குடலையில் பூக்கள். செம்பருத்தி, நந்தியாவட்டை.
‘இல்லை மாமா. மடியா வந்திருக்கேன்”

அவர் பதில்பேசாது சன்னதிக்குள் போனார். குறுகுறுப்புடன் பின் தொடர்ந்தான் கிரி. சன்னதியின் இருட்டாக இருந்து பிள்ளையார் எங்கே என்று தேடவேண்டி வந்தது. குளித்தபின் துடைத்துக்கொண்ட துண்டு விழுப்பா மடியா என்ற சந்தேகத்தை அவரிடம் கேட்கவேண்டாம் என்று தீர்மானித்துக்கொண்டான். பிள்ளையார் அவனுடைய விருப்பத்திற்குரியக் கடவுள் அல்லவா. ஒன்றிரண்டு பிழைகள் இருந்தால் பொறுத்துக்கொள்ள மாட்டாரா என்ன! என்னதான் இருந்தாலும் அவனுக்கு அடிவயிற்றில் பட்டாம்பூச்சி பறந்தது.

அவன் கூட சன்னதிக்குள் வந்துவிட்டதைப் பார்த்து திகைப்பதுபோல நடித்தார் வாசன். அவன் மளுக்கென்று எழுந்த சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு நின்றான்.

“சரி கையை அலம்பிண்டு சுவாமி மேலேயிருந்து பழையப் பூவையெல்லாம் எடுத்துப் போடு” என்றார்.

பிள்ளையாரைத் தொடும்போது கிரியின் கை நடுங்கிற்று. தன்னைக் கிள்ளிக்கொண்டு வலிக்கிறதா என்று பார்த்தான். நிஜமாகவே கிள்ளிய இடம் வலித்தது. தலையைத் திருப்பி சன்னதிக்கு வெளியில் ஒரு கணம் பார்த்தான். வெயில் வெள்ளையாய் கண் கூசியது. இதை மட்டும் பார்த்தால் குமார், மகேஷ், பாஸ்கர் எல்லோரும் வயிறெரிந்துப் போவார்கள். டேய் டேய் என்னையும் சேர்த்துக்கோ என்று கெஞ்சுவார்கள்.

பிள்ளையாரைத் தொட்ட விரல் ஷாக் அடித்தாற் போல இருந்தது. எத்தனை குளுமை. கிரியின் உடம்புக்குள் ஒரு புது சக்தி பாய்ந்தாற் போல இருந்தது. இனி அவனால் லாரன்ஸ் அண்ணனைப் போல பெரிய பெரிய உடற்பயிற்சிகளை எளிதாக செய்ய முடியும். குச்சிக் கத்தி சண்டையில் விவேக்கை எளிதாக வென்று விட முடியும்.

வாசன் குருக்கள் ஒல்லியாக இருந்தாலும் பிள்ளையாரைத் தினம் தொட்டுத் தொட்டு எத்தனை சக்தியை பெற்றிருப்பார்? யாராலும் அவரை சண்டையில் வென்று விட முடியாது.

எண்ணெய் மினுக்குடன் இருக்கும் பிள்ளையாருக்கு வாசன் குருக்களைப் போல அபிஷேகம் செய்யவேண்டும் என்று அவரிடம் கெஞ்சிக் கெஞ்சி கடைசியில் இன்று சித்தித்துவிட்டது. வாசன் குருக்கள் சொல்லும் காரியங்களை மிகுந்த கவனத்துடன் செய்தான். முதலில் பிள்ளையாருக்கு பால் குளியல். பிறகு தயிர். அப்புறம் எலுமிச்சை சாறு. கடைசியாக சந்தனக் காப்பு. வாசன் குருக்கள் அவனையே எல்லாமும் செய்யவிட்டார். அபிஷேகத் திரவியங்களை பிள்ளையார் உடம்பிலிருந்து வழித்தெடுப்பது கூட. பிள்ளையாரையுடைய தொப்பையிலும் தும்பிக்கையிலும் காலடியில் கிடக்கும் சுண்டெலி மீதும் கை பட்ட போது கிரிக்கு சிரிப்பு சிரிப்பாய் வந்தது. எல்லாம் குழம்பாக வழிந்து சன்னதிப் பீடத்தில் சேர்ந்து ஓடும்போது மூச்சை அடைக்கும் வாசனை வந்தது. தலையெல்லாம் கிறுகிறுத்தது. பூக்களை சார்த்தி விடடு கற்பூரம் காண்பித்த வாசன் குருக்கள் கிரியின் நெற்றியில் விபூதி இட்டுவிட்டார். இனிமேல் அவருக்கு வேலை ஒன்றுமில்லை. வரும் ஜனங்களுக்காகக் காத்திருக்கவேண்டும். இந்தப் புறநகர்ப் பகுதியில் காலையில் வருபவர்கள் அலுவலகம் போகும் அவசரத்தில் தூரத்திலிருந்தே ஒரு கும்பிடும் மனதுக்குள்ளேயே தோப்புக்கரணமும் போட்டுவிட்டு போய்விடுவார்கள். ஞாயிற்றுக் கிழமையென்றால் சாப்பாடுக்கடை முடித்த பிறகு தான் பெண்கள் வருவார்கள். அவர்களும் பக்கத்திலிருக்கும் துர்க்கை சன்னதிக்குதான் முக்கியத்துவம் தருவார்கள்.

“உனக்கு பள்ளிக்கூடம் இல்லியா?” என்று கேட்டார் வாசன் குருக்கள்.
“பரீட்சை முடிஞ்சு லீவு விட்டாச்சே மாமா,” என்றான் கிரி.
“சரி கழுதையை அவிழ்த்து விட்டாச்சா,” என்று சிரித்தார்.
“உன்னோட அடுத்தக் காரியம் என்ன?”
“முறுக்கு மாமி வீட்டுக்குப் போறேன்”
“யாரு முறுக்கு மாமி?”
“டெய்சின்னு இருக்காங்களே ஆண்டாள் தெருவில். அவங்கத்தான் இப்போ முறுக்கு செஞ்சு விக்கறாங்க!”
“அடக் கடவுளே! அவளையா முறுக்கு மாமின்னு சொல்லற” வாசன் குருக்கள் தலையில் அடித்துக்கொண்டார்.
“சரி அங்கே ஒரு பையன் இருக்கானே.. அவன் பேர் என்ன?”
“லாரன்ஸ் அண்ணா!”
“அவனுக்குப் பைத்தியம் பிடிச்சிருக்காமே..?”

கிரி விழித்தான். என்ன லாரன்ஸ் அண்ணனுக்கு பைத்தியமா?

“அட.. நேத்திக்கு நடுத்தெருல ட்ரெஸ் எல்லாத்தையும் அவித்துப் போட்டுண்டு போனான்னு சொல்றாளே!”

முந்தைய தினம் கூட லாரன்ஸ் அண்ணனுடன் விளையாடிக்கொண்டிருந்தானே. நேற்று ஒரு நாள்தான் கிரி அங்கே போகவில்லை.

“நம்பளவான்னா துர்க்கை சன்னதில வைச்சு வேப்பிலை அடிப்பா. அவாள்ளாம் சர்ச்சுக்குத் தானே போவா”

டெய்ஸி ஆண்ட்டி வீட்டு வாசலில் கிரி நின்றான். யாரையும் வெளியில் காணோம். வீட்டுக்கு முன்னால் எப்போதும் பயல்கள் கூடியிருப்பார்கள். இருந்தாலும் லாரன்ஸ் அண்ணனுக்கு கிரி மீது தனிப் பிரியம்தான். கிரியை மட்டும்தானே சர்ச்சுக்கெல்லாம் கூட்டிப் போயிருக்கிறான். முன் திண்ணையில் காரம்போர்டு ஆட்டம் நடக்கும். சில சமயம் செஸ். முன்வாசலுக்கும் காம்பவுண்டு கேட்டுக்கு இடையில் வண்டி விடும் இடத்தில் குறுக்குவாட்டில் கிரிக்கெட் கூட. டென்னிஸ் பந்துடன். லாரன்ஸ் அண்ணன் கமெண்டரி எல்லாம் சொல்லுவான். அவன் சொல்லும் தமிழ் கமெண்டரி வேடிக்கையாக இருக்கும். மட்டையாடி முட்டை போட்டார் என்றெல்லாம் சொல்லுவான். கபகபவென எல்லோரும் சிரிப்பார்கள். லாரன்ஸ் அண்ணன் வீட்டில் தான் முதன்முதலாக கேஸட் ப்ளேயரை கிரி பார்த்திருந்தான். பிலிப்ஸ் பெட்டி அது. நீளம் அதிகமாகவும் அகலம் குறைவாகவும் இருக்கும் அதில் கேட்ட “வாடி என் கப்பக் கிழங்கே பாட்டு”
எத்தனை வேடிக்கையாயிருந்தது! கிரி வீட்டில் வெறும் ட்ரான்ஸிஸ்டர் ரேடியோதான். மர்ப்பி பிராண்ட். கொஞ்ச நாளைக்கு முன்னால் ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று அப்பா அதையும் எடுத்துக் கொண்டு போய்விட்டார்.

வீட்டுக் கதவு சாத்தியிருந்தது. கதவைத் தள்ளித் திறந்தான். உள்ளேயிருந்து எப்போதும் வரும் முறுக்கு வாசனை இப்போதும் வருவது ஆறுதலாக இருந்தது. டெய்ஸி ஆண்ட்டி முறுக்கு பண்ணி விற்கத் துவங்கியதெல்லாம் கொஞ்ச நாட்களாகத்தான்.

பாலித்தீன் பையில் அடைத்த முறுக்குகளை போட்டு பலசரக்குக் கடைகளுக்கு ஆண்ட்டி எடுத்துபோகும் கூடை கூட நேர்த்தியாக இருக்கும்.
கிரிக்கு இலவசமாக ஓன்று இரண்டு முறுக்குகளை, உடைந்துப்போன சில்லுகளைத் தருவாள். முறுக்கு நன்றாக நாக்கில் கரையும் வண்ணம் இருக்கும். அம்மாவிடமும் கிரி வாங்கச் சொல்லிக் கேட்டிருக்கிறான். அம்மாவோ பாட்டிக்காக மடி என்று வாங்கமாட்டேன் என்கிறாள். கிரியைக் கூட அவர்கள் வீட்டுக்கு அடிக்கடிப் போகாதே என்று திட்டுகிறாள்.

லாரன்ஸுடைய அப்பாவைக் கொஞ்ச நாட்களாகவே காணவில்லை. டெய்ஸி ஆண்ட்டி முறுக்கு விற்பது அதனால்தான் என்று பின் வீட்டு ராஜம் மாமி போகிற போக்கில் ஒரு நாள் அம்மாவிடம் சொல்லிவிட்டுப் போயிருந்தாள். லாரன்ஸ் அண்ணனிடம் அதையெல்லாம் கேட்க கிரிக்கு பயமாகத்தான் இருந்தது.

டெய்ஸி ஆண்ட்டியை வீட்டுக்குள் காணோம். பின்பக்கம் தோட்ட்த்தில் இருக்கலாம். துணி உலர்த்திக்கொண்டிருப்பாள். நேரே லாரன்ஸ் அண்ணனைத் தேடிக்கொண்டு போனான் கிரி. டெய்ஸி ஆண்ட்டி வீட்டை அழகாக வைத்துக்கொண்டிருந்தாள். ஹாலில் பிரதானமாக இருக்கும் ஏசு ஒரு ஆட்டுக்குட்டியை அணைத்துக் கொண்டிருக்கும் படம் கிரிக்கு மிகவும் பிடிக்கும். அதற்கடியில் மெழுகுவர்த்திப் வடிவத்தில் சிறிய எலக்ட்ரிக் லைட் ஒன்று எப்போதும் எரிந்துக்கொண்டிருக்கும். மூலையில் மீன் தொட்டிக்குள் நீந்தும் தங்கக் கீற்றுகளாக மீன்கள்.

ஹாலையொட்டியிருக்கும் அறையில் சுவற்றில் சாய்ந்தவாறு இரும்புக் கட்டிலில் உட்கார்ந்திருந்தான் லாரன்ஸ் அண்ணன். கிரி வருவதையெல்லாம் பார்க்காதது போலவே நேர்க்கோட்டில் எங்கோ பார்த்துக்கொண்டிருந்தான். வெளியே ஒருவன் எதையோ உரக்க விற்றுக்கொண்டு போகும் சத்தம் மட்டும் கேட்டது.

லாரன்ஸ் அண்ணனின் தலை சுவரில் சாய்ந்திருந்தது. முகம் கருமையடித்து இருந்தது. எந்த அசைவுமின்றி இருந்தான். அண்ணா என்று கூப்பிடலாமா என்று தயங்கி நின்றான் கிரி.

குருக்கள் அவனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்றாரே. பைத்தியமென்றால் சினிமாவில் காட்டும் பைத்தியம் போலவா? லாரன்ஸ் அண்ணனைப் பார்த்தால் அப்படியெல்லாம் இருக்கவில்லையே. ஒரு சிலையாக மாற்றிவிட்டாற்ப் போலத் தானே உட்கார்ந்திருக்கிறான்!
லாரன்ஸ் அண்ணனை நேற்று மட்டும் தான் கிரி பார்க்கவில்லை. முந்தா நாள் கூட கிரியை லாரன்ஸ் அண்ணன் வழக்கம் போல சாயந்திரமாக சர்ச்சுக்குக் கூட்டிப் போயிருந்தான். அவனுடன் சர்ச்சுக்குப் போவது கிரி வீட்டில் யாருக்கும் தெரியாது. பாட்டிக்கு மட்டும் தெரிந்தால் கிரியை வீட்டிலேயே சேர்க்க மாட்டாள். கிரிக்கு சர்ச் நிறைய பிடித்திருந்தது. அங்கே நடந்த ஒரு கல்யாணத்தைப் பார்க்க நேரிட்டது. அந்தப் பாதிரியார் தான் எவ்வளவு கம்பீரமாக இருந்தார்! பார்க்கப் பார்க்க அவனுக்கும் அது போல நீண்ட அங்கியணிந்து நிற்க வேண்டும் என்று ஆசை வந்துவிட்டதே. பெஞ்சில் உட்கார்ந்துத் தொழும் பெண்கள் கண்னத்தில் நீர் வழிந்தது. அவர்கள் எல்லோருமே அற்புதமான ஆடைகளை அணிந்திருந்தார்கள். மிக அழகாக இருந்தார்கள். லாரன்ஸ் அண்ணன் கூட நேர்த்தியாக உடையணிந்துதானே போவான்.

சில நாட்கள் லாரன்ஸ் அண்ணனும் அவனும் மட்டும் தனியாக சர்ச்சுக்குப் போவார்கள். உயர்ந்த கூரைக்கடியில் வெளிச்சம் விழும் கலர் கண்ணாடி சன்னல் பக்கத்தில் நின்று தன்னை பாதிரியாராக கற்பனை செய்தபடி லாரன்ஸ் அண்ணன் தொழுவதைப் பார்த்துக்கொண்டிருப்பான். அவனுக்கும் அது மாதிரி செய்ய வேண்டும் என்று விருப்பம் தான். ஆனால் பயமாக இருந்தது. லாரன்ஸ் அண்ணன் எங்கே கிண்டல் செய்வானோ என்ற வெட்கம்.
லாரன்ஸ் அண்ணன் சர்ச்சுக்கு எதிரே உள்ள பூங்காவில் மேல் சட்டையை அவிழ்த்துவிட்டு உடற்பயிற்ச்சிக்கென போட்டிருக்கும் இரும்புக் கம்பிகளில் இரு கைகளை ஊன்றி ஊசலாடி மேலும் கீழும் ஏறி இறங்குவான். அவனுடைய தோள்களில் உருளும் தசைநார்களைப் பார்க்கப் பிரமிப்பாகவே இருக்கும். கிரியால் அந்தக் கம்பி ஒன்றில் குரங்குபோல ஊசலாட மட்டும் முடியும். லாரன்ஸ் அண்ணன் கிரியின் சேஷ்டைகளைப் பார்த்துச் சிரிக்கும்போது கரிய முகத்தில் வெள்ளைப் பல்வரிசை பளிச்சென்று மின்னும்.

அப்புறம் குலாரன்ஸ் அண்ணனின் நண்பர்கள் அங்கே வந்து உடற்பயிற்சி செய்வார்கள். சாயங்காலம் பொழுது சாயும்போது எல்லோரும் கும்பலாக பக்கத்தில் டீக்கடைக்குப் போய் டீயும் முட்டை போண்டாவும் சாப்பிடுவார்கள். முட்டை சாப்பிடமாட்டியா என்று கிண்டலடிப்பான் லாரன்ஸ் அண்ணன். கிரி முறுக்கோ கடலைமிட்டாயும் தின்பான். கிறிஸ்த்துவப் பொண்ணு உன்னைத் தள்ளிக்கிட்டுப் போப்போறா அப்ப நீ சிக்கனும் மட்டனும் தான் சாப்பிடணும் என்று லாரன்ஸின் நண்பர்கள் கிரியை கேலி செய்வார்கள். கிரிக்கு உள்ளூர பெருமையாகக்கூட இருக்கும். டெய்ஸி ஆண்ட்டியும் சில சமயம் கிரியை கேலி பண்ணுவாள் நீ பெரியவனாகி யாரைக் கல்யாணம் பண்ணிக்கப் போற என்று.

லாரன்ஸ் அண்ணன் கொஞ்ச நாள் வேலைப் பார்த்துவந்தான். கார் டிரைவர் வேலை. என்ன காரணமோ திடீரென்று வேலையை விட்டுவிட்டான். டெய்ஸி ஆண்ட்டி அப்போதெல்லாம் கடுகடுவென்று இருந்தாள். லாரன்ஸ் அண்ணனும் அவளைப் பார்த்துக் கத்தியிருக்கிறான். கிரி முன்னாலேயே. டெய்ஸி ஆண்ட்டி கர்த்தரே என்று கையில் ஜப மணிகளை உருட்டித் தொழத் தொடங்கிவிடுவாள்.

டெய்ஸி ஆண்ட்டி தான் ஈரக் கையுடன் பின்னாலிருந்து வந்தாள். அவள் முகத்தைப் பார்க்க வருத்தமாகத் தான் இருந்தது. கிரி கிட்டே வந்து குனிந்து கிசுகிசுப்பாகக் கூறினாள்.
”போய் பேசு..!”
லாரன்ஸ் அண்ணனோ கொஞ்சமும் அசைவில்லாமல்தான் இருந்தான்.
டெய்ஸி ஆண்ட்டியிடம் எவ்வளவோ கேட்கவிருந்தது கிரிக்கு. நாக்கு ஒட்டிக்கொண்டு அப்படியே நின்றான். அவன் கண்களில் இருந்த திகைப்பைப் பார்த்து டெய்ஸி ஆண்ட்டி பெருமூச்சுவிட்டாள்.

லாரன்ஸிடம் போய் “ராஜா, கிரி வந்திருக்கான் பாருப்பா..” என்றாள். அவள் அழுகிறாளோ என்று சந்தேகமாக இருந்தது கிரிக்கு.

லாரன்ஸ் திரும்பி இருவரையும் பார்த்தான். ஆனால் அவன் முகத்தைப் பார்க்கவே பயங்கரமாக இருந்தது.

வாசலில் இருந்து ‘கிரி’ என்று அம்மாவின் குரல் கேட்டது. கிரி வாசலுக்கு ஓடி வந்தான். அம்மாதான் வந்திருந்தாள். அடிக்குரலில் “வாடா முதல்ல” என்று அவனை இழுத்தாள். கிரி பேசாமல் அவள் கூட போனான்.

பிள்ளையார் கோவில் அருகே அம்மாவைக் கேட்டான்.

“லாரன்ஸ் அண்ணனுக்கு என்னம்மா ஆயிடுத்து?”

அம்மா துர்க்கை சன்னதியில் குங்குமம் இட்டுக்கொண்டாள். பதில் பேசாது கையைக் கூப்பிக்கொண்டாள். கண்கள் மூடிய அம்மாவின் முகத்தைப் பார்க்கக் கூட அவனுக்குக் கஷ்டமாக இருந்தது.
@@@
கிரி பாயில் புரண்டு புரண்டு படுத்தான். அவன் முதுகுக்கடியில் எதோ உறுத்துவது போலிருந்தது. கழுத்துக்கடியில் வியர்த்தது.பக்கத்தில் சுருண்டிருந்த ராஜூ தூக்கத்தில் திடிரென தூக்கத்திலேயே என்னவோ உளறினான். எண்ணை சீக்குப் பிடித்திருந்த தலையணையைப் பார்க்கவே வெறுப்பாக இருந்தது. ராஜு எப்போதும் கிரியை சுற்றி சுற்றி வருகிறான். பள்ளிக்கூடத்திலிருந்து வரும்போது புத்தகப்பையை தூக்கி வரமாட்டேன் என்று பாதி வழியில் தரையில் போட்டுவிட்டு அழுவான். கிரிதான் அதையும் தூக்கிவரவேண்டும். அம்மா சதா இறுக்கமாகவே இருக்கிறாள். அப்பாவிற்கு எப்பொழுதும் தலைவலி வந்துவிடுகிறது. பெரியவர்கள் தாங்களும் கஷ்டப்பட்டுக் கொண்டு குழந்தைகளையும் கஷ்டப்படுத்துவது ஏன் என்று கிரிக்கு புரியவில்லை. தங்கள் கஷ்டங்களையே அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்கிறார்கள்.. அப்பா ஒற்றை வெற்றிலையை நெற்றியில் ஓட்டிக்கொண்டு இருட்டறையில் ஈசிச்சேரில் படுத்துக்கொள்வார். அம்மா சமையலறையில் சாதப் பாத்திரங்களை உருட்டுவாள் பாத்திரங்கள் ஒவ்வொன்றாக குறைந்துக்கொண்டே வருவது அவளுக்கு மிகவும் துன்பத்தை அளிக்கிறது. ஒவ்வொரு வாரமும் மிகுந்த சண்டைக்குப் பிறகு ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு போகிறார் அப்பா. திரும்பி வரும்பொழுது வெறும் கையுடனும் வசையுடனும் தான் வருகிறார்.

கூடத்திலிருந்த கடிகாரம் பதினொன்றைக் காட்டியது. அப்பா இன்னமும் வரவில்லை. அம்மா இன்னமும் வாசலில்தான் நின்றுக்கொண்டிருக்கிறாள். வெறும் நிழலாக தெரிந்தாள். ஞாயிற்றுக்கிழமையில் அப்பா இவ்வளவு நேரம் எங்கே இருப்பார் என்று புரியவில்லை. அவன் பார்க்காத பொழுது எல்லோரும் என்ன செய்கிறார்கள்? அம்மா சமையலறையில் என்ன செய்கிறாள் எப்போதும்? இப்போது லாரன்ஸ் அண்ணன் என்ன செய்துகொண்டிருப்பான்? வெற்றுப் பார்வையுடன் கட்டிலில் கிடப்பானோ?

எவ்வளவு நேரம்தான் அம்மா வெளியில் காத்துக்கொண்டிருப்பாள்? இரவு முழுவதுமா? ஒருவேளை அப்பா வராதுபோனால்? அங்கேயே நின்றுகொண்டிருப்பாளா? கிரி வெளியே போனான். அம்மா அவனைப் பார்த்தாள். ஒன்றும் கேட்கவில்லை. அவன் ராஜுவைப் போல சிறியவனாக இருந்தால்அழுகையுடன் அவளைப் போய் அணைத்துக்கொள்ள முடியும். இன்னும் பெரியவனாக இருந்தால் அவனால் அவளுக்கு ஆறுதல் சொல்ல முடியும்.

‘அம்மா..’ என்றான்.
‘உம்..’
‘அம்மா’ என்று மீண்டும் கூப்பிட்டான்.
‘இந்த மனுஷன் எப்போ வருவார்னு தெரிலை. எங்கே போய் தொலைஞ்சாரோ!’ அம்மா பொதுவாக அலுத்துக்கொண்டாள். கிரியின் முகத்தை பார்க்காமல். அப்பா வந்தால் அம்மா அவரை எந்த கேள்வியும் கேட்க மாட்டாள்.

கிரியும் அவள் பக்கத்தில் நின்று அவள் பார்க்கும் திசையில் சிறிது நேரம் பார்த்தான். அவன் முழங்காலில் கொசு ஒன்று கடித்தது. தெருவில் தூரத்தில் மின்விளக்கு அவ்வப்போது அணைந்து அணைந்து எரிந்தது.
‘கண்ணா.. நீ போய் ஸ்டேஷன் வரை பார்த்துவிட்டு வரியா.. நானே போவேன் ஆனா ராஜு எழுந்து அழுதானா?..’

கிரி பதில் சொல்லாது நின்று தெருவையே பார்த்தான். தினம் ராத்திரி தள்ளு வண்டியில் வறுக்கும் வேர்க்கடலையை விற்றுப் போகும் ஆளும் அவர்கள் தெருவை எப்பொழுதோ கடந்து போய்விட்டான்.

‘சரி அம்மா’ என்று கிளம்பினான்.
‘ஜாக்கிரதையா போ. டார்ச்சு தரட்டுமா?’

அம்மா கேட்டதற்கு பதில் சொல்லாது போனான்.

சிறிது தூரம் போன பிறகு தான் காலில் செருப்பில்லை என்பது ஞாபகம் வந்தது. அம்மாவும் அதைக் கவனித்திருக்கவில்லை. காலில் கற்களும் வேறு எதோவும் குத்தத் துவங்கின. பின்னால் திரும்பி பார்த்தான். அம்மா மங்கலாகத் தெரிந்தாள். இடது பக்கம் நடந்தான். வாடகை சைக்கிள் கடை மூடியிருந்தது. வாசலில் பெஞ்சில் கடை முதலாளி ஆறுமுகம் படுத்து தூங்கிக்கொண்டிருந்தான். டீக்கடையில் பாய்லரை அலம்பிக்கொண்டிருந்தான் ஒரு சிறுவன். கடைவாசலில் இருந்து வழிந்தோடும் நீர்அரிக்கன் விளக்கொளியில் ரிப்பன் போல பளபளத்தது. அந்தப் பையன் எப்போது தூங்குவான்? அந்தப் பையனின் அம்மாவும் அவன் வருவதற்காக காத்திருப்பாளா?

தெருவைக் கடந்ததும் மைதானம் வந்தது. மைதானத்தின் பக்கத்தை ஒட்டிப்போகும் தெரு வழியாக செல்லுவது சுற்றுவழி. மைதானத்தை வெட்டி குறுக்காகப் போனால் ஆட்டுத்தொட்டியும் ஆட்டுத்தொட்டியின் பக்கத்தில் சர்ச்சும் வரும். அதைத் தாண்டினால் ரயிலடியைத் தொடும் பஜாருக்குள் நுழைந்துவிடலாம்.

இந்த மைதானம் வழிதானே லாரன்ஸ் அண்ணன் கிரியை சர்ச்சுக்குக் கூட்டிப் போவான். எத்தனை முறை அவனுடன் போயாகிவிட்டது. இனி லாரன்ஸ் அண்ணனால் சர்ச்சுக்கு எல்லாம் போக முடியுமா? அந்தக் கட்டிலிலே கட்டிப்போட்டது போலக் கிடக்கிறானே!

மைதானம் இருட்டு வெளியாக கிடந்தது. தன்னிச்சையாக மைதானத்தில் நுழைந்து நடந்தான். இங்கேதான் எல்லோரும் கிரிக்கெட், பாட்மிண்டன் விளையாடுவார்கள். எதுவோ காலடியில் நழுவியது. பாம்பா..பூரானா. கிரி சட்டென நடுங்கி ஓடினான். ஓட ஓட மைதானத்தின் இருள் கூடிக்கொண்டே வந்தது. எங்கோ ஒரு நாய் ஊளையிட்டது. ஆளற்ற மைதானம் இரவில் எத்தனை பயத்தை உருவாக்குகிறது. கிரிக்கு போகும் திசை குறித்து சந்தேகம் வந்தது. அவன் தொலைந்துப் போனால் அம்மா இரண்டு பேருக்காகவும் வீட்டில் காத்திருக்க வேண்டும்.

அம்மா இவன் மீது நம்பிக்கை வைத்து அனுப்பியிருக்கிறாள். ரெயிலடி காலியாகத் தான் கிடக்கும். பதினொரு மணிக்கு மேல் எந்த ரயில் வரப்போகிறது? அம்மாவிடம் அவனால் எப்படி சொல்ல முடியும்?

இன்று இரவு அவர் வரவில்லையென்றால் அவர்கள் மூன்று பேரும் தாத்தா வீட்டுக்கு போகவேண்டியதுதான். விடுமுறை நாட்களில் பாண்டிச்சேரிக்குப் போய் தாத்தா வீட்டில் இருந்தபொழுதெல்லாம் எத்தனை சந்தோஷமாக பொழுது கழிந்திருக்கிறது. ஆனால் அப்பா வந்தாலும் வராவிட்டாலும் அம்மா நிம்மதியற்றுத் தான் இருப்பாள். ராஜுவின் அழுகையும் குறையாது. பாதத்தில் ஈரமாய் எதுவோ ஒட்டி அறுவெறுப்பாயிருந்தது. அதைக் கையால் தொட்டுப் என்னவென்றுப் பார்க்கக் கூசி காலை தரையில் அழுத்தித் தேய்த்து நடந்தான். இப்போது புழுதி ஓட்டிக்கொண்டது.

ஆட்டுத்தொட்டியைக் கடந்தவுடன் சர்ச் பக்கத்தில் முளைத்தது. அவன் இதுவரை தனியாக உள்ளே போனதில்லை. எப்போதும் கூடவே லாரன்ஸ் அண்ணன் இருந்திருக்கிறான். லாரன்ஸ் மண்டியிட்டுத் தொழுவதை எத்தனை முறை பார்த்திருக்கிறான்.

சர்ச் கதவு ஒரு தள்ளலில் முனகித் திறந்தது. உள்ளே மூலையிலிருந்து வெளிச்சம் துளிப்போல இருந்தது. எப்போதும் அணையாத மெழுகுவர்த்தியிலிருந்துதான் அந்த வெளிச்சம் வந்தது. மெழுகுவர்த்தியின் துடிக்கும் ஒளியால் நீளமான நிழல்கள் அலைந்தன. உள்ளே இருப்பதை அவன் பார்க்கவேண்டுமா? அவனுக்குத் தெரியாதா? மனதுக்குள் சர்ச்சின் ஒவ்வொரு மூலையும் அவனுக்குத் தெளிவாக தெரிகிறதே! உயரமான கூரைக்குக் கீழே மேடை மீது மேரி மாதாவும் குழந்தை ஏசுவும் சிலையாக. பக்கத்து சுவரில் சிலுவையும் ஏசுவும் ஓவியமாய். கோடியில் பெரிய மீன் தொட்டி போல கண்ணாடி பெட்டிக்குள் படுத்திருக்கும் ஏசுவின் பொம்மை.

ஏசுவின் முகத்திலும் மேரி மாதாவின் முகத்திலும் ஏன் இத்தனை வருத்தக் களை என்று முதன்முறையாக யோசித்தான். சர்ச்சுக்குள் மண்டியிட்டுத் தொழும் லாரன்ஸ் அண்ணனின் முகத்திலும் அதே துயரக் களைதானே! டெய்ஸி ஆண்ட்டி முகத்தில் கூட. ஏன் இருட்டில் நின்ற அம்மாவின் முகத்திலும் அதுதான் இருந்திருக்க வேண்டும்.

இன்று காலை பிள்ளையாரைப் பாலால் குளிப்பாட்டும் பொழுது சன்னதியில் வந்த வாசனை மீண்டும் வருவது போல் இருந்தது. ஏசுவிற்கும் அபிஷேகம் எல்லாம் செய்வார்களா என்ன? பிள்ளையார் மேல் வழிந்த பால் ஊடாக அவருடைய கருத்த உருவம் பளபளவென மின்னியிருந்தது. பிள்ளையாரின் உடலைத் தொடும்போது கை சில்லென்று இருந்தது. பிள்ளையாரைப் பார்க்கும்போதெல்லாம் உள்ளுக்குள் தோன்றும் முறுவல் ஆனந்தம் எல்லாவற்றுக்கும் நேர் எதிராய் ஏசுவையும் மேரியையும் பார்க்கப் பார்க்க உள்ளுக்குள் குமுறல் ஏன் எழுகிறது?

லாரன்ஸ் அண்ணனின் கண்களும் இன்று காலை ஏசுவின் கண்களைப் போல இப்படித்தானே எங்கேயோ நிலைத்திருந்தன. கிரி ஒருக்களித்துத் திறந்தக் கதவை சட்டென மூடினான். அடிவயிற்றில் புதிதாகத் துடிக்க ஆரம்பித்த பயத்துடன் படிகளில் சரசரவென இறங்கி இருட்டுக்குள் ஓடினான்.