சந்தி

க்கள் சக்திக்கு வணக்கம். உலகத்தில் ஒரு பெரிய நிலப்பரப்பு. மிகுந்த மக்கள் தொகை. மொழிகளலாலும், மதங்களாலும், வேறுபட்டு, பலவகையான குடிநிலங்கள், பச்சை, மருதம், நீல கடற்கரைகள், பழுத்த மலைகள், இவற்றில் வாழும் படித்த, படிக்காத மக்கள், எத்தனை எத்தனை வகைகள். எத்தனை எத்தனை திறங்கள், யாவரும், ஒருவர். இந்தியர். நீண்ட தேர்தலாக இருப்பினும், இந்த 100 கோடி மக்களில் வாக்குகளை, இந்தியாவின் நீண்டகன்ற நிலபரப்பில் ஒரு பட்டி தொட்டி கூட விடுபடாது மிகமிக அமைதியான முறையில் நடத்தி வெற்றி கண்டது மக்களாட்சி – எத்துணை வலிமையானது என்று உலகிற்கும், நமக்குமே உணர்த்தியது. பதிநான்காம் முறையான மகத்தான சாதனை. வளர்ச்சித் திட்டங்களின் தொடர்ச்சிக்கும், பொருளாதார தளர்ச்சி நிலையிலிருந்து மீட்சிக்கும் தங்கள் ஒப்புதலை அரசிற்கு மக்கள் அளித்திருக்கிறார்கள். சாதி என்றொரு தீயசக்தியின் பாதிப்பு சற்று குறைந்திருக்கின்றது என்ற மகிழ்ச்சி, பூதாகாரமாக வளர்ந்திருக்கும் பணக்கையூட்டு சிறிது கவலையை அதிகமாக்கியுள்ளது. இந்தப் பிரச்சினைக்கும் வருங்காலத்தில் மக்கள் சக்தியே தீர்வுகாண வேண்டும். இந்தத் தேர்தலில் ஆட்சியை கோரியவர்களிடம், முழுமையான ஆட்சியை, சாவிக்கொத்தையே கொடுத்துவிட்டனர் மக்கள், அவர்களின் ஒரே கட்டளை ”செய்து காட்டு” என்பதே.
***********

வ்வொரு ஆண்டிலும் ‘மே’ மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையும் உலக முழுவதிலும் ‘அன்னையர் தின’மாகக் கொண்டாடப்படுகின்றது. இதுபோன்ற ‘தினங்கள்’ பொதுவாக வணிகர்களால் ‘விற்பனை’ தினங்களாக மாற்றப்பட்டு மக்களை, ‘இதைவாங்கு’ ‘அதைவாங்கு’ மூளையடித் திருநாட்களாக மாறிவிடும்.

இந்த ஆண்டு ‘அன்னையர் தினத்’தன்று ”டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளிவந்த விளம்பரமொன்று, இந்தியாவின் சாதனை செய்யும் இளம் வீரர்கள், இசை வித்தகர் ஏ ஆர் ரஹ்மான், கிரிக்கெட்டின் டெண்டூல்கர், உலக சதுரங்க மாவீரர் ஆனந்த்., இர்ஃபான் சகோதரர்கள், திரைப்பட நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோர்களின் புகைப்படங்களுடன் எழுதப்பட்டிருந்த வாசகம்தான் ஒரு எளிய ஆயினும் ஆழமான கவிதையாக உருவாகியிருந்தது. இதோ அது
ஒளிவெள்ளத்திற்கு முன்னால்
வெறியேறுவதற்கு முன்னால்
கைதட்டல்களுக்கு முன்னால்
மாயங்களுக்கு முன்னால்
கையெழுத்து வேட்டைக்கு முன்னால்
கொழிக்கும் செல்வத்திற்கு முன்னால்
பாரட்டுதல்களுக்கு முன்னால்
தலைப்புச் செய்திகளுக்கு முன்னால்
யாவற்றிற்கும் முன்னால் அம்மா இருந்தாள்.
*******************

விளம்பரத்துறை ஒரு அருமையான கொதிகலன். ”மாற்றி சிந்தி”ப்பவர்களுக்கு ஒரு விறுவிறுப்பான களம். இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கிரிக்கெட் போட்டிகளை சின்னத்திரையில் ஒளிபரப்பும்போது, கூட வெளியாகும் விளம்பரங்களில், இதுவரை பெருமிடத்தைப் பிடித்துக்கொண்டிருந்த கிரிக்கெட் வீரர்கள் திரைப்பட நடிகைகள் யாவரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னணியில் இருப்பது ‘வோடோ .போன்’ விளம்பரங்களில் தோன்றும் ”ச்ஜீ..ச்ஜீ..”க்கள்தான். கேலிச்சித்திரங்கள், கார்ட்டூன்களை இயக்கி ‘அனிமேஷன்’ என்ற உத்தியை ”மாற்றி யோசித்து” மனிதர்களையே கார்டூன்களாக மாற்றி, திரைப்படமாக ஒளிப்பதிவு செய்யும் 22 ப்ரேம்களை, 20 ப்ரேம்களாக சற்று மெதுவாக ஓடவிட்டு, படமெடுத்து ஒரு அனிமேஷன் படம்போல் செய்து நிகழ்வுகளையும் கற்பனை வளம் நிரம்பிய காட்சி அமைப்புகளாக மாற்றியிருக்கிறார்கள், தயாரிப்பாளரும், இயக்குனர்களுமான, ‘நிர்வாணா’ விளம்பர நிறுவனம். பல ”ச்ஜீ..ச்ஜீ..” விளம்பரங்கள் மக்களின் கவனத்தையும் கவர்ந்து, அவ் விளம்பரங்களை காண்பதற்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி விட்டன. படுத்துத் தூங்கும் முதலையை உசுப்பி விளையாடும் ஒருவனை அந்த முதலை விழுங்கிவிடும் அந்த விளம்பரம் பலரால் நினைவு கூரப்பட்டது.

அஞ்சலி

கவிஞர் சி மணி அண்மையில் இயற்கை எய்தினார். ஆங்கிலத்தை தனது முதுகலைப் படிப்பாகத் தொடர்ந்து, ஆங்கில விரிவுரையாளராகப் பணியாற்றிய சி மணியின் கவிதைச் சிந்தனையை, டி எஸ் எலியட்டும், ஆடனும், தங்களது கவிதைகளால் ஈர்த்தது வியப்பில்லை. அமரர் சி சு செல்லப்பாவின் ‘எழுத்து’ வில் கவிதை எழுதத் தொடங்கி, பின், தானே ‘நடை’ என்ற சிற்றிதழைப் பதிப்பித்து வெளியிட்டார். மனிதர், எளியவர், யாருடனும் உடனே சரளமாகப் பழகிவிடாத சிறிது கூச்ச சுபாவம். பழகிவிட்டால் கூட மற்றவர்களின் அந்தரங்களில் அதிரடியாகப் புகுந்துவிடாத ஒருவகை ‘கனவான்’ மனப்பான்மை.

சேலத்தில் வசித்த அவர் மாலை வேளைகளல் கடைத் தெருவிலிருந்த நண்பரின் துணிக்கடைக்கு, தவறாத வருவார், வந்து ஒரு காப்பி0 அருந்திவிட்டு, ஓரிரு சிகெரெட் புகைத்து விட்டு விடைபெறுவார். சேரம் செல்லும்போது, மாரியம்மன் கோவிலுக்கு அருகே இருந்த துணிக்கடைக்கு, நானும் போவேன்; தொழில் முறையிலும், நட்புமுறையிலும். அந்தத் துணிக்கடைக்காரர், இன்னும் என் நெஞ்சில் நண்பராகவேஉள்ளவர். அவர்தான் என்னிடம் சி மணி ‘நடை’ நடத்தியபோது தன் சொந்தப் பணத்தை பெருமளவு தோழர்களாகக் கருதியவர்களினால் ஏமற்றப்பட்டு இழந்தார் என்றும், பண இழப்பைவிட தோழமையின் இழப்பு, அவரை மிகவும் வாட்டியதாக கூறினார். கவிதை எழுதுவது போலவே, சி மணி மிகவும் அழகாக தையல் கலையையும் பயின்றிருந்தாராம்.

சந்தி

70-களில் சில தீவிர வாசகர்கள், அவரது எழுத்துக்களை மனனம் செய்ததுபோல் ஒப்புவித்து மகிழ்ந்தார்கள், சக்தியையும், அதன் ஆதாரமாகப் பெண்மையையும், அது ஒளிவீசும் தாய்மையையும் தன் வாழ்க்கையின் அடிநாதமாக உபாசித்து, எழுத்தை ஒரு தவமாகக் கொண்டவர். அண்மையில் மறைந்த லா.ச.ர அவருக்கு நமது அஞ்சலி. **********தமிழில் கவிதை நாளுக்குநாள், பெருகி, உயர்ந்து வருகின்றது வார, மாத இதழ்கள், கவிதைக்கு இடத்தை உற்சாகமாகவே தருகின்றன। சில இதழ்கள், இலக்கிய தீபாவளி கொண்டாடின. ‘குமுதம்’ இதழில் எழுத்தாளர் ஜெயமோகன் வேகமாக எழுதுவதையும், திரைப்படங்களை அவர் ஊன்றி பார்பதில்லையென்றும், இயக்குனர் சேரன் சிகரெட் அதிகமாகப் பிடிப்பதையும் கூறி தன் இலக்கியப் பணியை முடித்துக் கொண்டது. ஆனந்தவிகடனில், கவிஞர் விக்கிரமாதித்யன், பீடி சுற்றும் பெண்களைப் பற்றி ஒரு நீண்ட வியாசத்தை கவிதையாக எழுதியிருந்தார், சுவைபட, ஆனால் கவிதைக்கு இறுக்கமும், சுருக்கமும்தானே அழகு. என்னை மிகவும் ஈர்த்தது, கவிதையின் மொழி, பேச்சு மொழியாக மாறும்போது கிடைக்கும் மழலையின் அழகு. அது கு. உமாதேவியின் ‘அன்னாடங்காச்சி’ என்ற கவிதையில் ‘ஆனா। சின்ன கொடிகுத்திஎங்கொழந்த கிட்ட ஆரஞ்சுமிட்டாய் கொடுக்கும்போது வுழுந்து வுழுந்து சிரிப்போம்’என்கிறபோது உண்மையை நேரில் காணும் ஒரு வெள்ளந்திப் பார்வையின் ஏகத்தாளம் வெளியிடப்பட்டாலும், மழலைச் சொல்லாகவே இருப்பதால், இதன் கனமும் குறைந்து விடுகின்றதே। நேரில் காணும் உண்மையை, உள்ளபடி, ஒரு பயமும் இல்லாது கூறும் நேர்மைக்கு அருகாமையில் வருகின்றது தமிழ்க்கவிதை. ஆனால் இன்னும் நீண்டதூரம் நாம் போக வேண்டும்।. தமிழர்கள் நல்ல கற்பனையுள்ளவர்கள், ஆகவே தீக்குள் விரலை விட்டாலும், பெரும்பான்மையானபோது உண்மை இதமாக தண்ணித்துப் போகின்றது. உர்து மொழி இதற்கு சற்று மாறான நிலையை எடுக்கின்றது. குர்ஷித் அஃப்சார் பிஸ்ரானி, தான் எழுதும் உர்தூமொழி பற்றி,”அப் உர்தூ க்யா ஹை ஏக் கோத்தே கீதவாய்ஃப் ஹை மஜா ஹர்ஏக் லேத்தாஹை மொகயத் கோன்கர்த்தாஹை”
மொழி பெயர்த்தால் (ஆங்கிலம் வழியாக) இப்போது ஊர்தூ என்ன, விபாசர விடுதியில் ஒரு வேசியாக யார் வேண்டுமானாலும் அவளுடன் உல்லாசம் காணலாம், யாரோ அவளை காதலிக்கின்றார்।’ ********** பேச்சில், எழுத்தில் வரும் பிழைகள், பேசுபவரின், எழுதுபவரின் ஆழ்ந்த உள்ளக்கிடைக்கைகளென்றும், அவையே உண்மையான எண்ணங்கள் என்றும் ஒரு உளவியல் கோட்பாடு உண்டு. எழுதியவை அச்சில் வரும்போது ஏற்படும் பிழைகளுக்கு யார் பொறுப்பு? என்னைக் கேட்டால் எழுதியவர்தான் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும். எழுதுபவர் சற்று கூடிய கவனத்துடன் தான் எழுதுவது, எழுதியது அச்சில் வெளிவரும்போது பிழைகள் நேரக்கூடும் என்ற பொறுப்புடன் எழுத வேண்டும். சென்ற ‘சந்தி’யில் நேர்ந்த பிழைகளுக்கு கொம்பன் பொறுப்பேற்று வாசகர்களின் மன்னிப்பை யாசிக்கிறான் புத்தி. புத்தி. புத்தி.
சிரிக்க : பள்ளிப் பிள்ளைகளாக நாம் இருந்தபோது ஒவ்வொரு ஆண்டும், தமிழ் நாட்டில் பெரிய நகரங்களில் சர்கஸ் வருவதுபோல குத்துச் சண்டை, மற்போர்கள் வரும்। முன் மாலைகளில் ஒலிபெருக்கியைக் கட்டிக்கொண்டு, வண்ண வண்ண மலிவான காகிதத்தில் கருப்புப் பையில் அச்சிட்டுப் புகைப் படங்களுடன், அன்றைய ”ரோஃமான்” குத்துச் சண்டையை பற்றி விளம்பரம் செய்துகொண்டு போவார்கள். எந்தச் சண்டையிலும் தோற்காத இந்தியத் தாராசிங், உச்சக்கட்ட போராக, கிங்காங்வுடன் முகமூடி அணிந்த ‘வாங் பக்லி’ மோதுவதாக இருக்கும். ஒவ்வொருநாள், தனித்தனி ஊர்திகளில் ‘கிங்காங்’ ஒரு வண்டியிலும், பின்னோ முன்னோ இன்னொரு வண்டியில் கருப்பு முகமூடியணிந்து வாங் பக்லியும் வீதி உலா வருவார்கள். வாரம் ஒரு தடவையாவது கிங் காங் வாங் பக்லியின் முகமூடியை கிழிக்கப் போவதாக சவால் விடுவார். ஆனால் போட்டி அமைப்பாளர்கள் தவிர வேறு யாராலும் ‘வாங் பக்லி’ யார் என்று அறிய முடியாது. சென்ற இதழ் நவீன விருட்சம் படித்தபோது திரு தி.க.சி யின் கடிதம் என்னைக் கவர்ந்தது. ‘வாங் பக்லி’யின் முகமூடியை திரு.தி.க.சி கிழிக்கப் போவதில்லை போலும். (நவீன விருட்சம் 2008ல் பிரசுரமான சந்தி)

சந்தி

ஞ்சலி அண்மையில் இயற்கை எய்திய ஓவியர் ஆதிமூலம், சுஜாதா, ஸ்டெல்லா புரூஸ் ஆகியோருக்கு என் அஞ்சலி. வாழ்க்கையில் இழப்புக்கள் தவிர்க்க இயலாதவை, சில இழப்புக்கள், சிந்தையில் ஆழமாக, வடுவாக, காலம் மட்டுமே ஆற்றக்கூடிய இரணங்களாகக் கூடிக் களித்த நினைவுகளே ஆறுதல் தரக்கூடியதாக அமைந்து விடுகின்றன. பல இரங்கல் பேச்சுகள், இறந்தோர் மாட்சியைவிட பேசுபவரின் பெருமையை இறந்தவர் எப்படிப் பாராட்டினார் என்று பீற்றிக்கொள்வதாக, கேட்பவர், படிப்பவர் கூசும்படியாக இருக்கின்றன. ஆதலால் இங்கு இயற்கை எய்திய அருமை நண்பர்களைப் பற்றி இவர்கள் சிறந்த கனவான்களாக இருந்தார்கள் என்பதைத் தவிர வேறு ஒன்றையும் கூற உத்தேசமில்லை. நீங்களும் அவர்களைப் போலவே என் உணர்வுகளைப் புரிந்துகொள்வீர்கள். ************************* தாய் நாடு, திரு நாடு, எந்தையும் தாயும் குலவி மகிழ்ந்த நாடு, இந் நாடு. விடுதலை பெற்று 60 ஆண்டுகளுக்குமேல் ஓடிவிட்டன. குடிமக்கள் இன்னும் வறுமையிலிருந்து, நோயிலிருந்து, அறியாமையிலிருந்து, அச்சத்திலிருந்து முழுமையாக விடுதலை பெறவில்லை. நெஞ்சை நிமிர்த்தி பெருமையுறவும் ஏற்றங்களும் கண்டோம், முதல் பெருமை முற்றிலும் கர்வம் கொள்ள இன்று உலகிலேயே பெரிய மக்களாட்சி கொண்ட நாடு இந்தியா என்பதுதானே. சந்தித்த பெரிய சோதனை, 32 ஆண்டுகளுக்கு முன், June 25, 1975 இந்திரா காந்தி அம்மையார் பிரகடனம் செய்த “உள்நாட்டு நெருக்கடி நிலைமை.” நள்ளிரவில் எதிர் அணியில் முன்னணியில் இருந்த தலைவர்கள் ஜெயப்பிரகாஷ் நாராயண், மொரார்ஜி தேசாய், அடல் பிகாரி வாஜ்பாய், அத்வானி முதலியோர் சிறையில் அடைக்கப்பட்டனர், மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு, செய்தி இதழ்கள் வாய் பூட்டு இடப்பட்டு, அரசிற்கு எதிரான செய்திகள் வெளியிடக் கூடாதென்ற தடுப்பு அறிக்கை கொடுக்கப்பட்டு, குடிமக்களுக்கு நீதி முற்றிலும் மறுக்கப்பட்டது. கவிந்தது காரிருள். இவ்வாண்டு பிப்ரவரி 25-ல் காலமான நீதிபதி ராஜ் ஹன்ஸ் கன்னா (அகவை 95), மக்களின் மரியாதைக்கும், போற்றதலுக்கும் உரியவர், பொறுமை, பணிவு, கூர்ந்த மதிநுட்பம், எல்லாவற்றிற்கும் மேலாக வீரமும் கொண்டவர். 1912-ம் ஆண்டு பிறந்த அவர் 1971-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதிகளில் ஒருவராக பதவியேற்றார். உள்நாட்டு நெருக்கடி நிலைமை என்ற அரசின் கொடூர நடவடிக்கைக்கு எதிராக பல ‘ஆள்கொணர்வு’ வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் நடக்கும்போது, ‘ஏடி. எம் ஜபல்பூர் எதிர் சிவகாந்த சுக்லா’ என்ற பேர் பெற்ற வழக்கை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஐவர் கேட்டு தீர்ப்பளித்தனர் – அந்த வழக்கின் தீர்ப்பு, அரசின் நிலையை ஆராய்ச்சிக்கும், கண்டனத்திற்கும் உட்படுத்தக் கூடிய ஒன்று. நான்கு நீதிபதிகள் அரசின் நிலையை – உள்நாட்டு நெருக்கடி நிலைமையை ஆதாரித்து எழுதினார்கள். நீதிபதி ஹன்ஸ் ராஜ் கன்னாவின் தீர்ப்பு, நியாயத்தையும், நீதியையும் வலியுறுத்தி, அரசின் நிலையைக் கேள்விக்குரியதாக்கிய எதிரான ஒன்று. அவ்வாறு அரசின் நிலையை எதிர்த்துக் கொடுத்தத் தீர்ப்பிற்காக, அவர் கொடுத்த விலை, அவருக்கு முறைப்படி கிடைக்க வேண்டிய தலைமை நீதிபதி என்ற பதவி உயர்வைப் பறித்தது. அப்பதவி, அவருக்கு இளையவரான மற்றொரு நீதிபதிக்கு அளிக்கப்பட்டது. நீதியரசர் ஹன்ஸ் ராஜ் கன்னா தன் பதவியைத் துறந்தார். அன்னாரின் வீரமும், தியாகமும் இந்திய நீதித்துறையின் மானத்தையும் கண்ணியத்தையும், நேர்மையையும் காப்பாற்றியது. நீதியரசர் ஹன்ஸ்ராஜ் கன்னாவின் உருவப்படம் சுப்ரீம் கோர்ட் இரண்டாம் வளாகத்தை அலங்கரிக்கின்றது. இன்று.(நன்றி : திரு அனில் திவான் கட்டுரை வீர நீதியின் ஒரு முகம் – ஹிந்து நாளிதழ் 07.05.2008). ******************************* புகழுக்கு மூன்று வழிகள், ஒன்று, புதிதாகச் செய்வது, இரண்டு, பெரியதாய் செய்வதாம், மூன்றாவது சிறப்பாகச் செய்வது. எழுத்திலும் இதேதான். வழிகள் நேராக இருந்தால் குறுக்கு வழிகள் இருக்காதா என்ன? அதில் ஒன்று, மாற்றி சொல்வது. உங்கள் வீட்டு பெண்மணிகளைக் கேட்டுப் பாருங்கள்: தமிழ் திரைப்பட இசையில் இது ரீமிக்ஸ் காலம். பார்த்தார் ஒரு சுஜாதா சிஷ்யக்குஞ்சு, சிறுகதைகளில் புதுமைப்பித்தனின் சிறுகதை ஒன்றை ரீ மிக்ஸ் செய்து உலவவிட்டுவிட்டார். இலக்கியத்தில் வேண்டாமே இந்த ரீ மிக்ஸ். ******************************* சென்ற இதழ் ‘சந்தி’யில், தன் ‘இனிய’ வாசகர்களுக்காக, கொம்பன், ரெசினாகுன்றுக்குக்கூட போவதற்கு ஆயத்தமாக இருப்பதாகக் கூறியிருந்தான். கடவுளால் தலையில் தைலம் தடவப்பட்டவர், காப்பாற்றப்பட்டார். குறைந்தபட்ச தகுதியே அவருக்கு இல்லையாம். போகட்டும். கொம்பனிடம், ஆசிரியர் அழகியசிங்கர், பேசும்போதெல்லாம்,’உங்கள் வாசகர் வட்டம் விரிந்துகொண்டே வருகின்றது. சந்தியை நிறுத்தி விடாதீர்கள்,’ என்று கூறி வருகின்றார். அப்படித்தானே!! “ஆம்” என்கிற கடலோசை.(நவீன விருட்சம் 79/80 வது இதழில் வெளிவந்த கட்டுரை)