போலிப் பா(ர்)வை

(இதோ ஒரு சிலேடைக் கவிதை. இதில் வேசியையும், கண்ணாடியையும் சிலேடைப் பொருளாக்கி எழுதியிருக்கிறேன். படம் ஒரு பெண் கண்ணாடி அருகில் இருப்பது போல இருந்தால் நலம். இன்றேல் எது பொருத்தமோ அதை இடுங்கள்.)

யாருமற்ற வெளியில்
உன்னைக் கடந்தபோது
ஒரு வினாடி
என்னை பூசிக்கொண்ட
போலி நீ.

என்னை
உள்ளிறக்கிக் கொள்வது போல்
பாசாங்கு காட்டுகிறாய்.

நான்
தள்ளிப்
போனதும்
அடுத்த
பிம்பத்திற்குத்
தயாராய் நீ!

மேகத்திலுன் முகம்

இறுதி நிராகரிப்பின்இறுதிச் சொல்லைச்சொல்லிவிட்டு நீசெல்கையில்உன் முகத்தைக்காட்டியபடியே மேகம்பேய்மழையின் கோரத் துளிகளால்கிழித்தெறிந்தது பெயர் தெரியாதபூவிதழ்களை அவை சேற்றில்கலந்து எங்கோமுகவரியற்ற இடங்களுக்கெல்லாம்இழுத்துச் செல்லப்பட்டபோதுநடை பிணமாய்நடக்கலானேன் நானும்

இடம் ஒதுக்கப் படுகிறது

சில செருப்புகளுக்கும்
ஒதுக்கப் பட்ட பொருட்களுக்கும்
நடுவே ஒதுக்கப் பட்டிருந்தது
அந்த இடம்!

காண்பாரற்றுக் கிடந்தது
ஆங்கே ஓர் ஓவியம்
சற்றே சாயம் போன ஓவியம்
ஆங்காங்கே கொஞ்சம்
கிழிந்து போனதும் கூட
பல வெயிலுக்கும்
சில மழைக்கும்
வாடை காற்றுக்கும்
கிடந்து கிடந்து
நொந்து நொந்து
அந்த ஓவியம் பெரிதும்
பாதிக்கப் பட்டிருந்தது!

அந்த ஓவியத்திற்கு எதிரே
அழகிய புகைப் படமாய்
ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது
அதில் சில நிஜங்களின்
நிழல்கள் குடும்பமாய்
நின்று கொண்டிருந்தன
அதிலிந்த ஓவியத்தின்
நிழலும் பிரதிபலித்தது!

“செல்லம், சாப்பிடுடா கண்ணா,
இல்லேன்னா அப்பா வந்ததும்
என்னைத் திட்டுவாங்க” என்று
உள்ளே இருந்து வந்தகுரல்
வெளியே உள்ள ஓவியத்தின்
பழைய வாழ்க்கையை
புரட்டிப் பார்க்க வைத்தது!

ஓவியத்தின் அருகே
செருப்பைக் கழற்றிவிட்டுவிட்டு
உள்ளே நுழைந்த காலடிச்
சத்தத்தில் விசும்பியது
சற்றே இப்பொழுது
பசிக்கும் அந்த சுமந்த வயிறு

“டேய், என்ன சாப்பிட மாட்டேங்குற
நல்லா சாப்பிட்டாதான்
அப்பா மாதிரி ஆகலாம்!”

அந்த ஓவியத்தின்
அருகே இந்தப் பெற்றோர்களுக்காகவும்
ஒரு இடம் ஒதுக்கப் படுகிறது!

அப்பனாத்தா நீதான்

வெயிலடிச்சு ஊரு காஞ்சு கெடக்கும் நேரம்
கையை மழை நனைச்சுப் போனதுன்கண் ஈரம்
ஊரு பாக்க மீச முறுக்கி போன எ(ன்) ஐயா
உன் வீரமெல்லாம் போயி கண்ணீர் விட்டது ஏ(ன்)ய்யா
காரு புடிச்சு பத்திரமா ஏத்திவிட்டு
கதவு ஓசபடாம பக்குவமா சாத்திப்புட்டு
துண்டெடுத்து வேர்வையோட கண்ணீரும்
தொடச்சுபுட்டு மீசைய முறுக்கினதுன் வீரம்

அம்மா அம்மான்னு பலசொல்லு காதில்விழும்
ஐயா ஐயான்னு இந்தப்புள்ள மட்டும் அழும்
கண்ணு போன பெரியாத்தா
ரெண்டாம் கல்யாணத்துக்கு சொல்லிப் பாத்தா
பொஞ்சாதி பொண்ணு ஆத்தா எல்லாமே நாந்தான்னு
பெருமையா நீ சொன்னப்ப கலங்குனது என்கண்ணு

வயித்தப் புடிச்சுகிட்டு வழியேதும் தெரியாம
சமஞ்ச சேதி உன்கிட்ட சொன்னது இந்தமக
ஊருகூட்டிப் பந்தலிட்டுக் கெடா வெட்டுன
தங்க வளையலும் தோடுமா நக பூட்டுன
சந்தி முக்குல என்ன கேலி பேசுன பையல
நீ பந்தாடுனதப் பார்த்துபொறவு வார்த்தையேதும் வரல

மெத்தப் படிக்க டவுனுக்குப் போனே(ன்)
என்னத் தேடி நீயும் மெலிஞ்சுப் போன.
பொண்ணுங்ககூட பெருசா அரட்டையடிச்சேன்
பையகள கொஞ்சம் கேலிசெஞ்சு வச்சேன்
கூத்துக் கேலி கும்மாளத்தோட
காதலும் வந்து சேந்துக்கிட
வீட்ட விட்டு வருவியா என்கூடன்னு
கேட்டுப்புட்டான் கேள்விய பட்டுன்னு
வீட்டுச் சம்மதம் வாங்கியாரேன்
கெடைக்காட்டி உங்கூட ஓடிவாரேன்ன்னு
சொல்லிப்புட்டு அழுது வடிச்சேன்
கண்ணீரோடு ஐயா பாசம் கொஞ்சம் கரைச்சேன்
படிச்சு முடிச்சு ஊரு வந்தே(ன்)
பாசம் கொஞ்சம் மறந்து வந்தே(ன்)

எப்படித்தான் புரிஞ்சுதோ பாவிமக நெனப்பு
கல்யாணத்துக்குத் தேதி குறிச்ச எனக்கு
பொண்ணு பார்க்க வருவாகன்ன
சீக்கிரமே கல்யாணம்ன்ன
மொத மொதலா என் மனசு முழுசா
அம்மாவத் தேடி அழுதுச்சுப் புதுசா
சீவி முடிச்சு சேல உடுத்தி சிங்காரமா
வந்து நின்னேன் ஒரு பொணமா

காப்பி கொடுக்க குனிஞ்சு நின்னேன்
மாப்பிள்ள கைபடவும் துடிச்சுப் போனேன்
பதட்டத்துல மாப்பிள்ள மொகம் பார்த்தேன்
பாவிப்பய நான் காதலிச்ச பையதேன்
ஓடிவந்து உன்னைக் கட்டிப்புடிச்சு நானழ
ஆத்தா நீ அழாதடான்னு சொல்லி நீயழ
ஆத்தா நியாபகம் அழிஞ்சுடுச்சு எம்மனசுல
அப்பனாத்தா நீதான்னு கண்ணீர்விட்டேன் நிக்கல