எதையாவது சொல்லட்டுமா……..37

உங்களுக்கு எதாவது சந்தேகம் வந்துள்ளதா கடவுளைப் பற்றி. பலர் கோயிலுக்குப் போவார்கள். சாமியைக் கும்பிடுவார்கள். அவ்வளவுதான். சாமியைப் பெரிய சக்தியாக நினைத்து கோயில் கோயிலாகச் செல்பவர்களும் உண்டு. கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற ஆராய்ச்சியெல்லாம் இப்போதெல்லாம் யாரும் பண்ணுவது இல்லை. ஏனென்றால் அது தேவையில்லாத ஒன்று.

அன்று சனிக்கிழமை. சீர்காழியிலிருந்து மயிலாடுதுறைக்கு நான் டூ வீலரில் வந்து கொண்டிருந்தேன். என் பின்னால் கிளை மேலாளரும் வந்து கொண்டிருந்தார். அவருக்குக் கோயில் போவது, கடவுளை எதற்காவது வேண்டிக்கொள்வது என்பதெல்லாம் சுத்தமாகப் பிடிக்காது. நம்பவும் நம்ப மாட்டார். ஆனால் இது ஒரு பிரச்சினையே இல்லை. ஆனால் அவர் ஒரு கேள்வி கேட்கிறார். ‘இப்போதெல்லாம் கடவுள் நம்பிக்கை மக்களிடம் அதிகமாகிவிட்டது போலிருக்கிறதே’ என்று.

எனக்கு இதைப் பற்றியெல்லாம் அதிகமாக யோசித்து விட்டுவிட்டேன். இப்போதெல்லாம் அதிகமாக யோசிப்பது இல்லை. ஆனாலும் அவர் கேட்டார் என்பதற்கு பதில் சொல்லத் தோன்றியது. ‘ஆமாம். கடவுள் நம்பிக்கை அதிகமாகி விட்டது,’ என்றேன். பின் காரணமும் சொன்னேன். ‘பல மக்கள் அளவிடமுடியாத துன்பங்களை சுமந்து கொண்டிருக்கிறார்கள். அதைச் சரிசெய்யும் வழி தெரியவில்லை. குறைகளைக் கேட்க கடவுள் ஒருவன்தான் இருக்கிறான். அதனால் கடவுளை நாடுகிறார்கள்,’ என்றேன்.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் PAIN ஐ சுமப்பது என்பது சாதாரண விஷயமில்லை. ஒரு சிறுவயது உடையவர் என் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர். சென்னையிலிரூந்து அவர் கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்தார். ”15வயதிலிருந்து இந்தத் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். தீராத வலி. கைகால் முட்டிக்கு முட்டி. தாங்க முடியாத வலி. தற்கொலை செய்துகொள்ள தோன்றும். மகமாயிதான் என்னைக் காப்பாற்றி இருக்கிறாள்…” என்றான். அவன் சொன்னதை கிளை மேலாளரிடம் சொன்னேன். அவர் சிரித்தார். ”தானாகவே அந்த வலி போய்விடும்…மகமாயி என்று அவன் சொல்கிறான்….இப்படித்தான் எல்லோரும்…?” என்றார்.

”உங்களுக்கு துன்பமே வந்ததில்லையா? அப்படி வந்தால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டேன். ”நடப்பது நடக்கட்டும்,” என்று இருப்பேன் என்று சொன்னார். அவரிடம் வாதாட முடியாது என்று தோன்றியது. நானும் பெரிய கடவுள் நம்பிக்கை உடையவன் என்றெல்லாம் சொல்ல முடியாது. நம் தமிழ் நாடு முழுவதும் எத்தனையோ கோயில்கள் இருப்பது குறித்து ஆச்சரியம் அடைந்திருக்கிறேன். இந்தக் கோயில்களுக்கெல்லாம் மக்கள் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்து, முகமதையர், கிருத்துவர் என்று எல்லோரும் கடவுளை வணங்காமல் இல்லை.

பெரும்பாலான மக்களுக்கு துன்பம் வரும்போது அதை எதிர்கொள்ள திராணி இல்லை. நான் சென்னையைவிட்டு இங்கே வந்துவிட்டேன். திரும்பவும் சென்னைக்கே போக வேண்டுமென்று நான் கடவுளிடம்தான் வேண்டிக்கொள்ள முடியும். Top Executiveஐப் பார்த்து கெஞ்சிக்கொண்டிருக்க முடியாது. ஆனாலும் கடந்த 5 ஆண்டுகளாக நான் ஒன்றை செய்யவில்லை. என் மூதாதையார் வாழ்ந்த பூமியைப் போய்ப் பார்க்காமலிருந்தது. பள்ளிக்கூட வயதில் நான் போயிருக்கிறேன். பிறகு சில நிகழ்ச்சிகளின் போது அங்கு போயிருக்கிறேன். இப்போது அந்தக் கிராமம் மட்டும்தான் இருக்கிறது. அங்கு போய் தங்க என் மூதாதையார் வீடு, நிலம் என்றெல்லாம் எதுவுமில்லை. ஆனாலும் சென்னையை விட்டு வந்த எனக்கு இவ்வளவு கிட்ட அந்த இடம் இருந்தும், போய்ப் பார்க்க தங்க ஒன்றுமில்லை. அங்குள்ள வீரன் கோயிலைத் தவிர.

அந்தக் கோயிலை ஏன் போய்ப் பார்க்கக் கூடாது என்று தோன்றியது. அதனால் வாரம் ஒருமுறை போய்க் கொண்டிருக்கிறேன். இங்கெல்லாம் நிலம் இருந்தது. இங்கெல்லாம் வீடு இருந்தது என்று சொல்லிக்கொண்டே போவேன். வீரனைப் பார்த்துவிட்டு வந்து விடுவேன். இதெல்லாம் கடவுள் நம்பிக்கையா இல்லையா என்பது தெரியாது. அங்குள்ள சிவன் கோயிலுக்குப் போனேன். அதை பராமரிக்கவே யாரும் இல்லை. அதைப் பார்த்துக்கொள்பவர் கோயிலுக்குப் போய் பூஜை செய்து. புத்தம் புதிய மாலையை இட்டு மந்திரம் சொல்கிறார். அந்தக் கோயிலில் எங்கள் குடும்பம் அவரைத் தவிர யாருமில்லை. சிவனை அவ்வளவு நெருக்கமாகப் பார்க்க முடிகிறது. கோயில் ஒரு பக்கத்தில் அந்தக் கோயிலைப் பற்றிய தல வரலாறு எழுதப் பட்டிருக்கிறது. சிவனும் விஷ்ணுவும் சொக்கட்டான் விளையாடும்போது, பார்வதி நடுவராக இருக்கிறாள். விஷ்ணு ஜெயித்து விடுகிறார். அதைச் சொன்ன பார்வதிக்கும் விஷ்ணுவிற்கும் சாபம் கொடுக்கிறார் சிவன். அந்த சாப விமோசனம் பெற அகில்காடு என்கிற அந்த இடத்தில் பார்வதி சிவனை தன் ஆபாரணங்களை எல்லாம் கழற்றி பூஜை செய்கிறாள். சாப விமோசனம் பெறுகிறாள். அகில்காடு அசிக்காடு என்று மாறி விடுகிறது. கோயில் அமைதியாக இருக்கிறது. வெளியே வருகிறேன். கடவுள் நம்பிக்கை உண்டா இல்லையா? கடவுள் என்பதே நம்முடைய மனசாட்சி என்று தோன்றுகிறது. நம் மனசாட்சியைப் பார்க்கத்தான் கடவுளை தொழுகிறோம். Taste of temples என்ற ஒன்று இருக்கிறது. கோயில் அமைந்த இடம். அதைச் சுற்றிய புராணக் கதை என்றெல்லாம் இருக்கிறது. ஒவ்வொரு கோயிலாகச் சென்று கோயிலையும் சாமியும் பார்த்துவிட்டு வரலாம். நம் மனசாட்சியையும் தேடுவோம்.
(இன்னும் வரும்)

எதையாவது சொல்லட்டுமா……..36

மயிலாடுதுறையிலிருந்து சீர்காழி பஸ்ஸில் செல்லும்போதெல்லாம் என் கண்ணில் அடிக்கடி தட்டுப்படுவது திருக்குறள். பெரும்பாலான குறலுடன் நான் ஒத்துப் போயிருக்கிறேன். சில குறள்களை நினைத்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன். ஆனாலும் போதனை செய்வது எனக்குப்பிடிக்காத ஒன்று. உலகத்தில் ஒவ்வொருவரும் இன்னொருவருக்குப் போதனை செய்வதைத்தான் விரும்புவார்கள். பதவி மமதைப் பிடித்தவர்களுக்குத் தன்னடக்கம் என்பது தெரியாது. அவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள் மாதிரி சுற்றித் திரிவார்கள். ரோடில் நடந்துசென்றால் எல்லோரும் ஒன்றுதான்.

நான் சமீபத்தில் படித்த ஒரு குறள்.

தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.

எனக்கு என்னமோ இந்தக் குறளைப் படிக்கும்போது வள்ளூவர் தெரியாமல் எதையோ சொல்கிறார் என்றே எனக்குத் தோன்றியது. வள்ளுவரை இழிவுப் படுத்துவதாக யாரும் நினைக்கக் கூடாது. எனக்கு அந்தத் தகுதியும் கிடையாது. ஆனால் இந்தக் குறளைப் படித்ததிலிருந்து எனக்கு என்னமோ உறுத்திக்கொண்டே இருக்கிறது.

முதலில் இந்த உலகத்தில் தோன்றுவது என்பதே நம் கையில் இல்லை. ஒரு அணும் பெண்ணும் உள்ள இச்சையில் ஒவ்வொருவரும் பூமியில் அவதரிக்கிறோம். அதேபோல் நம் பிள்ளைகளும் அப்படித்தான் பிறக்கிறார்கள். அப்படி இருக்கும்போது, எப்படி புகழோடு தோன்ற முடியும்? புகழ் என்பதே அபத்தமானது.

கொஞ்ச நாட்கள் முன் டிவியில் பல நிகழ்ச்சிகளில் ஒருவர் அடிக்கடி தோன்றிகொண்டே இருப்பார். அவர்தான் ஒரு தேசிய வங்கியில் தலைவர் பதவியில் இருந்தவர். எல்லா விழாக்களுக்கும் வங்கியிலிருந்து பணத்தை வாரி இழைப்பார். அதைப் பார்த்து அவரை எல்லோரும் கூப்பிடுவார்கள்.

ஒரு முறை நகுலன் என்ற படைப்பாளிக்கு விருது வழங்கினார்கள். சாந்தோம் விருது. நகுலனுக்கு கூச்சமான கூச்சம். அவர் உடல் நடுங்கத் தொடங்கியது. எப்படி மேடையில் போய் அமர்ந்து விருது வாங்கப் போகிறோம் என்ற அச்சமும் அவரிடம் இருந்தது. ஆனால் அவர் பக்கத்தில் நம் வங்கித் தலைவர். அவருக்கு நகுலனைப் பற்றி ஒன்றும் தெரியாது. அவர் புத்தகத்தை அவர் எழுத்துக் கூட்டிக்கூட படித்திருக்க மாட்டார். அப்படிப்பட்டவர் கையிலிருந்துதான் நகுலன் விருது வாங்கப் போகிறார்.

விருது வழங்கும் தருணம் வந்தபோது நகுலன் தடுமாறி எப்படியோ போய் நின்று விருதை வாங்க நின்றுவிட்டார். நம்முடைய வங்கித் தலைவரோ அந்தத் தருணத்திற்காக காத்துக்கொண்டிருந்தார். டிவியில் அவர் முகம் பளிச்சென்று விழ சிரித்தபடியே நகுலனுக்கு விருதை வழங்குகிறார். இப்படி புகழோடு தோன்றிய வங்கித் தலைவர் இறுதியில் சிறையில் கம்பி எண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டார். சில ஆண்டுகளுக்குள்ளாகவே எப்படி நிலைமை மாறி விட்டது.

இப்போது சொல்லுங்கள் திருவள்ளுவர் எந்தத் தோன்றலைச் சொல்கிறார். இது மாதிரி அர்த்தமே சரியாக வராத குறளை நான் படித்ததே இல்லை. புகழ் என்பது ஒன்றுமில்லை. அதே போல் தோன்றுதலும் ஒன்றுமில்லை.

ஒருவர் புகழோடுதான் தோன்ற வேண்டும் என்பதில்லை. அதேபோல் புகழ் என்பதும் ஒருவித அபத்தம்தான். ஏன் வள்ளுவர் இதுமாதிரி ஒரு குறளை படைத்தார்? இந்தக் கேள்வி அடிக்கடி என்னிடம் தோன்றி கொண்டே இருக்கிறது.

எதையாவது சொல்லட்டுமா 35

சிறிது நேரத்திற்குமுன் லட்சுமிபதி போன் செய்தார். 31.1.2011லிருந்து இந்த ஆண்டு முடியும்வரை க.நா.சு நூற்றாண்டு. நாம் அவர் நினைவாக எதாவது செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார். நான் சீகாழியில் இருப்பது ஒரு குறையாகப் பட்டாலும், க.நா.சு விஷயமாக எதாவது செய்ய வேண்டும். மாதம் ஒருமுறை கூட்டம் போடலாம் என்று அவரிடம் குறிப்பிட்டேன். பின் அவருடைய புத்தகங்கள் எதாவது கொண்டு வரலாம். அதற்கு இப்போது எந்தத் தடையும் கிடையாது. நான் ஏற்கனவே மையம் வெளியீடாக வந்திருந்த க.நா.சு கவிதைகள் சிலவற்றை திரும்பவும் அச்சடிக்க வைத்திருக்கிறேன். உண்மையில் புத்தகக் காட்சியின்போது அதை இலவசமாக அளிக்க தயாரித்துக் கொண்டிருந்தேன். கடைசி நேரத்தில் ஒன்றும் செய்ய முடியாமல் போய் விட்டது.

க.நா.சுவை அவருடைய கடைசிக் கால கட்டத்தில்தான் சந்தித்தேன். புத்தகம் படிப்பது எழுதுவது இதைத் தவிர வேறு எதையாவது சிந்தித்திருப்பாரா என்பது தெரியவில்லை. ஒருமுறை நான், நகுலன், வைத்தியநாதன், ராஜகோபாலன், ஞானக்கூத்தன், ஸ்ரீனிவாஸன் என்று அத்தனைப் பேர்களும் க.நா.சுவை அவருடைய மைலாப்பூர் வீட்டில் சந்தித்தோம். சிறிது நேரம் பேசிவிட்டு எல்லோரும் மைலாப்பூரில் உள்ள ராயர் கபேக்குச் சென்றோம். க.நா.சுவுடன் என்ன பேசினோம் என்பது ஞாபகத்தில் இல்லை. ராயர் கபேயில் டிபன் நன்றாக இருக்கும். க.நா.சுவிற்கு எங்கே டிபன் நன்றாக இருக்கும் என்பது தெரியும். அவர்தாதன் எங்களை அங்கு அழைத்துக்கொண்டு போனார். ராயர் கபேயைப் பற்றி அவர் ஒரு கவிதையும் எழுதியிருக்கிறார். அந்தக் கவிதையின் தலைப்பு கி.வா.ஜ. இதோ அவர் எழுதிய கவிதை.

கி.வா.ஜ வை
நான் இலக்கிய அளவில்
மதிக்க மாட்டேன். அவருக்குத்
தெரிந்தது எனக்குத் தெரியாது
என்று ஏற்றுக் கொள்கிறேன்
ஆனால் அவருக்கு நான்
கடன் பட்டவன். 1938ல்
எனக்கு ராயர் கபேயை –
கச்சேரித் தெரு மைலாப்பூரில்
காட்டித் தந்தார். இப்போதும்
பல சமயம் திருப்தியாக ரவா தோசை சாப்பிட
போய் வருகிறேன்.

க.நா.சு தன் கவிதைகளைக் குறித்துத் தெளிவான முடிவுகளை வைத்திருந்தார். இன்னும் கேட்டால், ந.பிச்சமூர்த்தியை விட க.நா.சுவைத்தான் புதுக்கவிதையின் தந்தை என்று குறிப்பிடலாமென்று தோன்றுகிறது. ஏனெனில் கவிதையின் தன்மையை உடைத்துப் புதுமை செய்தவர் க.நா.சு.

இரண்டு வார்த்தைகள் என்று க.நா.சு எழுதியதை இங்கே கொடுக்க விரும்புகிறேன்.

கவிதைக்கு முன்னுரையோ பின்னுரையோ அல்லது வியாக்கியான விரிவுரைகளோ அநாவசியம் என்கிற நினைப்பும் எனக்குண்டு.

1985ல் கவிதை எழுத நினைப்பவன் ஒரு விதத்தில் அசட்டுப் பட்டம் கட்டிக்கொள்ளத் தயாராக இருப்பவன்தான். கவிதை பத்திரிகைத் துணுக்குகளாகவும், அரசியல் காமெண்டுகளாகவும், சினிமா ரெட்டை அர்த்தங்களாகவும் உருப்பெற்றபின் கவிதை எழுத நினைப்பது ஒரு விதத்தில் தவறு என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆனால் கவிதை எழுதுவதற்கு உள்ளூர இருக்கிற உந்துதல் அடிப்படையான மனுஷ்யத்வம் நிறைந்த உந்துதல் . அவரவர் சக்திக்கு ஏற்ப ஒவ்வொருவரும் கவிதை எழுதிப் பார்ப்பதும் வெளியிட முடியுமானால் வெளியிடுவதும் உலகில் தவிர்க்க முடியாத காரியம்.

எனக்கு நான் புதுக்கவிதை என்று எண்ணுவதில் அபார நம்பிக்கை. அது நிஜமாகவே கவிதையாக இருப்பதுடன் வசனத்தின் பல அம்சங்களையும் கொண்டதாக அடைமொழிகளையும் படிமங்களையும் தேடி ஓடாததாக இருக்க வேண்டும். உணர்ச்சி என்கிற தூக்கக் கலப்பில்லாத ஒரு தாக்கத்துடன் அறிவுத் தாக்கமும் பெற்றிருந்தால் தான் கவிதை புதுக்கவிதையாகிறது என்று எண்ணுபவன் நான்.

இந்த ஆண்டு முழுவதும் க.நாசுவை நினைவுப்படுத்தி எதையாவது செய்ய முடியுமா?

எதையாவது சொல்லட்டுமா……../ 33

இந்த முறை நாஞ்சில்நாடனுக்கு சாகித்ய அகாடமி அவருடைய சிறுகதைத் தொகுப்பிற்காகக் கிடைத்துள்ளது. தரமான படைப்பாளியான நாஞ்சில் நாடனை அடையாளம் காண சாகித்ய அகாடமிக்கு இவ்வளவு காலம் பிடித்துள்ளது. எனக்கு நாஞ்சில் நாடனை ஒரு படைப்பாளி என்கிற மாதிரியும், நண்பர் என்கிற முறையிலும் தெரியும். அவருடைய நண்பரான வைத்தியநாதனை (கவிஞர் நாஞ்சில் நாடன் சென்னை வரும்போதெல்லாம் சந்திக்காமல் இருக்க மாட்டார். எனக்கும் நாஞ்சில்நாடன் சென்னையில் இருக்கிறார் என்ற தகவல் வைத்தியநாதன் மூலம் தெரியவரும். அதேபோல் நான் கோயம்பத்தூர் செல்லும்போதெல்லாம் நாஞ்சில்நாடனை சந்திக்காமல் இருக்க மாட்டேன்.

70-களில் நாஞ்சில்நாடன் எழுத ஆரம்பித்துவிட்டார். பெரும்பாலும் அவருடைய கதைகள் யதார்த்த உலகைச் சார்ந்தவை. இன்றைய உலகத்தை எதிர்கொள்ளும்போது நாஞ்சில்நாடனால் ‘தலைகீழ் விகிதங்கள்’ போன்ற நாவலை எழுத முடியுமா என்பதைச் சொல்ல முடியாது.

நான் கடைசியாக படித்த அவருடைய நாவல் சதுரங்கக் குதிரை. அந்த நாவலைப் படித்தபோது சினிமாவை மனதில் வைத்துக்கொண்டு எழுதியிருக்கிறாரோ என்றெல்லாம் எனக்குத் தோன்றும். நாஞ்சில்நாடன் நாவல் மட்டுமல்ல சிறுகதைகளும் எழுதி உள்ளார். கணையாழியில் முள் என்ற அவருடைய சிறுகதை எனக்கு இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது.

நாஞ்சில் நாடன் ஒருவழியாக எழுதி முடித்துவிட்டார். ஆனால் அவருடைய முந்தைய நாவல்களைக் கூட இப்போது அவர் எழுதினால் அவர் தாண்டி வர வேண்டும். இன்று எழுதுபவர்களும் அவருடைய நாவல்களைத் தாண்டி வரவேண்டும். இன்று நாவல் எழுதுவது ஒரு சவால். அதாவது எல்லோரும் படிக்கும்படி புதிய விதமான நாவல்கள் வரவேண்டும். எல்லா விதமான முயற்சிகளையும் எல்லோரும் செய்து கொண்டு வருகிறார்கள் என்பதற்காக இதைச் சொல்கிறேன்.

தாமதமாக ஒரு கலைஞனைப் புரிந்துகொண்டதற்காக சாகித்ய அகாடமிக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.