எதையாவது சொல்லட்டுமா……….54

கடந்த 7 ஆண்டுகளாக நான் சென்னையிலிருந்து மயிலாடுதுறைக்குப் போயும் வந்தும் கொண்டிருக்கிறேன். பெரும்பாலும் பஸ் பயணத்தைத் தவிர்க்க முடியவில்லை.  இங்கே உள்ள Semi Deluxe பஸ் மூலம் சென்னையிலிருந்து இரவு 11 மணிக்குக் கிளம்பினால், காலையில் போய்ச் சேர்ந்துவிடலாம்.  ஆனால் பஸ் பயணம் இரவு முழுவதும் அளவுகடந்த வேதனையாக இருக்கும்.  பெரும்பாலும், யூரின் போகிற பிரச்சினையை எப்படி சமாளிப்பது என்பது தெரியாது.  ஆண்களுக்கே இப்படி என்றால், பெண்கள் நிலையை நினைத்துப் பாருங்கள்.
அரவிந்த் நியுயார்க்கிலிருந்து நயக்கரா நீர்வீழ்ச்சிக்கு இப்படித்தான் ஒரு பஸ் ஏற்பாடு செய்திருந்தான்.  எனக்கு சென்னை ஞாபகம் வந்தது.  என்னுடைய அதிருப்தியை அவனிடம் தெரிவித்துக்கொண்டேன்.  இரவு 10.30 மணிக்குப் பயணம்.  முன்னதாகவே வந்திருந்து பஸ் செல்லும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம். ஒரே கூட்டம்.  எல்லோரும் வரிசையில் நின்றிருந்தார்கள்.  கனடா நாட்டிற்குச் செல்பவர்கள் எல்லோரும் நின்றிருந்தார்கள்.  வரிசை வரிசையாக பஸ்கள் கிளம்பிக்கொண்டிருந்தன.
நாங்கள் ஏற வேண்டிய பஸ்ஸில் ஏறிக்கொண்டேன்.  பொதுவாக எல்லாப் பஸ்களும் குளிர்சாதனப் பெட்டி பொருத்தப்பட்டிருக்கும்.  பஸ் மூலையில் ஒரு ஓய்வு அறை இருந்தது.  ஓய்வு அறை என்பது பாத்ரூமைத்தான் குறிக்கப்படுகிறது.  யூரின் பிரச்சினையை எப்படி சமாளிப்பது என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு, பஸ் உள்ளேயே இருந்த ஓய்வு அறை இருந்தது ஆச்சரியமாக இருந்தது.  பஸ்ஸைவிட்டு இறங்க வேண்டாமென்று நிம்மதியாக இருந்தது.  ஒரு கருப்பு இன பெண்மணி 2 வயதுப் பையனை மட்டும் அழைத்து வராமல், ஒரு குட்டி நாயையும் ஒரு பையில் போட்டு அழைத்து வந்திருந்தாள். வண்டி புறப்பட்டு கொஞ்ச நேரம் கழித்துதான் அவள் எதையோ தேடிக்கொண்டிருக்கும் போதுதான் அவள் நாய் கொண்டு வந்திருக்கிறாள் என்பது தெரிந்தது.  வண்டி படு வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. 
அரவிந்த் மூலம் எனக்கு பஸ், ரயில், விமானம் என்று எல்லாவிதங்களிலும் பயணம் மேற்கொள்ள முடிந்தது.  நயக்கரா நீர்வீழ்ச்சியை நாங்கள் காலையில்தான் போய் அடைந்தோம்.  அங்கிருந்து தங்கும் இடத்திற்குச் சென்றோம்.  எல்லாவற்றையும் அரவிந்த் நெட் மூலம் ஏற்பாடு செய்திருந்தான்.
பின் ஒரு பயண வண்டியை ஏற்பாடு செய்து, நயக்கரா நீர் வீழ்ச்சியைச் சுற்றிப் பார்த்தோம்.  கனடா நாட்டையும், அமெரிக்கா நாட்டையும் இணைக்கிற பாலம் ஒன்று இருக்கிறது.  நடந்தே பலர், ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் சென்று விடுகின்றனர்.  கனடா நாட்டிலிருந்து நீர் வீழ்ச்சியை ரோப் கார் மூலம் கடந்து சென்று பார்க்கிறார்கள்.  நீர் வீழ்ச்சியில் குளித்ததோடு மட்டுமல்லாமல், போட் மூலம் ராட்சச அருவியைக் கண்டு களித்தோம்.  நான் குற்றால அருவி போயிருக்கிறேன்.  அதைவிட பல மடங்கு பரவலான நீர் வீழ்ச்சி இது.  நயக்கரா நீர் வீழ்ச்சியைத் தவிர அங்கு வேறு எதுவும் இல்லை.  ரொம்பவும் அமைதியான இடம் நயக்கரா என்ற அந்த இடம்.  திரும்பவும் நாங்கள் விமானம் மூலம் அங்கிருந்து ப்ளோரிடா வந்து சேர்ந்தோம். 

எதையாவது சொல்லட்டுமா……….53

அடுத்த நாளும் நாங்கள் விடுதியிலிருந்து கிளம்பி நியுயார்க் சென்றோம். அதே, NFTA-METRO Trolley-ல் கிளம்பினோம். இந்த வண்டியின் கூரையில்தான் அனைவரும் உட்கார வேண்டும்.  அப்படியே வண்டி நகர்ந்து நகர்ந்து செல்லும்.  பின் ஒவ்வொரு இடமாக நின்று நின்று செல்லும்.  அந்த வண்டியில் வரும் கெய்ட் அந்த இடத்தின் பெருமையைச் சொல்வார். யாராவது விரும்பினால் அந்த இடத்தில் இறங்கலாம்.  பின் இன்னொரு NFTA-METRO Trolley வரும் அதில் ஏறி இன்னும் பல இடங்களுக்குச் செல்லலாம்.  பெரும்பாலும் நாங்கள் வண்டியிலிருந்தபடியே எல்லா இடங்களுக்கும் சுற்றிக்கொண்டிருந்தோம். 
அன்று இரவு பஸ்ஸில் நியுயார்க்கிலிருந்து நயக்கரா அருவி இருக்குமிடத்திற்குச் செல்ல திட்டமிட்டிருந்தோம்.  பஸ் கிளம்பும் இடத்தில் நாங்கள் சுமந்து வந்த பைகளை பத்திரப்படுத்திவிட்டுத்தான் நியுயார்க்கில் சுற்றிக் கொண்டிருந்தோம்.  உயரமான கட்டிடங்களையும், கூட்டமான ஜனத்திரள்களையும் பார்த்தபடி சென்று கொண்டிருந்தோம். 
American Museum of Natural History என்ற இடத்தில் இறங்கினோம்.  10 மணிக்குத்தான் திறப்பார்கள் என்றதால், எதிரில் உள்ள பூங்காவில் சுற்றிக்கொண்டிருந்தோம்.  பூங்காவா அது. நடக்க நடக்க அது பூங்கா நினைத்துப் பார்க்காத தூரத்திற்கு நகர்ந்து நகர்ந்து சென்று கொண்டிருந்தது.அதிலிருந்து மீண்டு நாங்கள் திரும்பவும் Museum த்திற்குள் நுழைந்தோம்.  வெளியிலிருந்து பார்க்கும்போது சாதாரண கட்டிடமாக இருப்பது விஸ்தாரமாகப் போய்க் கொண்டிருக்கும். பாதி நேரம் அங்கயே போய்விட்டது.  அப்படியும் முழுமையாகப் பார்த்த திருப்தி இல்லை. ஒவ்வொரு இடத்திலும் ஒரு மினி தியேட்டர் இருக்கும்.  அதில் வானத்தில் உள்ள நட்சத்திரங்கள் பற்றி ஒரு படம் காட்டிக்கொண்டிருந்தார்கள்.  எப்படி நில நடுக்கம் ஏற்படுகிறது என்பதை சின்ன சின்ன டிவிக்கள் சொல்லிக்கொண்டே இருக்கின்றன.
எங்களுக்குப் பசி எடுக்க ஆரம்பித்தது.  சைவ உணவைத் தேடி ஓடினோம்.  நியுயார்க்கில் சரவணபவன் ஓட்டல் திறந்திருப்பதால், அது எங்கே என்று தேடி ஓடினோம்.  நான் ஒரு இடம் சென்றால், அந்த இடத்தின் புள்ளிவிபரங்களைச் சொல்லும் நிபுணன் இல்லை. முன்பெல்லாம் உலகச் சினிமாக்களைப் பார்த்திருக்கிறேன்.  அதை விபரமாகச் சொல்லும் சாமர்த்தியம் எனக்கில்லை. ஆனால் என் எழுத்தாள நண்பர்கள் பலர் பலவிதமாக அவற்றைப் பற்றியெல்லாம் எழுதியிருக்கிறார்கள்.
இதோ அமெரிக்காவைச் சுற்றிப் பார்க்கும் நான், அதை எப்படி விபரிப்பது.  புள்ளி விபரங்களை அள்ளி வீசும் நிபுணன் இல்லை.  ஆனால் இப்போதுள்ள Internet உலகத்தில் எல்லாதைப் பற்றியும் தெரிந்துகொள்ள முடியும்.  உலகம் அப்படி மாறிவிட்டது.  அமெரிக்கா போவது என்பது நம் வீட்டு கொல்லைப் பக்கம் போவது போல் அவ்வளவு சுலபமாகப் போய்விட முடியும். நியுயார்க்கில் Time Square என்ற இடத்தில் மாலை வேளையில் சுற்றிக் கொண்டிருந்தோம். பிரம்மாண்டமான விளம்பரங்கள் பெரிய டிவி ஸ்கிரினில் ஓடிக்கொண்டிருந்தது.  மக்கள் சுறுசுறுப்பாக அங்கும் இங்கும் சுற்றிக்கொண்டிருந்தார்கள்.  ஒரு பெரிய Toy கடைக்குச் சென்றோம்.  உள்ளேயே சிறுவர்களுக்கான உலகம் ஓடிக்கொண்டிருந்தது.  ஆனால் எல்லாம் விலை அதிகம்.  கூட்டமான கூட்டம்.  கடைக்குள்ளேயே குடைராட்டினம் ஓடிக்கொண்டிருந்தது.
இன்னும் பல இடங்களை வண்டியின் மேற்பரப்பில் இருந்துகொண்டு பார்த்துக்கொண்டிருந்தோம்.  நயக்கரா நீர்வீழ்ச்சியைப் பார்க்க பஸ்ஸில் பயணம் செய்ய உத்தேசத்துடன் இருந்தோம். 

எதையாவது சொல்லட்டுமா……….52

வாஷிங்டனில் நாங்கள் ரயில் பிடித்தபோது மணி இரவு 8.30.  ரயில் பார்ப்பதற்கு பிரமாதமாக இருந்தது.  முதலில் ரயில்வே ஸ்டேஷனில் நுழைவதற்கு வரிசையில் நிற்க வேண்டியிருந்தது.  அதன்பின்தான் உள்ளே விட்டார்கள்.    எந்த இடத்தில் வேண்டுமானாலும் எல்லோரும் உட்காரலாம் என்பதால், அவசரம் அவசரமாக இடம் பிடித்துக்கொண்டோ ம்.  வாஷிங்டனிலிருந்து நியுயார்க் செல்ல 2 மணி நேரம்தான். அன்று இயந்திரக் கோளாறால் ரயில் 1 மணி நேரம் தாமதமாகக் கிளம்பியது.  1 மணி நேரம் தாமதம் ஏன் என்பதை அவர்கள் ஒலிபெருக்கியின் மூலம் தெரியப் படுத்தினார்கள்.  ரயிலில் நாங்கள் உட்காரும் இடத்திலேயே அந்த ஒலிபெருக்கியைப் பொருத்தி இருந்தார்கள்.  ரயில் உள்ளே ஒரு கம்பார்ட்மெண்டிலிருந்து இன்னொரு கம்பார்ட்மெண்டிற்கு எளிதாக செல்லலாம்.  அப்படி போகும்போது கதவு தானகவே திறந்து கொண்டு வழிவிடும்.  இதைச் சொல்ல கொஞ்சம் கூச்சமாக இருந்தாலும், இதையும் சொல்லாமல் இருக்க முடியவில்லை.  ரயிலில் ஒவ்வொரு பெட்டியிலும் இரண்டு பக்கங்களிலும் இரண்டு இரண்டு கழிவறைகள் பொருத்தப்பட்டிருந்தன.  அவைப் பார்ப்பதற்கு அவ்வளவு சுத்தமாக இருந்தன. நம் ஊரில் உள்ள  ரயிலில் பயணம் செல்லும்போது, ரிசர்வ் செய்தாலும், என் ராசி கழிவறைக்குப் பக்கத்தில்தான் இடம் கிடைக்கும்.  இரவு முழுவதும் நாற்றத்துடன்தான் பயணம் செய்ய வேண்டி வரும்.  அங்கு ஒவ்வொரு பெட்டியிலும் 200க்கும் மேற்பட்டவர்கள் உட்கார்ந்திருந்தார்கள்.  உட்காரும் இடம் மெத்தையில் உட்காரும்படி பிரமாதமாக இருந்தது. 
பொதுவாக இங்கே பெண்கள் சுதந்திரமாக இருப்பதாகப் படுகிறது. சிலர் புகை பிடித்துக்கொண்டும், சிலர் மது அருந்திகொண்டும் ரயிலில் வந்து கொண்டிருந்தார்கள்.  உடை அணிவதிலும் அவர்கள் அலட்சியமாகவே இருந்தார்கள்.  அல்லது அதுதான் அவர்கள் இயல்பாக இருக்கிறது.  அரை டிராயரும், மேலே அணியும் உடையும் அணிந்திருந்தார்கள்.  எல்லோர் முன்னிலும் வெட்கப்படாமல் அவர்களுக்குப் பிடித்த ஆண்களுடன் உதட்டில் முத்தமளித்துக்கொண்டிருந்தார்கள்.  எனக்கு அவர்களைப் பார்க்கும்போது திகைப்பாகவே இருந்தது. முன்பின் தெரியாத ஒரு ஆணுடன் எப்படி அவர்கள் நாசூக்காகப் பேசுகிறார்கள் என்பதையும் அறிந்து கொண்டிருந்தேன்.  
நாங்கள் இறங்கும்போது இரவு 11.30க்கு மேல் ஆகி விட்டது.  ஒரு டாக்ஸியைப் பிடித்து நியு ஜெர்சிக்கு அரவிந்த் அழைத்துப்போனான்.  டாக்ஸிக்கே 40 டாலர் மேல் ஆகிவிட்டது.  நியுயார்க்கில் ஹோட்டலில் அறை எடுத்துத் தங்குவது என்பது அதிக விலை கொடுக்கும்படி இருக்கும்.  மேலும் 3 பேர்கள் தங்க அறை அவ்வளவு வசதிப்படாது என்று அவன் நினைத்திருந்தான்.  Comfort Inn என்ற இடத்திற்குச் சென்றோம்.  இரவு 1 மணி மேல் ஆகிவிட்டது நாங்கள் தூங்கும்போது.  எல்லாவற்றையும் ப்ளோரிடாவில் இருந்தபடி நெட் மூலம் பதிவு செய்திருந்தான். 
காலையில் அவசரம் அவசரமாக எழுந்து கொண்டோ ம்.  நியு ஜெர்சியிலிருந்து நியுயார்க் செல்ல ஒரு shuttle ஐ விடுதிக்காரர்கள் ஏற்பாடு செய்தார்கள்.  அதில் அந்த விடுதியில் தங்கியிருந்த எங்களைப் போன்ற பல நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஏறிக்கொண்டார்கள். நியுயார்கில் இறங்கியவுடன், NFTA-METRO Trolley Day Pass வாங்கிக்கொண்டு நியுயார்க்கைச் சுற்றிக் கொண்டிருந்தோம்.  Empire State Building என்ற இடத்திற்குப் போனோம்.  மொத்தம் 102 மாடி கொண்ட கட்டிடம். அதில் 86வது மாடியிலிருந்து நியுயார்க்கையும் அதனைச் சுற்றி உள்ள இடத்தையும் பார்த்தோம்.  நியுயார்க்கை ஒட்டி உள்ள மற்ற மாவட்டங்களையும் பார்த்தோம்.  அப்படிப் பார்க்கும்போது பெரிய பெரிய கட்டிடங்களைக் கொண்ட நியுயார்க் சின்ன நகரமாகத் தோன்றியது.

அதன்பின் நாங்கள் Liberty Islandம் Ellis Islandம் சென்றோம். Liberty Island ஐப் பார்க்க வரிசையில் பல மணி நேரம் நிற்க வேண்டியிருந்தது.  பல நாட்டவர்கள் எங்களுடன் வரிசையில் இருந்தார்கள்.  பெரும்பாலும் சீனர்கள் அதிக அளவில் இருந்தார்கள்.  இந்தியாவிலிருந்து தெலுங்கு பேசுபவர்கள் அதிகமாக வந்திருந்தார்கள்.  லிபர்ட்டி சிலையைப் பார்த்து ஆச்சரியமாக இருந்தது.   செப்பால் புனையப்பட்ட சிலை கம்பீரமாக வீற்றிருந்தது.  என்னால் வரலாறை எழுத முடியவில்லை.  வெளிநாட்டவர்களால் உருவாகப்பட்ட சிலை அது.  அங்கங்கே வரலாறை எழுதி வைத்திருந்தார்கள்.  நான் சாதாரண பார்வையாளன்.  ஒரு பார்வையாளன் கோணத்தில் என்ன சொல்ல முடியுமோ அதைச் சொல்ல முயற்சி செய்கிறேன்.  அங்கிருந்து Ellis Island சென்றோம்.  அமெரிக்க நாட்டிற்கு வருபவர்கள் Ellis Island வழியாகத்தான் உள்ளே வரமுடியும்.  அங்கு அதற்காகவே ஒரு அலுவலகம் செயல்பட்டு வந்தது.  அங்குள்ள அதிகாரிகள் சிலரை உள்ளே வரவிடாமல் தடுத்து விடுவார்கள்.  அன்றைய பொழுது போய்விட்டது.  திரும்பவும் நாங்கள் விடுதிக்கு வந்தோம்.

எதையாவது சொல்லட்டுமா……….51

ராம்மோஹன் என்ற பெயர் கொண்ட ஸ்டெல்லாபுரூஸின் பிறந்த தினம் ஆகஸ்ட் மாதம் எட்டாம் தேதி.  அவர் இப்போது இருந்திருந்தால், எழுபது வயதுக்கு மேலிருக்கும். ஸ்டெல்லாபுரூஸ் தற்கொலை செய்து கொண்டு விட்டார்.  அவரைப் பற்றிய அந்த எண்ணம்தான் என் மனதில் நிழலாடிக்கொண்டிருக்கிறது.   மரணம் என்பது இன்னொரு நிலை.  அந்த நிலையை தானாகவே தேடிக் கொண்டுவிட்டார் ஸ்டெல்லாபுரூஸ். மனைவியை இழந்தத் துக்கத்தை அவரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.  உண்மையில் மனைவியை இழந்துவிடுவோம் என்று உணர்ந்து தன்னை தயார் செய்து கொண்டிருந்தார்.  நோயிலிருந்து தப்பிக்க முடியாமல் மனைவி இறந்தவுடன், அவர் முன்னால் அவரே வைத்திருந்த பிம்பங்கள் ஒவ்வொன்றாக உடைந்து விழுந்தன.  தன்னைப் பற்றிய மிகைப் படுத்திய பிம்பம்தான் அவரைத் தற்கொலையில் தூண்டி விட்டது.
ஸ்டெல்லாபுரூஸ் வீட்டிற்குப் போகும்போது, அவர், அவருடைய மனைவி ஹேமா, ஹேமாவின் தங்கை பிரேமா என்று மூவரும் என்னை வரவேற்பார்கள்.  கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு அடுக்ககத்தில் அவர் வசித்து வந்தார்கள்.  ராம்மோஹன் புத்தகங்களை எல்லாம் ஒரு கண்ணாடி அலமாரியில் அடுக்கி வைத்திருப்பார்.  ஒவ்வொரு புத்தகத்திலும் அவர் கையெழுத்து இல்லாமல் இருக்காது.  புத்தகம் படிப்பது, இசை கேட்பது இதுதான் அவர் வாழ்க்கை முறை.  மூவரும் கலகலவென்று பேசுவார்கள்.  ஹேமா உடனே போய் காப்பிப் போட்டு கொண்டு வருவார்.  விருதுநகரிலிருந்து கொண்டு வந்த முறுக்கு எல்லாம் கொடுப்பார்கள்.  வீட்டை விட்டு பெரும்பாலும் அவர்கள் எங்கும் போக மாட்டார்கள்.  ராம் மோஹனுக்கு இரவு ஸநேரத்தில் கண் பார்வை சற்று சரியாக இல்லை என்பதால், யார் துணையும் இல்லாமல் நகர மாட்டார்கள். 
ஆனந்தவிகடன் பத்திரிகை ஸ்டெல்லாபுரூஸுற்கு ஒரு முக்கியமான இடத்தைக் கொடுத்திருந்தது.  அவருடைய முதல் நாவல் பிரசுரமானபோது, அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். கொஞ்சம் சாமர்த்தியம் இருந்திருந்தால், அவர் இன்னொரு பாலகுமாரனாகவோ, சுஜாதாகவோ மாறி இருக்கக் கூடியவர். அவர் மனதுடன் அதிகமாகப் பேசிக்கொண்டிருப்பவர். எழுத்து என்பது ஒரு டிரிக். சாமர்த்தியம். அதைப் பயன்படுத்திக்கொண்டு புகழ் பெறுவது என்பது சாதாரண விஷயமில்லை. அவர் தொடர் நாவல்களைப் படித்து பலர் அவரிடம் அவர்களுடைய துன்பங்களை எழுதிக் கேட்டுக்கொண்டிருப்பார்கள்.  நேரே அவரைச் சந்திக்க வருவார்கள்.  அப்படி ஒரு சந்திப்பின்போது, ஹேமா அவருடைய மனைவியாக மாறினார்.  விருதுநகரில் உள்ள அவருடைய குடும்பத்தை விட்டு தனியாக வந்தவர், திருமணமே செய்துகொள்ளாமல் பல ஆண்டுகள் இருந்தவர் ஹேமாவைத் திருமணம் செய்து கொண்டார்.
ராம்மோஹன் காளி-தாஸ் என்ற  பெயரில் கவிதைகள் எழுதுபவர்.  ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் திருவள்ளுவர் சிலை பக்கத்தில் உள்ள கடற்கரையில் எழுத்தாள நண்பர்கள் சந்தித்துக்கொள்வோம்.  ஏன் சிலசமயம் காந்தி சிலை பக்கத்தில்கூட சந்திப்போம்.  ஒரு முறை ஸ்டெல்லா புரூஸ் ஹேமாவை எங்களுக்கு அறிமுகப்படுத்தினார்.  ”இவர்தான் என் மனைவி,” என்றார்.  எங்களுக்கு திகைப்பாக இருந்தது.  பின் ராம்மோஹன் மனைவிதான் எல்லாம் என்று இருந்துவிட்டார். இவர் இப்படி என்றால், என்னுடைய இன்னொரு இலக்கிய நண்பர் பிரமிள் குடும்பமே இல்லாமல் தனி மனிதனாக வாழ்ந்து கொண்டிருந்தார்.  
ராம் மோஹன் அவர் குடும்பம் மூலம் கிடைத்தத் தொகையில் வரும் வட்டியில்தான் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தார்.  யாரிடமும் அவர் கடன் கேட்க மாட்டார்.  அவர் தேவைகள் மிகக் குறைவு.  ஆனாலும், கூடிவரும் விலைவாசியில், அவர் எப்படி சமாளித்தார் என்பது தெரியவில்லை. ஹேமாவின் மனைவி பிரேமா இருதய நோயாளி.  ஹேமாவிற்கு முன்னால் அவர் இறந்தது ஹேமாவிற்குப் பெரிய அதிச்சி. அதேபோல், ஹேமாவின் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டபோது, ராம் மோஹன் தடுமாறி விட்டார்.  சாதாரண நிலையில் உள்ள குடும்பத்தில் நிலை தடுமாற்றத்தைக் கொடுக்கக்கூடிய வியாதி இது.  மனைவியும் இறந்துவிட்டார்.  ராம்மோஹன் அதிலிருந்து தப்ப முடியாமல், மாட்டிக்கொண்டு விட்டார்.
ஆன்மிக பலம் மூலம் எல்லாவற்றையும் சரிசெய்து விட முடியும் என்று தவறாக நினைத்துவிட்டார்.  அதுவே அவருடைய தற்கொலைக்கு வித்திட்டது.  மனைவி இறந்தவுடன் அவர் குடும்பத்தில் உள்ள பொருட்களை இலவசமாக அவரைச் சுற்றி உள்ள நண்பர்களுக்குக்கொடுக்க ஆரம்பித்தார்.  இதெல்லாம் அவருடைய குழப்பம் ஏற்படும் தருணம்.  மனைவியின் நகைகளை திருப்பதி உண்டியில் போடும்படி ஒரு நண்பரிடம் கொடுத்து விட்டார்.  ஹேமாவின் சகோதரர் அடுக்ககத்தில்தான் அவர் இருந்ததால், அவர் அந்த இடத்தை விட்டுப் போகும்படி நெருக்கடி ஏற்பட்டது.  இதெல்லாம் சேர்ந்து ராம்மோஹனின் தற்கொலைக்கு வித்திட்டது. 
ஆரம்பத்தில் ஆனந்தவிகடன் பத்திரிகையில் தொடர்கதை எழுதினாலும், தொடர்ந்து அவரால் அந்த நிலையைத் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை.  சில சினிமாப் படங்களிலும் அவருக்கு ஆதரவு கிட்டினாலும், அதிலும் அவரால் முழு நேர எழுத்தளராகப் பணிபுரிய முடியவில்லை.  எப்போதோ அவர் குடும்பத்தில் உள்ளவர்களைப் பகைத்துக் கொண்டு விட்டதால், அவரால் அங்கு போயும் அவரால் ஒன்ற முடியவில்லை.  தற்கொலைதான் ஒரே வழி என்ற அவர் நிலையை ஜீரணிக்க முடியவில்லை.

”காலம்”

யாரோ காலமானார் என்ற செய்தி
என் எதிரில்
நட்சத்திரமாகத் தொங்குகிறது
காலமென முதலில் உணர்ந்தவன்
கபாலச் சூடு பொரியும்
ஆண்மை நிறைந்தவனாக இருந்திருப்பான்
சில சமயத்தில் தோன்றுகிறது
காலம் நிர்ணயிக்கப் பட்டிருப்பது போல
ஆனால் பற்ற முடியாமல்
நழுவிப் போகிறது.
எங்கேயோ காத்திருக்கிறது
காதலுடன் மெளனம் சாதிக்கிறது
காலம் காலமாகக்
கடல் ஒலிக்கிறது வெற்று
வெளியில் மேசம் சஞ்சரிக்கிறது கனத்த
காலப் பிரக்ஞையை எனக்குள் விதைத்து
விட்டார்கள். எவ்வளவோ காலம்
கடந்தும் அறிந்துகொள்ள என்னவென்று
அது – முளைக்கவே இல்லை. ஆனால்
விலகாத கிரஹணமாக என்
எதிரில் தொங்கிக்கொண்டே தானிருக்கிறது
யாரோ காலமான செய்தி
நானும் ஒரு காலத்தில்
காலமாகி விடுவேனோ என்பதில்
மட்டும் முளைத்து விடுகிற
பயம்
சொட்டுச் சொட்டாய் உதிரக்
காத்திருக்கிறது – காலம் வராமல்….

எதையாவது சொல்லட்டுமா……….50

ஜூலை 29,30,31, ஆகஸ்ட் 1 என்று 4 நாட்கள் வருகிற மாதிரி அரவிந்த் (என் பையன் பெயர்) லீவு எடுத்திருந்தான்.  வாஷிங்டன், நியுயார்க், நயகரா அருவி என்று மூன்று இடங்களுக்கு அழைத்துப்போக திட்டமிட்டிருந்தான். நான் யோசித்தபோது இந்த முறை இடத்தைச் சுற்றிவிட்டு வருவது கொஞ்சம் சோதனையைக் கொடுக்கும் என்று தோன்றியது.  வெளியே காட்டிக்கொள்ளாவிட்டாலும் அரவிந்த் எங்களை விட பரபரப்பாக இருந்தான். வாஷிங்டன் செல்வதற்கு ப்ளோரிடா அருகிலுள்ள ஒரு ஏர்போர்டிலிருந்து செல்வதாக திட்டமிட்டிருந்தோம்.  ஒரு வாரம் முன்பே அரவிந்த் நெட் மூலம் டிக்கட் எடுத்திருந்தான். விமானப் பயணம் இரவு 8.30 மணிக்கு.  நாங்கள் மாலை 5 மணிக்கே கிளம்பிவிட்டோ ம்.  அரவிந்த் எடுத்த வாடகைக் கார் மூலம் ஏர்போர்ட் சென்று அங்கு வாடகைக் காரைத் திருப்பிக் கொடுத்தான்.  இந்த ஊரில் கார் இல்லாமல் எங்கும் செல்லமுடியாது என்பதால் காரை வாடகைக்கு எடுத்திருந்தான்.  வாடகைக்கு எடுக்கும் கார்கள்கூட ஏர்போர்டில் இருந்தது.   வாடகைக்குக் கார் கொடுக்க ஏகப்பட்ட கார் கம்பெனிகள் இருக்கின்றன.  அது பெரிய நெட்வொர்க். 2  வழக்கம்போல் நாங்கள் எங்கு சென்றாலும் எதாவது தாமதம் இல்லாமல் இருக்காது.  இங்கும் தாமதம்.  விமானப் பயணம் ஒரு மணி நேரம் தாமதம்.  இதனால் நாங்கள் வாஷிங்டன் போய்ச் சேரும் நேரம் இரவு 12 ஆகிவிடும்.  12 மணிக்குமேல் ஏற்கனவே பதிவு செய்த ஓட்டலுக்குச் செல்ல வேண்டும்.  விமானத்தில் 2 மணிநேரம் பயணம் என்பது சென்னையிலிருந்து டில்லி செல்லும் தூரம்.  கொஞ்சம் சிறிய விமானமாக இருந்தது. 
வாஷிங்டனில் இறங்கி, கார் பிடித்து விடுதிக்குச் செல்லும்போது மணி 1 ஆகிவிட்டது.  கொஞ்ச தூரம்போய்த்தான் இடம் பிடிக்க வேண்டியிருந்தது.  அங்குதான் வாடகை குறைச்சல்.  காலையில் 7.45 மணிக்கெல்லாம் கிளம்பித் தயாராக இருந்தோம்.  எங்களைப்போன்ற பயணிகள் கிளம்ப அதுதான் சரியான நேரம். விடுதியில் அந்த நேரத்தில்தான் shuttle ஏற்பாடு செய்தார்கள்.  ஒரு Metro ரயில் பிடித்து, அதில் பயணம் செய்தோம்.  மெட்ரோ ரயில் பார்க்க கம்பீரமாக இருந்தது.  அது மட்டுமல்ல கூட்டமே அதிகமில்லை.  இதுமாதிரியான மெட்ரோ ரயில் சென்னை போன்ற மாநகரத்திற்கு எப்போது வரும் என்று தெரியவல்லை.
வாஷிங்டனின் சுற்றும்போது, சைவச் சாப்பாடு சாப்பிடுவது பெரிய பிரச்சினையாக இருந்தது. இங்கு வந்தபோது எல்லா மனிதர்களும் ஒரே மாதிரியாகத்தான் இருப்பதாகப் படுகிறது. மேலும் இந்த நாட்டைச் சுற்றிப் பார்க்கும்போது பல நாட்டு மக்களும் வருகிறார்கள். மொழி, நிறம் எல்லாம் வேறுபட்டதாக இருந்தாலும், எல்லோரும் ஒரே வித குண அதிசயங்களாக எனக்குத் தெரிந்தார்கள்.  அமெரிக்கர்கள் பார்க்க சற்று ஆகரிதிகளாக இருந்தார்கள்.
நாங்கள் முதன் முதலாக வாஷிங்டனில் பார்த்த இடம் National Museum of Natural History என்ற இடம். நாங்கள் சுமந்து வந்த பைகளை அந்தக் கட்டிடத்தில் ஓரிடத்தில் பத்திரமாக வைத்து பூட்டிவிட்டு அப்புறம் சுற்றத் தொடங்கினோம்.  பிரம்மாண்டமான கட்டிடத்தில் தலைச் சுற்றும்படி பல இடங்கள். பல நாடுகளைச் சேர்ந்த கலாச்சாரங்களை தனித்தனியாக அடையாளம் காட்டியிருந்தார்கள்.  அதை நேர்த்தியான முறையில் ஒழுங்கு செய்தவிதம் ஆச்சரியமாக இருந்தது.  நாங்கள் அங்கயே பாதிநாளைக் கடத்திவிட்டோ ம்.  அப்படியும் முழுக்க முழுக்கப் பார்க்க முடியவில்லை.  பின் வெள்ளை மாளிகையைச் சுற்றத் தொடங்கினோம்.  நாங்கள் சென்றபோது அமெரிக்கா பாராளுமன்றத்தில் debt crisis ஓடிக்கொண்டிருந்தது.  கடுமையான வெயில்.  என்னால் தாங்க முடியவில்லை.  வெள்ளை மாளிகையின் முன்னால் பல குழுக்கள் அணு ஒழிப்புப் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தார்கள். அதுவும் வேடிக்கையாக நடத்துவதுபோல் தோன்றியது.  அதை போலீசே தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை.  வெயில் தாங்க முடியாமல் எனக்கு தட்டாமாலைச் சுற்றுவதுபோல் சுற்றத் தொடங்கியது.  நான் ஒரு மாதிரி சமாளித்துக்கொண்டேன்.  அரவிந்த் பதைத்துவிட்டான்.  வாஷிங்டன் முழுவதும் நினைவு மண்டபகங்கள்.  National Galler of Art என்ற இடத்திற்குச் சென்றபோது, மாலை நுழைந்துவிட்டது.  நேரம் இல்லாமல் எல்லா கலை நுட்பங்களையும் அவசரம் அவசரமாகப் பார்க்க வேண்டியிருந்தது.  இரவு 8.30 மணிக்கு நியுயார்க் செல்வதற்கு ரயிலைப் பிடித்தோம்.
                                                                                                                                                                   @@@@@@@@
நான் எடுத்து வந்த இன்னொரு புத்தகம் Carlos Castenadaவின் The Active Side of Infinity என்ற புத்தகம். காஸ்டினாடாவின் முதல் புத்தகம் வெளிவந்தபோது 10 மில்லியன் பிரதிகள் விற்றதாம்.  பெரிய புகழ் அடைந்தவர், யார் கண்ணிற்கும் படாமல் மறைமுக வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.  அவருடைய மரணமும் உடனடியாக யாருக்கும் தெரியவில்லை.  1 மாதம் கழித்துதான் காஸ்டினாடா இறந்து விட்டார் என்ற செய்தி டைம் பத்திரிகையில் வெளிவந்திருக்கிறது.  அப்போது காஸ்டினாடாவுடன் இருந்த 5 பெண்களும் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று சொல்கிறார்கள். The Active Side of Infinity புத்தகம் வெளிவந்தபோது காஸ்டினடா உயிரோடு இல்லை.  முதன் முறையாக அப்புத்தகம் படித்தபோது ரமணரின் உபதேசங்கள் சாரம் இருந்ததுபோல் பட்டது.  இருந்தாலும் காஸ்டினாடாவின் புத்தகம் ஒரு நாவல் படிப்பதுபோல் பரபரப்பாக இருக்கும்.

எதையாவது சொல்லட்டுமா……..49

நான் இங்கே வந்தபிறகு 2 கவிதைகள் எழுத முடிந்தது.  கவிதை என்று சொல்லும்போது ஒரு விஷயம் ஞாபகவருகிறது.  இப்படி ஒரு இடத்திற்கு வந்தால், அந்த இடத்தை வைத்து கவிதை எழுத முடியும்? எழுத முடியும் என்றால் என்னவென்று எழுதுவது? 
க்ளியர் வாட்டர் பீச் என்ற இடத்திற்குச் சென்றேன்.  மதியம் நேரத்தில் படபடக்கும் வெயிலில், எல்லோரும் சத்தம்போட்டபடி நீச்சல் அடித்துக்கொண்டிருந்தார்கள்.  நானும் கடல்நீரில் நின்று கொண்டிருந்தேன்.  என் பக்கத்தில் நின்று கொண்டிருந்த நண்பர், இந்தக் காட்சியை வைத்துக்கொண்டு கவிதை எழுத முடியுமா என்று கேட்டார். முடியும் என்று சொல்ல முடியாது.  இப்போது இல்லாவிட்டால் பின்னால் எழுதலாம் என்றேன்.  பாரதியார் காலத்தில் பாரதியாருக்கு கவிதை எழுதுவது எளிது.  தேசம் விடுதலை ஆவதைப் பற்றி எழுதலாம்.  பக்தி பாடல்கள் எழுதலாம்.  மேலும் பாரதியாரே அவருடைய கவிதைகள் சினிமா பாடல்களாக பாட ஆரம்பித்தபிறகுதான் புகழ் அடைந்திருப்பார்.
 இப்போது எழுதிக்கொண்டிருக்கும் பலருக்கு எந்தப் புகழும் கிடைக்குமா என்பது சந்தேகம்.  கவிதைத் தொகுதி அச்சிட்டால் அவர்களே வைத்துக்கொள்ள வேண்டியதுதான்.  கவிதை எழுதுவதும் ஒரு சவால். நவீன விருட்சம் blogspot ல் எழுதுபவர்கள் குறித்து எனக்கு விமர்சனம் உண்டு. அந்த விமர்சனத்தை வெளிப்படுத்தினால், அவர்கள் எழுதுவதை நிறுத்தி விடலாம். 
2008லிருந்து தொடர்ந்து வரும் blogspotலிருந்து வெளிவந்துள்ள கவிதைகளைத் தொகுத்து ஒரு புத்தகமாகப் போட்டாவ் பின்னால் எழுதுபவர்களுக்கு உபயோகமான ஒன்றாக அத் தொகுப்பு அமையும்.
நான் நடந்துவிட்டு மாடிப்படிக்கட்டுகளைக் கடக்கும்போது ஒரு பட்டாம்பூச்சியைப் பார்த்தேன். சிறிது நேரம் அது சுற்றுவதையே பார்த்துக்கொண்டிருந்தேன்.  அதன் நிறம் அதன் லாவகம் என்னைப் பெரிதும் ஈர்த்தது.  பின் சுற்றி சுற்றி அது எங்கோ போய்விட்டது.  நான் எழுதிய இரண்டாவது கவிதையில் ஈக்களே ஈக்களே எங்கே போனீர்கள்? என்று எழுத மறந்து விட்டேன் என்று நினைத்தேன்.  உண்மையில் ஈக்களே இங்கு காணோம் என்பதைச் சொல்லத்தான் அப்படி எழுதலாம் என்று நினைத்தேன்.  ஆனால் நான் அமர்ந்த சோபாவில் ஒரு ஈ எப்படியோ வந்து விட்டது.  என்னை சுற்றி சுற்றி மொய்த்துத் தள்ளிவிட்டது.  நான் எழுதாமல் விட்டுப்போன வரிகளில் அது தொற்றிக்கொண்டு விட்டது. 
இங்கு ஒரு தபால் அலுவலககத்தைப் பார்த்தேன்.  அது மாதிரி ஒரு தபால் அலுவலகம் சென்னையில் பார்ப்பது அரிது.  தபால் அலுவலகம் முழுவதும் குளிர்பெட்டி பொருத்தப்பட்டிருந்தது.  ஒரு தபாலை அனுப்ப வேண்டிய கவர் முதல் எல்லாம் இருந்தது.  ஒட்டுவதற்கு கோந்தைத் தடவ வேண்டாம். பணியாளர் சிரித்த முகத்துடன் வரவேற்றார்கள்.  சென்னையில் எரிந்து எரிந்து விழுவார்கள். கூட்டம் மொய்த்துத் தள்ளும். 
குளிக்கும் அறையில் ஒரு பெரிய டப்பு இருக்கும்.  அந்த டப்பில்தான் குளிக்க வேண்டும்.  தண்ணீர் அப்படியே போய்விடும்.  ஒரு தண்ணீர் துளிகூட டப்பைத் தாண்டி வெளியே விழாது.  மயிலாடுதுறையில் காலையில் குளிக்கும்போது மின்சாரம் இருக்காது.  பின் குளியல் அறையில் நுழையும்போது பல்லி எங்காவது சுவரில் இருக்கிறதா என்று பார்த்து துரத்தி விட வேண்டும்.  எனக்கு இந்தப் பல்லியைக் கண்டால், அருவெறுப்பு.  ப்ளோரிடாவில் குளிப்பது நல்ல அனுபவம்.
@@@@@@@@@
ஜே கிருஷ்ணமூர்த்தி அவரைச் சுற்றி உள்ள பள்ளி சிறார்கள் முன்னால் மிகப் பொறுமையாகப் பேசுகிறார்.  ஊழல் எப்படியெல்லாம் உலகம் முழுவதும் இருக்கிறது என்பதைப் பற்றி பேசுகிறார். இந்தியாவில் அதன் ஆதிக்கம் அதிகம் என்று பேசுகிறார்.  அதை ஒழிக்க என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறார். டேபிள் அடியில் ஒரு காரியத்தைச் சாதிக்க பணம் கொடுக்கக்கூடாது என்று சொல்கிறார்.  ஊழலை எதிர்த்து அதன் மூலம் கிடைக்கக்கூடிய பலன்களை நிராகரிக்க வேண்டுமென்று பேசுகிறார்.  அதனால் நாம் பணத்தை இழந்தாலும் பரவாயில்லை என்கிறார்.  பள்ளி சிறார்கள் எந்த அளவிற்குப் புரிந்து கொண்டார்கள் என்பது தெரியவில்லை. 
இன்னொரு பக்கம் யூ ஜி கிருஷ்ணமூர்த்தி. இவர் ஜே கேயிலிருந்து எல்லோரையும் திட்டுகிறார்.  பார்க்க வருபவர்களிடம், ‘என்னைப் பார்க்க வந்துவிட்டு, உங்கள் comfortக்கு யாரையாவது பார்ப்பீர்கள்.  உங்களால் யாரையாவது பார்க்காமல் இருக்க முடியாது,’ என்கிறார்.  அவர் இசையைப் பற்றி சொன்னது யோசிக்க வைத்தது.  இசையைக் கேட்பதை விட இந்த நாய் குலைப்பது இயல்பாய் இருக்கும் என்கிறார். நான் பேசுவதும், நாய் குலைப்பதும் ஒன்றாக இருக்கும்.  ஏன் என்னைத் தேடி வருகிறீர்கள் என்கிறார். நேற்று நன்றாகவே பொழுது போய்க் கொண்டிருந்தது.
குறிப்பு :
எதையாவது சொல்லட்டுமா 48ல் என் பையன் தயாரித்த Drummers என்ற டாக்குமெண்டிரி படத்தை இணைத்துள்ளேன் (You tube மூலமாக).  பார்க்கவும்.

எதையாவது சொல்லட்டுமா……..48

                                                                                                                                                                                                             
ப்ளோரிடாவில் இரவு 8 மணி என்பது பகல்மாதிரி தெரிகிறது.   அதேபோல் காலை எட்டுமணிக்குத்தான் சூரியன் தன் கிரணங்களை வீசுகிறான்.  வீட்டில் 24 மணிநேரமும் ஏ.சி என்பதால் ஒரே குளிர்.  நான் அடிக்கடி ஏ சியை அணைக்க வேண்டி உள்ளது.  இங்கு ஒரு பால், தயிர் வாங்கக்கூட காரில்தான் செல்லவேண்டும்.  பஸ், டிரெயின் என்பதே கிடையாது.  சைகிளை யாரும் பயன்படுத்தவில்லை. டூ வீலர் யாரும் ஓட்டுவதில்லை.  வெயில் சென்னையில் அடிப்பதுபோல் சுள்ளென்று அடிப்பதில்லை. பிச்சைக்காரர்களைப் பார்க்க முடியவில்லை.  Publix என்ற கடையில் ஒரு குடும்ப வாழ்க்கைக்கு வேண்டிய எல்லாம் கிடைத்து விடுகிறது.  ஒவ்வொரு சனி ஞாயிறுகளில்தான் வெளியே சுற்ற முடியும்.  மற்ற நாட்களில் மிகச் சிறிய இடங்களுக்குச் சுற்ற முடிகிறது.  சென்னையில் அண்ணா மறுமலர்ச்சி நூல் நிலையம் மாதிரி, இங்கு
Broward County Library என்ற நூல்நிலையத்தைப் பார்த்தேன்.  பிரமிப்பாக இருந்தது.  ஆனால் சென்னையில் அமெரிக்கன் நூல்நிலையம் மாதிரி புத்தகங்கள் இருந்தன. அமெரிக்கன் நூல்நிலையத்தில்பெரும்பாலான நூல்களை நாம் படிக்காமல் தள்ளி விடலாம். Library யில் கணிணிகள் அதிகமாக இருந்தன. 
தினமும் காலையில் 30 நிமிடங்கள் நடை பயிற்சி செய்வேன்.  எட்டு மணிக்குக் கிளம்பி. அந்த நேரத்தில் எந்த மனித உருவமும் தென்படாது.  இந்த இடம் முழுவதையும் திட்டமிட்டு திறமையாக வைத்திருப்பதாக தோன்றுகிறது.  இப்படி திட்டமிட்டு ஒரு இடத்தை சென்னையில் பார்க்க முடியாது.  தினமும் மாலை 6மணிக்குமேல்  மழை பெய்வதுபோல் இருந்தாலும் மழை பெய்வதில்லை.  நான் இங்கு வந்த முதல் சனி ஞாயிறில் sanibell என்ற இடத்திற்கு பையன் எங்களை அழைத்துக்கொண்டு சென்றான்.  அவனே 70 மைல் வேகத்தில் வேகமாக வண்டியை ஓட்டிக்கொண்டு அழைத்துக்கொண்டு போனனான்.  எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  இங்கு முக்கியமாக டால்பின் விளையாட்டை ரொம்பவும் ரசித்தோம்.  மனித முயற்சிக்குக் கட்டுப்பட்டு டால்பின் செய்யும் சேஷ்டைகள் ஆச்சரியத்தைத் தந்தன.  இந்த இடமெல்லாம் கூட்டம் அதிகம்.  விதவிதமான மனிதர்கள்.  பெண்கள் யாரும் அவர்கள் உடை அணிவதைப் பற்றி கவலைப்படவில்லை.  அவ்வளவு சுதந்திரமாக அவர்கள் தென்பட்டார்கள்.  பிறகு பெரிய படகில் டால்பின் இருக்குமிடத்தைப் பார்க்கச் சென்றோம்.  ஒன்றிண்டு தவிர அதிகமாக தட்டுப்படவில்லை.  நாங்கள் அவதிப்பட்டது சாப்பாட்டிற்குதான்.  வாய்க்கு ருசியாக ஒரு காப்பியைக் கூட குடிக்க முடியவில்லை. 
அங்கிருந்து நாங்கள்  sanibell கடற்கரைக்குச் சென்றோம்.  அங்கு மண் கறுப்பு நிறத்தில் பவுடர் மாதிரி இருந்தது.  எந்த நேரத்திலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.  சிலர் கடலில் பீர் குடித்தபடி குளித்தபடி இருந்தார்கள்.  
        

   @@@@@@@@

தெரியாமல் 3 புத்தகங்கள் மட்டும் எடுத்துக்கொண்டு வந்தேன்.  Carlos Castenada வின் The Active Side of Infinity என்ற புத்தகமும், யு ஜி கிருஷ்ணமூர்த்தியின் Stopped in our tracks என்ற புத்தகமும்.  யு ஜியைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள முடிந்தது.  சந்திரசேகர் என்பவர் யு ஜியைப் பற்றி எழுதிய புத்தகம்.  பல தகவல்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது.  நான் மேலும் netல் சென்று இன்னும் அதிகமாக யு ஜியைப் பற்றி தெரிந்து கொண்டேன்.  அவருடைய வீடியோ டேப்பெல்லாம் பார்த்தேன்.  அவர் சொன்னதையெல்லாம் எதாவது எழுத முடியுமா என்று பார்க்கிறேன். 

ஒரு கவிதை

                                                                                                             
என்ன இங்கு
காக்காயைக் காண முடியவில்லை?
என்ன இங்கு
அணில்கள் குண்டோ தரனாகத்
தெரிகின்றன..
எறும்பே எறும்பே
எங்கே போனீர்கள் நீங்கள்
தலைதெறிக்க கார்கள்
எங்கே ஓடுகின்றன
மரங்கள் என்ன
இப்படி ஓங்கி வளர்ந்திருக்கின்றன
அசையாமல் வீடுகள்
எல்லாவற்றையும் சொல்லி சொல்லி சிரிக்கின்றன

புதிய ஊர்

நான் பார்த்துக்கொண்டிருந்த இடம்
என் கனவாக இருந்தது
எப்போதும் தண்ணீர்
தட்டுப்படாமல் கிடைத்தது
மின்சாரம் முணுக்கென்று போகாமலிருந்தது
மழையும் வெயிலும்

மாறி மாறி வித்தைக் காட்டிக்கொண்டிருந்தன

எங்கும் பார்த்தாலும்

அசையாமல் கட்டிடங்கள்

காத்துக்கொண்டிருந்தன

மனிதர்கள்

உள்ளேயிருந்து வெளியில் வந்தார்களா

அல்லது

வெளியிலிருந்து உள்ளே வந்தார்களா

என்பது தெரியவில்லை

நடந்துபோய் பொருள் வாங்க

வேண்டுமென்றால்

காரைக் காட்டினான் புதல்வன்

நாங்கள் அசைவற்று நின்றிருந்தோம்…

21.07.2011

1.30 pm

இருபது ரூபாய்..

(சிறுகதை)
இந்த முறை பாபு. ஆனால் அவரை அனுப்ப மேலாளருக்கு விருப்பமில்லை. பாபு தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு விடுவார் என்று. பாபுவைப் பற்றி என்ன சொல்வது. 24 மணிநேரமும் பணத்தைப் பற்றியே சிந்தனை உள்ளவர். யாரிடம் எப்படி பணம் கடன் கேட்பது. பாபுவுக்கு குடும்பம் பெரிசு. 3 பெண்கள். பின் ஒரு ஆண் பிள்ளை. எல்லோரும் படிக்கிறார்கள். வருமானம் வங்கியில் கிடைக்கும் வருமானம் மட்டும்தான். வீட்டில் ஆடம்பரமான செலவு.
சாட்லைட் கிளைக்கு பாபுவை அனுப்ப மேலாளர் தயங்கியபோது, மேலாளர் மீதே பாபுவுக்குக் கோபம். ஒருநாள் சாட்லைட் கிளைக்குச் சென்றால், ரூ.300 கிடைக்கும். பாபு பரக்கிற பரப்பில் முன்னதாகவே பணத்தைப் போட்டு எடுத்துக் கொண்டு விடுவான். அன்று அப்படித்தான் டிஏ பில் போடாமலேயே பணத்தை வவுச்சர் போட்டு எடுத்துக் கொண்டு விட்டான். நான் மேலாளரிடம் புகார் செய்தேன். ஏனோ அவர் பாபுவை விஜாரிக்கவில்லை.
இது ஒரு பக்கம். பாபு புலம்ப ஆரம்பித்ததால், மேலாளர் சாட்லைட் கிளைக்கு பாபுவை இனிமேல் அனுப்ப ஒப்புக்கொண்டு விட்டார். பல மாதங்களாக சாட்லைட் கிளைக்கு நான் சென்று வந்ததால், சில பொறுப்புகளை பாபுவிடம் ஒப்படைக்க நானும் சென்றேன். காரில், நான், பாபு, மீனு..இந்த மீனு மதுரைப் பெண். அவளைத் தூக்கி சீர்காழி கிளையில் போட்டு சித்தரவதை செய்கிறார்கள். அவள் கிளார்க். பாபுவும், நானும் உதவி மேலாளர்கள்.
6கிலோ மீட்டர் தூரத்திலுள்ள கீராநல்லூர் சாட்லைட் கிளைக்கு 10 பேர்கள் வாடிக்கையாளர்கள் வருவார்கள். வாரத்தில் 2 நாட்கள் போகவேண்டும். ஒரு வாரத்தில் பாபுவுக்கு ரூ.600 கிடைக்கும். பாபு புலம்பியதற்குக் காரணம் இருக்கிறது.
சாட்லைட் கிளையில் உள்ள கணக்குகள் எல்லாம் மானுவல். கம்ப்யூட்டர் யுகத்தில் இப்படி கணக்கு இருப்பது ஆபத்து. பாபு சாட்லைட் கிளைக்குச் செல்லப் போவதை அறிந்து எனக்கு இது வேற கவலை. மானுவல் கணக்கில் பலர் பணம் எடுக்கவே வருவதில்லை. பல கணக்குகளில் பேர் மாத்திரம் இருக்கும். என்ன முகவரி என்பது தெரியாது. பாபு நினைத்தால் சுருட்டலாம். மீனு செல்வதாக இருந்தாலும் கூட, எளிதாக சுருட்டலாம். மீனு புதுசு என்பதால், ஏமாற்றவும் ஏமாற்றலாம்.
ஆனால் பாபு அதுமாதிரி செய்யக்கூடியவரா என்பது எனக்குத் தெரியவில்லை. கொஞ்ச மாதங்களுக்குமுன் பூங்கோதை என்ற அலுவலர், வங்கியை ஏமாற்றி 3 லட்சம் வரை எடுத்துவிட்டாள். ரொம்பவும் தற்செயலாக அவள் ஏமாற்றிய விதத்தைக் கண்டுபிடித்தார்கள். வேறு பெயரில் கணக்கு ஒன்றை ஆரம்பிப்பது, அந்தக் கணக்கிற்கு அனோமதயக் கணக்கிலிருந்து பணத்தை மாற்றுவது, பின் தானாகவே கையெழுத்து இட்டு பணத்தை எடுப்பது..மீனா மாதிரி மஞ்சுளா என்ற பெண் புதிதாகச் சேர்ந்திருந்தாள். பூங்கோதை சொல்கிறாள் என்று மஞ்சுளா புதிய கணக்கை தொடங்கி வைத்தாள். அந்த வினையால் அவள் எங்கள் கிளையிலிருந்து வேறு எங்கோ தூக்கி எறியப்பட்டாள். அந்தத் திருட்டைக் கண்டுபிடித்த கேசவனுக்கு உடம்பெல்லாம் ஆட ஆரம்பித்து விட்டது. வவுச்சர்களை செக் பண்ணும்போதுதான் கேசவன் கண்டுபிடித்தார். அவரால் முதலில் நம்பவே முடியவில்லை. பூங்கோதை அப்படிப் பேசுவாள். உண்மையில் அந்த வவுச்சர்களை நான் செக் செய்திருந்தால், கண்டுபிடிக்காமல் போயிருக்கலாம்.
அன்று சனிக்கிழமை. பூங்கோதைதான் திங்கட் கிழமையிலிருந்து சாட்லைட் பிராஞ்சிற்கு செல்ல வேண்டுமென்று முடிவு செய்தோம். அப்படி முடிவு செய்த நாளில்தான் பூங்கோதையின் அயோக்கியத்தனம் தெரிந்தது. எல்லோருக்கும் அதிர்ச்சி. எங்கள் கிளையைவிட்டு பூங்கோதை போன பிறகு, திரும்பவும் தொடர்ந்து சாட்லைட் கிளைக்கு நான்தான் போய்க் கொண்டிருந்தேன். இதோ பாபு வந்து 2 மாதங்கள்தான் ஆகிறது.
சாட்லைட் கிளைக்கு நானும் பாபுவுடன் சென்றேன். அங்குள்ள நகைகளை எண்ணிக்கொடுத்தேன். பாபுவிடமிருந்து கையெழுத்து வாங்கிக்கொண்டேன்.
”சரி, வருகிறேன். இனிமேல் உங்கள் பொறுப்பு,” என்றேன்.
”சார், ஒரு விஷயம். நீங்க மங்கள விலாஸ் வழியாகத்தான் போகப் போகிறீர்கள்…ஒரு தக்காளி சாதமும், ஒரு வடையும் வாங்கிக்கொண்டு போக முடியுமா?”
”சரி,” எனறேன்.
என்னிடம் தக்காளி சாதம் வாங்கிக்கொண்டு வாருங்கள் என்று கூறிய பாபு பணம் எதுவும் தரவில்லை. நாங்கள் வந்த வண்டி டிரைவரிடம், என்னை மெயின் கிளை அலுவலகத்திற்குக் கொண்டு விடச் சொன்னேன். போகும் வழியில் மங்கள விலாஸ் ஓட்டலுக்குச் சென்று எனக்கும் பாபுவிற்கும் சேர்த்து தக்காளி சாதம் 2 வடைகள் வாங்கி஧ன். மொத்தம் 40 ரூபாய் ஆயிற்று. பாபு ஒரு தக்காளி சாதம் வடைக்கு ரூ20 தரவேண்டும்.
மதியம் 2 மணிக்கு பாபுவும்  மீனுவும்  எங்கள் மெயின் கிளை அலுவலகத்திற்கு வந்து விட்டார்கள். சாட்லைட் கிளைக்கு அரைநாள் பணிதான். அங்கு மானுவல் கணக்கை முடித்துக்கொண்டு மெயின் கிளையில் கணக்கை முடிக்க வேண்டும்.
பாபு உள்ளே நுழைந்தவுடன் என்னைப் பார்த்து,

”என்ன தக்காளி சாதம் வாங்கியாச்சா?” என்று கேட்டார்.

 பொட்டலத்தைக் கொடுத்தபடி, ”20 ரூபாய் ஆயிற்று,” என்றேன்.

பாபு பேசாமல் வாங்கிக்கொண்டு சென்றார்.

திரும்பவும் பாபு சாப்பிட்டுவிட்டு வந்தவுடன், ”என்ன சாப்பாடு நன்றாக இருந்ததா?” என்று கேட்டேன்.
”நன்றாக இருந்தது…. கீரை வடை இருக்குமென்று நினைத்தேன்.” என்றார்.
”கீரை வடை இல்லை…இதற்கே ரூ.20 ஆச்சு..,” என்றேன்.

பாபு கண்டுகொள்ளவில்லை. எனக்குப் பதட்டம் ஆகிவிட்டது. எப்படி இவரிடமிருந்து ரூ20 வாங்கப் போகிறேன் என்ற கவலை வந்து விட்டது. கடைஊழியர் நாதமுனி என் பரபரப்பை உணர்ந்து,

”கவலைப் படாதீர்கள்..நீங்கள் பாபுவிடமிருந்து 20 ரூபாய் வாங்க முடியாது,”என்றான் சிரித்துக்கொண்டே. பாபுவிடமிருந்து எப்படி 20 ரூபாய் வாங்குவது என்ற என் கவலையை மீனுவிடம் தெரிவித்தேன்.

”நீங்கள் வாங்கிக் கொடுத்ததாக எடுத்துக்கொள்ளுங்களேன்..” என்றாள் மீனு.
”இல்லை..என்னிடம் கடன் என்று பத்து ரூபாய் கேட்டால்கூட அதைத் திரும்பவும் வாங்கும் வரை தூக்கம் வராது,”என்றேன்.
அன்று அப்படித்தான். பாபு பரபரப்பாக காரைக்காலிலிருந்து அவசரம் அவசரமாக அலுவலகம் நுழைந்தவுடன், ”ஒரு பத்து ரூபாய் கொடுங்கள்,” என்று என்னிடமிருந்து பணம் வாங்கிக்கொண்டு அலுவலக வாசலுக்குச் சென்றார். அன்று முழுவதும் ஒரு பத்து ரூபாய் வாங்கிய நினைப்பே இல்லை அவருக்கு.
பாபுவிடம் எது கொடுத்தாலும் திரும்ப வராது என்று நன்றாகத் தெரியும். ஆனால் முகத்தில் அடித்தாற்போல் எப்படிச் சொல்வது. என் சங்கடம் இது. பாபுவிடமிருந்து இந்த 20 ரூபாயை எப்படியும் இன்றைக்குள் வாங்கிவிட வேண்டுமென்று நினைத்துக்கொண்டேன்.

அலுவலகப் பரபரப்பில் பாபுவிடம் பேச சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.வங்கி அலுவல் முடிந்து அலுவலர்களைத் தவிர எல்லோரும் போய்விட்டார்கள். எப்படியும் பாபுவிடமிருந்து வாங்கி விட வேண்டுமென்று முடிவு செய்து, பாபு இருக்குமிடம் சென்றேன்.

”சாட்லைட் கிளையில் என்ன கூட்டமா?” என்று கேட்டேன் பாபுவைப் பார்த்து.
”எப்போதும் இருப்பதுபோல்தான். எப்படியும் அதிகமாக எல்லோரையும் பணம் போடச் சொல்ல வேண்டும்,” என்றார் பாபு.
”இன்னிக்கு தக்காளி சாதம் ரொம்ப நல்லா இருந்தது…”என்றேன்.
அதைக் கேட்டு பாபுவும் தலை ஆட்டியபடி, ”நன்றாக இருந்தது,” என்றார். நான் வாயைத் திறந்து
20 ரூபாய் கேட்க நினைத்தேன். அதற்குள் பாபுவை கிளை மேலாளர் கூப்பிட நகர்ந்து விட்டார். என் இடத்தில் வந்து அமர்ந்து கொண்டேன். இனிமேல் பாபுவிடமிருந்து 20 ரூபாய் வாங்கின மாதிரிதான் என்று நினைத்துக் கொண்டேன். நாளைக்குக் கேட்டால், அப்படியா என்றாலும் என்பார். நிச்சயம் வாங்க முடியாது.
வீட்டிற்குக் கிளம்ப வேண்டிய நேரம் வந்து, இதோ பாபு கிளம்பிவிட்டார். அவர் காரைக்கால் போக வேண்டும். நான் அலுவலகத்தில் உள்ள எல்லாக் கதவுகளையும் பூட்டிவிட்டுத்தான் கிளம்ப வேண்டும். கிளம்புவதற்குமுன் மேலாளர், ஏபிஎம் கேசவன் என்று எல்லோரையும் கிளப்ப வேண்டும். இதோ பாபு போய்விட்டார். நாளைக்குத்தான் கேட்கவேண்டும். எங்கே கிடைக்கப் போகிறது? ஆறின கஞ்சி பழம் கஞ்சிதான்.
எல்லாக் கதவுகளையும் பூட்டிவிட்டு வந்தேன். இரவு 8 ஆகிவிட்டது. நான் மயிலாடுதுறைக்குப் புறப்படும் நேரம் வந்து விட்டது. கம்ப்யூட்டர்களை அணைத்துவிட்டு வாசல் கதவைச் சாத்த வந்தேன். பாபு அவசரம் அவசரமாக அலுவலகத்தில் நுழைந்தார். ”என்ன பாபு?” என்றேன். ”செல்லை வைத்துவிட்டுப் போய்விட்டேன்,”என்றார்.
நல்ல சந்தர்ப்பம் 20 ரூபாய் கேட்டுவிடலாமென்று நினைத்தேன். பின் பாபு செல்லை எடுத்துக்கொண்டு எங்களுடன் கிளம்பினார்.
வழக்கம்போல் மயிலாடுதுறை பஸ் நிற்குமிடத்தில்தான் காரைக்கால் பஸ்ஸும் நிற்கும். மேலும் பாபு வங்கிக் கதவுகளைச் சாத்தும்போது எந்த உதவியும் செய்ய மாட்டார். அவரை நான் மாப்பிள்ளை என்று என் வயிற்றெரிச்சலை வெளிப்படுத்திக் கொள்வேன்.
எப்படியும் கேட்டுவிட வேண்டும் என்று முடிவு செய்துகொண்டு, பாபுவைப் பார்த்து, ”நீங்கள் 20 ரூபாய் கொடுக்க மறந்து விட்டீர்கள்…தக்காளி சாதம் வாங்கியதற்கு..” என்றேன் துணிச்சலுடன்.
”நான் அப்பவே கொடுக்க வேண்டுமென்று, 100 ரூபாய்க்குச் சில்லறை மாற்றி வைத்துக்கொண்டிருந்தேன். இந்தாருங்கள்..” என்று நீட்டினார்.
நான் அவரிடமிருந்து 20 ரூபாயைப் பறித்துக்கொண்டு மேலும் கீழுமாக அவரைப் பார்த்தேன்.