இரண்டு கவிதைகள்

1.

நான் பஸ்ஸில்
வந்து கொண்டிருந்தேன்
இருக்கை எதுவும் தட்டுப்படவில்லை
பஸ்
ஊர்ந்து ஊர்ந்து
சென்று கொண்டிருந்தது
பல ஊர்களைத் தாண்டியது
பல மனிதர்களைச் சுமந்து சென்றது
வயல்களைத் தாண்டியது
உயரமான மரங்களைத் தாண்டியது
கூட்ட நெரிசலில்
ஒழுங்கற்ற சப்தம் பஸ்ஸில்
சுழன்றபடி சென்றது
ஊர்ந்து ஊர்ந்து
பஸ் நகர்கிறது
நான்
பஸ்ஸில்
பயணித்துக்கொண்டிருக்கிறேன்.

2.

இந்த இடத்திற்கு
நான் வருவதற்கு முன்
இந்த இடம்தானா
என்று எனக்குத் தெரியாது.

எதையாவது சொல்லட்டுமா……….58

செப்டம்பர் 28ஆம் தேதி உலகம் முழுவதும் இதய நாள் கொண்டாடுகிறார்கள்.  போனவாரம் சனிக்கிழமை என் உறவினருடன் சென்னைக்கு இரவு 12.45க்கு வரும் ராமேஸ்வரம் விரைவு வண்டியில் ஏறும்போது, அவர் சொன்ன தகவல் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.  தில்லியில் இருக்கும் எங்கள் இருவருக்கும் நெருங்கிய உறவினருக்கு மாரடைப்பு ஏற்பட்டு தப்பித்துவிட்டார் என்று குறிப்பிட்டார். கேட்கும்போது அதிர்ச்சியாக இருந்தது.  தினமும் நடப்பவர்.  சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய் இல்லாதவர்.  வயது 68 இருக்கும்.  அவருக்கு எப்படி இதுமாதிரி ஏற்பட்டது.  இன்னொருவர் என் அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவரின் தந்தைக்கு சமீபத்தில் ஏற்பட்ட மாரடைப்பால் அவர் ஒரு மாதம் மேல் அலுவலகம் வரவில்லை.
கடந்த 6 ஆண்டுகளாக நான் மூன்று விபத்துக்களை என் கண்ணால் பார்த்திருக்கிறேன்.  இது குறித்து ஒரு சிறுகதையும் எழுதியிருக்கிறேன்.  பந்தநல்லூர் என்ற கிராமத்தில் இருக்கும்போது, என் அலுவலக நண்பர் ஒருவருக்கு எதிர்பாராதவிதமாய் மாரடைப்பு (Heart Attack).  முதலில் இது தெதியாது.  அவசரம் அவசரமாக 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கும்பகோணத்தில் உள்ள சுகம் மருத்துவமனையில் சேர்த்தப் பிறகுதான் தெரியும்.  அவர் தப்பித்து விட்டார்.  கொஞ்சம் ஏமாந்தால் அவர் உயிருக்கே ஆபத்தாகியிருக்கும். 
ஒரு முறை என் அலுவலக நண்பர் ஒருவர், அவர் பெண்ணின் பாட்டுக் கச்சேரியை வைத்திருந்தார்.  பேசுவதற்கு பெண்ணின் கல்லூரி பேராசிரியர் ஒருவர் வந்திருந்தார்.  பாட்டுக் கச்சேரி போய்க்கொண்டிருந்தது.  துக்கடா பாடும்முன் மேடையில் எல்லோரும் அந்தப் பெண்ணைப் பாராட்டிப் பேசினார்கள்.  கல்லூரி பேராசிரியரும் பாராட்டிப் பேசினார்.  பின் பெண் துக்கடா பாட ஆரம்பித்தாள்.  கல்லூரி பேராசிரியர் மேடையிலிருந்து கீழிறங்கி அமர்ந்து கொண்டார்.  கொஞ்ச நேரத்தில் பேராசிரியர் அவர் உட்கார்ந்த இருக்கையிலிருந்து கீழே சாய்ந்தார்.  பின் நினைவு தப்பிப் போய்விட்டது.  பாட்டுக் கச்சேரி நின்றுவிட்டது.  நண்பருடன் வண்டியில் பேராசிரியரை அவசரம் அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்.  நண்பரைப் பார்த்து, மருத்துவர் கேட்டார்  ”இவர் இறந்து போயாற்று… ஏன் அழைத்துக் கொண்டு வந்தீர்கள்?” என்று. எனக்கு படபடவென்று வந்தது.  அந்த இடத்தை விட்டு ஓட்டம் பிடித்தேன்.  மயிலாடுதுறையில் உள்ள என் அறைக்கு வந்தபிறகுகூட தூக்கம் வராமல் இரவு முழுவதும் அவதிப்பட்டேன்.  இப்படி நம் முன்னால் நடப்பதை எச்சரிக்கையாகவே நான் கருதுகிறேன். 
நான் அமெரிக்கா போவதற்கு முன் உடல் பரிசோதனை செய்துகொண்டு ஒரு மருத்துவரிடம் சான்றிதழ் வாங்கச் சென்றேன்.  ஏன்எனில் அமெரிக்காவில் சான்றிதழ் இல்லாமல் மாத்திரை தர மாட்டார்களாம்.  என்னைப் பரிசோதித்த டாக்டர், சான்றிதழ் தருவதற்கு முன் என்னை எச்சரிக்கை செய்தார்.  நான் பயந்து விட்டேன்.  அமெரிக்காவிற்கு கடைசி நிமிடத்தில் போகாமல் இருந்து விடலாமலா என்று நினைத்தேன்.  பின் முன் வைத்தக் காலை பின் வைக்கக்கூடாதென்று பயத்துடன் கிளம்பி விட்டேன். எப்போதும் என் ரத்த அழுத்தத்தை மருத்துவர் சோதிக்கிறார் என்றால் அது அதிகமாகவே காட்டும். அமெரிக்காவிலிருந்து டாக்டர் செல்வராஜூற்கு போன் செய்தேன்.  பின் அவர் ஏற்கனவே சொன்ன மாத்திரைகளைச் சாப்பிட்டு ஒரு மாதம் சுற்றிப் பார்த்துவிட்டு வந்து விட்டேன்.  திரும்பவும் சென்னை வந்து ஒரு மாதம் மேல் ஓடிவிட்டது.  இருந்தும் என் சர்க்கரை நோயைக் குறைக்க பலவித முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். குறிப்பாக தினமும் 30 நிமிடங்கள் தொடர்ந்து நடக்கிறேன். சாப்பாட்டை குறைத்துவிட்டேன். 
செய்தித்தாளில் உலக இதய நாள் பற்றி செய்திகளைப் படித்தபோது, ஒரு செய்தி என் கண்ணில் இருந்து விலகாமல் இருந்தது.  ஒருவர் பொங்கல், வடை, பரோட்டா சாப்பிடுவதை நிறுத்த வேண்டுமாம்.  இதைத் தொடர்ந்து சாப்பிட்டால் இதய நோய் வர எல்லாவித வாய்ப்பும் உண்டாம்.  அடப்பாவி தினமும் இந்தப் பொங்கல் வடையைச் சாப்பிடுகிறேனே என்று நினைத்துக்கொண்டேன். செய்தியைப் பார்த்த அன்று பொங்கல் வடையைச் சாப்பிடாமல் அலுவலகம் சென்றேன்.  அங்கோ என் அலுவலகப் பெண்மணி ஒருவருக்கு பிறந்த தினம் என்று எல்லோருக்கும் அலுவலக முனையில் உள்ள ஒரு கடையிலிருந்து வடையை தருவித்துக் கொடுத்தார்.  வேறு வழியில்லாமல் அந்த வடையைச் காப்பிட்டு 4 தம்ளர் தண்ணீரைக் குடித்தேன்.  சர்க்கரை நோயுடன் எப்படி வாழ்வது என்ற புத்தகம் எழுதலாமா என்று யோசிக்கிறேன். 

ழ கவிதைகள்

ழ 5வது இதழ்

டிசம்பர் 1978 ஜனவரி 1979

மூன்று கவிதைகள்

வி பார்த்தசாரதி

1.

திரும்புகிறார்கள்
மழைத்துளிக்குப்
பயந்து பலர்
கடற்கரையில்

2.

நேற்று என்னால்
காற்றைப் பார்க்க முடிந்தது
இன்று நீ இதை
‘செடி’ என்று சொன்னாலும் சரி
‘சிறு மரம்’ என்று சொன்னாலும் சரியே

3.
நீ போய்க் கொண்டிருக்கிறாய்
நான் வந்து கொண்டிருக்கிறேன் அல்லது
நீ வந்து கொண்டிருக்கிறாய்
நான் போய்க் கொண்டிருக்கிறேன் அதனால்தான்
நாம் சந்திக்க முடிகிறது வெளியில் இப்படி.

ழ கவிதைகள்

ழ என்ற சிற்றேடு ஆத்மாநாம் மூலம் 1978 ஆம் ஆண்டு உருவானது.  அவருக்கு பக்கபலமாக ஞானக்கூத்தன், ஆர்.ராஜகோபாலன், ஆனந்த், காளி-தாஸ் போன்ற பல நண்பர்கள் செயல்பட்டார்கள். ழ ஒரு சிற்றேடு.  மிகக் குறைவான பேர்களே வாசித்திருப்பார்கள். 
1978 லிருந்து 10 ஆண்டுகள் செயல்பட்ட ழ பத்திரிகை, ஆத்மாநாமின் தற்கொலையால் கிட்டத்தட்ட நின்றுவிட்டது. தமிழ் கவிதைக்கு ஒரு மாற்றத்தை எளிய வழியில் ஏற்படுத்திக் கொடுத்தது. இக் கவிதைகளைப் படிக்கும்போது கவிதை எழுதுவதற்கான ஒருவித ஒழுக்கத்தை பலரும் கற்றுக்கொள்ள முடியும்.
அப் பத்திரிகையில் வெளிவந்த கவிதைகள் முக்கிமானவை.  கவிதை எழுத வேண்டுமென்கிற எண்ணம் உடையவர்கள், ழ வில் வெளிவந்த கவிதைகளை பயிற்சிக்காக எடுத்துக்கொள்ள வேண்டும்.  நவீன விருட்சம் பத்திரிகைக்குக் கூட ழ ஒரு முன்னுதாரணம். ழ வில் வெளிவந்த கவிதைகளை கொஞ்சம் கொஞ்சமாக உங்களுக்கு அறிமுகப் படுத்த நினைக்கிறேன். 
ழ 5வது இதழ்
டிசம்பர் 1978 ஜனவரி 1979
இந்த நிழல்
பசுவய்யா
எங்கிருந்து ஆரம்பிக்கிறது இந்த நிழல்?
பாதத்தின் விளிம்பிலிருந்துதானா?
அல்லது அதன் அடியிலிருந்தா?
பூமியில் காலூன்றி நிற்கும் போது
நிழல்மேல்தான் நிற்கிறோமா?
காலைத் தூக்கிப் பார்க்கலாம்தான்
அந்த யோசனையை நான் ஏற்கவில்லை
பூமியில் நிற்கும்போது
எங்கிருந்து ஆரம்பிக்கிறது இந்த நிழல்
என்பதுதான் எனக்குத் தெரிய வேண்டும்.

எதையாவது சொல்லட்டுமா……….57

ஒவ்வொரு முறையும் அந்தக் கோயிலைத் தாண்டித்தான் வண்டி போகும்.  இதோ நான் இங்கு வந்து 2 ஆண்டுகள் ஆகப் போகிறது.  ஒவ்வொரு முறையும் நான் பஸ்ஸைவிட்டு இறங்கி வைதீஸ்வரன் கோயிலுக்குச் செல்ல வேண்டுமென்று நினைப்பதுண்டு.  ஆனால் முடிவதில்லை.  எங்கள் குடும்ப குலதெய்வம் அந்தக் கோயில். 
செப்டம்பர் 3 ஆம்தேதி சனிக்கிழமை இறங்கி அந்தக் கோயில்போய் சாமி தரிசிக்க வேண்டுமென்று நினைத்தேன்.  எதிர்பாராதவிதமாய் சங்கரைப் பார்த்தேன்.  அந்தக் கோயிலில் அவன் குடும்பமே பணிபுரிகிறது.  புதிதாக திறந்த ஒரு ஓட்டலுக்கு என்னை அழைத்துப் போனான்.  பின் அந்தக் கோயிலைப் பற்றி சொன்னான்.  மொத்தம் 300 பேர்கள் பணிபுரிவதாக சொன்னான்.  கூட்டம் தாங்க முடியாது.  திருப்பதிக்குப் பிறகு இதுதான் என்றான்.  உண்மைதான் கூட்டம் தினமும் மொய்த்துக் கொண்டுதான் இருக்கும்.”என் சகோதரர்கள் இருப்பார்கள்.  நீங்கள் போய் சாமி தரிசனம் பண்ணி அர்ச்சனை பண்ணுங்கள்,”என்றான். 
அர்ச்சனை டிக்கட்டுக்களையும், அர்ச்சனைப் பொருள்களையும் வாங்கிக்கொண்டு உள்ளே நுழைந்தேன். 
பழையபடி அழுக்காகவே அந்தக் கோயில் காட்சி அளித்தது.  தினமும் ஆயிரக்கணக்கானவர் வருகின்ற கோயில் அப்படியே இருக்கிறதே என்று வருத்தமாக இருந்தது.  அர்ச்சனை பண்ணும்போது அர்ச்சனைப் பண்ணுபவர்களிடையே ஒரு போட்டி நிலவுகிறது.  தட்டில் விழுகிற எல்லாப் பணமும் எந்தந்த அர்ச்சர்களின் தட்டுக்களில் விழுகிறதோ அவர்களுக்குச்  சொந்தம்.  பக்தியைவிட அதிகமாக பணம் பண்ண வேண்டுமென்கிற எண்ணமே அவர்களிடம் இருப்பதாகப் பட்டது. 
அந்தக் கோயிலின் அழகே குளம்தான்.  அது பாசிப்பட்டு வீணாகிப் போய்க் கிடந்தது.  தண்ணீரை மாற்றி புதிய தண்ணீரைக் கொண்டு வர எந்த பிரயத்தனமும் அங்கில்லை.  நான் சாமிக்கும் அம்மனுக்கும் அர்ச்சனை செய்தேன்.  என்னிடம் அர்ச்சனைத் தட்டு வாங்கியவர், என்ன நட்சத்திரம் என்றுகூட கேட்கவில்லை.  பின் கோபமாகக் கூட சாமி கும்பிட வந்தவர்களைத் திட்டினார்.  அம்மனிடம் அர்ச்சனையை முடித்துக்கொண்டு சாமி சந்நிதானம் வந்தேன்.  அங்கேயும் உள்ள அர்ச்சர்கள் யந்திரத்தன்மையுடன் உற்சாகமில்லாமல் காணப்பட்டார்கள்.  அதில் ஒருவர் விபூதி குங்குமத்தைப் பொட்டலம் கட்டி 10 ரூபாய் என்று விற்றுக்கொண்டிருந்தார்.  சாமியைப் பார்க்க வரும் பக்தர்களிடம் காணப்படும் பக்தி இவர்களைப் பார்க்கும்போது ஓடியே போய்விடும் போல் தோன்றியது. பெரும்பாலான இந்துக்களுக்கு வைதீஸ்வரன் கோயில் என்ற பெயரில் உள்ள அந்தக் கோயில் குலதெய்வக் கோயில்.
அடுத்தநாள் திருஇந்தளூரில் உள்ள பரிமேள ரங்கநாதன் கோயிலுக்குச் சென்றேன்.  முக்கியமான திவ்ய தரிசன கோயில்.  சாமி உள்ள அறையில் நல்ல வெளிச்சமாக இருந்தது.  ஏசி செய்திருந்ததால் குளு குளுவென்றிருந்தது.  கோயில் வெளியில் பல சிற்ப வெளிப்பாடுகள் ஆச்சரியத்தை உண்டு பண்ணியது.  கோயிலை சுத்தமாக வைத்திருந்தார்கள். அரங்கநாதரின் சயனத்திருக்கும் தோற்றத்தை நெருக்கத்தில் கண்டு களிக்க முடிந்தது. 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இருந்தும் சரியாக பராமரிக்காத வைதீஸ்வரன் கோயில் எங்கே?
இந்தக் கோயில் எங்கே என்று தோன்றியது. பக்தி மணம் என்பது பணம் பறிக்கும் குறிக்கோளால் சிதறிப் போய் விடுவதாக தோன்றுகிறது.
  

ப்ளோரிடா

ப்ளோரிடா என்ற இந்த ஊர்
எனக்குப் பிடித்திருக்கிறது
வீதியெல்லாம் நீரால்
துடைத்தது மாதிரி சுத்தமாய் இருந்தது
அங்கங்கே ஓங்கி உயர்ந்த மரங்கள்
வரிசையாய் வீற்றிருந்தன
இங்கேதான்
என்னைக் கவர்ந்த எழுத்தாளர்
ஐ.பி.சிங்கர் வாழ்ந்தாராம்..
மியாமி கடற்கரையில்
ஓங்கி உயர்ந்த கட்டிடங்களைக்
கடந்தவண்ணம்
காரில் பறந்தவண்ணம் இருந்தோம்
ஐ.பி சிங்கர் பெயரில் ஒரு தெருவைக்
கடந்து  சென்றதாக புதல்வன் சொன்னான்
என் மனதுக்குகந்த எழுத்தாளர்
ஏதோ ஒரு வீட்டில்
வாழந்திருப்பார்
இங்கிருக்கும்போது
அவர் ஞாபகமும் அவர் எழுத்தின் மணமும்
சுற்றி சுற்றி வந்தன..
ஏன்…………..?

ஒரு மாதமாய்…….

கடந்த ஒரு மாதமாய்
நாங்கள் மூவரும்
இந்த வீட்டில் இருந்தோம்
பல ஆண்டுகளாய்
அப்படி இல்லை
புதல்வன் தூர தேசத்தில் இருந்தான்
நானோ இன்னொரு கோடியில் இருந்தேன்
வீட்டில் அடைப்பட்டிருந்தாள் மனைவி
இங்கே –
மூவரும் ஒரே நேரத்தில்
ஒரே இடத்தில் கூடியிருந்தோம்
உண்டு உறங்கினோம்
வெளியே கிளம்பி
ஊர்ச் சுற்றத் தொடங்கினோம்
வாழ்க்கையில்
இந்தத் தருணம் கிடைத்தது குறித்து மகிழ்ந்தோம்
எங்களின் வார்த்தைகளின் பரிமாற்றம்
சில நொடிகளே….
இதோ
ஒவ்வொருவாய்
ஒவ்வொரு திசைக்குப் பயணமாகிறோம்….
(12.08.2011 / Florida 1.20 pm)

நியுயார்க்

நான் தெருவில்
காலடி எடுத்து வைத்தபோது
உயரமான அந்தக் கட்டிடங்கள்
என்னை வியக்க வைத்தன
ஒன்றொடு ஒன்று ஒட்டி உறவாடிக் கொண்டிருப்பதுபோல்
கட்டிடங்கள்
ஒவ்வொன்றையும் அண்ணாந்து
பார்க்க பார்க்க தட்டாமாலை
சுற்றுவதுபோலிருந்தது.
தெருவெல்லாம் கூட்டம் கூட்டமாய்
ஆண்களும் பெண்களும்
நடந்தவண்ணம் சென்று கொண்டிருந்தார்கள்
மாலை வேளையில்
டைம் ஸ்கெயர் என்ற இடத்தில்
கூட்டமாய் கூடியிருந்தார்கள்.
ஒருவர் சத்தமாய் கிதாரை வைத்துக்கொண்டு
பாட்டு பாடிக் கொண்டிருந்தார்
பலர் கூட்டமாய் கூடி
வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்
ஓவியர்கள் சுற்றி இருந்தவர்களை
உட்காரவைத்து ஓவியம் வரைந்து கொண்டிருந்தார்கள்
வயதானவர்கள்
நடக்கமுடியாமல் அங்கிருந்த நாற்காலிகளில்
அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்
கட்டிடங்கள் மேல்
வண்ணமயமான விளக்குகளின் வெளிச்சத்தில்
விளம்பரங்கள் ஓடிக் கொண்டிருந்தன.
எங்கும் ஹோ ஹோ என்ற சத்தம்
கேட்டுக்கொண்டிருந்தன.
பெண்கள் அரைகுறை உடைகளுடன்
மிதந்த வண்ணம் இருந்தார்கள்.
திசை தெரியாத திசைக்கு
நாங்களும் சுழன்று கொண்டிருந்தோம்.

எதையாவது சொல்லட்டுமா – 56

 
ஒரு சம்பவம் நடந்தது.  அதாவது 28ஆம் தேதி ஜூலை மாதம். ஞாயிற்றுக்கிழமை.  வழக்கம்போல் சென்னையிலிருந்து மாயூரம் கிளம்ப வழக்கம் போல் இரவு 8 மணிக்குமேல் e-ticket ஐ பிரிண்ட் எடுத்தேன். எனக்கு டிக்கட் எப்போதும் என் உறவினர் ஒருவரால் புக் செய்யப்படும்.  அவரும் என்னைப்போல் ஞாயிறு இரவு கிளம்பி திங்கள் மாயூரம் வந்து பின் திருக்கடையூர் பயணம் செய்வார். 
ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமையிலும் அவருக்கும் எனக்கும் டிக்கட் எடுப்பார். எப்போதும் நாகூர் விரைவு வண்டியில்தான் நாங்கள் செல்வோம்.  அது காலையில் மாயூரம் 4.50 மணிக்குச் செல்லும்.  நாங்கள் இருவரும் கொஞ்ச தூரம் நடந்து ஒரு டீக் கடையில் காப்பி குடிப்போம். பின் நடந்து சென்று ஒரு பஸ்பிடித்து நான் என் இடத்திற்கும், அவர் திருக்கடையூரிலுள்ள அவர் இடத்திற்கும் செல்வார்.
28ஆம் தேதி அவர் என் கூட வரவில்லை.  எனக்கு மட்டும் டிக்கட் அவர் பதிவு செய்திருந்தார்.  நான் வழக்கம்போல இரவு 9.45க்குக் கிளம்பி மாம்பலம் ரயில்வே நிலையம் சென்று எக்மோர் டிக்கட் வாங்கி மெதுவாக வந்து சேரும் மின்சார வண்டியில் தொற்றிக்கொண்டு எக்மோர் சென்றேன். 
நாகூர் வண்டியைத் தவிர எல்லா வண்டிகளும் போய் விட்டன.  மெதுவாது s4 கோச்சில் 6 எண்ணைப் பார்த்தேன்.  என் பெயர் இல்லை.  திகைத்தேன்.  எப்படி இந்தத் தவறு நடந்தது? யோசித்தேன்.  பின் டிக்கட்டை ஆராய்ந்தேன்.  தேதி சரியாகப் போட்டிருந்தது.  ஆனால் நாகூர் வண்டிக்குப் பதில் மதுரை எக்ஸ்பிரஸ் என்று போட்டிருந்தது.  அந்த வண்டி 10.45க்குக் கிளம்பிப் போய்விட்டது.  என்னடா இது இப்படி ஒரு தவறு நடந்துவிட்டது என்ற பதறினேன். கடைசிவரை என் உறவினர், ரயில் மாறி டிக்கட் பதிவு செய்ததைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை.  பின் ரயில்வே டிடிஆரைப் பார்த்து அந்த டிக்கட்டை வைத்துக்கொண்டு போக முடியுமா என்று கேட்டேன்.  அந்த டிக்கட் இனிமேல் செல்லாது என்றார்.  திரும்பவும் ஒரு டிக்கட் வாங்கிக்கொண்டு வர ஓடினேன்.  அலுவலக சாவிகளை வைத்திருப்பதால் நான் போகத்தான் வேண்டும்.  ரிசர்வ் செய்யாத டிக்கட்டை 75 ரூபாய்க்கு வாங்கிக்கொண்டு, ஓட்டமாய் ஓடி s1ல் ஏறினேன்.  டிடிஆர் இரக்கமே இல்லாமல், ‘நீங்கள் unreserve coachல் ஏறிப்போங்கள்,’ என்றான். 
வேறு வழியில்லை அங்கு ஏறினேன்.  ஏகப்பட்ட கூட்டம்.  லட்ரின் பக்கத்தில் உள்ள இருக்கையின் கீழ்தான் அமர வேண்டியிருந்தது.  நாற்றம் குடலைப் புடுங்கியது.  காலை மடக்கி உட்கார்ந்தேன்.  ரொம்ப நேரம் உட்கார முடியவில்லை.  பின் நீட்டி உட்கார்ந்தேன். அப்படியும் முடியவில்லை.  உண்மையில் அந்த நேரத்தில் பஸ்பிடித்துப் போக முடியாது.  மேலும் வேளாங்கண்ணி கூட்டம் வேறு.  ஒரு வழியாக இப்படியே போனால் சரி என்று நினைத்துக்கொண்டேன். பொதுவாக எனக்கு ரயிலில் தூக்கம் வராது.  இன்னும் தூக்கம் வரப்போவதில்லை என்று நினைத்துக் கொண்டேன்.  மேல் மருவத்தூரில் வண்டி நின்றது. சிகப்பு ஆடை அணிந்த பெண்கள் கூட்டம் புடை சூழ, நான் உட்கார்ந்த இடத்தில் என் மீதே ஏறி மித்ததார்கள்.  ஒரே சத்தம். அதன்பின் நான் எழுந்து நிற்க ஆரம்பித்தேன்.  காலை இங்கேயும் அங்கேயும் நகர்த்தக் கூட முடியவில்லை.  இரவி 1.30 மணியிலிருந்து காலை 5 மணிவரை நின்று கொண்டே காலை நகர்த்தமுடியாமல் நகர வேதனையில் வந்தேன். 

வீடு வந்து சேர்ந்தபோது, பொத்தென்று படுக்கையில் படுத்துக்கொண்டேன்.  2 மணிநேரம் தூங்கியிருப்பேன்.  ஆனாலும் கால் வலி தாங்க முடியவில்லை.  அலுவலகச் சாவி மட்டுமில்லாமலிருந்தால், வந்திருக்கவே மாட்டேன்.  கால் வலி அலுவலகச் சாவியால் மாட்டிக்கொண்டதாக தோன்றியது.  அலுவலகம் சென்று சாவியைக் கொடுத்துவிட்டு, திரும்பவும் வீட்டிற்கு வந்து ஓய்வெடுத்துக்கொள்ள நினைத்தேன்.  என்னைப் பார்த்தவுடன் என்னை விடவில்லை மேலாளர்.  வலி இருந்தாலும் பரவாயில்லை.  சும்மா உட்கார்ந்துவிட்டுச் செல்லுங்கள் என்றார்.  வேறு வழியில்லாமல் தலைவிதியை நொந்துகொண்டு அமர்ந்தேன்.  மாலை சீக்கிரமாகக் கிளம்பி 7.30 மணிக்கு வீடு போய்ச் சேர்ந்து, படுத்தவன்தான் அடுத்த நாள் காலையில்தான் எழுந்து கொண்டேன்.  
அன்றுதான் முதன்முதலாக நிற்பவர்கள் பற்றி யோசிக்க ஆரம்பித்தேன்.  மயூரா விலாஸில் நின்றுகொண்டே எல்லோருக்கும் காப்பிப் போட்டுக்கொடுக்கும் முதியவரைப் பற்றி நினைத்துக்கொண்டேன்.  பின் பார்சல் பண்ணி தரும் ஒருவரைப் பற்றியும் நினைத்தேன்.  என் அலுவலகத்தில் நின்றுகொண்டே இங்கேயும் அங்கேயும் சென்று வவுச்சர்களை எடுத்துத் தருபவர்களைப் பார்த்து, ”தினமும் நிற்கிறியே, உனக்குக் கால் வலிக்காதா?’ என்று கேட்டேன்.  ‘வலிக்கும்.. ஆனால் காலையில் சரியாகிவிடும்,’ என்றான் அவன். 
நின்றுகொண்டே இருப்பவர்களைப் பார்த்து நான் தலை வணங்குகிறேன்.  நான் அமெரிக்கா போய்வந்தது கூட பெரிய விஷயமாகத் தோன்றவில்லை.  ஆனால் ரிசர்வ் செய்யாதப் பெட்டியில் பயணம் செய்வது கொடுமையான விஷயமாக எனக்குத் தோன்றியது.

எதையாவது சொல்லட்டுமா……….55

கடந்த ஒரு மாதமாக நாங்கள் சனி, ஞாயிறு தினங்களில் மட்டும் சுற்றிக்கொண்டிருப்போம்.  நயக்கரா பயணத்தின்போதுதான் அரவிந்த் 4 நாட்கள் எங்களை அழைத்துச் சென்றான்.  ப்ளோரிடா வந்திறங்கியபோது களைப்பு அசாதாரணமாகவே இருந்தது.  மலைப்பாகவும் இருந்தது.  நடக்கும்போது நான் பின் தங்கி நடப்பேன்.  அரவிந்தனுக்கு அதுவே படபடப்பாக இருக்கும்.  ”அப்பா, இவ்வளவு மெதுவாக நடப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை,” என்பான் என் மனைவியிடம்.  திருமணமானபோதில் நான் மனைவியை விட வேகமாக நடப்பேன்.  கிண்டல் செய்வேன்.  ஆனால் இப்போதோ வேறு மாதிரி ஆகிவிட்டது.  பெரும்பாலும் இங்கே கார் எடுத்துக்கொண்டுதான் எல்லா இடங்களுக்கும் செல்ல வேண்டும்.  ஒரு பால், ஒரு தயிர் வாஙகக் கூட கார்தான்.  அமெரிக்காவில் சினிமா தியேட்டர்கள் எப்படி இருக்கிறது என்பதை அறிய ஆசை.  2 சினிமாக்களைப் பார்த்தேன். இரவு 10 மணிக்குமேல்தான் சினிமாவே போக முடிந்தது. சினிமார்க் என்ற இடம்.  அந்த ஒரு இடத்திலேயே 24 தியேட்டர்களில் சினிமாக்கள் ஓடிக் கொண்டிருந்தன.
ஒரு டிக்கட்டை வாங்கிக்கொண்டு எந்த சினிமாவையும் பார்க்கலாம்.  புதிதாக வந்த ஒரு ஆங்கிலப் படத்தைப் பார்த்தேன். நம்ம ஊர் விட்டலாச்சாரியரே தேவலை என்று தோன்றியது.  அதிக செலவு இல்லாமல் மாயஜால வித்தை காட்டுபவர்.  தியேட்டரில் விளம்பரங்கள் ஓடிக் கொண்டிருந்தன.  ஆனால் தியேட்டரில் யாருமில்லை.  நாங்கள்தான் உள்ளே நுழைந்தோம்.  பின் மெதுவாக பத்து பேர்கள் வரை வந்தார்கள். 
இங்கு வங்கிகள் எப்படி செயல்படுகின்றன என்பதைப் பார்க்க Bank of America வின் கிளைக்குச் சென்றேன்.  கூட்டமே இல்லை.  இதே சீர்காழியில் கூட்டம் அப்பிக்கும்.  பணிபுரியும் ஒருவர் வரும் வாடிக்கையாளர்களை இன்முகத்துடன் வரவேற்கிறார்.  பின் அவர் தேவையைப் புரிந்துகொண்டு உடனடியாக செய்து முடிக்கிறார்.  மொத்தமே வங்கியில் 4 அல்லது 5 பேர்கள்தான் இருக்கிறார்கள். குச்சி முட்டாயை பல இடங்களில் வைத்திருக்கிறார்கள்.  வாடிக்கையாளர் விருப்பப்பட்டால் எடுத்துச் சாப்பிடலாம்.  சேஸ் வங்கிக்கிளையில் ஒரு மூலையில் காப்பி எடுத்துச் சாப்பிட கருவியெல்லாம் வைத்திருப்பார்கள். 
பொதுவாக இங்கே யாரையும் இன்முகத்துடன் வரவேற்பார்கள்.  புதியவர்களைப் பார்த்தால் குட் மார்னிங் என்று சொல்ல தவற மாட்டார்கள்.  அதேபோல் கார்கள்.  வேகமாக வரும் கார்கள் பாதசாரிகளைப் பார்த்தவுடன் நின்று விடுவார்கள்.  பாதசாரிகள் கடந்து சென்றபின்தான் நகர்வார்கள்.  இங்கு டால்பின் ஷோ பிரபலமானது.  அங்கு கூட்டம் அதிகமாக இருக்கும்.  நியுயார்க்கில் வாடகைக் கார்கள் அதிகம்.  அதை ஓட்டிக்கொண்டு செல்பவர்கள் பெரும்பாலும் நம்ம நாட்டு பஞ்சாபிகாரர்கள்.  சீனர்கள் வாழுமிடம் என்று தனியாகவே ஒரு இடம் இருக்கிறது.
ப்ளோரிடாவில் ஒரு இடத்தில் சிவா விஷ்ணு கோவில் இருந்தது.  அதில் பெரும்பாலோர்கள் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள்தான் இருப்பார்கள். பரந்த பரப்பளவில் கட்டிய கோவில். பெரும்பாலும் தென்னிந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் வருவார்கள். 
அமெரிக்காவில் தபால் நிலையம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க ஆவல்.  ஒரு தனி கட்டிடத்தில் தபால் நிலையம் பிரமாதமாக இருந்தது.  தபால் நிலையத்திற்கு வந்துவிட்டால் போதும், தபாலை அனுப்ப எல்லா வசதிகளும் இருக்கின்றன.  முக்கியமாக அனுப்புவதற்கு தோதாக விதம் விதமான அஞ்சல் உறைகள். நாம் இந்தியாவிலிருந்தால் கடைக்கு ஓடுவோம் உறைகளை வாங்க.  அட்டைப் பெட்டியில் அனுப்புவதாக இருந்தாலும் அட்டைப் பெட்டி இருந்தது. 
நாங்கள் சென்னை கிளம்புவதற்குமுன் மியாமி கடற்கரைக்குச் சென்றோம்.  இங்கே மாலை வேளைகளில் மழைப் பெய்து கொண்டிருந்ததால், காலையில் சென்றோம்.  சூரிய உதயம் பார்க்க நினைத்தோம்.  மேகம் புண்ணியத்தைக் கட்டிக்கொண்டது.  அந்த கடற்கரை மண்ணை கொஞ்சம் கட்டி எடுத்துக்கொண்டு வந்தேன்.  எங்கள் அலுவலக நண்பர் சொன்னதால் எடுத்துக்கொண்டு வந்தேன்.  பின் பல இடங்களுக்குச் சென்ற நான் மண்ணை எடுத்துக்கொண்டு வராமல் போய்விட்டேன்.  மியாமியில் ஒரு தெருவின் பெயர் ஐ பி சிங்கர் பெயர் இருந்தது.  எனக்குப் பிடித்த எழுத்தாளர் இவர். ப்ளோரிடாவில் உள்ள மியாமியில்தான் அவர் வாழ்ந்திருக்கிறார் என்று நினைத்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. 
13ஆம்தேதி சென்னையை நோக்கி நாங்கள் பிரிட்டீஷ் ஏர்வேஸில் ஏறியபோது, பையனை விட்டு வர மனமே இல்லை.
நான் இதுவரை எழுதியதை பயணக் கட்டுரையாக எடுத்துக்கொள்ள வேண்டாமென்று தோன்றுகிறது.  அல்லது பயணக் கட்டுரை மாதிரி தோற்றம் தருகிற ஒன்றாக வேண்டுமானால் நினைத்துக்கொள்ளலாம்.  அமெரிக்கா போய்விட்டு வந்ததைப் பற்றி 2 விதமான கருத்துக்களை என்னால் கொண்டு வர முடியும்.  நான் விமானத்தில் ஏறி பயணம் செய்தபோது, அதன் தூரம் பெரிய பிரமிப்பையும், இவ்வளவு தூரம் கடந்து விட்டோ மா என்கிற பயமும் ஏற்பட்டது.  திரும்பவும் யோசிக்கும்போது, அப்படி போய் வருவது பெரிய விஷயமல்ல என்றும் தோன்றியது. 
நான் சென்னைக்கு வந்தபிறகும் அமெரிக்காவின் பிரமிப்பு சற்றும் குறையாமல்தான் இருக்கிறது.