சமீபத்தில் நான் இரண்டு விழாக்களுக்குச் செல்லும்படி நேரிட்டது. இரண்டுமே எனக்குத் தெரிந்து நெருங்கிய உறவினர் வீடுகளில் நடந்த விழா. விழா என்பதை விட விருந்து என்று சொல்லலாமா என்பது எனக்குத் தெரியவில்லை. இரண்டு குடும்பத்தினரும் பத்திரிகை அனுப்பி அழைத்திருந்தார்கள். முதல் அழைப்பு ஒரு கல்யாண அழைப்பிதழ். நங்கநல்லூரிலுள்ள ஒரு குளிரூட்டப்பட்ட பெரிய ஹாலில் நடைப்பெற்றது. கல்யாண சத்திரம் அமர்களமாக இருந்தது. நான் சீர்காழி ரிட்டர்ன் என்பதால், மாலை வேளையில் மட்டும் கலந்துகொண்டேன். அந்த இடமே அமர்களப்பட்டது. பெண் வீட்டார் அதிகமாக செலவு செய்து ஏற்பாடு செய்திருந்தார்கள். லைட் மியூசிக் வேறு. சத்தம் அலறியது. விதவிதமா உணவு வகைகள் மாடியில் பரமாறிக்கொண்டிருந்தார்கள். நினைத்தபோது காப்பிகளும், குளீர் பானங்கள் வினியோகப்பட்டிருந்தன. கூட்டத்தில் யாரையும் யாரும் பார்க்கக்கூட முடியாது போலிருந்தது. அப்போதுதான் அந்த உறவினர் சில தினங்களுக்குமுன் எனக்கு போன் செய்தது ஞாபகத்திற்கு வந்தது.
நான் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குமுன் என் பெண் திருமணத்தை நடத்தியிருந்தேன். அப்போது வந்திருந்த அதே சமையல்காரர்தான் உறவினர் கல்யாணத்திற்கும்.
உறவினர் கேட்டார் : ”உங்கள் பெண் திருமணத்தின்போது, சாப்பாட்டிற்கு எவ்வளவு ஆயிற்று?” என்று.
நான்,”ரூ11/2 லட்சம்,” என்றேன்.
அவர் சொன்னார் : ”இப்போது 5 லட்சம்,” என்று.
கேட்கும்போது திகைப்பாக இருந்தது. பின் கல்யாண சத்திரத்தின் வாடகை என்றெல்லாம் உறவினருக்கு ரூ.30 லட்சம் வரை செலவு இருந்திருக்கும்.
அன்று இரவு நான் ரயில் பிடித்து சீர்காழி வந்தபோது, என் வயிறு சரியாயில்லை. சரியாக சில நாட்கள் ஆயிற்று.
இன்னொரு உறவினர் விழாவிற்கு நான் போகாமல் இருக்க முடியவில்லை. மன்னார்குடியில் ஒரு சத்திரத்தில் இந்த விழா. வளைகாப்பு, சீம்மந்த விழா இது. ஒரு நாள் சத்திரத்தில் தங்க வேண்டுமென்றார்கள். எனக்கு அங்குதான் உதைத்தது. சத்திரத்தில் படுத்தால் தூக்கம் வராது. ‘எதாவது ஓட்டலில் அறை இருந்தால் தங்குகிறேன்,’ என்றேன். ஆனால் இறுதியில் என் முடிவை மாற்றிக்கொண்டது தப்பாகப் போய்விட்டது.
மாடியில் உள்ள அறை ஒன்றில் நான் தங்க ஏற்பாடு செய்தார்கள். அறை முழுவதும் தூசியாக இருந்தது. அறைக் கதவை உள்ளே சாத்திக்கொண்டு படுத்துக்கொள்ள முடியவில்லை. பின் அறையில் உள்ள பாத்ரூம் மோசத்திலும் மோசமாக இருந்தது. அங்கும் கதவு இல்லை. சத்திரம் முழுவதும் உள்ள எல்லா பாத்ரூம்களும் சரியில்லாமல் இருந்தது. சீமந்தம் என்பதால் கூட்டம் குறைவு. மேலும் மழை. சென்னையிலிருந்து வரவேண்டிய உறவினர்கள் வரவில்லை. பெண் வீட்டிலும் சரி, பிள்ளை வீட்டிலும் சரி கூட்டம் இல்லை.
அன்று இரவு நான் சரியாக தூங்கவில்லை என்பதோடல்லாமல், அடுத்தநாளிலும் என் உடலில் அதிர்வு ஏற்பட்டது. ஆனால் மன்னார்குடி பெரிய கோவிலில் உள்ள இராஜகோபால் சுவாமியை மிக நெருக்கமாக தரிசிக்க முடிந்தது.
இந்த இரண்டு விழாக்களிலிருந்து தெரிந்துகொள்வது என்னவென்றால், முதல் திருமண வைபவம் மிகக் குறைவாக செலவை பலவலாறு குறைக்க முயற்சிக்கலாம். இரண்டாவது சீமந்த விழாவை சத்திரத்தில் வைத்திருக்க வேண்டாம். வீட்டிலேயே மிகக் குறைவான செலவுடன் செய்து முடித்திருக்கலாம். பெண் வீட்டார், பிள்ளை வீட்டார் போதும். வீணான ஆடம்பரம் செலவை மட்டும் ஏற்படுத்தவில்லை கூடவே கலந்துகொள்பவர்களையும் தொந்தரவு செய்து விடுகிறது.