சி சு செல்லப்பா…..

சி சு செல்லப்பா…..                                         
நான் சந்தித்த இரு முக்கிய இலக்கிய ஆளுமைகளைப் பற்றி இங்கு குறிப்பிடலாமென்று நினைக்கிறேன்.  ஒருவர் க.நா.சு.  இன்னொருவர் சி சு செல்லப்பா.  இவர்கள் இருவரையும் நான் சந்திக்க முடியுமென்றோ உரையாடமுடியுமென்றோ நினைத்துக்கூடப் பார்க்க வில்லை.  இவர்கள் இருவரைத் தவிர இன்னொரு படைப்பாளியையும் நான் சந்தித்திருக்கிறேன். அவர் சிட்டி.  இவர்கள் மூவரும் மணிக்கொடி எழுத்தாளர்கள்.  
க.நா.சுவும், சி சு செல்லப்பாவும் இருதுருவங்கள்.  இருவரும் நேர் எதிரான இலக்கியக் கொள்கை உடையவர்கள்.  க.நா.சு ரசனை அடிப்படையில் தன் விமர்சனக் கொள்கையை வகுத்துக்கொண்டவர்.  சி சு செல்லப்பா புத்தக விமர்சனத்தைப் பகுத்துப் பார்க்கும் கொள்கையைக் கொண்டவர்.
ஏன் இவர்களைப் பற்றி சொல்கிறேனென்றால் இவர்கள் மூத்தத் தலைமுறை படைப்பாளிகள்.  க.நா.சுவை மயிலாப்பூரில் உள்ள ஒரு வீட்டில் சந்தித்தேன்.  அவரைச் சந்திக்க எழுத்தாளர்கள் பட்டாளமே சென்றது.   ஆனால் அந்தச் சந்திப்பு ஒரு இனிமையான அனுபவம்.
சி சு செல்லப்பா பங்களூரில் இருப்பதாக கேள்விப்பட்டேனே தவிர,  பங்களுரில் என் உறவினர் வீட்டிற்குச் சென்றாலும், அவரைச் சந்திக்க எந்த முயற்சியும் நான் செய்ததில்லை  சி. சு செல்லப்பாவை நான் முதன் முதலில் சந்தித்தது க.நா.சு இரங்கல் கூட்டத்தில்தான்.   அதேபோல் க.நா.சுவை முதன் முதலில் சந்தித்தது கூட மௌனியின் இரங்கல் கூட்டத்தில்தான்.  
இலக்கியம் குறித்து க.நா.சுவின் கண்ணோட்டம் வேறு, சி.சு செல்லப்பாவின் கண்ணோட்டம் வேறு.  இருவரும் நண்பர்களாக இருந்தாலும்.  
ஒருமுறை க.நா.சு சொன்னதாக சி சு செல்லப்பா ஒன்றை சொல்லியிருக்கிறார். “நாமதான் படைப்பிலக்கியத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.  அதேபோல் படைப்பிலக்கியவாதியான நாமே புத்தகவிமர்சனமும் செய்ய வேண்டும்.”
அதைக் கேட்டு ரசனை அடிப்படையில் க.நா.சு ஒரு புத்தகத்தைப் பற்றி விமர்சனம் செய்வார்.  இந்த விமர்சனத்தில் எந்தவித பின்புலமும் கிடையாது.  ஒரு புத்தகத்தைப் படித்தவுடன் என்ன தோன்றுகிறதோ அதைக் குறிப்பிட்டுவிடுவார்.  ஒருமுறை சா கந்தசாமியின் நாவல் ஒன்றைப் படித்துவிட்டு க.நா.சு குறிப்பிட்டது ஈழ்ர்ல்ர்ன்ற்ள் பற்றிய நாவல் என்று.  அவர் குறிப்பிட்டது அந்த நாவலைப் பற்றிய முக்கிய அம்சம்.
ஆனால் சி சு செல்லப்பா அப்படியெல்லாம் கிடையாது.  அவர் ஒரு படைப்பை நன்றாக ஆராய்ச்சி செய்து அதை தியரி மாதிரி மாற்றி விடுவார்.  இதற்காக அவர் மேல் நாட்டு அறிஞர்களின் புத்தகங்களை எல்லாம் படித்து இருக்கிறார். 
சி.சு செல்லப்பா அவருடைய ‘என் சிறுகதைப் பாணி’ என்ற புத்தகத்தில் இப்படி குறிப்பிடுகிறார்: 
“தரமான இலக்கிய படைப்புகளை சோதனை முயற்சிகளை இனம் காணத் தெரியாத, இயலாத ஒரு வாசகப் பரம்பரை இன்று பரவலாகிவிட்ட நிலையில், இலக்கியத்தை ரசித்து தராதரம் அறியாத தர விமர்சன அறிவு சேமிக்காத அரைகுறை இலக்கிய அபிப்பிராயக்காரர்கள் விருப்பு வெறுப்பு மட்டுமே கொண்டவர்கள் மலிந்து விட்ட நிலையில் படைப்பாளியே பேச வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது,’ என்கிறார்.  
இங்கு சி சு செல்லப்பாதான் க.நா.சுவை மறைமுகமாகச் சாடுகிறார்.  
நான் முதன்முதலாக சி சு செல்லப்பாவை க.நா,சு இரங்கல் கூட்டத்தில் சந்தித்தேன்.  அக்கூட்டம் திருவல்லிக்கேணி பெரியதெருவில்தான் நடந்ததாக ஞாபகம்.  அங்கு அப்போது இருந்த எழுத்தாளர் சங்கக் கூட்டம் என்று நினைக்கிறேன்.  சி சு செல்லப்பா கதர் வேஷ்டி கதர் சட்டை அணிந்திருந்தார்.  எளிமையான தோற்றத்தில் இருந்தார்.  ஒரு எழுத்தாளர் தோரணை எதுவுமில்லாமல் சாதாரணமாக இருந்தார்.
எழுத்தாளர்களிடையே மதிப்பை உருவாக்கியவர் ஜெயகாந்தன் என்று என் நண்பர்கள் பலர் குறிப்பிட்டிருக்கிறார்கள்.  அந்தக் காலத்தில் ஆனந்தவிகடன் அலுவலகத்திற்கு பல எழுத்தாளர்கள் வருவார்கள்.  அவர்களில் ஜெயகாந்தன் ஒருவர்தான் பான்ட் ஷர்ட் அணிந்துகொண்டு மிடுக்காக வருவார் என்று சொல்லி கேள்விபட்டிருக்கிறேன்.
சி சு செல்லப்பாவை அன்று பார்க்கும்போது அவர் சாதாரணமாகத்தான் தென்பட்டார்.  ஆனால் அவர் குரல் அழுத்தமாகவும் சத்தமாகவும் இருந்தது.  க.நா.சுவின் இரங்கல் கூட்டத்தில் அவர் க.நா.சு மீது உள்ள கோபத்தை வெளிப்படுத்துகிறாரோ என்றும் நான் நினைத்துக் கொண்டேன்.  
சி.சு செல்லப்பாவிற்கு விளக்கு விருது கிடைத்தது.  அதை வாங்கிக்கொள்ள மறுத்தார்.  வெளி ரங்கராஜன் முயற்சியால்தான் இது நடந்தது.  அவர் பரிசுத் தொகையை வாங்க மறுத்தாலும், அந்தத் தொகையில் ஒரு புத்தகம் வருவதை ஏற்றுக்கொண்டார்.  சி சு செல்லப்பா பரிசுக்கெல்லாம் ஏங்காதவர்.  பரிசு கொடுக்கும் நோக்கத்தை யும் அவர் சந்தேகப்படுவார்.  வேடிக்கையான மனிதர்.  
என் சிறுகதை பாணி என்ற சி சு செல்லப்பாவின் புத்தகம் ரங்கராஜன் மூலமாகத்தான் உருவானது.  அப் புத்தகம் ஒட்டி ஒரு கூட்டம் மயிலாப்பூரில் நடந்தது.  அக்கூட்டம் சிறு பத்திரிகைகள் எல்லாம் சேர்ந்து நடத்தும் கூட்டமாக மாற்றினார் சி சு செல்லப்பா.
60வாக்கில் எழுத்து என்ற சிற்றேட்டை சி சு செல்லப்பா கொண்டு வந்தார்.  எழுத்து என்ற பத்திரிகை கவிதைக்கும், விமர்சனத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து வெளிவந்த பத்திரிகை 
30க்களில் முயற்சி செய்த புதுக்கவிதை உருவம் 
எழுத்து பத்திரிகை மூலமாகத்தான் உறுதிப் பெற்றது. எழுத்து என்ற சிற்றேடு மட்டும் இல்லாமலிருந்தால், இப்போது வெளி வந்து கொண்டிருக்கும் கவிதையின் உருவம் எப்படி மாறிப் போயிருக்குமென்று தெரியாது.  அதனால் சி சு செல்லப்பாவின் எழுத்து பத்திரிகை முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றில் குறிப்பிடப்பட வேண்டிய இதழாக உள்ளது.  .இது சி சு செல்லப்பா அறியாமலேயே நடந்த ஒன்று என்றுதான் நினைக்கிறேன்.
சி சு செல்லப்பாதான் வெகு ஜன இதழ்களுக்கும் சிறு பத்தரிகைக்கும்  ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தி விட்டார்.  இப்போது அது உடைந்து போய்விட்டது.  
இன்றைய நிலையோ வேறு மாதிரி.  ஒரு வெகுஜனப் பத்திரிகையே சிறு பத்திரிகையை எடுத்து நடத்துகிறது.  மணிக்கொடி இதழ் சிறுகதைகளுக்காகவே ஒரு காலகட்டத்தில் வெளிவந்து கொண்டிருந்தது.  ஆனால் இன்று சிறுகதைகளே தேவை இல்லை.  பத்திரிகைகளின் தன்மைகளும் மாறி விட்டன. மருத்துவத்திற்காக ஒரு இதழ். வணிகத்திற்காக ஒரு இதழ் சினிமாவிற்ùக்னறு ஒரு இதழ் என்று பல பிரிவுகளில் பலதரப்பட்ட பத்திரிகைகள் வெளி வருகின்றன.  
இன்றைய காலக்கட்டத்தில் சி சு செல்லப்பாவால் எங்கே பொருந்தி நிற்க முடியும்.  எழுத்து மாதிரி ஒரு பத்திரிகையை எடுத்து நடத்த முடியுமா வெற்றிகரமாக? சந்தேகம்தான்.  வாசகர்களைத் தேடி நாம்தான் ஓடிப்போகவேண்டும்.   
தனது கடைசிக் காலத்தில் சி.சு செல்லப்பா பிள்ளையார் கோயில் தெருவில் திருவல்லிக்கேணியில் தனியாக மனைவியுடன் குடி வந்ததற்குக் காரணம் இல்லாமல்  இல்லை.  80து வயதைத் தாண்டியும் அவருடைய எழுதுகிற தாகம், எழுதியதைப் புத்தகமாகக் கொண்டு வரும் தாகம் எல்லாம் அடங்கவே  இல்லை.  அவருடைய புதல்வருடன் பங்களூரில் இருந்தால், இதெல்லாம் சாத்தியமில்லை என்றுதான் அவர் தனியாக வந்துவிட்டார்.  
ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு இலக்கியச் சந்திப்புக் கூட்டத்தில், பல பதிப்பாளர்களிடம் 1000 பக்கங்களுக்கு மேல் எழுதிய =சுதந்திர தாகம்+ என்ற நாவலைப் புத்தகமாகக் கொண்டு வர முடியுமா என்று கேட்டுக்கொண்டிருந்தார்.  யாரும் அப்புத்தகத்தைக் கொண்டு வர துணியவில்லை.  
அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்த சி சு செல்லப்பாவிற்கு பெரிய ஏமாற்றம்.  அப்புத்தகம் 1000 பக்கங்களுக்கு மேல் என்பதோடல்லாமல், அப்புத்தகம் விற்பனை ஆகுமா என்றெல்லாம் பதிப்பாளர்கள் யோசித்துக் கொண்டிருப்பார்கள்.  
சி சு செல்லப்பா எழுத்து பிரசுரமாக தானாகவே அப் புத்தகத்தைக் கொண்டு வரலாமென்று முடிவெடுத்தார்.  84 வயதில் சி சு செல்லப்பாவின் துணிச்சலான முடிவு இது.  இந்தக் கட்டத்தில் நானும் சி சு செல்லப்பாவிற்கு புத்தகம் கொண்டு வர உதவி செய்தேன்.  மணி ஆப்செட்காரர் சி சு செல்லப்பா வீட்டிற்கே வந்திருந்து உதவி செய்தார்.  தைரியமாக 1000 பிரதிகள் அச்சடித்து பாகம் 1, பாகம் 2, பாகம் 3 என கொண்டு வந்தார்.  அவருடைய உறவினர்கள், நண்பர்கள் அவருக்கு புத்தகம் கொண்டு வர உதவினார்கள்.  
அவர் மீது உள்ள மரியாதைக் காரணமாக பல பத்திரிகைகள் அப் புத்தகத்தைப் பாராட்டி விமர்சனம் செய்தன.  இந்தியா டுடே என்ற பத்திரிகை அப்புத்தகத்திலிருந்து ஒரு பகுதியை எடுத்துப் பிரசுரம் செய்தது. 
புத்தகம் கேட்டு கடிதம் எழுதுபவர்களிடம் தானாகவே கவரில் புத்தகக் கட்டை வைத்து தபாலில் அனுப்பி விடுவார்.  வீடு முழுவதும் பரண் மீது அப்புத்தகக் கட்டு நிரம்பி வழிந்தது.  அவர் வீட்டில் அப் புத்தகக் கட்டைப் பார்க்கும் கதி கலங்கும்.  
ஒரு இலக்கிய விமர்சகர் என்னிடம் =பாருங்கள் இன்னும் கொஞ்ச நாட்களில் அப்புத்தகம் திருவல்லிக்கேணி பிளாட்பாரத்தில் வந்து விடப் போகிறது,+ என்று குறிப்பிட்டது ஞாபகத்திற்கு வந்தது.  ஆனால் அது பொய்த்து விட்டது.  3 பாகங்கள் கொண்ட அப்புத்தகம் விலை ரூ.450.  அதை ரூ.100 கிடைக்கும்படி செய்தேன்.  எல்லாம் சி சு செல்லப்பாவின் மறைவுக்குப்பின். இன்று அப் புத்தகப் பிரதி இல்லை.   க.நா.சுப்பிரமணியம் கூட அவர் காலத்தில் ஒரு நாவலை அடித்துவிட்டு பரணில் வைத்திருந்தார்.  அந் நாவல் விற்கவில்லை என்றவுடன், அவர் மாமனாரிடம் சொல்லி அப் புத்தகத்தை அப்படியே பேப்பர் கடையில் போடச் சொல்லிவிட்டாராம்.
சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் நான் சி சு செல்லப்பாவைப் போய்ப் பார்க்காமல் இருக்க மாட்டேன்.  என் அலுவலகம் கடற்கரை சாலையில் இருந்ததால் அவரைப் போய்ப் பார்ப்பது சுலபமாகவும் இருந்தது.  
அவரை அழைத்துக் கொண்டு போய் நூல் நிலையத்தில் புத்தகம் வாங்குவதற்கான படிவத்தைக் கொடுத்து பதிவு செய்தோம்.  ஆனால் அதற்கு நூல் வாங்குவதற்கான உத்தரவு கிடைக்கவில்லை.  சி சு செல்லப்பாவிற்கு பெரிய ஏமாற்றம்.  வருத்தம்.  இருந்தாலும் அவருக்குப் புத்தகம் போடும் ஆர்வம் சற்றும் குறையவில்லை. ஒவ்வொரு முறை அவர் வீட்டுக்குச் செல்லும்போது, =எழுத்தைப் பற்றி விமர்சனம் செய்த வெங்கட் சாமிநாதனுக்கு, பிரமிளுக்கும் நான் பதில் எழுதியிருக்கிறேன் என்று அவர் எழுதிய பக்கங்களையெல்லாம் காட்டுவார்.  இன்னொன்றும் சொல்வார்.  இதெல்லாம் புத்தகமாகக் கொண்டு வர வேண்டுமென்று.  எனக்கு கேட்கவே பக்கென்று இருக்கும்.
அவரும் அவர் மனைவியும் அந்தத் தள்ளாத வயதில் தனியாக இருந்ததை நினைத்துக்கூட என்னால் பார்க்க முடியவில்லை.  சி சு செல்லப்பாவிற்கு பேன் போடக்கூடாது.  ஆனால் அவர் மனைவிக்கு பேன் வேண்டும்.  
சி சு செல்லப்பா அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருப்பார்.  
ஒருமுறை இலக்கியக் கூட்டத்திற்கு அவரைப் பேச அழைத்தார்கள்.  ஏற்பாடு செய்தவர்கள் சில இலக்கிய அபிமானிகள்.  அவரை திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள்தான் ஆட்டோவில் அழைத்துக் கொண்டு வந்தார்.  நானும் டூ வீலரில் பின்னால் வந்து கொண்டிருந்தேன்.  
கூட்டம் நடக்குமிடத்திற்கு யாரும் வரவில்லை. 
சி சு செல்லப்பா, கூட்டம் ஏற்பாடு செய்த இருவர், திருப்பூர் கிருஷ்ணன், நான் பின் வண்டி ஓட்டுநர் என்று ஐந்து பேர்கள்தான் இருந்தோம்.  கூட்டத்திற்கு வந்திருந்த சி சு செல்லப்பாவிற்கு என்னவோ போல் ஆகிவிட்டது.  எதிரில் அமர்ந்திருந்த என்னைத் திட்ட ஆரம்பித்து விட்டார்.  நான் விருட்சம் என்ற பெயரில் பத்திரிகை நடத்தி வருகிறேன்.  அந்த விருட்சம் பட்டுப்போய் நாசமாய்ப் போகட்டும் என்று திட்ட ஆரம்பித்து விட்டார்.  கேட்பதற்கு எனக்க என்னவோபோல் ஆகிவிட்டது.  அடுத்தநாள் எனக்கு அவரிடமிருந்து போன்.  ‘நான் ஏதோ வேகத்தில் சொல்லிவிட்டேன்.  தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்,’ என்று.  இதுதான் செல்லப்பா.
லண்டனிலிருந்து வந்துகொண்டிருந்த ஒரு பத்திரிகையை விமர்சனத்திற்கு மாதிரியாக எடுத்துக்கொண்டுதான் அவர் எழுத்து பத்திரிகையைக் கொண்டு வந்ததாக சி சு செல்லப்பா குறிப்பிட்டுருக்கிறார்.
மௌனி, க.நா.சு படைப்புகள் எல்லாம் சி சு செல்லப்பாவிற்குப் பிடிக்காது.  மௌனி கதைகள் குறித்து விமர்சனம் எழுதியிருக்கிறார்.  மௌனி கதைப்புத்தகத்தில் ஒரே ஒரு கதைதான் நன்றாக இருக்குமென்று கூறுவார்.  பி எஸ் ராமையா அவருடைய குரு.  எந்தப் பத்திரிகையில் எந்தக் கதை வந்திருக்கிறது என்று குறிப்புகள் எழுதி ராமையாவைப் பற்றி ஒரு புத்தகம் கொண்டு வந்து விட்டார்.  சுதந்திர தாகம் என்ற புத்தகத்திற்குப் பிறகு.  அப் புத்தகம் பேர்.  ராமையாவின் சிறுகதைப் பாணி.  ராமையாவின் கதைகளே இல்லாதபோது ராமையாவின் சிறுகதைப் பாணி என்ற விமர்சனம் புத்தகம் யார் படிப்பார்கள்.  
எழுத்து பத்திரிகையில் முக்கியமான விமர்சகர் பிரமிள்.  அவர் படுத்தப் படுக்கையாக மருத்துவமனையில் கிடந்தபோது விளக்கு பரிசைக் கொடுக்க மருத்துவமனைக்கு சி சு செல்லப்பா வந்திருக்கிறார்.  அந்தக் காலத்தில் எழுத்துவில் புதிய படைப்பாளிகள் பலரை அறிமுகப் படுத்தியிருக்கிறார்.  ஆனால் ஏன் ஞானக்கூத்தன் கவிதைகளை எழுத்தில் பிரசுரம் செய்யவில்லை என்ற கேள்வி எனக்கு எப்போதும் இருந்துகொண்டிருக்கும்.  கனகசபாபதி, ந. முத்துசாமி, சச்சிதானந்தம், எஸ் வைதீஸ்வரன் போன்ற பல படைப்பாளிகள் எழுத்து மூலமாகத்தான் உருவானவர்கள்.  
சி சு செல்லப்பாவை ஒவ்வொரு முறை பார்க்கும்போது எதாவது சுவாரசியமாகப் பேசுவார்.  ஒரு முறை க.நா.சுவைப் பற்றி ஒன்றை குறிப்பிட்டார்.  சி சு செல்லப்பாவின் சிபாரிசில் க.நா.சு தங்குவதற்கு ஒரு இடம் வாடகைக்குப் பிடித்துக் கொடுத்தாராம்.  அந்த வீட்டின் சொந்தக்காரர்  சி சு செல்லப்பாவிற்காக அந்த இடத்தைக் கொடுத்தார்.  ஒரு முறை வீடை வந்து பார்க்கும்போது, வீடு திறந்து இருந்ததாம்.  வீட்டில் ஒன்றுமில்லையாம்.  வீட்டில் குடியிருந்த க.நா.சு வும் அவர் குடும்பத்தையும் காணவில்லையாம்.  சில மாதங்களாக வாடகைக் கொடுக்காமல் க.நா.சு வீடை காலி செய்துகொண்டு சொல்லாமல் போய்விட்டாராம்.  இதை சி சு செல்லப்பா க.நா.சுவை திட்டியபடி கோபமாக சொல்வார். இதைக் கேட்டு எனக்கு க.நா.சு மீதுதான் இரக்க உணர்ச்சி ஏற்படும்.  எந்த நிலையில் ஒருவர் அப்படி ஒரு முடிவை எடுத்துப் போயிருக்க முடியும் என்று.  
சி சு செல்லப்பா மரணம் அடையும் தருவாயில்தான் கேரளாவில் தகழி சிவசங்கரம் பிள்ளை என்ற படைப்பாளியும் மரணம் அடையும் நிலையில் இருந்தார்.  ஆனால் அங்குள்ள மக்கள் அவருக்கு மரியாதை செய்யும் பொருட்டு தகழியைப் போய்ப் பார்த்துவிட்டுப் போவார்களாம்.  ஏன் கேரளாவின் முதலமைச்சரே அவரைப் போய்ப் பார்த்து நலம் விஜாரிப்பாராம்.
  
தகழி என்ற படைப்பாளிக்கு சமமான சி சு செல்லப்பாவிற்கு எதுவும் நடக்க வில்லை.  சி சு செல்லப்பா தகழி என்ற படைப்பாளியைவிட மேலானவர். பல படைப்பாளிகளை எழுத்து மூலம் உருவாக்கியவர்.  கவிதைக்கும், விமர்சனத்திற்கும் தமிழில் புதிய பாதையை வகுத்தவர்.   தன்னுடைய வாழ்நாள் முழுவதும் எழுத்திற்காக அர்பணித்தவர்.  அதோடு மட்டுமல்லாமல் அவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். சிறைக்கெல்லாம் சென்றிருக்கிறார்.    அவருக்கு உரிய மரியாதையைக் நாம் கொடுக்க தவறி விட்டோம் இந்த இடத்தில் குறிப்பிட விரும்புகிறேன். 
(19.01.2013 அன்று சாகித்திய அக்காதெமி ஏற்பாடு செய்த சி சு செல்லப்பாவின் 100வது ஆண்டு குறித்து எழுதி வாசித்தக் கட்டுரை)

  

எதையாவது சொல்லட்டுமா…80

எதையாவது சொல்லட்டுமா…80

அழகியசிங்கர்

 சி சு செல்லப்பாவை முதன் முதலாக நான் கநா.சு இரங்கல் கூட்டத்தில்தான் சந்தித்தேன்.  அக் கூட்டம் கணையாழி என்ற பத்திரிகை நடத்தியது என்பது ஞாபகம்.அவர் கொஞ்சம் சத்தமாகவும், கோபமாகவும் பேசியதாக என் நினைபபு.  யாருக்குமே ஒரு புத்தகம் படிக்கிறோமென்றால் அப் புத்தகம் எழுதிய எழுத்தாளரையும் பார்க்க வேண்டுமென்ற எண்ணம்  ஏற்படுவது வழக்கம்.  அப்படிப் பார்க்கும்போது பெரிய ஏமாற்றமே மிஞ்சும்.  புத்தகத்தில் படித்த மாதிரி அந்த எழுத்தாளர்  தெரிய மாட்டார். 
 அதேபோல் க.நா.சுவையும் மௌனி இரங்கல் கூட்டத்தில் பார்த்திருக்கிறேன்  மௌனியை சிதம்பரம் சென்று பார்த்துவிட்டு வந்ததை என் எழுத்தாள நண்பர்கள் சொல்லி கேட்டிருக்கிறேன்.  குறிப்பாக பிரமிள் மௌனி வீட்டிற்கு சென்று பார்த்ததை புள்ளி விபரமாக  கூறுவார்.  என்னமோ நேற்றுதான் அவரைப் போய்ப் பார்த்ததுபோல் இருக்கும் அவர் பேச்சு.
 நானும் பல எழுத்தாளர்களைச் சந்தித்திருக்கிறேன்.  ஆனால் எனக்கு எந்தவித பிரமையும் இப்போது ஏற்படுவதில்லை  அப்போதெல்லாம் எனக்குப் பிரமை இருந்தது.  பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் போது என் உறவினர் கல்கண்டு என்ற பத்திரிகையைப் படிக்கச் சொல்வார்.  அந்தப் பத்திரிகையில்தான் எந்த ஆபாசமும் இருக்காது என்றும் குறிப்பிடுவார்.   அந்தப் பத்திரிகையைப் படிக்கும்போதுதான் எனக்கு தமிழ்வாணனைச் சந்திக்க வேண்டுமென்று தோன்றியது.  நான் இருக்குமிடத்தில் ஒரு கூட்டத்தில் பேச வருகிறார் என்று விளம்பரம் செய்திருந்தார்கள்.  நான் முதன் முதலாக மேடையில் ஒரு எழுத்தாளரைச் சந்திக்கும் நிகழ்ச்சி அது.  
 அன்று கூட்டம் அதிகம்.  கருப்பு கண்ணாடி அணிந்து தமிழ்வாணன் இருந்தார்.  கூட்டம் முடிந்து அவர் நடந்து வரும்போது, பலர் அவரிடம் கையெழுத்துப் போடும்படி கேட்டுக்கொண்டு நோட்டுப் புத்தகம் எல்லாம் நீட்டினார்கள்  நானும் ஒரு தாளில் அவருடைய கையெழுத்தை வாங்கி வைத்துக்கொண்டேன்.  
 எழுத்தாளர்களை மட்டுமில்லை சினிமா நடிகர்களை, நடிகைகளைப் பார்க்க வேண்டுமென்று பலருக்குத் தோன்றும்.  அதேபோல் கிரிக்கெட் வீரர்களைப் பார்க்க ஒரு கூட்டம் நிற்கும்.    பிரபலமானவர்களைப் பார்க்க வேண்டுமென்ற எண்ணம் பொதுவாக ஏற்படுவது வழக்கம்.இதுமாதிரியான பிரமைகள் ஒரு கட்டத்தில் நம்மை விட்டுப் போய்விடும்.  
 நான் உஸ்மான் சாலையில் உள்ள வங்கிக் கிளையில் பணிபுரிந்து கொணடிருந்தபோது, வங்கித் தலைவரிடமிருந்து  கிளை மேலாளருக்கு போன்.   உடனே எங்கள் கிளைக்குப் பக்கத்தில் உள்ள பிரபலமான நடிகர்  என்.டி ராமராவ்  வீட்டிற்குப் போகும்படி உத்தரவு. அப்போது என்.டி.ஆர் கட்சி என்று எதுவும் ஆரம்பிக்கவில்லை.  அவர் புதியதாக கணக்கு ஆரம்பித்தார். 
 கிளை மேலாளர் என்னை அழைத்துக்கொண்டு போனார்.  என்டிஆர் வீட்டிலுள்ளவர்கள் எங்களை வரவேற்று குளிர்பானம் கொடுத்தார்கள்.    அவரைப் பார்க்க கூட்டம் கூட்டமாக ஆந்திராவிலிருந்து ரசிகர்கள் வந்து கொண்டிருந்தார்கள். என்டிஆர் பால்கனியிலிருந்து ரசிகர்களைப் பார்த்து கையசைத்தார்.  ரசிகர்கள் உற்சாகமாகக் குரல் கொடுத்தார்கள்.  இந்தக் காட்சியை என்னால் மறக்க முடியாது.  ஆனால் பிரபலமானவர்களுக்கும் ஆபத்து இருக்கிறது.  அவர்கள் சாதாரணமானவர்கள் மாதிரி அவர்கள் வசிக்கும் இடத்தில் நடந்து போக முடியாது.  ரஜனிகாந்த் என்னுடன் 12 ஜி பிடித்து திருவல்லிக்கேணி வர முடியாது.  அந்த சுதந்திரம் என்னைப் போன்ற சாதாரணமானவர்களுக்கு இருக்கிறது.
கல்லூரி நாட்களில் என் கவனத்திற்கு வந்த எழுத்தாளர்கள் ஜெயகாந்தனும் நா. பாரத்தசாரதியும்.  ஒருமுறை ஜெயகாந்தன் கூட்டமொன்று ஆலந்தூர் பள்ளிக்கூடம் ஒன்றில் நடந்தது.  வந்திருந்த ஜெயகாந்தன் தலையில் பாரதியார் மாதிரி முண்டாசு கட்டியிருந்தார்.  பின் உரத்த குரலில் கூட்டம் நடத்துபவர்களையே ஒரு சாடு சாடினார்.  அவர் உரத்த குரலில் பேசுவது எனக்கு ஒருவிதமாகப் பட்டது.  நானும் அதுமாதிரி பேசிப் பார்க்கலாமென்று நினைத்தேன்.  முயற்சி செய்து பார்த்தேன்.  என்னால் அது முடியாது என்று தோன்றியது. 
   
 இந்தச் சமயத்தில் நகுலன் என்ற எழுத்தாளர் ஞாபகம் வருகிறது.  அவரால் ஒரு கூட்டத்தில் அமர்ந்துகொண்டு உரக்கப் பேச முடியாது. யாரைப்பார்க்கிறாரோ அந்த ஒருவருடன்தான் அவர் பேச முடியும்.  அவர் பேசுவது அந்த ஒருவருக்குத்தான் கேட்கும்.  
 நா பார்த்தசாரதியை நான் இரண்டு சந்தர்ப்பத்தில் பார்த்தேன்.  முதல் சந்தர்ப்பத்தில் அவர் அகில பாரதிய வித்தியார்த்தி அமைப்பு ஏற்பாடு செய்த கூட்டத்தில தந்தை பெரியாருக்கு எதிராக ஒரு கூட்டத்தில் தலைமை தாங்க வந்தார்.  கம்பீரமான தோற்றம் கொண்டவர்.  அவரைப பார்த்தால் சினிமாவில் ஹீரோவாக நடித்திருக்கலாமென்று தோன்றும். பெரியார் கலந்துகொண்ட கடைசிக் கூட்டம் அது. பெரியார் இந்து கடவுள்களை அவமானப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்றை பெரியார் திடலில் ஏற்பாடு செய்திருந்தார்.  பெரியார் திடலிலிருந்து பெரியாரின் தொண்டர்களும், கோஷமிட்டார்கள்.  அவருக்கு எதிராக நாங்களும் நா பாவின் தலைமையில சத்தம் போட்டோம்  
 இரண்டாவது சந்தர்ப்பம் நா.பா மரணம் அடைந்தபோது.  என் உறவினர் நா.பா வின் விசிறி.  அவருடைய ஒரு கதையைக் கூட நா.பா மாதிரி என் உறவினர் எழுதியிருப்பார் என்பது என் எண்ணம்.  அவர் வற்புறுத்தலின்பேரில் நா.பா வீட்டிற்குச் சென்றோம்.  ஒரு அறையில் நா.பாவை படுக்க வைத்திருந்தார்கள்.  அந்த அறையில்  அடர்த்தியான கூந்தலுடன், நல்ல உயரமான சற்று பருமனான நா.பாவின் மரணமடைந்தத் தோற்றததைப்  பார்க்க நடுக்கமாகத்தான் இருந்தது. மாலை நேரத்தில் நாங்கள் பார்த்த சமயத்தில் யாரும் கூட அங்கு இல்லை.
 என் பிரமையை ஒழித்துக் கட்டியவர்கள் என் வேறு சில எழுத்தாள நண்பர்கள்.  பலவிதங்களில் சாதனை புரிந்தவர்கள்.  ஆனால் அவர்கள் என்னைப்போல் சாதாரணமானவர்கள்.  எந்தவித பந்தா இல்லாமல் அவர்களை எளிதில் சந்தித்து உரையாட முடிந்தது.  
 க.நா.சுவை ஒரு சிறிய வாடகை வீட்டில் மயிலாப்பூரில் சந்தித்திருக்கிறேன்.  அப்படி சந்திக்கும்போது நம் வீட்டிலுள்ள பெரியவர் ஒருவரைச் சந்திப்பதுபோல் சந்தித்து உரையாடியிருககிறேன்.  பந்தா எதுவுமில்லாத எளிமையான மனிதர்.  ஒருமுறை நான், அவர், இன்னும் சில இலக்கிய நண்பர்களெல்லோரும் சேர்நது மயிலாப்பூரில் உள்ள ராயர் ஓட்டலில் டிபன் சாப்பிடச் சென்றிருக்கிறோம்.
 எழுத்து பத்திரிகையை வெற்றிகரமாக நடத்திய சி.சு செல்லப்பாவை திருவல்லிக்கேணி பிள்ளையார் கோயில் தெருவில் அடிக்கடி சந்தித்துப் பேசுவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை.  இலக்கியச் சந்திப்பு வருடாந்திர கூட்டமொன்றில் சி சு செல்லப்பா ஒவ்வொரு பதிப்பாளரையும பார்த்து, அவர் சுதந்திர தாகம் என்ற நாவலைப பிரசுரிக்க மன்றாடியதை நான் அறிவேன்.  அதன்பின் நண்பர்கள், உறவினர்கள் உதவியுடன் சுதந்திரதாகம் மூன்று பாகங்களையும் சி சு செல்லப்பா கொண்டு வந்தார். அதைக் கொண்டுவர நானும் அவருக்கு பக்கப்பலமாக இருந்து உதவி செய்திருக்கிறேன்.  
 நூறாவது ஆண்டை கடந்த க.நா.சு, சி சு செல்லப்பாவை நாம் மறக்க முடியாது.  அவர்கள் பிரமையை ஏற்படுத்தாதவர்கள்.  
(Appeared in Amrudha January 2013 issue)

எதையாவது சொல்லட்டுமா….74

 கடந்த சில தினங்களாக அலுவலகம் போகாமல் வீட்டில் இருக்கிறேன்.  பையன் திருமணத்தை ஒட்டி.  வீட்டில் நானும், அப்பாவும்தான்.  காலையில் நடக்கப் போவேன்.  சரவணபவன் ஓட்டல் எதிரில் உள்ள ஒரு பெண்கள் பள்ளியைச் சுற்றி சுற்றி வருவேன்.  நான்கு தடவைகள்  சுற்றினால் அரைமணிநேரம் ஓடிவிடும்.  பின் சரவணபவன் ஓட்டலில் 2 இட்லி ஒரு மினி காப்பி அல்லது பொங்கல் அல்லது வடை மினி காப்பி நிச்சயம் சாப்பிட்டு வீட்டிற்கு வந்து மெதுவாகக் குளித்து மெதுவாக மதியம் சாப்பிடுவேன்.  ஒருமுறை காலை 11 மணிக்கு வெயிலில் வெளியே சுற்றினேன்.  கடுமையை உணர்ந்தேன்.

 1984ஆம் ஆண்டு வாக்கில் நான் சம்பத்தைச் சந்தித்திருக்கிறேன். 2 முறைகள் சந்தித்திருப்பேன்.  ஒருமுறை ஞாநி நடத்திய கூட்டம் ஒன்றில்.  பாதல்சர்க்கார் பற்றிய கூட்டம் அது என்று நினைக்கிறேன்.  அப்போது சம்பத் என்பவர் சத்தமாக விவாதம் செய்ததாக நினைப்பு.  எதைப் பற்றி பேசினார்கள், என்ன பேசினார்கள் என்பதைப் பற்றி ஞாபகம் இல்லை.  அடுத்த முறை சம்பத்தை ஜே கிருஷ்ணமூர்த்தி கூட்டத்தின்போது, கூட்டம் முடிந்து நடந்து போய்க்கொண்டிருக்கும்போது, பேசிக்கொண்டு வந்தேன்.  ஆனந்தவிகடன் நடத்த உள்ள நாவல் போட்டியில் நாவல் எழுதப் போவதாக சம்பத் குறிப்பிட்டார்.  பின் சம்பத்தைப் பார்க்கவில்லை.  சம்பத்தைப் பற்றி அவர் நண்பர்கள் பேச பேச ஆச்சரியமாக இருக்கும். 

 ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாய் சம்பத்தைப் பற்றி கதை சொல்லியிருக்கிறார்கள்.  நானும் சம்பத் எழுதியவற்றை தேடிக் கண்டுபிடித்துப் படித்திருக்கிறேன்.  ழ வில் அவர் கவிதை ஒன்று ஏழு வைடூரியங்களைச் சேர்த்து கோர்த்ததுபோல் மூளையில் இருக்குமென்று எழுதியிருப்பார்.  தொடர்ந்து அவர் குறுநாவல்களில் மண்டைக்குள் முணுக்கென்று வலிப்பதுபோல் எழுதியிருப்பார்.  பிறகு மரணத்தைப் பற்றியே எழுதியிருப்பார்.  அவர் எழுத்தில் பிரிவு பெரும் துயரமாக இருக்கும்.  ஒரு கதை தி ஜானகிராமனின் அம்மா வந்தாள் கதையை ஞாபகப்படுத்தும். 

 சம்பத் எப்படி எழுதினாரோ அப்படியே வாழ்ந்தார்.  அவருடைய முதல் நாவல் இடைவெளி வரும்போது அவர் இல்லை.  திரும்பவும் அந்த நாவல் முழுவதும் மரணத்தைப் பற்றி அவர் தேடியிருக்கிறார்.  மரணத்தைப் பற்றி எழுதி எழுதி மரணத்தையே தழுவிவிட்டார்.  சம்பத் மரணம் நடந்தபோது, ஆத்மாநாம் தற்கொலை செய்து கொண்ட நிகழ்ச்சி பரபரப்பாகப் பேசப்பட்டது.  அதனால் சம்பத் மரணத்தைப் பற்றி பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.  ஆனால் அசோகமித்திரன் சம்பத் மரணத்தைப் பற்றி குமுதத்திலோ கணையாழியிலோ குறிப்பிட்டிருக்கிறார்.

கணையாழியில் எழுதும்போது, சுஜாதாவைப்போல் திறமையானவர் சம்பத் என்று குறிப்பிட்டு எழுதியிருக்கிறார்கள்.  ஆனால் சுஜாதாபோல் திறமையானவர் இல்லை சம்பத்.  பிஎ இக்னாமிக்ஸ் படித்துவிட்டு, கிடைத்த நல்ல வேலையை உதறித் தள்ளியவர்.  அவர்குடும்பத்தாருக்கு அவரைப் பிடிக்காமல் போனதற்கு குடும்பத்தாரைப் பற்றியே அவர் எழுத ஆரம்பித்துவிட்டார்.  சம்பத் அவர் குடும்பத்தாருக்கு வேண்டாதவராகிவிட்டார்.  அவர் எழுத்தையும் அவரையும் அவர் குடும்பத்தார் மதிக்கவில்லை.  இன்னும்கூட அவர் கதைகளைப் புத்தகமாகக் கொண்டுவர அவர் குடும்பத்தினர் விரும்பவில்லை.  சம்பத் பற்றி பேசக்கூட அவர் தயாராக இல்லை.

 ஐராவதம் பணிபுரிந்த ரிசர்வ் வங்கிக்குச் சென்று மணிக்கணக்கில் சம்பத் பேசிக்கொண்டிருப்பார்.  ஐராவதத்தைச் சுற்றி இருந்தவர்களுக்கு தர்ம சங்கடம் ஆகவிடும். 

 இந்திராபார்த்தசாரதியுடன் ஒருமுறை பேசிக்கொண்டிருக்கும் போது, அவர் சொன்ன ஒரு விஷயம் என் ஞாபகத்திற்கு வருகிறது.  சம்பத் ஒரு நாவலை எழுதிக்கொண்டு, படிக்கும்படி இ.பாவைத் தொந்தரவு செய்தாராம்.  இ.பாவும் படித்துவிட்டு, எழுதியது சரியில்லை என்று சொல்லிவிட்டாராம்.  சொல்லிமுடித்து சிறிது நேரத்திற்குள் ஏதோ பேப்பர் பொசுங்கும் வாசனை வர ஆரம்பித்ததாம்.  இ.பா சமையல் அறைக்குப் போய்ப் பார்த்தபோது, சம்பத் அவர் எழுதிய நாவலை அடுப்பில் பொசுக்கிக் கொண்டிருந்தாராம்.

எதையாவது சொல்லட்டுமா………71

காலையில் அப்பா என்னைப் பார்த்துச் சொன்னார். 
ஒரே மயக்கமாக இருக்கிறதுடா?
நான்  கேட்டேன். 
”எப்போது?”
”எப்போதும்தான்.”
”டாக்டர்கிட்டே போகலையா?”
”போனேன். 
அவன் சொல்லிட்டான்.  இனிமேல் மருந்தெல்லாம் வேண்டாமாம்.”
அப்பாவிற்கு 90 வயது.  நினைச்சே பார்க்க முடியாத வயது.
எனக்கு 59.  பயங்கர தடுமாற்றம்.  சென்னைக்கு வந்தபிறகு சென்னையே புரியவில்லை.  மாம்பலத்திலிருந்துத திருவல்லிக்கேணிவரை டூவீலரில்தான் போக முடிகிறது.  வரும்போது, பயங்கர கூட்டம்.  வண்டியில்
பறக்க முடியாது.  நடந்துதான் போகமுடியும். 
நான் வந்தவுடன், தினமும் எனக்குப் பிடித்த நடேசன் பூங்காவில் நடக்க ஆரம்பித்தேன்.  வேகம்.  சர்க்கரை அளவைக் குறைக்க வேண்டும் என்று.  காலையில் 7.45க்கு ஒரு லைட்டா டிபன் சாப்பிட்டு மதியம் சாப்பாடு எடுத்துக்கொண்டு போவேன்.  மதியம் 2 மணிக்குத்தான் சாப்பிடுவேன்.  அதற்கு முன் குறைந்தது 3 காப்பிகளை விழுங்குவேன்.  மாலை வீடு திரும்பும்போது ஒரு மாதிரியாகிவிடும்.  பேசாமல் சீர்காழிக்கே போய்விடலாமா என்று தோன்றும்.
அதேபோல் நான் அடிக்கடி சந்தித்த நண்பர்களை சென்னையில் பார்க்க முடியவில்லை.  காரணம் நேரம் இன்மை.  சச்சிதானந்தம் சி சு செல்லப்பா ந.பிச்சமூர்த்தியைப் பற்றி பேசினார். கொஞ்ச நேரம் கேட்டுவிட்டு அலுவலகம் ஓடிவிட்டேன்.  எங்கள் கிளையில் லாக்கர் பாதாளத்தில் இருக்கிறது.  குறைந்தது ஐந்தாறு தடவைகள் நடக்க வேண்டிவரும்.  கால் வலிக்கும்.  யே காலே வலிக்காதே என்பேன்.  முதலில் தூக்கம் சரியாக வராமலிருந்தது.  எனக்கு தூக்கம் வராமலிருக்கிற பைத்தியம்.  அப்பா தூங்குவதைப் பார்த்தால் பயமாக இருக்கும். 
அப்பாவிற்கு சந்தோஷம் இங்கு நான் வந்தது. 
 ”நான் ஐந்துமுறை லட்டர் போட்டேன்.  உங்கள் ஜீஎம்மிற்கு.”
”இனிமே யாருக்கும் லட்டர் போடாதப்பா,” என்றேன்
ழ 6வது இதழ்

பிப்ரவரி / மே 1979

ஒரு கவிதை

 இந்தக் காலத்தில்
 பிரும்மத்தை
 கள்ளச் சந்தையில்
 விடீயில்
 மந்திரிகளின் பொய்களில்
 எதிலும் (மே) குறைபிரசவத்தில்,
  அவசரத்தில்
 தன்மைகள் எல்லாம் தோற்ற தந்திரத்தில்தான்
 காணமுடியும் போலிருக்கிறது.
   -மீண்டும்-
 இந்தக் காலங்களில்
 தெய்வத்திற்கும் (கூட) ஊர்
 சுற்றும் ஆசை ஏற்பட்டுவிட்டது
 என நினைத்தேன்-
 சினிமாவெறும் கோவிலில்
 நேற்று இரவு அவள் வந்தாள்
 சிரித்தாள்
 சொல்லறுற்றாள்
 ”எப்போதுமே அவன்ஊர்களிலிருந்ததில்லை”
   

    S SAMPATH

பந்தநல்லூரில் கிடைத்த பதவி உயர்வு….

3.
அழகியசிங்கர் எழுதும் கதைகளில் நான்தான் கதாபாத்திரமாக வருவேன்.  என்னைப் பற்றிதான் அவர் எழுதுகிறாரோ என்ற சந்தேகம் எனக்குள் எழும்.  ஆனால் அவர் எழுதும் எந்தக் கதையாக இருந்தாலும் முதலில் என்னிடம்தான் படிக்கக் கொடுப்பார். பின் அவர் என்னுடன் பேசும்போது, உன்னையேதான் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறேன் என்பார்
”ஒரு பத்மநாபன் உங்கள்முன் நேரிடையாக நின்று கொண்டிருக்கிறேன்.  இன்னொரு பத்மநாபன் கதைகளில்” என்பேன்.
அவர் சிரித்துக்கொள்வார்.  ”எழுதுவதற்கு என்ன அனுபவம் வேண்டும்?” என்று கேட்பேன்.  ”நம் வாழ்க்கையே ஒரு அனுபவம்தான்.  ஒன்றும் செய்யாமலிருந்தாலும் அனுபவம்தான்.” என்பார்.
இதோ அவரைப் பிரிந்து வந்துவிட்டேன்.  கும்பகோணம் வட்டாரத்தில் எனக்கு வேலை.  மாற்றல்.  மாற்றல் ஏமாற்றமா மாற்றமா?
கடந்த 24 ஆண்டு வங்கி வாழ்க்கையில் ஒரே விதமான இடம் அலுப்பாகத்தான் இருந்தது.  தலைமை இடம்.  வீடு.  10லிருந்து 5வரை என்று ஒரேவிதமான இயந்திரத்தனம் அலுப்பாகத்தான் இருந்தது. எல்லாம் அலுப்பு. பார்த்த முகங்களையே பார்த்துக்கொண்டிருக்கிற அலுப்பு.  மாம்பலம் ரயில்வே ஸ்டேஷன். பீச் ஸ்டேஷன்.  வெள்ளிக்கிழமை பூஜை.  இனிப்பு.  ஒருவித மாற்றம் வேண்டும்.  போதும் இது என்று தீர்மானித்தபோதுதான் ”உன் முடிவு தவறு,” என்றார் அழகியசிங்கர்.
”ஏன்?” என்று கேட்டேன்.
”ஐம்பதாவது வயதில் நீ குடும்பத்தைவிட்டு தனியாக இருக்க வேண்டும்.  வங்கி தன் ஆயுதத்தை விட்டு உன்னைத் தாக்கப் போகிறது,” என்றார்.
”ஊர் உலகத்தில் எல்லோரும் கஷ்டப்பட்டுத்தான் பணி புரிகிறார்கள்.  வேலைக்காக தூர தேசத்திற்கெல்லாம் போகிறார்கள்,” என்றேன்.
”நீ உன் சுதந்திரத்தை இழக்கப் போகிறாய்.  உன் முதல் துக்கம் உன் குடும்பத்தைவிட்டுப் பிரிவது. உன் பொறுப்பு கூடப் போகிறது.  உன் வேலை சுமை அதிகரிக்கப் போகிறது.  சுருக்கெழுத்தாளராக நீ இருந்த நிம்மதியான வாழ்க்கை உன்னைவிட்டுப் போகப்போகிறது.”
”என்ன பெரிய தூரம்.  இதோ கும்பகோணம்தான்  போகிறேன்.  300 கிலோமீட்டர் இருக்குமா?”
”நீ அங்கே போனபிறகுதான் நான் சொல்வது புரியும்.  நீ என்ன பெரிய அதிகாரியாகப் போகிறாயா?  ரத்தன கம்பளத்திலா உன்னை வரவேற்கப் போகிறார்கள்.  உன் கடைநிலை ஊழியன் கூட உன்னை மதிக்க மாட்டான்.  உன் மேல் உள்ள அதிகாரி இன்னும் உன்னிடம் எகிறுவான்.. வங்கிக் கதவைத் திறப்பதிலிருந்து மூடுவது வரை உன் பொறுப்பென்றாகிவிடும்…கஷ்டத்தை ஏன் விலைக்கு வாங்குகிறாய் என்பது தெரியவில்லை..”
அழகியசிங்கர் மனம் உடைந்து விட்டார்.  அவர் சொன்னது எவ்வளவு உண்மை என்று எனக்குப் புரிய ஆரம்பித்துவிட்டது.  
                                                                                                                            (இன்னும் வரும்)
a

பந்தநல்லூரில் கிடைத்த பதவி உயர்வு….

2.
என் வீட்டிலுள்ளவர்கள் யாருக்கும் நான் பதவி உயர்வு என்ற பெயரில் ஊரைவிட்டு, வீட்டைவிட்டுப் போவதை விரும்பவில்லை.  நான் ஏன் இந்த முடிவுக்கு வந்தேன். அப்பாவிற்கு பெரிய வருத்தம்.  மனைவிக்கு கவலை.  உண்மையில் நான் பதவி உயர்வு பெறுவதால் வருமானத்தில் பெரிய மாற்றம் இருக்காது.  பெண் புலம்ப ஆரம்பித்தாள்.  ”ஏன்ப்பா என் திருமணம் நிச்சயம் ஆன நேரத்தில், நீ வீட்டில் இல்லாமல் இருக்கியே?” என்று. 
உண்மைதான்.  ஸ்ரீதேவி கல்யாணம் நிச்சயமான சமயத்தில்தான் எனக்குப் பதவி உயர்வு வாய்த்தது.  கல்யாணம் மே மாதம் நடக்கப் போகிறது.  எனக்கு பிப்ரவரி மாதம் இந்தப் பதவி உயர்வு கிடைத்து விட்டது.  ஸ்ரீதேவிக்கு கல்யாணம் ஜனவரிமாதம் நிச்சயமாகிவிட்டது.  ஒருவிதத்தில் கல்யாணம் நிச்சயம் செய்தபிறகுதான் நான் கிளம்புகிறேன். 
அந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அழகியசிங்கர் ஏற்பாடு செய்த புத்தகக் கண்காட்சியில் அவருக்கு உதவி செய்ய நானும் அலுவலகம் போகாமல் மட்டம் போட்டிருந்தேன்.  அழகியசிங்கரின் புதிய கதைத் தொகுதி வெளியாகியிருந்தது.  புத்தகம் பெயர் ராம் காலனி.  அழகியசிங்கர் பரபரப்பாகக் காட்சி அளித்தார். 
நானும், அவரும் ஒரே வங்கியில் பணிபுரிபவர்கள்.  ஒரே வயதுக்காரர்கள்.  எங்கள் இருவரையும் யாராவது பார்த்தார்கள் என்றால் ஒரே மாதிரி இருக்கிறீர்கள் என்பார்கள்.  நாங்கள் இருவரும் பீச்ஸ்டேஷன் எதிரிலுள்ள தலைமை அலுவலகத்தில் சுருக்கெழுத்தாளர்களாக வேறு வேறு துறைகளில் பணிபுரிந்து கொண்டிருந்தோம்.  இன்னும் சில ஒற்றுமைகளும் எங்களுக்குள் உண்டு.  நாங்கள் இருவரும் மேற்கு மாம்பல வாசிகள்.  இருவரும் ஒரே தெருவில் எதிர் எதிர் வீட்டில் இருப்பவர்கள்.  இருவருடைய மனைவிகளும் வேற வேற வங்கிகளில் பணிபுரிபவர்கள்.  எங்கள் இருவருக்கும் சொல்லி வைத்ததுபோல இரண்டு குழந்தைகள்.  என் பெண்ணிற்கு நான் திருமணம் ஏற்பாடு செய்வது போல் அவர் பெண்ணிற்கும் அவர் திருமணம் ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார். 
என் பையனும் அவர் பையனும் கோயம்புத்தூரில் பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.  இன்னும் பல ஒற்றுமைகளும் பல வேடிக்கைகளும் எங்களுக்குள் உண்டு.  அதைப் பற்றி இன்னும் சொல்கிறேன்.
                                                                                                                           (இன்னும் வரும்)

எதையாவது சொல்லட்டுமா……71

க.நா.சு வை நாம் மறந்துவிட்டோம்.  அவருடைய 100வது ஆண்டை நாம் வெறுமனே சில கட்டுரைகள் எழுதி நிறுத்தி விட்டோம்.  நான் அவருடைய கவிதைகளை இலவசமாக அச்சடித்து விநியோகம் செய்ததோடு நிறுத்தி விட்டேன்.
ஆனால் க.நா.சுவை நான் பல சந்தர்ப்பங்களில் நினைத்துக்கொள்ள வேண்டும்.  உண்மையில் அவர் மரணம் அடையும்வரை புத்தகங்கள் படிப்பதையும் எழுதுவதையும் நிறுத்தவில்லை. இது ரொம்ப ஆச்சரியம்.  வயது ஆக ஆக நம்மால் புத்தகம் படிப்பது முடியாது.  க.நா.சு கண் தெரியாவிட்டாலும் படித்துக்கொண்டிருப்பார்.  எழுதிக்கொண்டே இருப்பார்.  இன்னும்கூட அவர் எழுதியது பிரசுரமாகாமல் இருக்கும். 
ஒருமுறை நான் விருட்சம் ஆரம்பித்தபோது எதாவது கட்டுரை தரும்படி கேட்டுக்கொண்டேன்.  உடனே க.நா.சு ஒரு கட்டுரை ஏற்கனவே எழுதியதைக் கொடுத்தார். பல சந்தர்ப்பங்களில் நான் க.நா.சுவைப் பார்த்து வியந்திருக்கிறேன்.  கவிதை எழுதுவது, விமர்சனம் செய்வது, கதை எழுதுவது என்று தனக்கென ஒரு வழியை வகுத்துக் கொண்டிருந்தார்.  
அவருடன் பேசுவது இனிமையான அனுபவமாக எனக்குத் தோன்றும்.  ஒருமுறை பெரிய கூட்டம் ஒன்று மயிலாப்பூரில் உள்ள அவருடைய வீட்டிற்குச் சென்றது.   அந்தக் கூட்டத்தில் நானும் ஒருவனாக இருந்தேன்.  இப்படி ஒரு கூட்டம் க.நா.சு என்ற மகத்தான எழுத்தாளரைப் பார்க்கத்தான் செல்லமுடியும்.  இப்படி ஒரு கூட்டம் இன்றைய எழுத்தாளருக்குச் சாத்தியமா என்பது தெரியவில்லை.  யாரும் யாரையும் பார்க்காமல் இருப்பதுதான் சாத்தியம். 
அந்தக் கூட்டத்தில் நகுலன் கூட இருந்தார்.  பின் கநாசு மயிலாப்பூரில் உள்ள ராயர் ஓட்டலில் சாப்பிட எங்களை அழைத்துச் சென்றார். உண்மையில் என்ன வருத்தமான விஷயம் என்னவென்றால், அன்று பேசியது ஒரு டைரியில் குறித்துக்கொள்ளாமல் விட்டுவிட்டது.  இப்படி எத்தனையோ கூட்டங்களை பதிவு செய்யாமல் விட்டுவிட்டது பெரிய தப்பாகவே எனக்குத் தோன்றுகிறது. 
க.நா.சு எந்தக் கூட்டத்தில் பேசினாலும் எந்தவிதத் தயாரிப்பும் இல்லாமல் மனதிலிருந்து பேசுவார்.  மாதம் ஒருமுறையாவது இலக்கியக் கூட்டம் நடத்த வேண்டுமென்பது அவர் விருப்பம். அப்படிப்பட்டவருக்கு ஒரு கூட்டம் நடத்தவேண்டும்.  அதற்கான முயற்சியில் நான் ஈடுபடுவேன். எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும். 

எதையாவது சொல்லட்டுமா………70

சமீபத்தில் நடந்த வங்கிக் கொள்ளையர்களைப் பற்றிய செய்தியைப் படித்தபோது, என் திகைப்பு அதிகமாகவே இருந்தது.  வங்கி வெகு எளிதாகக் கொள்ளை நடக்கும் இடமாக எனக்குத் தோன்றிகொண்டே இருக்கும்.
பீகாரிலிருந்து தமிழ்நாட்டில் பணிபுரிந்து கொண்டிருக்கும் என் வங்கி நண்பர், எப்படி இங்கே காவல் புரிபவர் இல்லாமல் ஏடிஎம் இயங்குகிறது என்று கேட்பார்.  அவர் இடத்தில் அப்படி இல்லையாம்.  சமீபத்தில் நடந்த வங்கித் தேர்வுகளில், பீகாரைச் சேர்ந்தவர்கள்தான் வங்கியில் அதிகமாக சேர்கிறார்கள்.  தமிழ் நாட்டுக்காரர்கள் மிகவும் குறைவாம்.  அதைக் கேட்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  ராம் என்கிற அந்த பீகார் நண்பர் தமிழ் தெரிந்துகொள்ள முயற்சி செய்கிறார்.  எல்லா வேலைகளையும் தட்டாமல் செய்கிறார்.  அவர் கோபம் என்பது இல்லை.  அவர் மனைவியையும் ஊரிலிருந்து அழைத்துக்கொண்டு வந்து விட்டார். 
நான் பந்தநல்லூர் என்ற கிராமத்தில் பணிபுரிய செல்லும்போது, அந்த இடம் ஹோ என்று இருக்கும். கொள்ளையர்கள் எளிதில் புகுந்து கொள்ளை அடிக்கலாம்.  ஏன் என்று கேட்க ஆள் இருக்காது.  ஆனால் அங்கே எல்லாம் எதுவும் நடக்கவில்லை.  பணப் பெட்டியைப் பஸ்ஸில்தான் எடுத்துக்கொண்டு செல்வார்கள்.
நான் வங்கியில் சேர்ந்த புதியதில் தமிழ்நாட்டில் பணிபுரிபவர்கள் தமிழர்களாகவே இருந்தார்கள்.  அதிகமாகவும் இருந்தார்கள். ஆனால் இன்றோ நிலைமை மாறிவிட்டது.  தமிழர்கள் வங்கியில் பணிபுரிவது குறைந்து விட்டது. 
பீகாரில் இருப்பவர்கள்தான் வங்கியில் பணிபுரிய வருகிறார்கள்.  இப்படி வெளி மாநிலத்திலிருந்து வருபவர்கள் அதிகரித்து விட்டார்கள். அவர்களுக்கு தமிழ்நாடு சொர்க்கபூமியாக இருக்கும்.  பெரிய பயம் இருக்காது.  குற்றங்கள் நடந்தாலும் மற்ற மாநிலங்களை விட குறைவாக இருக்கும்.  குறிப்பாக பீகாரை எடுத்துக்கொண்டால், பீகாரை விட தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருக்கும்.  அதனல்தான் ராம் இங்குள்ள வங்கிக் கட்டிடங்களைப் பாதுகாக்க ஏன் கவலாளிகள் இல்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது என்கிறான்.
ஆழைப்புழை என்ற அற்புதமான இடத்திலிருநந்து கேரள பெண்மணி ஒருவர் குமாஸ்தாவாகப் பணிபுரிய    சீர்காழி வருகிறாள்.  ஊரில் இருக்கும் அம்மாவை நினைத்து எப்பாவாவது அழுவாள். ஆனால் தைரியமான பெண்.  வேறு மொழி பேசும் தமிழ்நாட்டில் தைரியமாக இருக்க முடிகிறது.
பீகாரிலிருந்து வந்தவர்கள்தான் சிலர் கொள்ளையர்களாக மாறி கொள்ளை அடிக்கிறார்கள். சிலர் படிக்க வருகிறார்கள்.  சிலர் வங்கியில் பணி புரிய வருகிறார்கள். 

எதையாவது சொல்லட்டுமா………69

21ஆம் தேதி ஜனவரி மாதம் சீர்காழி கிளையிலிருநந்து  எனக்கு விடுதலை தந்துவிட்டார்கள்.  திடீரென்று திரும்பவும் சென்னை என்பதை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. வாரம் ஒருமுறை நான் சென்னைக்கு வராமலிருக்க மாட்டேன்.  திரும்பவும் சென்னையில் என் வாழ்க்கையைத் தொடர வேண்டும் என்பது திகைப்பாகவே இருந்தது.
காலையில் 9 மணிக்கு பஸ்ஸைப் பிடித்து ரம்மியமான வயல்வெளிகளைப் பார்த்தபடி மயிலாடுதுறையிலிருந்து சீர்காழிக்குச் செல்வது அற்புதமான அனுபவமாக இருக்கும். அதை திரும்பவும் இனிமேல் நினைத்துப் பார்க்க முடியாது. 
என்னால் மறக்க முடியாத இன்னொரு இடம் திருவல்லிக்கேணி.  நான் இங்குதான் கோஷ் மருத்துவமனையில்தான் பிறந்தேன். நான் மாம்பலவாசியாக மாறினாலும், திருவல்லிக்கேணிக்கு அடிக்கடி வருவேன்.  என் நண்பர்கள் இங்குதான் அதிகம்.  மேலும் விருட்சம் அச்சடிக்கிற இடமும் திருவல்லிக்கேணிதான். 
நான் கல்லூரியில் முதலில் காலடி எடுத்து வைத்தபோது, கணக்கு என்றால் ஒன்றும் தெரியாது.   அதைக் கற்றுக்கொள்ள திருவல்லிக்கேணியில் உள்ள என் உறவினர் வீட்டிற்கு வருவேன். ஒரு குறுகலான சந்தில்தான் அந்த வீடு. என் பெரியப்பா பையன் மாடிக்கு என்னை அழைத்துக்கொண்டு போவார்.  அங்கு டிரிகனாமென்டிரி கற்றுக்கொள்வேன்.
ஒருமுறை என் பெரியப்பா பையன் சில தாள்களில் எழுதி மறைத்து வைத்துக்கொண்டிருந்தார்.  நான் ஆவலாக என்னவென்று பார்க்க முயற்சி செய்தேன்.  ‘ஐயோ ஐம்பது’ என்கிற அவருடைய கதை.  முத்து முத்தான கையெழுத்தில் தாளின் ஒரு பக்கத்தில் கதையை எழுதியிருப்பார்.  அவர் எழுதுகிற மாதிரி என்னால் முதலில் எழுத வராது.  கதை என்று எதாவது எழுத ஆரம்பித்தால் அது கோணலாகப் போகும்.  என்னவென்று சொல்லத் தெரியிவில்லை என் பெரியப்பா பையன் தொடராத ஒன்றை நான் இன்னும் எழுத்து மூலம் தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.
என் பெரியப்பா பையன் மலர்த்தும்பி என்ற சிற்றேட்டைத் துவங்கினார்.  அதுதான் எனக்கு சிறுபத்திரிகை தொடர ஒரு காரணம்.
பல ஆண்டுகள் கழித்து என் பெரியப்பா குடும்பம் திருவல்லிக்கேணியிலிருந்து போனபிறகு கூட என் வாழ்க்கை திருவல்லிக்கேணியில் தொடராமலில்லை.  கணையாழி என்ற பத்திரிகையில் ஒருமுறை கவனம் என்ற பத்திரிகைப் பற்றி விளம்பரம் வந்திருந்தது.  அந்த கவனம் என்ற சிற்றேடை வாங்குவதற்கு திரும்பவும் நான் திருவல்லிக்கேணி வந்திருக்கிறேன்.  ஆர். ராஜகோபாலன் வீடைத் தேடிக் கண்டுபிடித்து கவனம் இதழை வாங்கிப் படித்திருக்கிறேன்.   அப் பத்திரிகை மூலம் பல எழுத்தாள நண்பர்களைச் சந்தித்திருக்கிறேன். 
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வைத்தியநாதன் என்ற நண்பரை மயிலாப்பூரில் சந்தித்து பின் திருவல்லிக்கேணியில் உள்ள கடற்கரைக்குச் செல்வேன். ஞானக்கூத்தன், ஆனந்த், ராஜகோபாலன், ரா ஸ்ரீனிவாஸன், காளி-தாஸ், வைத்தியநாதன் என்று பல நண்பர்களைச் சந்திப்பேன். 
ஒருமுறை பார்த்தசாரதி கோயில் பிரகாரத்தைச் சுற்றிக்கொண்டிருந்தேன்.  கூட ராஜகோபாலன், வைத்தியநாதன்.  அங்குதான் நரசிம்மரின் இன்னொரு பெயரான அழகியசிங்கர் என்ற பெயரைக் கண்டுபிடித்தேன்.  அதுமுதல் என் படைப்புகள் இன்னமும் அந்தப் பெயரில்தான் வந்து கொண்டிருக்கிறது. 
விருட்சம் என்ற பத்திரிகைக்கும் பெரிய தெருவில் உள்ள சேகர் அச்சகத்திற்கு நெருங்கிய பிணைப்பு உண்டு.  இப்போதோ அந்தத் தெருவில் இருக்கும் எங்கள் வங்கிக்கிளைக்கு நான் தினமும் டூ வீலரில் வந்து கொண்டிருப்பேன் என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. இன்னும் திருவல்லிக்கேணியின்  மகிமையைப் பற்றி தொடர்ந்து எழுதுவேன்.